கவியரசர் கண்ணதாசனுக்கு குவிகத்தின் நினைவாஞ்சலி!
Daily Archives: November 15, 2014
2/25
செல்ஃபி பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!
குவிகம் தனது முதலாவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது!
ஒரு வருடம் ஒரு டிஜிட்டல் பத்திரிக்கையைத் தொடர்ந்து நடத்துவதே ஒரு இமாலய இல்லை ரோகித் சர்மா சாதனை தானே!
மாதம் 25 டிஜிட்டல் பக்கம் . 12 மாதம். 300 பக்கம்! மனதுக்கு நிறைவைத் தருகிறது.
இதை ஆரம்பிக்கும் போது நண்பர் ஒருவர் கேட்டார் -இது குமுதமா? கல்கண்டா? என்று. கல்கண்டு என்று சொன்னேன். அதாவது தமிழ்வாணன் போல எல்லா கதை – கட்டுரை – கவிதைகளை நான் ஒருவனே எழுதிக் கொண்டிருந்தேன். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மனைவி, மகள்,உறவினர் மற்றும் நண்பர்கள் என்று எழுதுவோர் வட்டம் பெரிதாகிக் கொண்டு வருகிறது. வாசகர் வட்டம் இன்னும் அதிகம் சேரவேண்டும்!
மாதம் முழுதும் செய்வதற்கு ஒரு வேலை! கடைசி வாரத்தில் ஓவர்டைம் போல அதிக நேரம் செலவிடல். 15ம் தேதி காலக் கெடு. கிராபிக்ஸ் செய்ய நிறைய நேரம் எடுத்துக் கொள்வது. இவை அனைத்தும் என்னை சுறுசுறுப்பாக வைத்திருப்பதிலும் மனதிற்கு மகிழ்ச்சியைத் தருவதிலும் தலையான பங்கைச் செய்கின்றன.
உங்களின் இந்த வெளிப்பாடு என்னை ஆச்சரியப் படவைக்கிறது- பொறாமைப்பட வைக்கிறது என்று நான் பொறாமைப்படும் நண்பர்கள் கூறும் போது எனக்குள் மகிழ்ச்சி அலை தெறிக்கிறது.
இரண்டாவது வருடத்தில் குவிகத்தை அடுத்த படிக்கு – உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்லவேண்டும்!
அதைப்பற்றி அடுத்த இதழில் பார்க்கலாம்.
மேளம் கொட்டட்டா
3/25
செல்லக் குட்டி வெள்ளாடு
அடிச்சுப் போட்டா சாப்பாடு
காலைத் தூக்கும் கறுப்பாடு
விளையாடாதே கற்போடு
மூச்சு வாங்கும் முசக்குட்டி
கடிக்கத் தோதா கருப்பட்டி
வெள்ளம் வழியும் அணைக்கட்டா
மெல்ல மெல்ல அணைக்கட்டா
காலைக் கொஞ்சம் கடிக்கட்டா
லெக்பீஸ் என்று சுவைக்கட்டா
தேனைக் கொஞ்சம் குடிக்கட்டா
வண்டாய் மாறிப் பறக்கட்டா
தோளைக் கொஞ்சம் குலுக்கட்டா
மாங்கனி விழுந்தால் பொறுக்கட்டா
வளைந்து நெளியும் வாய்க்காலா
பொங்கி வழியும் கால்வாயா
இதயத் துடிப்பை நிறுத்தட்டா
இடுப்பில் துடிப்பைத் தொடரட்டா
திருட்டு மீனைப் பிடிக்கட்டா
உருட்டுக் கட்டையை உருட்டட்டா
இருட்டும் போது அமுக்கட்டா
குருட்டுப் பூனையாய் பாயட்டா
உதட்டில் உதட்டை இணைக்கட்டா
நெஞ்சில் மயங்கிச் சாயட்டா
மடியில் முகத்தைப் புதைக்கட்டா
இடையில் மேளம் கொட்டட்டா ?
ஃபிட் பிட் ( FITBIT )
4/25
ஃபிட் பிட் என்பது ஒரு சிறிய எலெக்ட்ரானிக் கருவி. ஒரு பென் டிரைவ் ( pen drive )வடிவத்தில் இருக்கும் . அதை நம்முடைய பாக்கெட்டிலோ கையிலோ கட்டிக் கொண்டால் அது நம் உடம்பின் அசைவுகளைக் கணித்து அதன் மூலம் நமது சுறுசுறுப்பை அளக்க உதவும்.
நாம் எவ்வளவு அடிகள் நடக்கிறோம், எவ்வளவு தூரம் நடக்கிறோம், எவ்வளவு கலோரி செலவழிக்கிறோம் என்பதை சுலபமாகச் சொல்லும் கருவி.
தூங்கும் போது அதைக் கட்டிக் கொண்டு (?) படுத்தால் , நாம் எப்படித் தூங்கினோம், எவ்வளவு தடவை புரண்டு படுத்தோம் என்று நமது தூக்கத்தின் தன்மையை அறிய உதவும்..
நமது தினசரி நடவடிக்கைகளைக் கம்ப்யூட்டரில் WI-FI மூலமாக அப்டேட் செய்து கொள்ளும். (அதற்கு fitbit.com இல் பெயர்,பாஸ் வேர்டைப் பதிவு செய்து கொள்ளவேண்டும்)
வாரா வாரம் நம்முடைய சுறுசுறுப்பின் ரிபோர்ட்டும் கிடைக்கும். நமது ஃபிட் பிட் நண்பர்களையும் இந்த சைட்டில் இணைத்துக் கொண்டால், நமது காலடித் தூரங்களை அவர்களுடன் ஒப்பிட்டுiப் பெருமைப்படலாம் அல்லது இன்னும் தீவிரமாக முயற்சிக்கலாம்.
இதை நாள் முழுதும் கட்டிக் கொள்ளலாம். தூங்கும்போதும் குளிக்கும்போதும் கூட கட்டிக் கொள்ளலாம்.
2008ல் அறிகுமாகப் படுத்தப்பட்ட கருவி இது. இதில் ஒரு பூங்கொடியின் படம் உள்ளது. நம் சுறுசுறுப்பின் அவதாரம் அது. நமது நடைகள் அதிகமாகும்போது பூங்கொடி படர்ந்து மலர் விரிந்து காணப்படும்.சோம்பல் அதிகமாக இருந்தால் கொடியும் வாடிக் கிடக்கும்.
மொத்தத்தில் இது ஒரு தேக ஆரோக்கியத்தை மனதில் வைத்து உருவாக்கப்பட்டக் கருவி. நம்மை சுறுசுறுப்பாக மாற்ற அருமையான உறுதுணை.
ஃபிட் பிட் (FITBIT) ஜோக்ஸ்
ஜோக்ஸ் -1
6/25
ரசித்த படைப்புகளும் படைப்பாளிகளும் (எஸ். கே. என்)
7/25
இம்மாத எழுத்தாளர் : இந்திரா பார்த்தசாரதி
பத்மஸ்ரீ, சாஹித்ய அகெடமி, சரஸ்வதி சன்மான், பாரதிய பாஷா பரிஷத் என பல விருதுகளால் கெளரவிக்கப்பட்ட, ஆர். பார்த்தசாரதி என்னும் திரு. இந்திரா பார்த்தசாரதி நிதர்சனத்தை ஒரு அங்கதச் சுவையோடு ( அங்கதத்துக்கு புரிகிற பாஷையில் சொல்லணும்னா – சடையர் – satire ) நம்முன் வைப்பதில் மன்னன். சிறுகதை, நாவல்கள் கட்டுரைகள் தவிர நாடகங்களும் எழுதியுள்ளார்.
அவரது மனிதாபிமானம் என்னும் கதை.
ஒரு அறையில் வேறு மூன்று நபர்களுடன் தங்கியிருக்கும் தனது நண்பன் பற்றி டெல்லியில் வேலை பார்க்கும் ஒருவர் சொல்வதாக இந்தக் கதை. நண்பர்கள் வேறு வேறு அலுவலகத்தில் வேலை பார்க்கிறார்கள். ‘ரிவோலி’ தியேட்டரில் படம் பார்க்க அறையில் வசிக்கும் நண்பன் டிக்கெட் வாங்கி வைத்திருக்கிறான்.
