image

சமச்சீர் கல்வி தி.மு.க கொண்டு வந்ததால் அ.தி.மு.க. அதை நிறைவேற்றத் தயங்கியது. சமச்சீர் திட்டம் நிறுத்தப்பட்டது. பிறகு சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்குப்பின், சமச்சீர் கல்வி திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் சமச்சீர் கல்வி ஒரு முன்னேற்றம்தான் என்றாலும், சிபிஎஸ்ஈ முறைக்கு ஈடாகாது, தமிழக மாணவர்கள் சிபிஎஸ்ஈ மாணவர்களுடன் போட்டி போட முடியாது என்ற  உண்மை இதைப் படித்தால் புரியும்.


ஐ.ஐ.டி.  நுழைவுத் தேர்வில் தமிழகப் பாடத் திட்டத்தில் பயின்றோரின் வெற்றி வீதம் வெறும் 0.12% !


மத்திய அரசு பாடத் திட்டத்தில் பயின்றோர் 57% ; 

ஆந்திர மாநிலப் பாடத் திட்டத்தில் பயின்றோர் 11.1%

ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வில் தமிழ்நாடு பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களின் தேர்ச்சி எண்ணிக்கை சென்ற ஆண்டைக் காட்டிலும் குறைந்துள்ளது. சென்ற ஆண்டில் வெற்றி பெற்றவர்கள் 65. இந்த ஆண்டிலோ வெறும் 33.


இந்தியா முழுவதிலும் 26,456 பேர் வெற்றி பெற்றுள்ள நிலையில் தமிழ்நாடு பாடத் திட்டத்தில் வெற்றி பெற்றவர்களின் எண்ணிக்கை வெறும் 33 என்றால் எங்கே பிரச்சினை உள்ளதென்பதை நாம் அலசி ஆராய வேண்டும்.

மத்திய அரசு பாடத் திட்டத்தின் கீழ் பயில்கிறவர்களின் எண்ணிக்கை மாநிலப் பாடத் திட்டங்களின் கீழ் படிக்கும் மாணவர்களைக் காட்டிலும் மிக மிகக் குறைவு. ஆனால்நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் மத்திய அரசுப் பாடத் திட்டத்தில் படித்தவர்களின் பங்கு 57 சதம்.


அதேபோல தமிழகப் பாடத் திட்டத்தில் படித்து வெற்றி பெற்றவர்களின் எண்ணிக்கை வெறும் 33 ஆக இருக்கும் நிலையில், ஆந்திர மாநிலப் பாடத்திட்டத்தில் பயின்றவர்களில் 2,938 பேர்களும் மகாராஷ்டிர மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தவர்களில் 1,610 பேர்களும் வெற்றிபெற்றுள்ளனர்.


இது  தமிழகப் பாடத் திட்டத்தின் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. 

image

இதற்கு முக்கிய காரணம் 

–  இங்கு 9 மற்றும் 11ம் வகுப்புகளில் தேர்வுகள் இல்லை.

–  நமது தேர்வு முறையில் அறிவு சார்ந்த கேள்விகளுக்கு (knowledge based) உரிய இடமில்லை. 

தனியார் பள்ளிகள் தங்கள் மாணவர்களை நூற்றுக்கு நூறு வாங்கவே தயார் செய்கிறார்கள். கேள்விகள் புத்தகத்தில் இருக்கும் பாடங்களிலிருந்து அப்படியே வந்தால் தான் இது நிகழும் ( text based ) என்று அதையே  அரசு ஒப்புக் கொள்ளும் நிலைக்கு ஆளாக்கி விட்டார்கள். 

இந்த நிலைமை மாறவேண்டும். தமிழகத்தில் உள்ள மக்கள் அனைவரும் ஒருமித்து இதற்காகக் குரல் கொடுக்க வேண்டும்! 

அப்போது தான் தமிழகத்தின் கல்வித்துறை வளர்ச்சி அடையும்!