
திருமண பதிவு
அலுவலகம்
‘ஓ.கே. … மாப்பிள்ளையும் பெண்ணும் இங்கே கையெழுத்துப் போடுங்க “ என்றார் பதிவாளர்
ரவியும், தாரணியும் அவர் காட்டிய இடங்களில் கையெழுத்துப்
போட்டனர். ரவிக்கு,
அவன் மாமாவும், தாரணிக்கு அவள் தங்கையும் சாட்சிக்
கையெழுத்துப் போட்டார்கள். அவர்களைக்
கல்யாணக் கோலத்தில் பார்த்துக் கொண்டிருந்த ரவியின் பெற்றோர் முகத்தில்
பேரானந்தம்.
ரவியும் தாரணியும் அவர்கள் காலில் விழுந்து
நமஸ்கரித்து ஆசீர்வாதம் வாங்கிக்
கொண்டார்கள்.
தாரணி, ரவியின் பெற்றோரை பெருமையோடு பார்த்துக் கொண்டிருந்தாள். அவர்களுக்குத்தான் என்ன பெருந்தன்மை. இந்தக்
கலப்புத் திருமணத்துக்கு – ரவியும், தாரணியும் வேறு வேறு
ஜாதியைச் சேர்ந்தவர்கள் – எந்த வித மறுப்பும் சொல்லாமல் மகிழ்ச்சியோடு ஒத்துக்
கொண்டது பெரும் ஆச்சரியம் !
“ அம்மா.. அப்பா….தாரணியின் அம்மாவுக்கும், தங்கைக்கும் இந்தக் கல்யாணத்தில் சம்மதம்
இருந்தாலும் ஜாதி விட்டு ஜாதி கல்யாணம் என்பதால் அவர்கள் ஜாதி ஜனங்கள் என்ன
சொல்வாங்களோன்னு கவலைப்படறாங்க. அதனாலே ஊர் அறிய எல்லோரையும் கூப்பிட்டுக்
கல்யாணம் பண்ணாம, கோயில்லே நம்ம குடும்பம் மட்டும் போய்க்
கல்யாணத்தை முடிச்சிட்டு, ரிஜிஸ்டர் ஆபீசிலே போய் கல்யாணத்தை
ரிஜிஸ்டர் செய்துடலாம்னு சொல்றா… நீங்க என்ன சொல்றீங்க?”
என்று ரவி கூறியவுடன், ஒரு நிமிடம் யோசித்து விட்டு , “சரிடா.. பெண்ணும் நல்ல அழகா, குணவதியா இருக்கா..
கடந்த நாலு மாசமா ஒரே ஆபீஸிலே வேறே வேலை செஞ்சிட்டிருக்கீங்க.. உங்களுக்கும் ஒருத்தருக்கு ஒருத்தர்
பிடிச்சிருக்கு. அப்படியே செய்திடலாம்”னு ரவியின் பெற்றோரும் சம்மதம் தெரிவிச்சது
அதை விடப் பெரிய ஆச்சரியம்.
ஒரு நல்ல நாள் பார்த்துக் காலையில் கோயிலிலே
திருமணம் செய்து கொண்டு,
இதோ பதிவும் செய்தாகி விட்டது.
“எல்லோர்க்கும் இனிப்புக் கொடுங்க “ என்ற
ரவியின் மாமா குரல் கேட்டு இந்த உலகுக்கு
வந்தாள் தாரணி.
எல்லோரும் சந்தோஷமாக இனிப்பைச் சாப்பிட்டு
முடித்தபின் வீட்டிற்குச் செல்ல இனோவா வேனில் ஏறினர்.
“ அத்தே.. நாம முதல்லே எங்க வீட்டுக்குப்
போய் அம்மாவின் ஆசீர்வாதம் வாங்கிக் கொள்கிறோம்.
ஜாதி ஜனத்திற்குப் பயப்பட்டுக் கல்யாணத்துக்குக் கூட வராம வீட்டிலேயே
உட்கார்ந்துக்கிட்டிருக்காங்க” என்றாள் தாரணி.
“ஆமாம்மா..நீ சொல்றது சரிதான்”
என்று ஆமோதித்தனர் ரவியின் பெற்றோர்.
வேன் தாரணியின் அம்மா வீட்டில் வந்து
நின்றது. தாரணியின் தங்கை முன்னரே அவர்கள்
வருவதை செல்போனில் சொல்லியிருந்ததால் அவள் அம்மா ஆரத்தியை ரெடியாய்
வைத்திருந்தாள்.
தாரணியின் தங்கை மணமக்களுக்கு ஆரத்தி எடுக்க, “ வாங்க.. வாங்க..” என்று அம்மா
வாய் நிறைய எல்லோரையும் அழைக்க, எல்லோரும் வீட்டுக்குள்
வந்தனர். மகிழ்ச்சி அலை வீடெல்லாம்
பரவியது.