(இ பா, இந்தக்கதையில் இரு நண்பர்களுக்கும் பெயரையே குறிப்பிடவில்லை. வசதிக்காக கதை சொல்பவரை நம்ம ஆள் என்றும் மற்றவரை நண்பன் என்றும் வைத்துக்கொள்ளலாம்)
நம்ம ஆள் நண்பன் அறைக்குப் போகும்போது நண்பனுக்கு மஞ்சள்காமாலை என்று தெரிகிறது. அவனோ அலோபதியில் நம்பிக்கை இல்லாதவன். மறுமுறை பார்க்கச் செல்லும்போது தனியாக அறையில் மோசமான நிலையில் கிடக்கிறான். மற்ற அறை நண்பர்கள் யாரும் இல்லை. அவனை மருத்துமனையில் மிக்க சிரமத்தோடு சேர்த்து விடுகிறார் நம்ம ஆள். அரசாங்க மருத்துவமனையில் சேர்க்கும் பிரச்சினைகளோடு உடனடியாக ஆபரேஷன் செய்ய சம்மதித்து கையெழுத்திடவும் நேர்கிறது.
நண்பனின் குடும்பத்தினரின் முகவரிக்காக திரும்பவும் அவன் அறைக்குச் செல்கிறார். அங்கு அறை நண்பர்கள் சீட்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கும் விவரம் தெரியாததால் மறுநாள் அவன் அலுவலகத்திலிருந்து முகவரி பெற்று தந்தி அடிக்கிறார். நண்பன் ஆபத்திலிருந்து வெளிவந்து விட்டாலும் அவனது தம்பி வரும்வரை நண்பனைக் கவனித்துக் கொள்கிறார்.
ஒய்வு தேவைப்படுவதால் நண்பன் சொந்த ஊர் சென்று விடுகிறான்.
திரும்பி வந்த பிறகு சந்திக்கும்போது “ரொம்ப தாங்க்ஸ்” என்கிறான் நண்பன். கூடவே “ரிவோலியிலே ஒரு சினிமா படம், பேர் ஞாபகமில்லே. டிக்கெட் வாங்கின மறுநாள்தான் நான் படுத்துட்டேன்”
“ஸோ?”
“எனக்கு நீ ஏழரை ரூபா தரணும்” என்றான் நண்பன்.
என்று கதையை முடிக்கிறார் இ .பா
இந்தக்கதையின் இடையே நம்ம ஆள் கூட தங்கியிருப்பவன் (காலையில் காயத்ரி மந்திரம் – இரவில் நீலப்படம்"), நண்பனின் அறைவாசிகள் சீட்டாட்டம் (பெயர் அவசியமில்லாததால் அவர்களை ‘இரண்டு ஏஸ்’ , ‘கலர்’, “மூன்று ஏழு” என்றுதான் சொல்கிறார் ), மருத்துவமனையில் சேர்க்கும்போது அந்த டாக்ஸி டிரைவர் (உதவி செய்வதோடு பணமும் வாங்காமல் “என்னையும் ஒரு நண்பன் என்று வைத்துக்கொள்ளுங்கள்”) என பல சிறு பாத்திரங்கள் . இ பா அவர்களின் சாதுரியமான உரையாடல்களும் கிண்டல் தொனிக்கும் கதை சொல்லும் முறையும் வழக்கம் போல.
அவரது மற்ற இருகதைகளின் லிங்க்
http://azhiyasudargal.blogspot.in/2012/09/blog-post_6.html
http://azhiyasudargal.blogspot.in/2011/01/blog-post_20.html
டெல்லி வாழ் தமிழர்கள், மத்திய அரசு அதிகாரிகளிடையே போலி கௌரவம், நுனி நாக்கு ஆங்கில ‘அறிவு ஜீவிகள் ‘என பலரையும் கிண்டல் தொனிக்க எழுதிய கதைகள் அனேகம். நினைவில் இருக்கும் சில கதைகள் – ஒரு இனிய மாலைப்பொழுது, ஒரு கப் காபி, அஸ்வத்தாமா, ஏற்பாடு, நான் கண்டேனா?, வழித்துணை.
இவரது முக்கிய நாவல்கள் : தந்திரபூமி, குருதிப்புனல் (சாகித்ய அகாடமி பரிசு) ,ஆகாசத்தாமரை, ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன, மாயமான் வேட்டை, தீவுகள், யேசுவின் தோழர்கள், சுதந்திர பூமி, கிருஷ்ணா கிருஷ்ணா ,வேதபுரத்து வியாபாரிகள், வெந்து தணிந்த காடுகள், திரைகளுக்கு அப்பால்.
நாடகங்கள்: உச்சி வெயில் ( மறுபக்கம் என்றபெயரில் திரைப்படம்) ,ஔரங்கஜீப் ,நந்தன் கதை, ராமானுஜர், போர்வை போர்த்திய உடல்கள் .
முதல் இரவா?
8/25
நெருப்பைக் கொட்டி விட்டுப் போனவளே !
நெஞ்சைக் கீறி விட்டுச் சென்றவளே !
எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து
கண்கள் கலந்து கடி மணம் புரிந்தோம்
இரு மனம் கூடி புது மணம் தேடி
இருவரும் விரைந்தோம் இரவினை நாடி !
உன்னை அழகென்றேன் அனலில் மெழுகானாய் !
கன்னிமை எனதென்றேன் கண்ணிமை துடித்திட்டாய் !
கன்னத்தில் கன்னம் வைத்தேன் கள்வனென்றாய் !
கனிந்த கன்னம் பழமா கடித்துத் தின்னவா !
கன்னத்தின் ஓரம் காது அது இனி இருக்காது !
கயிற்றைக் காட்டி கழுத்தை ஏன் வளைக்கிறாய் !
வலிக்கிறது என்று சொல்லி வாய்பொத்த வருகிறாய் !
பொய் சொன்ன இதழுக்கும் நாவிற்கும் தண்டனை !
வாய்ச் சொற்கள் நின்ற பின் நெஞ்சங்கள் பேசுகிறதே !
நெஞ்சம் சுடுகிறதே அது சுரமா எரியும் பந்தமா
உரசலில் எழுந்தது அச்சுரம் பாதியில் நின்றால் அபசுரம் !
அணைத்தால் அணையும் புதுத் தீ தான் இதுவோ
கண்ணில் என்ன செவ்வரி ! கண்ணே எரிகிறதா ?
விடியும் வரை எரிந்தது அந்த விளக்கு
ஆசை நெய்யிட்டு வேட்கைத் திரியிட்டு
காமத் தீ இட்ட விளக்கல்லவா அது !
கருக்கலில் எழுந்து காலை ஒற்றினாய் !
தீர்க்க சுமங்கலி வாழ்த்தொலி வேண்டினாய் !
கண நேரத்தில் கண்கள் மயங்கினாய் !
மண மாலையுடன் மடியில் சரிந்தாய் !
இமைகள் மெல்லத் துடிக்கின்றன !
இதழ்கள் சொல்லத் துடிக்கின்றன !
இதயம் கொல்லத் துடிக்கிறது !
ஸ்வாசம் மெள்ள நிற்கிறது !
நாடி வந்தவளின் நாடி நின்றது !
பாடி வந்தவளின் மூச்சு நின்றது !
முதலும் முடிவுமான அந்த இரவினிலே
நெருப்பைக் கொட்டி விட்டுப் போனாளே !
நெஞ்சைக் கீறி விட்டுச் சென்றாளே !!
சுட்ட ஜோக்ஸ்
9/25
வாட்ஸ் அப்ல வந்தது.
நான் மட்டுமே சிரிச்சா எப்படி?
நீங்களும் சிரிங்க !
மாத்தி யோசி (சிவமால் )
10/25
ஜோக்ஸ் -2
(நன்றி:ஹரி )
பொன்மகள் வந்தாள் (நிறைவுப் பகுதி)
12/25
அன்பின் திருவுருவே அலங்கார நாயகியே
தஞ்சமென்று வந்தோரை தாங்கியே நிற்பவளே!
என்னையன் திருமாலின் இதயத்து நாயகியே
உலகமது உருண்டோட உறுதுணையா யிருப்பவளே
மின்னுகின்ற வுன்விழியின் கருணையின் நீரூற்று
பொன்மாரி பொழிந்துவுன் பக்தரையே களிப்பூட்டும்
உன்பாதம் பணிந்தயிவ் வேழைதம் மேனியிலும்
சிலதுளிகள் தெளிக்கட்டும் வாழ்க்கை மலரட்டும் !
தேவியுன் னருளோடு வேய்ந்தவிப் பாடல்கள்
ஒலிக்கின்ற மனைகளிலே மகிழ்ச்சியும் பொங்கட்டும்
ஒவ்வாமை ஏழ்மை நெருங்காம லிருக்கட்டும்
இல்லையென்ற சொல்லே இல்லாம லிருக்கட்டும்
செவ்வனே நடப்பதெலாம் நல்லவையா யிருக்கட்டும்
பிணியென்ற வார்த்தைக்குப் பணியிலாமல் போகட்டும்
அவனியிலே மாந்தரெலாம் ஒற்றுமையா யிருக்கட்டும்
அன்போடு அமைதியும் ஊரெல்லாம் பரவட்டும் !
