‘ அந்த நாள்
ஞாபகம் நெஞ்சிலே ‘

அடுத்து வந்தது ‘ அந்த நாள்
ஞாபகம் நெஞ்சிலே ‘ அணி !
“ நண்பர்களே ! எங்கள் நிகழ்ச்சி இன்னும்
பத்து நிமிடத்தில் ஆரம்பமாகும் . அதுவரை
நீங்கள் காத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை, பக்கத்தில் உள்ள கேண்டீனில் உங்களுக்கான காபி
தயாராக இருக்கிறது. குடித்து விட்டுப்
பத்தே நிமிடத்தில் வாருங்கள் ! உங்களுக்குப் பல அதிசயமான செய்திகள் காத்துக்
கொண்டிருக்கின்றன “ என்று அந்தக் குழுவின் தலைவி
அறிவித்தாள். வேறு யாரும் அல்ல
சுஜாதா தான்.
எல்லோரும் திரும்பி வந்தபோது
அரங்கத்தில் ஐந்தாறு இடங்களில் வட்ட வட்டமாக நாற்காலிகள் போடப் பட்டிருந்தன .
“ நண்பர்களே ! இப்போது நீங்கள்
உங்களுக்குப் பிடித்த நாற்காலி வட்டத்தில் அமருங்கள். ஒவ்வொரு வட்டத்திலும் எங்கள் அணி ஆட்கள்
உங்களுக்கு உதவ இருப்பார்கள். உங்கள் வேலை
என்னவென்றால் இன்னும் பதினைந்து நிமிடத்தில் நாம் நமது வாடிக்கையாளர்களுக்கு
என்னென்ன சேவை செய்யலாம் என்பதைச் சொல்லுங்கள் ! உங்கள் கருத்துக்களைத் தொகுத்து
நாங்கள் வழங்குவோம் ! அதற்கு முன்னால் …….
சில வினாடிகள் மௌனம்.
ஒரு பயங்கரத்திற்குத் தயாராக
இருங்கள் !
கடந்த ஒரு மாதமாக நாங்கள் எடுத்த ‘
வாடிக்கையாளர் ‘ சர்வேயிலிருந்து, அவர்கள் நம்மைப்
பற்றிக் கூறிய கருத்துக்களை உங்கள் முன் சமர்ப்பிக்கின்றோம் ! எங்களைப் போல
உங்களில் பலருக்கு இது அதிர்ச்சியாக இருக்கக் கூடும் ! தயாராயிருங்கள் ! மேடையிலிருந்து திரையில்
முதல் ‘ ஸ்லைடு ‘ வந்தது ! அனைவருக்கும் ‘ ஷாக் ‘ அடித்தது
போல் இருந்தது! அதற்கேற்றபடி அரங்கத்தில் இருட்டு ! அனைவருடைய பெருமூச்சும் பலமாக
ஒலித்தன !

வாடிக்கையாளர்
சர்வேயின் முடிவுகள்
முக்கியக் கருத்து ‘ ஸ்லைடிலும்
‘ பின்னணியில் சுஜாதாவின் குரலும்
தோன்றின.
“ நம்முடைய வாடிக்கையாளர்கள் நம்முடன்
வேலை செய்வதை கசப்பான அனுபவங்களாக உணருகிறார்கள் ! நம்மை அவர்கள் ‘ தூக்கத்தில்
நடக்கும் பிராணிகள் ‘ என்று குறிப்பிடுகிறார்கள்!
“ சண்டை போடுபவர்களைக் கூடப் பொறுத்துக்
கொள்ளலாம் , ஆனால் இப்படி ஒன்றுமே செய்யாமல் இருக்கும் கும்பலை எப்படி
சகித்துக் கொள்வது ? “ என்று
கேட்கிறார்கள்!.
“ நாம் நமது வேலையைச் செய்வது பற்றித்
தான் யோசிக்கிறோமே தவிர வாடிக்கையாளர் திருப்தியைப் பற்றிக் கவலைப்படுவதே
கிடையாது. அவர்கள் சந்தோஷத்திற்காக ஒரு
துரும்பைக் கூட நாம் அசைப்பது இல்லை “
“ நாம் நமது வாடிக்கையாளர் அனைவரையும்
நமக்குத் தொந்தரவு தருபவர்களாக எண்ணுகிறோம்!
குறித்துக் கொள்ளுங்கள் ! இதெல்லாம்
அவர்களின் கருத்துக்கள் ! நம்மைப் பற்றி ! “
“ நாம் வாடிக்கையாளர்களை ‘ இங்கே வா ! அங்கே
போ ! என்று துரத்துகிறோமே தவிர அவர்களது
பிரச்சினையை சரி செய்ய முயற்சிப்பதில்லை “
மாலையில் – அதாவது ஆபீஸ் நேரம்
முடிவடைகையில் நாம் பஸ் பிடிப்பதற்காகப் பிடிக்கும் ஓட்டத்தைப் பற்றி
வாடிக்கையாளர்கள் பலவிதமாக ‘ ஜோக் ‘ அடிக்கிறார்கள் ! நமது ‘ ஓட்டம்
திண்டாட்டம் ‘ அவர்களை வேதனையோடு சிரிக்க வைக்கிறது.
நமக்கு நம் கம்பெனியின் முன்னேற்றத்தில்
கொஞ்சம் கூட அக்கறை இல்லை என்பது அவர்கள் அபிப்பிராயம் ! நமக்கு மேலதிகாரிகளிடம்
பயம் இல்லை என்பது அவர்கள் கருத்து !
நாம் எப்பொழுதும் பழைய சட்ட
திட்டங்களைச் சொல்லுவதால் ஓட்டு மொத்தமாக நமக்கு அவர்கள் வைத்த பெயர் ‘ பழைய
பஞ்சாங்கம் ‘.
அவர்கள் நம் மேலதிகாரிகளிடம் கேட்க
விரும்பும் ஒரே கேள்வி ! ‘ ஏன் இந்த டிபார்ட்மெண்டை மூடக் கூடாது ?’ இந்த வேலையை மற்ற கம்பெனிக்கு ஏன் ‘ அவுட்
சோர்ஸ் ‘ செய்யக் கூடாது ?