திடீரென்று ரவியின் மாமா, “ இப்படி மறந்துட்டோமே.. ஸ்வீட்
கூட வாங்காம நேரே சம்பந்தி வீட்டிற்கு வந்துட்டோமே. நான் போய் ஸ்வீட் வாங்கிட்டு வரேன்” என்று
ரவியின் அம்மாவிடம் கிசுகிசுத்து விட்டு வெளியே சென்றார்.
எல்லோரும் அந்த சின்ன வீட்டின் ஹாலில்
போடப்பட்டிருந்த நாற்காலிகளில் அமர்ந்தனர்.
“ மீனாட்சி… ஒரு கரண்டி சர்க்கரை கொடு…” என்று கூறியபடியே வீட்டிற்குள் நுழைந்தாள்
தாரணியின் பெரியம்மா.
‘இவள் இப்ப எதுக்கு வந்தாள்’ என்று
கலவரத்தோடு தாரணியின் அம்மா மீனாட்சி, பெரியம்மாவை மெதுவாக
உள் அறைக்குக் கூட்டிக் கொண்டு போகும்படி தாரணியின் தங்கையிடம் சைகை காட்டினாள்.
பெரியம்மாவும், மாலையும் கழுத்துமாக தாரணியும், ஒரு பையனும்
உட்கார்ந்திருப்பதை உறுத்துப் பார்த்துக் கொண்டே உள்ளே போனாள்.
‘ஏண்டி சுமதி, கல்யாணமாயிடுச்சா.. “
என்றாள் சுமதியிடம்.
‘ம்..மெதுவாப் பேசு.. பெரியம்மா… இன்னிக்குக் காலையில்தான்
கோவில்லே வெச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க.’
“ என்னமோடீம்மா.. நல்லதாப் போச்சு.. பாவி
மக.. தாரணி.. எங்கிருந்தோ பாலியல் நோயைப் பிடிச்சிட்டு வந்து நிக்கிறா.. முழுதும்
குணமாக்கிட்டோம்… அது சரிதான்.. ஆனா இந்தப் பெண்ணை எந்தப்
பையன் கல்யாணம் பண்ணிக்குவான் சொல்லுங்க’ன்னு உங்கம்மா புலம்பிட்டே
இருப்பாங்க.. அதுக்கு நல்ல அழகா, லட்சணமா ஒரு பையனைக் கல்யாணம் பண்ணிட்டு வந்து நிக்கிறா..’ என்றாள் பெரியம்மா. அவள் பாவம்.. மெதுவாகப் பேசுகிறோம் என்று
நினைத்துத்தான் பேசினாள். ஆனால் பாழாப்
போன அவள் வெங்கலக் குரல்… அவள்
பேசியதெல்லாம் ஹாலில் உள்ளவர்களுக்குத் துல்லியமாகக் கேட்டது.
‘டப்’பென்ற சத்தம். “ டேய், ரவி.. என்னடா
ஆச்சு’ என்று ரவியின் அம்மாவின் அலறல்.
‘என்னங்க’ என்ற தாரணியின் கூக்குரல்.
பெரியம்மாவும், சுமதியும் ஹாலிற்கு ஓடி வந்தனர்.
ஹாலில் உள்ளவர்கள் எல்லோரும் திக்பிரமை
அடைந்து உட்கார்ந்திருந்தனர்.
“ரவி, ஸ்வீட் வாங்கிட்டு வந்துட்டேன்” என்று அப்போதுதான் உள்ளே
நுழைந்த ரவியின் மாமா அங்கு உள்ள நிலைமையைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
‘டேய்..ரவி..’ என்று கீழே விழுந்து
கிடந்தவனைப் பிடித்து உலுக்கினார். பேச்சு
மூச்சின்றி விழுந்து கிடந்தான் ரவி.
‘அடப் பாவி. இதயக் கோளாறு உள்ள உனக்கு எப்படிக் கல்யாணம் பண்ணி
வெக்கிறதுன்னு உங்கம்மா புலம்பிட்டே இருப்பாங்களே.. கிளி போலே ஒரு பொண்ணு
கிடைச்சும் ஒரு நாள் கூட வாழக் கொடுத்து
வெக்கலியே’ என்று புலம்பினார்.
அவர் புலம்பலைக் கேட்ட தாரணி
திக்பிரமையடைந்து கண்கள் குத்திட்டு நிற்க அப்படியே விழுந்தாள். விழுந்தவள் எழவேயில்லை.
அவள் போட்ட கணக்கு ஒன்று. அவன் போட்ட கணக்கு மற்றொன்று. ஆனால் இதுதான் கடவுள் போட்ட கணக்கு.