அன்னையே திருமகளே தேவியே அனுதினமும்
ஒருவேளை யுனைதுதித்தால் பாவங்கள் நீங்கிவிடும்
இருவேளை யுனைதுதித்தால் செல்வங்கள் நிறைந்துவிடும்
மூன்றுவேளை யுனைதுதித்தால் எதிரிகள் விலகிடுவர்
நாள்முழுது முனைதுதித்தால் மகிழ்ச்சியும் பெருகிவிடும்
நற்குணங்கள் நற்செயல்க ளெமைதமை வந்தடையும்
சான்றோரும் புகழ்பாடும் பெரும்பேறு நாடிவரும்
அண்டங்களை இயக்குகின்ற ஆதிலக்ஷ்மியே போற்றி !
உலகையே செழிப்பாக்கும் தான்யலக்ஷ்மியே போற்றி !
கோழையை வீரனாக்கும் வீரலக்ஷ்மியே போற்றி !
வலிமையைத் தந்தருளும் கஜலக்ஷ்மியே போற்றி !
மழலை யின்பம்தரும் சந்தானலக்ஷ்மியே போற்றி !
வெற்றிக் கொடிகட்டும் விஜயலக்ஷ்மியே போற்றி !
பார்புகழ வாழவைக்கும் ஐஸ்வர்யலக்ஷ்மியே போற்றி !
செல்வங்கள் பெருக்குகின்ற தனலக்ஷ்மியே போற்றி !
அறம் வாழ ஈரஞ்சு அவதாரம் எடுத்த ஸ்ரீமன்
நாரணன் தேவியாம்மகாலக்ஷ்மி நின்பாதம்
போற்றிபோற்றி போற்றிபோற்றி போற்றிபோற்றி
— சம்பூர்ணம் —
13/25
கவியரசு கண்ணதாசன் நினைவு நாள் அக்டோபர் 17.
சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டியில் 1927 ஜூன் 24ல் பிறந்து சிகாகோவில் 1981 அக்டோபர் ,17ல் மறைந்த கவியரசர் கண்ணதாசன். முத்தையா என்பது அவரது இயற்பெயர்.
படைப்பாற்றல் :
மாங்கனி என்ற சிறு காப்பியம் படைத்தார்.
சங்கரர் வட மொழியில் எழுதிய கனகதாரா ஸ்தோத்திரத்தை தமிழில், பொன்மழை யாகத் தந்தார்.
பஜகோவிந்தத்தை எளிய நடையில் மொழி பெயர்த்தார்.
பகவத்கீதைக்கு உரை விளக்கம் தந்தார்.
270 நூல்களை -நாவல்கள் ,கட்டுரைகள், நாடகங்கள், கவிதை நூல்கள் ,வாழ்க்கைச் சரித்திரம், எழுதியிருக்கிறார்.
நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், 5 ஆயிரத்துக்கும் மேல் சினிமா பாடல்கள் எழுதியுள்ளார்.
அரசவைக் கவிஞராக இருந்திருக்கிறார் .சேரமான் காதலிக்காக சாகித்ய அகாடெமி பரிசு பெற்றவர்.
அவரது சிறப்பு கருத்து நிறைந்த எளிமையான திரைப்படப் பாடல்கள்.
அவரது முத்துக்களில் சிலவற்றை இந்த இதழ்களின் பக்கங்களில் ஸ்பரிசிக்கிறோம் !
ஒரு பத்து நிமிடம் கால அவகாசம் இருந்தால் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் அறிமுகம் மேலே உள்ள வீடியோவில் கேளுங்கள்!
ராவணன் அசோக வனத்தில் சீதையை மயக்க எல்லா வேடமும் போட்டு சீதை முன் நின்றானாம். ஆனால் ராமன் வேடம் போட்டு அவள் முன் நிற்க முடியவில்லையாம். அதற்கான காரணத்தைக் கவிஞர் அழகாக விளக்குகிறார்!
This gallery contains 4 photos.
கோவையில் நடக்கும் கவிதைக் கருத்தரங்கத்திற்குக் குவிகத்தின் அன்பான வாழ்த்துக்கள்! விழாவின் முக்கிய நிகழ்வுகளை அடுத்த குவிகத்தில் காணலாம்!
நினைவில் நின்ற நேரு! (கோவை சங்கர்)
15/25
ஹனுமான் 108
16/25
ஹனுமான் அஷ்டோத்ர சத நாமாவளி
ஹனுமான் அஷ்டோத்ர சத நாமாவளி
ஓம் ஶ்ரீ ஆஞ்ஜனேயாய நம:
ஓம் மஹாவீராய நம:
ஓம் ஹனுமதே நம:
ஓம் ஸீதாதேவி முத்ராப்ரதாய காய நம:
ஓம் மாருதாத்மஜாய நம:
ஓம் தத்த்வஜ்ஞான ப்ரதாய நம:
ஓம் அஶொகவனிகாச் சேத்ரே நம:
ஓம் ஸர்வபந்த விமோக்த்ரே நம:
ஓம் ரக்ஷோ வித்வம்ஸகாரகாயநம:
ஓம் பரவித்வப நம: 10
ஓம் பரஶௌர்ய வினாஶனாய நம:
ஓம் பரமம்த்ர னிராகர்த்ரே நம:
ஓம் பரமந்த்ர ப்ரபேவகாய நம:
ஓம் ஸர்வக்ரஹ வினாஶினே நம:
ஓம் பீமஸேன ஸஹாயக்றுதே நம:
ஓம் ஸர்வதுஃக ஹராய நம:
ஓம் ஸர்வலோக சாரிணே நம:
ஓம் மனோஜவாய நம:
ஓம் பாரிஜாத த்றுமமூலஸ்தாய நம:
ஓம் ஸர்வமந்த்ர ஸ்வரூபவதே நம: 20
ஓம் ஸர்வயம்த்ராத்மகாய நம:
ஓம் ஸர்வதந்த்ர ஸ்வரூபிணே நம:
ஓம் கபீஶ்வராய நம:
ஓம் மஹாகாயாய நம:
ஓம் ஸர்வரோகஹராய நம:
ஓம் ப்ரபவே நம:
ஓம் பலஸித்திகராய நம:
ஓம் ஸர்வ வித்யாஸம்பத்ர்ப வாயகாய நம:
ஓம் கபிஸேனா னாயகாய நம:
ஓம் பவிஷ்யச்சது ரானனாய நம: 30
ஓம் கூமார ப்ரஹ்மசாரிணே நம:
ஓம் ரத்னகுன்டல தீப்திமதே நம:
ஓம் சஞ்சல த்வால ஸன்னத்தலம்பமான ஶிகோஜ்வலாய நம:
ஓம் கம்த்ர்வ வித்யாதத்வஜ்ஞாய நம:
ஓம் மஹாபலபராக்ரமாய நம:
ஓம் காராக்றுஹ விமோக்த்ரே நம:
ஓம் ஶ்றுங்கல பம்த விமோசகாய நம:
ஓம் ஸாகரோத்தாரகாய நம:
ஓம் ப்ராஜ்ஞாய நம:
ஓம் ராமதூதாய நம: 40
ஓம் ப்ரதாபவதே நம:
ஓம் வானராய நம:
ஓம் கேஸரிஸுதாய நம:
ஓம் ஸீதாஶோக னிவாரணாய நம:
ஓம் அஞ்ஜனா கர்பஸம்புதாய நம:
ஓம் பாலர்க ஸத்றுஶானனாய நம:
ஓம் விபீஷண ப்ரியகராய நம:
ஓம் தஶக்ரீவ குலாம்தகாய நம:
ஓம் லக்ஷ்மண ப்ராணதாத்ரே நம:
ஓம் வஜ்ரகாயாய நம: 50
ஓம் மஹாத்யுதயே நம:
ஓம் சிரஞ்ஜீவினே நம:
ஓம் ராமபக்தாய நம:
ஓம் த்தெத்யகார்ய விகாதகாய நம:
ஓம் அக்ஷஹம்த்ரே நம:
ஓம் காஞ்சனாபாய நம:
ஓம் பஞ்சவக்த்ராய நம:
ஓம் மஹாதபஸே நம:
ஓம் லங்கிணேபம்ஜனாய நம:
ஓம் கம்தமாதன ஶ்தெல நம: 60
ஓம் லங்காபுர விதாஹகாய நம:
ஓம் ஸுக்ரீவ ஸசிவாய நம:
ஓம் தீராய நம:
ஓம் ஶூராய நம:
ஓம் த்தெத்யகுலாம்தகாய நம:
ஓம் ஸுரார்சிதாய நம:
ஓம் மஹாதேஜஸே நம:
ஓம் ராம சூடாமணி ப்ரதாய காமரூபிவே நம:
ஓம் ஶ்ரீ பிங்களாக்ஷாய நம:
