ஐ  – ஒரு அனாடமி  (ராசாத்தி கண்ணு )

‘ஐ’ என்றால் அது ஐந்து என்றால்
அதன் விமர்சனமும் ஐந்து பரிணாமத்தில் …

image

1. இது ஒரு ஷங்கர் படம்


ஷங்கர் படம் என்றாலே சிலவற்றை எதிர்பார்க்கலாம்.அந்த Checklist வைத்து இந்தப் படத்தைப் பார்ப்போம்
அளவில்லாத பிரம்மாண்ட பட்ஜெட்             -செக்
ஹிட் ஹைடெக் பாடல்கள்                              -செக்
சூப்பர் சினிமாட்டோக்ராஃபி                              -செக்
இதுவரை பார்த்திராத இடங்கள்                      -செக்
புதுமையான சண்டைக் காட்சிகள்                  -செக்
பானைப்பாட்டு , பூக்கள் நிறைந்ததே பாட்டு   -செக்
ஒன்றுக்கு மேற்பட்ட வில்லன்கள்                  -செக்
கொடூரமாகப் பழி வாங்கும் படலம்                -செக்
வலுவான கதை, திரைக்கதை                           – sorry மிஸ்ஸிங்


2. கதை, திரைக்கதை, நடிகர்கள்


பொதுவாக ஒரு பெரிய நாட்டளவுப் பிரச்சினையை ஷங்கர் தீர்த்து வைப்பார். ஆனால் இதில் ஒரு தனிமனிதன் பிரச்சினையைக் கையாண்டிருக்கிறார்.


ஒரு பாடி பில்டரின் புதுமையான கதை.அவரின் மிஸ்ட ர் இந்தியா கனவு, அதற்காக உடம்பை தயார் செய்யும் முயற்சிகள் எல்லாம் காட்டி இருக்கிறார். 
ஆனால் அவர்களின் சக்தி,முதலீடு எல்லாம் அந்த கட்டு மஸ்தான உடம்பு தான் என்பதை இன்னும் கொஞ்சம் மனதில் நிற்கும்படியாகக் காட்டியிருக்கலாம்.


ஹீரோவின் உருவம் மாறுவது ஒரு முக்கியமான கட்டம். அந்த காட்சிகளில் இன்னும் கொஞ்சம் நேரம் செலவழித்திருந்தால் பார்ப்பவரின் மனதைத் தொட்டிருக்கும். அங்கே டைரக்டர் கோட்டை விட்டுவிட்டார்.


மேலும் முன்னும் பின்னுமாக நகரும் திரைக்கதையால், முதலிலிலேயே மாறுபட்ட ஹீரோவை பார்த்ததால், அந்த மாற்றம் தரும் பஞ்ச் மிஸ் ஆகிறது.


ஷங்கரின் எல்லா படங்களிலுமே ஒன்றிரண்டு நெகிழ வைக்கும் டைலாக் ,காட்சி வரும். இதிலும் இருக்கு – , சந்தானத்தின் கண்ணிலேயே கண்ணீர் வரும் அளவுக்கு. ஆனால் நம்மால் ஏனோ ரசிக்க முடியவில்லை.


அடுத்தது இது தான் நடக்கும் என்றும், இவர் தான் முக்கிய வில்லன் என்றும் எல்லோராலும் எளிதாக யூகிக்க முடியும் என்று ஷங்கரால் ஏனோ யூகிக்க முடியவில்லை.  எல்லோருக்கும் எளிதாக புரிந்த வில்லன்களின் சதித் திட்டத்தை, 80 களில் வரும் படம் போலே, அவர்களே விரிவாக விளக்குவது சற்று எரிச்சலைத் தருகிறது.

image


ஹீரோயின் ஒரு பெரிய பிளஸ் பாயிண்ட் தான். ஒரு மாடலாக வருவதால், பல விதமான, குறைவான உடைகளில் வந்தாலும், கண்ணுக்கு உறுத்தாமல் அழகாக இருக்கிறார். தமிழர்களின் மனதில் கவர்ச்சிக் கன்னி கோடி லைக்ஸ் வாங்குவார் என்பதில் ஆச்சர்யம் இல்லை. சில இடங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார்.


காமெடிக்கு சந்தானம்.  முன் பாதியில் பல இடங்களில் சிரிக்க வைக்கிறார்.  ஆனால் பின்பகுதியில் சீரியஸ் டைமில் காமெடி கொஞ்சம் ஓவரா தான் இருக்கு.  பவர் ஸ்டாரும் சில இடங்களில் வந்து, விழுந்து விழுந்துச்  சிரிக்க வைக்காவிட்டாலும் , சில ஸ்மைல்களை அள்ளிச் செல்கிறார்.


வில்லன்களில் சில பேர் அனாவசியம். சண்டைக் காட்சிகள், சினிமாட்டோக்ராஃபி மற்றும் காட்சி இடங்கள் மிக பிரமாதம். ஒவ்வொரு ஷாட்டையும் பார்க்கப் பார்க்க அழகு.  காமிராமேனுக்கு ஒரு தனி ஷொட் டு. அடுத்த வெகேஷன் எல்லோரும் சீனா லொகேஷன் போனால் ஆச்சரியம்  இல்லை !.


புதுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக புது வகையான சதி மற்றும் பழி வாங்கும் யுக்திகள் என்று டைரக்டர் காட்டி இருக்கிறார். ஆனால் முகம் சுளிக்கும் வகையில்  கொடூரமாக இருக்க வேண்டுமா  என்பது யோசிக்க வேண்டிய விஷயம் .


3. இசை, பாடல்கள்


ரஹ்மானின் இசை இதில் கொ டி கட்டிப் பறக்கிறது.  தலைவர் படத்தில் சற்று கோட்டை விட்ட ரஹ்மான் இதில் விட்ட இடத்தைப்  பிடித்திருக்கிறார்.


ஏற்கனவே பாடல்களெல்லாம் மெகா ஹிட். இசை மற்றும் பாடியவர் குரல் கேட்டு எல்லோரும் மெரசலாயிட்டோம். பாடல்களை படம் ஆக்கிய விதமும் அபாரம். 


4. ஐ என்றால்?


தமிழிலே ‘ஐ’ என்கிற சொல்லுக்கு அர்த்தங்கள் பல. அதை ஒரு பாட்டுலே மதன் கார்கி ரொம்ப ரொம்ப ஐ(ஹை) யாக சொல்லி இருக்கிறார்

“ ஐ என்றால் அது அழகு என்றால் அந்த ஐ களின் ஐ அவள் தானா ?”

“ ஐ என்றால் அது தலைவன் என்றால் அந்த ஐ களின் ஐ அவன் நீயா?”

கதையைப் பொறுத்தவரை ‘ஐ’ இரண்டு இடத்துலே முக்கியமா வருது.

 ஹீரோ ஹீரோயின் லவ் பண்ணுவதற்குக் காரணம் – ஐ (ஒரு பெர்ஃப்யூம்) 

அதே மாதிரி வில்லன் ஹீரோவை அட்டாக் பண்ணுவதும் – ஐ (ஒரு வைரஸ்)


5. அதற்கும் மேலே ‘I’ என்றால் ‘நான்’ என்கிறார் விக்ரம்

image

சினிமாத் துறையில் விக்ரமின் அர்ப்பணிப்புப் பற்றி எல்லோரும் அறிந்தது தான். ஒரு படத்தில் ஒரு கெட்டப்பில் வந்தால், அடுத்த படத்தில் வேற கெ ட்டப்புக்குக் கடுமையா உழைக்கும் ஒரு நேர்மையான நடிகர் . ஆனால் இந்த படத்தில் அதற்கும் மேலே  ஒரே படத்தில் மூன்று விதமான கெட்டப்பில் வருகிறார். 


விக்ரம் in ஐ என்பதை விட இது விக்ரமின் ஐ 


முதலில் ஒரு பாடி பில்டர் – இதற்காக நல்ல கட்டு மஸ்தான உடம்பை தயார் செய்திருக்கிறார். மிஸ்டர் இந்தியா போட்டிக்காக எண்ணை தடவிய உடம்போடு  போஸ் குடுக்கும் விக்ரமின் உழைப்பை நன்றாகப் பாராட்ட வேண்டும். 


அடுத்து ஒரு ஹேண்ட்ஸம் மாடல் – மோதலில் லுக் மாறுவது, பிறகு பாடி லாங்குவேஜ் என்று நம்பும்படியாக இருக்கிறது. இங்கு டைரக்டருக்கும் பாராட்டுகள் சொல்ல வேண்டும். 

ஹீரோயின் அவரை காதலிக்கிறேன் என்று சொல்லும் போது, கூல் மாடல் லுக்குடன், அப்பாவியாக சென்னை தமிழில் “லிங்கேசா நம்பாதே நம்பாதே ” என்று ஓடும் காட்சி அருமை. பூக்களே,ஆய்லா பாட்டில் அவரைப் பார்த்து, அவர் நடிக்க வந்து 10 ஆண்டுகள் கழித்து பிறந்த பெண்கள் கூட, தங்கள் பாய்ஃப்ரெண்ட் இவர் போல் இருக்க வேண்டும் என்று சொல்லும்படி வைத்து விட்டார்.


கடைசியாக கூனன் – இதற்காக மேக்கப் மட்டும் போதுமென்று இல்லாமல் எடையைக் குறைத்து, அந்த பாத்திரத்துக்கு ஏற்றபடி தன்னையே உருமாற்றி இருக்கிறார்.


அதனால் விக்ரமின் நடிப்பு, உழைப்பு, body builder physique, ஹேண்ட்ஸம்  லுக், கூனிக்  குறுகிய கோலம் எல்லாம் காண கண்டிப்பாக ஐ பார்க்கலாம்.


ஆனால் கதை, திரைக்கதை என்று பார்த்தால்     ??

image


ஆகமொத்தம் இந்த ‘i’ ஃபிசிக்ஸ்ஸில் வரும் கரண்ட்டாக இல்லாமல் கணிதத்தில் வரும் கற்பனையாகத் தான் இருக்கிறது.

படத்தைப் போலவே இந்த விமர்சனமும் நீ…..ண்டு  விட்டது!