
தற்போது எழுதிவரும் கதாசிரியர்களில் திரு ஆனந்த் ராகவ்
கவனிக்கப் படவேண்டியவர். பெங்களுருவில் ஒரு தனியார் நிறுவனத்தில் உயர் பதவியில்
இருப்பவர்.
ஆஸ்திரியாவில் தேங்காய் உடைக்கப் படும் சிரமங்கள் (“தேங்காய்”)
, “பிறந்த மண்ணில் உறவுகளையும் புகுந்த மண்ணில் உடைமைகளையும் வைத்துக்கொண்டு
அவஸ்தைப்படுகிற அர்த்தநாரிக் குடும்பங்களின் வயோதிக மிச்சங்கள்”, வீட்டை
அடுக்குமாடிகளாக மாற்ற
மனமில்லாதவர்கள், ரியல் எஸ்டேட் மாஃபியாவிற்கு பயந்து வாழ்பவர்கள் (“மடி நெருப்பு”) படுத்த படுக்கையாய்
இருக்கும் தந்தையும் அவர் மகனின் நினைவுகளில் முந்திய காலமும் (“காத்திருப்பு”),
ஒரு திடுக்கிடும் தற்கொலை (“கடைசிப் பயணம்”) என்று இக்காலப் பிரச்சினைகளே
இவரது கதைகளின் கரு.
இவரது “தூஸ்ரா” , “தனிமை” மற்றும்
நான்கு சிறுகதைகள் நாடகங்களாக மேடையேற்றப்பட்டு வரவேற்பு பெற்றன.
நான் முதலில் படித்த இவரது “அந்தரங்கம்” (எனது
கணிப்பில் இவரது மாஸ்டர் பீஸ்") கதை
இப்படிப் போகிறது.
* * * * * * *
அலுவலகத்தில் தன்
அறையில் நிக்கி நுழையும்போதே ஆச்சரியமாக அவன் மனைவி தீப்தி அமர்ந்திருக்கிறாள். இருவரும்
எம்.பி.ஏ. வேறு வேறு நிறுவனங்களில் பணிபுரியும் ஆறு மாத தம்பதிகள். ஏதோ கிளையன்ட்
மீட்டிங் போகும் வழியில் இவன் அலுவலகத்திற்கு வந்ததாகக் கூறுகிறாள்.

பேச்சுக்களிடையே, தான் நிர்மலா என்ற தன் தோழிக்கு
அனுப்பவேண்டிய மின்னஞ்சலை நிக்கிக்குத் தவறுதலாக அனுப்பிவிட்டதாகவும் அதை டிலீட்
செய்து விடு என்றும் கேட்டுக் கொள்கிறாள்.
பொதுவான பேச்சுக்கள் நீள்கின்றன.
“நேரமாகவில்லையா?” என்று நிக்கி கேட்க “கிளம்பணும்” என்கிறாள்
தீப்தி. மின்னஞ்சல் பார்க்கத் தொடங்கும் கணவனிடம் “ஜிமெயில் ஐடியில்
வந்திருக்கும்” என்கிறாள். தான் பின்னர் டிலீட் செய்துகொள்வதாக நிக்கி கூறுகிறான்.
அவர்களில் தொடரும் உரையாடல் கதாசிரியரின் சொற்களில்
“நிக்கி!
ஐ வில் பி லாட் மோர் ரிலீவ்டு இஃப் யூ டிலீட் த மெயில் ஐ சென்ட்!” என்று
சிரித்தாள்
“கமான்
தீப்தி.. யூ கேரி ஆன்! நான் தான் டிலீட் பண்றேன்னு சொல்றனே..!”
“அதை
டிலீட் பண்ண ஒரு நிமிஷம் ஆகுமா
டியர்?”
“ஆகாதுதான்!
ஆபீஸ் வேலையை விட்டுட்டு அதை முதலில் செய்ய வேண்டிய அவசியம் என்ன? அதில் நீ இவ்வளவு
பிடிவாதமாய் இருப்பதுதான் எனக்குப் புரியலை தீபு!”
“
நான் யாருக்கோ எழுதினதை நீ படிச்சால், எனக்கு சங்கடமாய் இருக்காதா, நிக்கி?”
“கமான்
தீப்தி! நான் அதைப் படிக்கப்போறேன்னு நீ முடிவு பண்ணிட்டியா?”
இவ்வாறு தொடர்ந்த பேச்சுகளுக்குப் பிறகு, தன் இருக்கையில்
அமரச் செய்து, பாஸ்வேர்டையும் சொல்லி அந்த மின்னஞ்சலை தீப்தியையே டிலீட் செய்யச்
செல்கிறான். அவள் டிலீட்டும் செய்து ட்ராஷையும் காலி செய்கிறாள்.
சில சம்பிரதாய சம்பாஷணைக்குப் பிறகு தீப்தி கிளம்பி
விடுகிறாள்.
காரில் ஏறும் போதே
செல்போனில் தன் தோழியிடம் “ஹாய்.. ஒரு சின்ன சந்தேகம் மெயில்
ஒண்ணைத் தப்பா டிலீட் பண்ணிட்டேன். ட்ராஷ் கேனையும் எம்ப்டி பண்ணிட்டேன். அந்த
மெயிலை மறுபடி எடுக்கணும்னா முடியுமா?” என்று கேட்கிறாள்
அதே சமயம் நிக்கியும் போனை எடுத்து, “மூர்த்தி, ஒரு
டவுட் .. மெயில் ஒண்ணைத் தப்பா டிலீட் பண்ணிட்டேன். ட்ராஷ் கேனையும் எம்ப்டி
பண்ணிட்டேன் எப்படி எடுக்கிறது? ஏதாவது வழி இருக்கா?” என்று கேட்கிறான்.
* * * * * * *
உதட்டில் ஒன்றும்
உள்ளத்தில் ஒன்றும் என்கிற hypocrisy
மனித இயல்புகளில் ஒன்று தானே.
இக்கதை ஆனந்தவிகடனில் வெளியானபோது வந்த வாசகர் கடிதங்களில்
அந்த மெயிலை படிக்க முடியாது என்று ஒருவர் எழுதியிருந்தார். ஆனால் அந்த மெயிலில்
என்ன இருந்தது என்பதும் படிக்க முடியுமா முடியாதா என்பதும் கதைக்கு முக்கியமல்ல
(irrelevant) என்பது என் கருத்து.
இவரது 13 கதைகள் சில
கதைகள் லிங்கில்
படிக்கக் கிடைக்கின்றன