ஓம் னார்தி ம்தே னாக நம: 70
ஓம் கபலீக்றுத மார்தாம்டமம்டலாய நம:
ஓம் கபலீக்றுத மார்தாம்ட நம:
ஓம் விஜிதேந்த்ரியாய நம:
ஓம் ராமஸுக்ரீவ ஸம்தாத்ரே நம:
ஓம் மஹாராவண மர்தனாய நம:
ஓம் ஸ்படிகா பாய நம:
ஓம் வாக தீஶாய நம:
ஓம் னவ வ்யாக்றுதி பம்டிதாய நம:
ஓம் சதுர்பாஹவே நம:
ஓம் தீனபந்தவே நம: 80
ஓம் மஹத்மனே நம:
ஓம் பக்த வத்ஸலாய நம:
ஓம் ஸஞ்ஜீவன னகா ஹர்த்ரே நம:
ஓம் ஶுசயே நம:
ஓம் வாக்மினே நம:
ஓம் த்றுடவ்ரதாய நம:
ஓம் காலனேமி ப்ரமதனாய நம:
ஓம் ஹரிமர்கட மர்கடாயநம:
ஓம் தாந்தாய நம:
ஓம் ஶாந்தாய நம: 90
ஓம் ப்ரஸன்னாத்மனே நம:
ஓம் ஶதகண்ட மதாவஹ்றுதேநம:
ஓம் யோகினே நம:
ஓம் ராமகதாலோலாய நம:
ஓம் ஸீதான்வேஷண பம்டிதாய நம:
ஓம் வஜ்ர னகாய நம:
ஓம் ருத்ரவீர்ய ஸமுத்பவாய நம:
ஓம் இந்த்ர ஜித்ப்ர்ரஹிதா மோகப்ரஹ்மஸ்த்ர வினிவார காய நம:
ஓம் பார்த த்வஜாக்ர ஸம்வாஸினே நம:
ஓம் ஶரபஞ்ஜர பேதகாய நம: 100
ஓம் பராக்ரம சாலி நம:
ஓம் ராம பக்த ஹனுமான் நம:
ஓம் யோக அஞ்சநேயய நம:
ஓம் வீர அஞ்சநேயய நம:
ஓம் தஶபாஹவே நம:
ஓம் லோகபூஜ்யாய நம:
ஓம் ஜாம் வத்ப்ர தி வர்தனாய நம:
ஓம் ஸீத ஸவேத ஶ்ரீராமபாத ஸேவா துரம்தராய நம: 108
தீபாவளி படங்கள்
17/25
விஜய்யின் கத்தி,விஷாலின் பூஜை, ஷாருக்கின் HAPPY NEW YEAR மூன்று படங்களும் நன்றாகப் போகின்றன.
இவற்றிற்கு இனிமேல் விமர்சனம் தேவையா என்ன?
ஏழு
18/25
ஏழு பிறவி என்பர் ஏழு நாள் என்பர்
ஏழு ஸ்வரம் என்பர் ஏழு வள்ளல் என்பர்
ஏழு கடல் ஏழு மலை ஏழு நதி
ஏழு குளம் ஏழு மரம் தாண்டி
கூண்டில் இருக்கும் விட்டலாச்சாரியா குருவியா நாம் ?
ஏழுமலை கடந்து திருமலைக்குச் செல்
ஏழுமலையானைக் கண்டு கோவிந்தா சொல்
ஏழேழு பிறவிக்கும் தீவினை அண்டாது
சூரியன் பயணிப்பது ஏழு குதிரைகளில்
அவைதான் வாரத்தின் ஏழு நாட்களோ ?
அவைதான் முக்கிய கிரகங்கள்
சகலமும் துவங்கும் திங்கள்
சகலரையும் ஈர்க்கும் செவ்வாய்
காரிய சித்தி தரும் புதன்
குருவின் அருளைக் கூட்டும் வியாழன்
வக்கிரமில்லா சுக்கிர வெள்ளி
சக்தியை அழிக்கும் சனி
மனதுக்கு அமைதி தரும் ஞாயிறு !!
பண்டைய உலக அதிசயங்கள் ஏழு!
கிஃஜா வின் பெரிய பிரமிடு!
ரோட்ஸின் கலாசஸ்
பாபிலோனின் தொங்கும் தோட்டம்
அலெக்ஸேன்ரியாவின் கலங்கரைவிளக்கம்
ஆர்டமிஸ் கோவில்
மௌசோலியம்
ஒலிம்பியாவின் ஜீயுஸ் சிலை
சமீபத்தில் புதிய உலக அதிசயங்களை அறிவிக்க ஒரு உலக பவுண்டேசன் ஜூரிச்சில் அமைக்கப்பட்டது. 200க்கும் மேற்பட்ட உலக அதிசயங்களை ஆராய்ந்து அவற்றில் ஏழு அமைப்புகள் புதிய ஏழு அதிசயங்கள் என்று அறிவிக்கப் பட்டுள்ளன.
அவை
மெக்ஸிகோவின் சிசேன் இட்ஜா -யுகாடன் தீபகற்பம்
ரியோடி ஜெனிரோவின் ரிடீமர் கிறிஸ்து
சைனாவின் பெரிய மதில் சுவர்
பெருவின் மச்சு பிச்சு
ஜோர்டானின் பெட்ரா
இந்தியாவின் தாஜ் மஹால்
ரோமின் கலாசியம்
இவை அனைத்தும் சொல்லும் ஏழாம் வேற்றுமைக் கண்ணே!
கொஞ்சம் சிரித்து வையுங்க பாஸ்!
19/25
(சிவமால் )
செய்தித் துருவல்
20/25
- சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட ஜெயலலிதா சுப்ரீம் கோர்ட் அளித்த ஜாமின் அடிப்படையில் விடுதலையானார்.
- ‘நான் சந்திக்கும் துயரங்களை கண்டு, தாங்கிக் கொள்ள முடியாமல் மரணமடைந்த, 193 பேரின் குடும்பத்தினருக்கு, அ.தி.மு.க., சார்பில், தலா, மூன்று லட்சம் ரூபாய், குடும்ப நல நிதி உதவி வழங்கப்படும்’ என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
- அன்புமணிக்கு எதிரான ஊழல் வழக்கின் விசாரணை. மருத்துவக் கல்லுாரிக்கு முறைகேடாக அனுமதி தந்த விவகாரம்
- ஜெயந்தி நடராஜனிடம் விரைவில் சி.பி.ஐ., விசாரணை? விதிமுறைகளை மீறி சுரங்க நிறுவனங்களுக்கு அனுமதி
- தி.மு.க., ‘மாஜி’க்கள் மீதான, சொத்துக் குவிப்பு வழக்குகளில், லஞ்ச ஒழிப்புத் துறையும், அரசு சிறப்பு வழக்கறிஞர்களும் தீவிரம் காட்டி வருகின்றனர்
- மத்திய உளவு அமைப்புக்கு (ரா) கூடாரங்கள் வாங்கியதில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு
- அரியானாவில் அறுதி பெரும்பான்மை பெற்று பா ஜ க மந்திரிசபை அமைத்தது. கத்தார் முதல்வராக பொறுப்பேற்பு.
- மகாராஷ்ட்ராவில் அறுதி பெரும்பான்மை இல்லாவிடினும் பா ஜ க மந்திரிசபை அமைத்தது. பட்னாவிஸ் முதல்வராக பொறுப்பேற்பு.சிவசேனா முக்கிய எதிர்க்கட்சியாக அமைகிறது. பவார் கட்சி பா ஜ க விற்கு ஆதரவு.
- மாநிலம் முழுவதற்கும், ஆட்டோ மீட்டர் கட்டணம் நிர்ணயித்து, தமிழக அரசின் உள்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
- ரயில் பயணிகளுக்கு வை – ஃபை வசதி : சென்னை சென்ட்ரலில் விரைவில் ஏற்பாடு
- தனுஷ்கோடிக்கு சாலை அமைக்கும் பணி . 50 ஆண்டுகளுக்குப் பின் துவக்கம்
- பிரபல பெண் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன், 89, காலமானார்.
- பழம்பெரும் நடிகர் எஸ் எஸ் ராஜேந்திரன் காலமானார்
- ஆவின் பால் லிட்டருக்கு 10 ரூபாய் உயர்வு.