சுஜாதா தொடர்ந்தாள். அவள் குரல் பயங்கரமாக ஒலித்தது. “ நம்மைப்
பற்றிய உண்மை சுடுகிறதல்லவா ?
வாடிக்கையாளர்களுக்கு இப்படிச் சொல்ல உரிமை இருக்கிறது ! நாம் என்ன சாக்கு போக்கு சொன்னாலும் அவற்றை
அவர்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. நாம்
மாற வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் ! இனியும் மாறவில்லை என்றால் அது தற்கொலைக்குச்
சமம் ! “
அடுத்து அதே அணியில் இருந்து இன்னொருவன்
தொடர்ந்தான் !
நமக்கு நமது கம்பெனியில் எவ்வளவு
முக்கியத்துவம் இருக்கிறது என்று நமக்குப் புரியவே இல்லை ! நமது செயல் மொத்தமாக கம்பெனியை எப்படிப்
பாதிக்கிறது என்பதையும் நாம் உணரவில்லை.
மற்ற டிபார்ட்மெண்ட் அனைவரும் நம்மைக் கேவலமாகப் பார்க்கிறார்கள் ! நல்ல
சேவையை அவர்கள் தருவதில் நாம் முட்டுக் கட்டையாக இருப்பதாக அவர்கள் சொல்கிறார்கள்
!
சுஜாதா மீண்டும் வந்தாள் !
“ இப்போது – இதன் பின்னணியில் உங்கள்
யோசனைகள் மிக மிக அத்தியாவசியமாகிறது !
இந்தச் சூழ்நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை ஆலோசியுங்கள். உங்கள் அனைவரையும் நான்கு அணியாகப்
பிரிக்கிறோம் . இப்போது அந்த வட்ட நாற்காலிகளில் உட்கார்ந்து உங்கள்
யோசனைகளை ஒன்று சேருங்கள். பதினைந்து நிமிடத்தில் ஒவ்வொரு அணியும் தங்கள் தங்கள்
கருத்துக்களைத் தெரிவியுங்கள்! இது தான் எங்கள் அணியின் தொகுப்பு“.
‘ ஆட்டம்
கொண்டாட்டம் ‘ அணி ஆரம்பித்த உற்சாகம் அவர்களை இன்னும் ஒரு படி மேலே போக
வைத்தது. மிகவும் சுறுசுறுப்பாகத் தங்கள்
வட்டங்களில் அமர்ந்து சுடச் சுட யோசனைகளைக் கூற ஆரம்பித்தார்கள்.!
கடைசியில் மீண்டும் சுஜாதா வந்தாள்.

