பாரதி சொன்னாரா? – ‘மெல்லத் தமிழினிச் சாகும் என்று!

image

image

பாரதியார் “மெல்லத் தமிழ் இனி சாகும்’ என்று சொன்னார் என்று பலர் சொல்லித் திரிவார்கள்! எவ்வளவு தவறான வார்த்தை அவை! மக்கள் எப்படித்  தவறான செய்தியைப் பரப்புகிறார்கள் என்பதற்கு இதுவும் ஓர்  உதாரணம்.

அவர் சொன்னது இது தான்: 

‘மெல்லத் தமிழினிச்  சாகும்; மேற்கு மொழிகள் உலகில் ஓங்கும் ’ என்று மடையர்கள் அறிவற்றவர்கள் கூறித்திரிவர். அந்த சொல்லத் தகாத சொல்லைப் பொய்ப்பித்து எட்டுத் திசையெங்கும் சென்று கலைவளத்தைத் தமிழகத்திற்குக் கொண்டு வாருங்கள். கடவுள்  ஆசியாலும்  புலவர் முயற்சியாலும் இந்தப் பெரும் பழி தீரும். தமிழன்னை உலகத்தில் என்றும்கோலோச்சி  இருப்பாள் !

என்பதே பாரதியாரின் கருத்து!   

 அவர் எழுதிய முழு பாடல் இது தான்: 

”“கன்னிப் பருவத்திலே அந்நாள் – என்றன் 
காதில் விழுந்த திசைமொழி எல்லாம் 
என்னென்னவோ பெயருண்டு – பின்னர் 
யாவும் அழிவுற்று இறந்தன கண்டீர்! 

தந்தை அருள் வலியாலும் – முன்பு 
சான்ற புலவர் தவ வலியாலும் 
இந்தக் கணமட்டும் காலன் – என்னை 
ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சி இருந்தான் 

இன்றொரு சொல்லினைக் கேட்டேன் – இனி 
ஏது செய்வேன்? எனதாருயிர் மக்காள்! 
கொன்றிடல் போலொரு வார்த்தை – இங்கு 
கூறத் தகாதவன் கூறினான் கண்டீர்! 

"புத்தம் புதிய கலைகள் – பஞ்ச 
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும் 
மெத்த வளருது மேற்கே – அந்த 
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை 

சொல்லவும் கூடுவதில்லை – அவை 
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை 
மெல்லத் தமிழினிச் சாகும் – அந்த 
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்" 

என்றந்தப் பேதை யுரைத்தான் – ஆ! 
இந்த வசை எனக்கெய்திடலாமோ? 
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் – கலைச் 
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்! 

தந்தை அருள் வலியாலும் – இன்று 
சார்ந்த புலவர் தவ வலியாலும் 
இந்தப் பெரும்பழி தீரும் – புகழ் 
ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்." 

image

பக்கம் 3/25