- ஏர்செல் – மேக்சிஸ் வழக்கில் கலாநிதி,தயாநிதிக்கு சம்மன்
- தமிழக மீனவர் 5 பேருக்கு தூக்கு: இலங்கை உத்தரவு
- மதுரை அண்ணாநகரில், குப்பை தொட்டியில் இருந்து 11 நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன
- பொள்ளாச்சி மகாலிங்கம் வாழ்க்கை ஒரு பொக்கிஷம்! : நினைவு அஞ்சலி
- புதிய பாஸ்போர்ட்டுகள் வழங்க ஆதார் கட்டாயமாகிறது
- கணக்கு இல்லாத வங்கிகளின் ஏ.டி.எம்.,மில், மாதத்துக்கு மூன்று முறைக்கு மேல் பணம் எடுத்தால், ஒவ்வொரு முறையும், 20 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
- தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஈ.வி.கே.எஸ்., இளங்கோவன் நியமனம் செய்யப்பட்டார்.
- மோடி மந்திரிசபையை விஸ்தரித்தார்
- பா.ஜ., ஆட்சி அமைக்காததால் டில்லி சட்டசபை கலைப்பு:
- காங்கிரசிலிருந்து விலகித் தனிக் கட்சி ஆரம்பிக்கிறார் வாசன்.
- நன்றி: தினமலர்
வெள்ளி
21/25
வெள்ளி எழ வியாழம் உறங்கிற்றாம் !
துள்ளி வரும் பெண்களில் பவனி வரும் வெள்ளி !
பெண்ணின் மங்கல நாயகியே வெள்ளி !
பொன்னின் இளைய சோதரியே வெள்ளி !
எம்மதமும் போற்றிடும் வெள்ளி – புனித வெள்ளி !
மாரியம்மன் கோவிலில் அலை மோதும் வெள்ளி !
மேரிமாதா கோவிலில் தலை கூடும் வெள்ளி !
நூரி பள்ளி வாசலில் தொழுதிடும் வெள்ளி !
பொன்னம்பல வாசன் வெள்ளியம்பல நேசன்
பாரில் மதம் அனைத்தும் போற்றிடும் வெள்ளி !
தட்டினால் வருவது தங்கம் வெட்டினால் வருவது வெள்ளி !
அட்டியில் பதிவது வைரம் பெட்டியாய் ஆயிடும் வெள்ளி !
உலகத்தை எழுப்புவது விடி வெள்ளி !
உலோகத்தின் தனிச்சிறப்பு புது வெள்ளி !
வெள்ளிக் கம்பியில் கோர்த்த முத்து மாலை
வெள்ளித் தட்டில் இட்ட பால் சோறு
வெள்ளிக் கிண்ணத்தில் வந்த முதல் இரவுப் பால்
வெள்ளிக் கூஜாவில் பாடும் சுக்கு வெள்ளம்
வெள்ளிக் கொலுசில் இழையும் திருப் பாதம்
வெள்ளிப் பேலாவில் பொதிந்த சந்தனம்
வெள்ளிக் கயிற்றில் கட்டிய அரை ஞாண்
வெள்ளிக் குத்து விளக்கில் எரியும் சுடர்
வெள்ளிக் குடத்தில் சொருகிய மாவிலை
வெள்ளிச் சங்கில் புகட்டிய மருந்து
வெள்ளிப் பெரு சங்கில் பொழிந்த சந்தனம்
வெள்ளிப் பஞ்ச பாத்திரத்தில் தினசரி வந்தனம்
வெள்ளியில் துலங்கும் பூஜா பாத்திரம்
வெள்ளித் தலையுடன் திரியும் அறிஞர்
வெள்ளிக் கரண்டியுடன் பிறந்த பேச்சாளர்
வெள்ளியில் அடங்கிய பொடி டப்பா
வெள்ளியில் விழா காணும் கலைஞர்
அனைத்தும் சொல்வது வெள்ளியின் சிறப்பு !!
மீனங்காடி
22/25
அடுத்த வெள்ளிக் கிழமையன்று அது நடந்தது.! மேரி தனது மூணாம் மாடி ஆபீஸுக்கு லிப்டில் இருந்து வெளியில் வந்தாள்.! அங்கே கண்ணை உறுத்துவது போல மிகப் பெரிய போஸ்டர் !
“ உங்கள் எண்ணத்தைத் தேர்ந்தெடுங்கள் “
இன்றைய மெனு – இன்றைய ஸ்பெஷல்
மேரி மகிழ்ச்சியின் உச்சத்துக்குப் போனாள். அவளுக்கு ரொம்ப குஷியாக இருந்தது. மக்கள் புரிந்து கொண்டார்கள் என்பதை இந்த போஸ்டரே சொல்லிற்று. உடனே டோனிக்கு போன் செய்ய ஓடினாள்.!
அவளோட முதல் வெற்றி ! மிகவும் சந்தோஷத்தைக் கொடுத்தது. இன்னும் நிறைய செய்யணும். “ டோனி ! இதைப் பத்தி உங்கிட்டே நிறையப் பேசணும் ! எப்ப உன்னை சந்திக்கலாம்?”
“ சனிக்கிழமை சந்திக்கலாமே ! உன் குழந்தைகளையும் கூட்டிட்டு மீனங்காடிக்கு வாயேன் !”
“ ஓகே !” உற்சாகமாய் இருந்தாள் மேரி .
மீனங்காடியில் சனிக்கிழமை
“ மீனங்காடி சனிக்கிழமை ரொம்ப பிஸியாக இருக்கும். காலையில் சீக்கிரமா வாயேன் !”
“ நீ எப்ப வருவே ?”
“ காலையில அஞ்சு மணிக்கு !”
“ ஊகும் ! அவ்வளவு விடியற் காலையில் குழந்தைகளைக் கஷ்டப் படுத்த முடியாது.”
“ சரி ஐந்தரைக்கு வா !” சிரித்துக் கொண்டே சொன்னான் டோனி.
“ அதெல்லாம் முடியாது. எட்டு மணி?”
“ சரி வா !”
குழந்தைகள் தூக்கக் கலக்கத்தில் இருந்தாலும் ஸ்கூல் – வீடு என்று ஒரே மாதிரி இருந்ததற்கு புதுசா மீன் மார்க்கெட்டுக்குப் போவது கொஞ்சம் மாறுதலா இருந்தது.
“ என்ன மீன் இருக்கும்? பெரிய மீன் எல்லாம் இருக்குமா? சுறா மீன் ? எங்களை மாதிரி பசங்கள் வருவாங்களா விளையாட ? “ கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டே வந்தார்கள் ஜோவும், ஜேனும்.
மீனங்காடி அப்போதைக்குக் கொஞ்சம் அமைதியாக இருந்தது. டோனியை நேரடியாகப் பார்த்தாள். மீனங்காடி அழகாக எல்லாம் அதன் அதன் இடத்தில் விவரம் எல்லாம் எழுதி வைத்து – பார்க்கவே நன்றாக இருந்தது, ஒரே ஒரு இடத்தில் மட்டும் மீன் எதுவும் இல்லை. ஐஸ் கொட்டிக் கிடந்தது.
“ ஹேய் ! குட் மார்னிங் !” வழக்கம் போல சிரித்துக் கொண்டே வந்தான் டோனி. “ யார் இந்த குட்டி மீன்கள் ?” குழந்தைகள் ஜோவையும், ஜேனையும் அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.
“ மேரி வேலையை ஆரம்பிக்க வேண்டியதுதான் “
உடனே நோட்டுப் புத்தகத்தையும் பேனாவையும் எடுத்தாள்.
“ நோ ! நோ ! உன் வேலையைச் சொல்லலை. என் வேலையை ஆரம்பிக்கணும்னு சொன்னேன் ! நீங்க மூணு பேரும் அங்கே இருக்கிற மீன்களை எல்லாம் எடுத்து அழகா அடுக்கி வைக்க உதவுவீங்க என்று நம்புகிறேன் “ என்றான்.
“ ஓ ! செய்றோமே ! – ஜோ அவன் பின்னால் ஓடினான். மேரி தோளைக் குலுக்கிக் கொண்டாள். ஜேன் அம்மா கையைப் பிடித்துக் கொண்டாள் !
“ மாஸ்டர் ஜோ ! உன் சைசுக்கு பூட்ஸ் இல்லை. ஆனா குட்டி ஜாக்கெட் தர்றேன் ! நாம இந்த மீன்களை எல்லாம் ‘ பேக் பண்ணலாம். “
டோனி ஜோவைக் கூட்டிக் கொண்டு கடையின் பின் பக்கம் போனான். ஜேன் அம்மாவை விட்டுப் போகாமல் ஐஸ்ஸை வைத்து விளையாட ஆரம்பித்தாள்.
