21/25

வெள்ளி எழ வியாழம் உறங்கிற்றாம் !
துள்ளி வரும் பெண்களில் பவனி வரும் வெள்ளி !
பெண்ணின் மங்கல நாயகியே வெள்ளி !
பொன்னின் இளைய சோதரியே வெள்ளி !
எம்மதமும் போற்றிடும் வெள்ளி – புனித வெள்ளி !
மாரியம்மன் கோவிலில் அலை மோதும் வெள்ளி !
மேரிமாதா கோவிலில் தலை கூடும் வெள்ளி !
நூரி பள்ளி வாசலில் தொழுதிடும் வெள்ளி !
பொன்னம்பல வாசன் வெள்ளியம்பல நேசன்
பாரில் மதம் அனைத்தும் போற்றிடும் வெள்ளி !
தட்டினால் வருவது தங்கம் வெட்டினால் வருவது வெள்ளி !
அட்டியில் பதிவது வைரம் பெட்டியாய் ஆயிடும் வெள்ளி !
உலகத்தை எழுப்புவது விடி வெள்ளி !
உலோகத்தின் தனிச்சிறப்பு புது வெள்ளி !

வெள்ளிக் கம்பியில் கோர்த்த முத்து மாலை
வெள்ளித் தட்டில் இட்ட பால் சோறு
வெள்ளிக் கிண்ணத்தில் வந்த முதல் இரவுப் பால்
வெள்ளிக் கூஜாவில் பாடும் சுக்கு வெள்ளம்
வெள்ளிக் கொலுசில் இழையும் திருப் பாதம்
வெள்ளிப் பேலாவில் பொதிந்த சந்தனம்
வெள்ளிக் கயிற்றில் கட்டிய அரை ஞாண்
வெள்ளிக் குத்து விளக்கில் எரியும் சுடர்
வெள்ளிக் குடத்தில் சொருகிய மாவிலை
வெள்ளிச் சங்கில் புகட்டிய மருந்து
வெள்ளிப் பெரு சங்கில் பொழிந்த சந்தனம்
வெள்ளிப் பஞ்ச பாத்திரத்தில் தினசரி வந்தனம்
வெள்ளியில் துலங்கும் பூஜா பாத்திரம்
வெள்ளித் தலையுடன் திரியும் அறிஞர்
வெள்ளிக் கரண்டியுடன் பிறந்த பேச்சாளர்
வெள்ளியில் அடங்கிய பொடி டப்பா
வெள்ளியில் விழா காணும் கலைஞர்
அனைத்தும் சொல்வது வெள்ளியின் சிறப்பு !!

