
மறைந்த திருவாசகமணி KM பாலசுப்ரமணியன் அவர்கள் ஆங்கிலத்தில் அபாரப் புலமை படைத்தவர்.பல வருடங்களூக்கு முன்பே திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உலகறியச் செய்தவர். அந்த நூலின் பிரதிகள் தற்சமயம் கிடைப்ப தில்லை.எனவே அதை மறுபதிப்பு செய்யவேண்டும் என்று “ சிவாலயம்” என்ற அமைப்பின் முன்னவர் எஸ் மோகன் செய்த முயற்சியின் விளைவே இந்த விழா!
அருட்செல்வர் பொள்ளாச்சி நா. மகாலிங்கம் அறக்கட்டளையால் சிவாலயம் மற்றும் ராமலிங்க பணி மன்றமும் இணைந்து நடத்திய விழாவில் பேசியவர்களின் பேச்சு திருவாசகத்தைப் போலவே உருக்கியது.
ஓதுவாரின் திருவாசகப் பண் என்ன!
குன்றக்குடி அடிகள், ஊரன் அடிகள், ஔவை நடராசன், செல்வகணபதி, சொ
சொ மீ சுந்தரம் சங்கர நாராயணன் ,மாணிக்கம், வயித்தியலிங்கன் ஆகியோரின் சிறப்பான பேச்சு என்ன! .
மனதில் பதிந்து, உருக்கி , கண்ணில் நீரை வரவழைத்தத் திருவிழா இது!
திருவாசகத்தை ஆங்கிலத்தில் முதலில் மொழிபெயர்த்தவர் ஜி யூ போப் அவர்கள்! உலகத் தமிழ் மாநாட்டின் போது அவருக்குச் சென்னை மெரினாவில் சிலை வைக்கப்பட்டுள்ளது! அவரைப் பற்றி இந்த அவையில்
ஒரு கதை சொல்லப்பட்டது.

இந்தியாவிற்கு கிறித்தவ மதத்தைப் பரப்ப வேண்டும் என்று வந்த பாதிரியார் அவர். திருவாசகத் தேனைப் பருகி இன்புற்ற அவர் ஹிந்து மத நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உலக அளவில் பரப்பிவிட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அவர் இங்கிலாந்து திரும்பியதும் அவர் மேல் ’அவர் உண்மையான கிறித்தவர் இல்லை’ என்று வழக்குப் போட்டார்களாம்.
தீர்ப்பு சொல்லவந்த நீதிபதி அவர் மொழிபெயர்த்த திருவாசகத்தைப் படித்துவிட்டு சொன்னாராம்
’ இவ்வளவு பெருமையான நூலைப் படித்துத் திளைத்து மொழிபெயர்த்தவர் திரும்பவும் இங்கிலாந்து வந்து கிறித்தவராகவே இருக்கிறார் என்றால் அவரை விட சிறந்த கிறித்தவர் இருக்கமுடியாது’ என்று.
முதுமையில் தளர்ச்சியடைந்த சமயம் தமது நண்பரிடம் மூன்று விருப்பங்களைத் தெரிவித்திருந்தாராம் ஜி.யு.போப்.
- இறப்புக்கு பின் தனது கல்லறையில் இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான் என்ற வாசகம் இடம்பெற வேண்டும் (அவரது உயிலிலோ அவரது கல்லறையிலோ அத்தகைய கருத்து சேர்க்கப்படவில்லை).
- தமது கல்லறைக்குச் செலவிடும் தொகையில் ஒரு சிறுபகுதியாவது தமிழ் மக்களின் நன்கொடையால் அமைய வேண்டும். பச்சையப்பன் கல்லூரித் தமிழ் பேராசிரியர் செல்வக் கேசவராயர் தமிழன்பர்களிடம் நன்கொடை திரட்டி இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தார்.
- கல்லறையில் தம்மை அடக்கம் செய்யும் போது தான் மொழிபெயர்த்து வெளியிட்ட திருக்குறள் மற்றும் திருவாசத்தையும் உடன் வைக்க வேண்டும் என்பது.
ஜி யூ போப் அவர்களுக்கு கரம் குவிப்போம்! சிரம் குவிப்போம்!