பத்துப் பதினைந்து நிமிஷம் இரண்டு பேரையும் காணோம் ! மேரியும் கடையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
கட கட என்று மீன் வண்டி வரும் சத்தம் கேட்டது. ஒரு பெரிய டிராலியில் மலை மாதிரி மீன்களைக் கொட்டிக் கொண்டு ஐஸ் கட்டிகளோட டோனியும், ஜோவும் வந்து கொண்டிருந்தார்கள். டோனி தான் தள்ளினான். ஜோ அதன் கைப் பிடியில் தொங்கிக் கொண்டே தரையில் பட பட வென்று காலைத் தேய்த்துக் கொண்டே வந்தான் !
ஆட்டம் கொண்டாட்டம்
“ அம்மா ! உள்ளே எவ்வளவு மீன் கொட்டிக் கிடக்கு தெரியுமா ! இவ்வளவு ! “ என்று கையை விரித்துக் காட்டினான் ஜோ. “ நான் தான் எல்லாத்தையும் வண்டியில ஏத்தினேன் ! சரி தானே டோனி அங்கிள் ?” டோனி சிரித்துக் கொண்டே கேட்டான் ! “இதெல்லாம் பேக் பண்ண எனக்கு உதவி செய்வாயா ஜோ ?” “ ஓ யெஸ் “ – டோனிக்கு மீன் எடுத்துக் கொடுக்கிறது, ஐஸ் கட்டி கூட வைக்கிறது. ஜோ உயரத்திற்கு ஒரு பெரிய மீன். அதை இரண்டு பெரும் தூக்கி அழகா படுக்க வைத்தார்கள். “ சே ! காமிரா கொண்டு வர மறந்திட்டேனே !” என்று மேரி வருத்தப் பட்டாள். டோனி ஜோவை வேலை வாங்கியது மனதுக்கு இதமாக இருந்தது. ஜோவுக்கு பரம குஷி !
டோனி திடீரென்று “ மீன் என் கையைக் கடிச்சிடுச்சு “ என்று அலறினான். ஜோ ஒரு நிமிஷம் பயந்து பார்ப்பான். அப்புறம் விளையாட்டு என்று தெரிந்ததும் ‘ ஆஹா ஓஹோ ‘ என்று சிரிப்பான்!. அன்னிக்கு ‘ உனக்குப் பிடிச்ச ஹீரோ யார் ? என்றால் ரஜினி, கமல், கிரிக்கெட் தோனி எல்லாரையும் விட்டுட்டு மீனங்காடி டோனி அங்கிள் தான் என்று சொல்வான்.
ரொம்பவும் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தனர் குழந்தைகள் இருவரும்.!
“ சரி ஜோ ! ஜேன்! இப்போ உங்க அம்மாவுக்கு ஒரு சின்ன ‘கிளாஸ் ‘ எடுப்போம் ! உங்க ஆபீஸில் அடுத்தது என்ன செய்யணும் என்பதை ஜோ உனக்குச் சொல்லுவான். “
“ ஜோ !”
“ ஆமாம் ! அவனையே கேளு ! உங்க ஆபீஸில் இரண்டாவதாக நீங்கள் செய்ய வேண்டிய காரியம் என்ன தெரியுமா ! எல்லா குழந்தைகளுக்கும் அது தெரியும். நாம தான் வயதான பிறகு அதை மறந்து சீரியசாயிடறோம். ஜோ ! நீ சொல்லு ! ஸ்கூல்ல ரீசஸ் பீரியடிலே நீ என்ன செய்வே ?”
மீன் வண்டியை நகர்த்திக் கொண்டிருந்த ஜோ தலையைத் திரும்பிப் பார்க்காமலே பதில் சொன்னான் – "விளையாடுவோம் “.
மேரி நோட்டுப் புத்தகத்தை எடுத்து எழுதினாள். ‘
விளையாட்டு – ஆட்டம் – கொண்டாட்டம் ‘ அதுதான் அவள் மீனங்காடிக்கு வந்த முதல் நாள் நடந்து கொண்டிருந்தது. நன்றாகப் படித்துப் பட்டம் பெற்று டை கட்டி ஆபீஸில் வேலை செய்பவர்கள் எல்லாம் இடைவேளையின் போது குழந்தைகள் போல விளையாடிக் கொண்டிருந்தார்கள். மீனைத் தூக்கிப் போடுவது, ஒருத்தரை ஒருத்தர் கிண்டல் செய்வது, சத்தம் போட்டுப் பேசுவது, கோரஸாக எல்லோரும் ‘ போகுது பார் ‘ என்று பாடுவது எல்லாம் அவர்களின் விளையாட்டு தான். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான். அவற்றை எல்லாம் மனக் கண்ணில் கொண்டு வந்த மேரிக்கு உடம்பில் மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது.
“ தப்பா நினைக்காதே மேரி ! இது உண்மையான வியாபாரம் தான். லாபம் சம்பாதிக்கத் தான் நாங்கள் இருக்கிறோம். ஆனால் ஒரு சின்ன உண்மையைக் கண்டு பிடிச்சோம். சீரியஸா வியாபாரம் செய்யணும்; ஆனால் அதை விளையாட்டா செய்யணும் ! என்ன ஒண்ணுக்கொண்ணு ஏடா கூடமா இருக்கா? எங்க வாடிக்கையாளர் எல்லாம் இதை பெரியவர்களுக்கான மரியாதையான விளையாட்டு என்று நினைக்கிறார்களே தவிர தப்பா நினைக்கிறதில்லை.”
இதிலே நிறைய வசதி இருக்கு மேரி ! நாங்க மற்ற கடைகளை விட அதிகம் விற்கிறோம். நிறைய லாபம் வருது. நாங்க எங்க வேலையை சந்தோஷமா செய்யறோம். இல்லேன்னா இது ரொம்ப கஷ்டமான வேலை. மீனங்காடி தொழிலாளிகள் அனைவரும் ஒரு ஜெயிக்கிற கிரிக்கெட் டீம் மாதிரி நல்ல நண்பர்களாகப் பழகுகிறோம். இந்த உண்மை உலகத்திற்கே தெரிஞ்சதினாலே நாங்கள் உலக நாயகர்களாகி விட்டோம். எல்லாம் எப்படி ? யோசிச்சு யோசிச்சு ‘ ஜோ ‘ சொன்ன வேலையைத் தான் செய்தோம். செய்யறோம் செய்வோம் ! எப்படி விளையாடணும் என்று எங்களுக்குத் தெரியும் “
“ ஏம்மா ! உங்க ஆபீஸ் சிடு மூஞ்சிக்களை எல்லாம் இங்கே கூட்டிட்டு வாயேன் ! டோனி அங்கிள் அவர்களுக்கு எப்படி விளையாடறது என்று சொல்லித் தருவார்! சரியா டோனி அங்கிள் ?”
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே
திடீரென்று ஒருத்தன் மேரி கிட்டே வந்து , “ ஹேய் ! பத்திரிகை லேடி ! மீன் வாங்கலையா என்று கேட்டுக் கொண்டே வந்தான். டோனியின் சிஷ்யன் கையில் ஒரு குட்டி மீனை எடுத்துக் கொண்டு , “ ரொம்ப சல்லிசா தர்றேன் ! இதோட தாடி எலும்பு கொஞ்சம் உடைஞ்சிருக்கு ! அதனாலத் தான் சல்லிசா தர்றேன் ! “ மீனோட வாயைத் திறந்து காட்டினான். இதுக்குப் பேரு ‘சிரிக்கும் சிங்காரி ‘ ஒரு ரூபாய் தான்! ‘’ அவளிடம் வேடிக்கையாகப் பேசினான் அந்த ஓநாய் போல இருக்கும் வயதான இளைஞன். கூட்டத்தினர் அவனுக்கு வைத்த பெயர் ‘ ஓநாய்த் தாத்தா ‘. டோனி அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தான். ஜோவுக்கு அதைப் பிடிக்க ஆசை ! ஜேனுக்கு இப்ப தான் பயம் கொஞ்சம் தெளிந்தது. அம்மா பின்னாலிருந்து கொஞ்சம் தைரியமாக அந்த ஓநாய்த் தாத்தா கிட்டே வர ஆரம்பித்திருக்கிறாள்.