“ இவ்வளவு யோசனைகள் வரும் என்று யாருமே
எதிர்பார்க்கவில்லை ! உங்கள் அனைவருக்கும்
எங்கள் நன்றி ! இந்த நான்கு அணிகளில்
நான்காவது அணி அங்கத்தினர்கள் அதிக அளவில் சிறப்பான யோசனைகளைச் சொல்லி
இருக்கிறார்கள். அந்த அணியில்
இருப்பவர்களை மேடைக்கு அழைக்கிறோம்.! அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு சிறப்புப்
பரிசு வழங்கப் படுகிறது. – ‘ அந்த நாள்
நெஞ்சிலே ‘ அணியின் சார்பாக !
‘ ஹாய் ‘ என்று
கத்திக் கொண்டே அந்த நான்காவது அணி மேடைக்கு வந்தது. ‘ அந்த நாள்
நெஞ்சிலே ‘என்ற வார்த்தை பொறித்த பெரிய உலோக பேட்ஜ் ஒவ்வொருவருக்கும்
சட்டையில் குத்தப்பட்டது. அதே வாசகம் பொறித்த சிறிய பேட்ஜ் மக்கள் அனைவருக்கும்
தரப்பட்டது.
பிறகு அவர்கள் கூறிய கருத்துக்களைத்
தொகுத்து வழங்கினர். முதலில் ‘ அந்த நாள் நெஞ்சிலே ‘ இருப்பதால்
உண்டாகும் நன்மைகள்.
·
நம்முடைய கம்பெனியின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக
இருக்கும் !
·
நமது வாடிக்கையாளர்களுக்கு சந்தோஷம் தருவது நமக்கு
உற்சாகத்தைத் தருவதாக இருக்கும்.!
·
நாம் வேலை செய்வதன் பலன் நமக்குக் கிடைக்கும்.
·
நமது முயற்சிகள் வாடிக்கையாளர் பிரச்சினைகளை மட்டுமல்ல நமது
பிரச்சினைகளையும் தீர்க்கும்.
·
பொதுவாக நமது ஆரோக்கியம், சந்தோஷம், சக்தி
எல்லாம் அதிகரிக்கும்.
அது சரி ! ‘ அந்த நாள்
நெஞ்சிலே ‘ திட்டத்தை எப்படி கம்பெனியில் செயல் படுத்துவது ? இதோ
அதற்கான வழிகள் !
·
நாம் ஆபீஸ் நேரத்தை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை
மாற்றுவோம். வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக
இதை வரவேற்பார்கள். நமக்கும் இது
சௌகரியமாக இருக்கும். நம்மில் சிலர் சீக்கிரம் வந்து சீக்கிரம் செல்லலாம் .
மற்றவர் லேட்டாக வந்து லேட்டாகச் செல்லலாம்.!
·
நமது அலுவலகத்தில்
சில குழுக்கள் அமைத்து வாடிக்கையாளரின் தேவை என்ன ? எப்படி
சேவைகளை அதிகரிப்பது ? என்பதை ஆராய வேண்டும்.
·
வாடிக்கையாளரின் கருத்துப்படி இந்த மாதம் சிறந்த சேவை
செய்பவர் என்ற விருது வழங்கலாம். அதே போல வருடத்திற்கான சிறந்த சேவைக்கான பரிசும்
தரலாம்.
·
360 டிகிரி அளவில் வாடிக்கையாளர்,
தொழிலார்கள், மேலதிகாரிகள் அனைவரது கருத்துக் கணிப்பைப் பெற்று அவற்றை
தீவிரமாக ஆலோசனை செய்ய வேண்டும் !
·
வாடிக்கையாளர்களுக்கு திடீர் திடீர் என்று புதுவித சந்தோஷ
அலைகளைத் தருவதற்கென்றே ஒரு தனி படை அமைக்க வேண்டும்.
·
முக்கிய வாடிக்கையாளர் வரும்போது அவர்களுக்கு நமது
அலுவலகத்தைச் சுற்றிக் காட்ட வேண்டும்.
·
சில ஏர்லைன்ஸ் கம்பெனிகள் செய்வது போல நாமும் மனதைத்
திறந்து உண்மையான சேவை புரியத்
தயாராகுவோம்.! நமது ஒவ்வொரு சேவையும்
சிறப்பானதாக அமைய வேண்டும் .! அமையும் !

மேரிக்கு பிரமிப்பாக இருந்தது. சுஜாதாவின் அணி இவ்வளவு தூரம் போக முடியும்
என்று அவள் எதிர் பார்க்கவே இல்லை.
அப்படியே ஓரக் கண்ணால் டோனியைப் பார்த்தாள்.! அவன் சந்தோஷம் அவன் முகத்தில்
வெளிச்சம் போட்டுக் காட்டியது.!
(தொடரும்)