மேரி ஒரு ரூபாய் கொடுத்து அந்த மீனை வாங்கினாள். ஏன் அவனை எல்லோரும் ‘ ஓநாய் தாத்தா ‘ என்று கூப்பிடுகிறார்கள் என்று யோசிக்கவே வேண்டாம் . அவர் தலை அப்படி இருந்தது. அது மட்டுமல்ல அவர் பார்க்கும் பார்வை, அப்படி இப்படி நடக்கிற விதம் அசல் ஓநாய் தான். தன்னை அப்படி அழைப்பதில் அவருக்கும் ரொம்பப் பெருமை.! வயதான மனிதரானாலும் என்ன சுறுசுறுப்பு ! உற்சாகம் ! வீட்டில் பழகின ஓநாய் என்று சொல்லலாம் . அவளவு ஜாலி ! ஜோவுக்கும் ஒரு ‘ சிரிக்கும் சிங்காரி ‘ வாங்கிக் கொடுத்தாள்.
“ எனக்கும் ஒண்ணு “ என்று ஜேன் கேட்க அவளுக்கும் தனியே பையில் போட்டு சிரிக்கும் சிங்காரி கொடுத்தார் ஒநாய்த் தாத்தா !. சிங்காரமாகச் சிரித்தார்கள் அனைவரும்.!
டோனி ஓநாய்த் தாத்தாவிடம் , “ ரொம்ப நன்றி தாத்தா ! நீங்கள் மேரிக்கு சிரிக்கும் சிங்காரி மட்டும் கொடுக்கவில்லை. மூன்றாவது ‘ மருந்தும் ‘ கொடுத்தீர்கள் “ என்றான்.
“ நிஜமாவா ?” மேரி ஆச்சரியத்தில் மீன் மாதிரி வாயைத் திறந்தாள்.
“ மேரி இரண்டாவது தடவை இந்த மீனங்காடிக்கு வந்தாயே ! அப்போ இங்கே என்ன நடந்தது ? நினைச்சுப் பாரு மேரி ! உன் மனசில் என்ன நிலைச்சு நின்னது ? “
“ ஒரு காலேஜ் பொண்ணு ! 20 வயது இருக்கும். அவள் மேடை மேலே ஏறி மீன் பிடிக்க ஐஸ் பாதையில் ஓடியாடி . இரண்டு மூன்று தடவை தடுக்கி விழுந்து. கடைசியில் தட்டுத் தடுமாறி மீனை ரெண்டு கையாலும் லபக்குன்னு பிடிச்சு ஒலிம்பிக்கில் தங்கம் கிடைத்தது போல குதித்தாளே ! அதுவா ?
“ சரியா சொன்னே மேரி ! அந்தப் பொண்ணுக்கு அந்த நிகழ்ச்சி நினைவில் இருக்குமா ? “
“ நிச்சயமா ! அவள் ஓடும் போது பார்த்துக் கொண்டிருந்த நாங்கள் அனைவரும் அவள் கூடவே ஓடி, தடுக்கி விழுந்து, கடைசியில் நாங்களும் அவள் கூடச் சேர்ந்து மீனைப் பிடித்து துள்ளிக் குதித்தது போல ஒரு பிரமை.
“மேரி! இன்னிக்கு ஜோ எதை நினைச்சு சந்தோஷப்படுவான் ?”
“ பெரிய ஆள் மாதிரி ! உன் கடைக்குப் பின்னாடி போனது . மீன் வண்டியில் வைத்துத் தள்ளிக் கொண்டு வந்தது. உன் கூட வேலை செய்து மீனை அடுக்கி வைத்தது. இதெல்லாம் அவன் ஆயுசுக்கும் மறக்க மாட்டான். “
இதுதான் எங்கள் மூலதனம் மேரி ! வாடிக்கையாளர்கள் நம்மிடம் வரும் ஒவ்வொரு நாளையும் அவர்கள் நினைவில் நிற்கிற நாளாய் மாற்ற வேண்டும். இந்த நாள் மறக்க முடியாத நாள் என்று அவர்கள் நினைக்க வேண்டும். நாங்கள் தீவிரமாக யோசித்து அப்படி ஒரு நாளை அவர்களுக்குக் கொடுக்கிறோம். அவர்களுடன் பேசி, பழகி, ஒட்டி உறவாடுவோம். அவர்களை விட்டு மற்ற கடைக்காரர்கள் போல விலகி இருக்க மாட்டோம். அதே சமயம் அவர்களை மிகுந்த மரியாதையுடன் எங்கள் விளையாட்டில் பங்கு பெற வைப்போம். நாங்கள் வெற்றி அடைந்தோம் என்றால் அவர்களுக்கு ‘ அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே ‘ என்றைக்கும் நிலைத்து நிற்குமல்லவா?
மேரி தனது நோட்டுப் புத்தகத்தை எடுத்து எழுதினாள்.
‘ அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே ‘
அவள் மனம் சிறகடித்துப் பறந்தது. இவர்கள் வாடிக்கையாளர்களுடன் இணைந்து உறவாடுகிறார்கள். வேடிக்கையாகப் பங்கு பெற வைக்கிறார்கள். அவர்களும் இவர்களுடன் சேர்ந்து ஒரு நாடகம் போல – ஒரு நடனம் போல – ஒரு கலை நிகழ்ச்சி போல பங்கு பெறுகிறார்கள். அந்த சந்தோஷமான நிகழ்ச்சி அவர்கள் மனத்தில் புன்னகையையும் நிறைந்த மகிழ்ச்சியையும் தோற்றுவிக்கிறது. ‘ அந்த நாள் ஞாபகம் ‘ நெஞ்சிலே என்றைக்கும் இருக்கும். வாடிக்கையாளரின் நெஞ்சில் அந்த நாளை மறக்க முடியாத நாளாக மாற்றுவது எவ்வளவு பெரிய கலை ! அதைத் தொடர்ந்து செய்யும் இந்த மீனங்காடித் தொழிலாளர்களின் மனம் எவ்வளவு மகிழ்ச்சிகரமாக இருக்கும் !
“ ஹலோ ! மேடம் ! என்னாச்சு? வீட்டிலே சொல்லிக்கிட்டு வந்திட்டியா ? “ வேடிக்கையாக விரலைச் சொடக்கினான் டோனி ! மேரி சிலிர்த்துக் கொண்டாள். டோனி, ஜோ,ஜேன் மூவரும் சிலை போல நின்று கொண்டிருக்கும் மேரியை ஒரு நிமிஷம் உற்றுப் பார்த்தார்கள்.
“ சாரி டோனி ! சாரி குட்டீஸ் ! இந்த ‘அந்த நாள் ஞாபகம்’ அஸ்திரத்தை எங்கள் ஆபீஸில் எப்படிப் போடுவது என்று யோசித்துக் கொண்டிருந்ததில் எல்லாவற்றையும் மறந்து விட்டேன்.“
”இதோடு இன்னிக்குப் பாடம் போதும்.! குழந்தைகளுக்கு பசிக்கும் ! நான் வாங்கித் தருகிறேன். வாங்க ஜோ ! ஜேன் ! வா மேரி “ என்று அழைத்துக் கொண்டு புறப்பட்டான் டோனி .
“மீன் குட்டிகளா ! உங்களுக்குப் பசிக்குதா ?
“ ஆமாம் அங்கிள் “ கோரசாக இருவரும் சொன்னார்கள்.
மேரியும் மெல்ல ‘ ஆமாம் ‘ என்று சொல்லி அவர்கள் பின்னால் நடந்தாள்.!
(தொடரும்)
ஏறுதப்பு சுதி ஏறுதப்பு
23/25
ஏறுதப்பு ஏறுதப்பு ஏறுதப்பு
யாரு தப்பு யாரு தப்பு யாரு தப்பு
ரெண்டு பெக் வாயில் போட்டாலே
ஏறுதப்பு – சுதி ஏறுதப்பு
ரெண்டு மண்டை சண்டைபோட்டாலே
யாரு தப்பு – அது யாருதப்பு
மனுஷனும் சைக்கிளும் மோதிக்கிட்டா
யாரு தப்பு – அது யாரு தப்பு
சந்தேகமில்லை சைக்கிள் தப்பு
சைக்கிளும் ஸ்கூட்டரும் மோதிக்கிட்டா
யாரு தப்பு – அது யாரு தப்பு
சந்தேகமில்லை ஸ்கூட்டர் தப்பு
ஸ்கூட்டரும் காரும் மோதிக்கிட்டா
யாரு தப்பு – அது யாரு தப்பு
சந்தேகமில்லை காரு தப்பு
காரும் லாரியும் மோதிக்கிட்டா
யாரு தப்பு – அது யாரு தப்பு
சந்தேகமில்லை லாரி தப்பு
பெண்ணின் கண்ணைக் கண்டாலே
கண்ணில் போதை ஏறுதப்பு
ஏறுதப்பு அது ஏறுதப்பு
பெண்ணின் சேலை பட்டாலே
நெஞ்சில் சூடு ஏறுதப்பு
ஏறுதப்பு அது ஏறுதப்பு
பொண்ணும் ஆணும் காதலிச்சா
யாரு தப்பு – அது யாரு தப்பு
சந்தேகமில்லை ஆம்பிளை தப்பு
காதல் பொண்ணு கர்ப்பம் ஆனா
யாரு தப்பு – அது யாரு தப்பு
சந்தேகமில்லை பொம்பளை தப்பு !!
நம்ம ஊர் திருச்சி (ரகு)
24/25
அரங்கன் உறங்கும் அழகு திருவரங்கம்
உச்சியில் அமர்ந்தஅருமைப் பிள்ளையார்
புரங்கள் எரித்த ஆனைக்கா அண்ணல்
பக்திநிறைப் பெண்ணுக்கு தாயும் ஆனவன்
சக்தியாய் மிளிர்ந்த சமயபுரத்துஅம்மன்
அருணகிரிக்கு அருளிய வயலூர் குமரன்
அனைத்தும் அமைந்த சிராப்பள்ளி புகழ்
அனைத்தும் சொல்வது அரிதே அரிதே!
புராணம்:
- ராம ராவண யுத்தம் முடிந்து பள்ளீகொண்ட பரந்தாமன் திருவுருச் சிலை தாங்கி வான வழியாய் வீடணன் வர, அந்தச் சிலை இலங்கை சென்றடைந்தால் அரக்கர் சக்தி மீண்டும் அதிகமாகிவிடும் என்று வானரர் பதைக்க, ஆனை முகத்தோன் தந்திரமாக திருமால் திருவுருவைக் காவிரிக் கரையில் ஸ்தாபித்த இடம்பூலோக வைகுண்டம் என்று வழங்கப்படும் திருவரங்கத் தலம் அமைந்த ஸ்ரீரங்கம் -108 வைணவத் தலங்களில் முதலானது.
- வீடணன் பிள்ளையாரை விரட்டிச்சென்று உச்சிமண்டையில் நச்சென்று குட்டினான். பிள்ளையார் ஓடி அமர்ந்த இடம் உச்சிப் பிள்ளையார் கோவில் என்ற மலைக்கோட்டை.
- பிள்ளையார் சிலையின் உச்சி மண்டையில் குட்டுப்பட்டதழும்பு இன்றும் உண்டு.
- செட்டிப் பெண்ணுக்கு பிரசவ வலி எடுக்க ,அவளுடைய தாய் காவிரியைக் கடக்க முடியாமல் அக்கரையில் தவிக்க, பெண்ணின் துயர் தீர்க்க சிவபெருமான் தானே தாயாக வந்து பிரசவம் பார்த்தான். தாயுமானவனாக அமர்ந்தான் மலைக் கோட்டையில்.
- பஞ்ச பூதங்களில் ஒன்றான அப்புத் தலமாக (நீர்) அமைந்தது திருவானைக்கோயில்.
சரித்திரம்
- இன்றும் இருக்கும் உறையூர், அன்றைய சோழர்களின் தலைநகரமாக இருந்தது. கோட்டையும் அகழியும் மதில்களும் இருந்தன.
- உச்சிப் பிள்ளையாரும் தாயுமானவரும் எழுந்தருளியிருக்கும் மலையைச் சுற்றிக் கோட்டை அமைந்திருந்ததால் மலைக்கோட்டை என்றே அழைக்கப்பட்டது.
- சிதைந்த மதில் , கோட்டை வாசல் ஆகியவற்றை மலைக்கோட்டைக்குள்ளே இன்றும் காணலாம்.
- அகழி இருந்த இடம் இப்போது சாலையாக மாறிவிட்டது.
- காவிரியின் குறுக்கே கரிகாற்சோழன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டிய அணை இன்றும் காலத்தைக் கடந்து கல்லணையாக நின்று,பண்டைய சோழர்களின் பெருமையையும் பொறியியல் திறனையும் பறை சாற்றுகிறது. இங்கிருந்து தான் காவிரி,கொள்ளிடம்,கல்லணைக் கால்வாய் என்று பிரிகிறது.
- ஆங்கில ஆதிக்கத்தின் போது ராபர்ட் கிளைவ் இங்கிருந்து அதிகாரம் செலுத்தினார். இன்றும் அவர் இருந்த இடம் கிளைவ்ஸ் ஹவுஸ் என அழைக்கப்படும் செயிண்ட் ஜோசப் கல்லூரியின் கிளைவ்ஸ் ஹாஸ்டலாக இருக்கிறது.
- ஆங்கிலேயர் காலத்துப் பல கட்டடங்கள் இடிபாடுகளோடு காணக் கிடைக்கின்றன. மலைக்கோட்டைக்கு எதிராக செயிண்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் இருக்கும் கம்பீரமான சர்ச் இதற்கு எடுத்துக்காட்டு.
இன்று:
- தமிழ் நாட்டின் மையத்தில் அமைந்துள்ள திருச்சியிலிருந்து எந்த இடத்துக்கும் செல்ல 24 மணிநேரமும் பஸ் வசதி உண்டு.
- ஏராளமான புகைவண்டிகள் பல மாநிலத்திற்குள் செல்கின்றன.
- இண்டர்நேஷனல் ஏர்போர்ட் அமைந்திருக்கிறது.
- திருச்சி கல்வி கேந்திரமாக விளங்குகிறது.
– 150 வருடத்தைக் கடந்த செயிண்ட் ஜோசப் கல்லூரி– சீதாலக்ஷ்மி ராமஸ்வாமி பெண்கள் கல்லூரி
– இந்திராகாந்தி கல்லூரி
– நேஷனல் கல்லூரி
– உருமு தனலக்ஷ்மி கல்லூரி
– பிஷப் ஹீபர் கல்லூரி
– பாரதிதாசன் இன்ஸ்ட்டிட்யூட் ஆப் மேனேஜ்மெண்ட்
– நேஷனல் இன்ஸ்ட்டிட்யூட் (முன்னாள் ரீஜனல் இஞ்சினீரிங்க் கல்லூரி)
– பாரதிதாசன் பல்கலைக்கழகம்
– இன்னும் எத்தனையோ கல்லூரிகள், பள்ளிகள்
காவிரித் தாயின் மடியில் கொள்ளிடத்தின் அரவணைப்பில் உள்ளதால் நெல்லும்,கரும்பும்,வாழையும் விளையும் பொன்னான பூமி இது.
ஆயிரக்கணக்கான யாத்ரிகர்கள் தினமும் வந்து போகும் புண்ணிய பூமி இது. ஸ்ரீரங்கம், திருவானைக் கோயில், மலைக்கோட்டை, தாயுமானஸ்வாமி கோயில், சமயபுரத்து அம்மன், வயலூர் முருகன், பிச்சாண்டார் கோயில், குழுமாயி அம்மன் கோயில், உறையூர் வெக்காளி அம்மன் கோயில், குங்குமவல்லி அம்மன் கோயில், விராளிமலை முருகன் கோயில் போன்ற கோயில்கள் திருச்சிக்குப் பெருமை சேர்க்கின்றன.
புகழ்மிக்க பிஎச்இஎல் (BHEL), துப்பாக்கித் தொழிற்சாலை இங்கு அமைந்துள்ளன.
முக்கொம்பு,கல்லணை ஆகியவை மகிழ்ச்சி தரும் சுற்றுலா தலங்கள்.
சுகம்:
காவிரியின் பாலத்தில் நின்று கொண்டு பார்த்தால் ஒருபுறம் ஓங்கி உலகளந்தஉத்தமன் அரங்கனின் ஆசியாவிலேயே மிகப் பெரிய கோபுரம், மறுபுறம் அரவணைத்துக் காத்தருள் புரியும் உயர்ந்த உச்சிப் பிள்ளையார் மலைக்கோட்டை, கீழே நெளிந்து ஓடும் காவிரி அன்னை .. ஆகா! என்ன சுகம் என்ன சுகம்!
மலைக்கோட்டை உச்சியில் நின்று பார்த்தால் சிலுசிலுக்கும் காற்றின் சுகத்தோடு கீழே வளைந்து ஓடும் காவிரியையும், கொள்ளிடத்தையும், உயர்ந்து நிற்கும் அரங்கன் கோபுரத்தையும் நீண்ட பாலத்தையும் பாலத்தில் ஊர்ந்து வரும் புகை வண்டியையும் பொடிப் பொடியாய் தெரியும் வீடுகளையும் காணலாம். காணக் கண் கொள்ளாக் காட்சி அது.