
டிங் டாங்
வாசலில் என்ன சப்தம் என்று எட்டிப்பார்க்கிறார் ராம்.
வாய்யா! சுப்பு! போனமாசம் வந்து வால்யூ இன்வேஷ்டிங் – மதிப்பீடு முதலீடு – பத்தி நிறைய சொன்னே! அதுக்கப்பறம் ஆளையே காணோம்! சீட்டுக் கம்பனிக்காரங்க மாதிரி ஓடிப்போயிட்டியே!
அடப்பாவி! நான் என் பொண்ணு வீட்டுக்கு டெல்லிக்குப் போனேனா! அப்படியே ரெண்டு பங்குதாரர் மீட்டிங் இருந்தது. அதிலேயும் கலந்து கொண்டு வந்தேன்.
பங்குதாரர் மீட்டிங்குக்கு எல்லாம் நம்மளை மாதிரி சின்ன பங்குதாரர்களை எல்லாம் விடுவாங்களா என்ன?
கண்டிப்பா ! எல்லாப் பங்குதாரரும் போகலாம்! அப்படிப் போனால்தான் அந்தக் கம்பெனியைப் பத்தியும் அந்த இண்டஸ்ட்ரி பத்தியும் நல்லா தெரிஞ்சுக்க முடியும்!
அப்படியா! இனிமே நானும் போறேன்! நல்ல கிஃப்டெல்லாம் கொடுப்பாங்கன்னு கேள்விப் பட்டிருக்கேன்!
அதெல்லாம் அந்தக்காலம்! இப்ப நம்ம மாதிரி ஆட்களுக்கெல்லாம் அங்கே போய் அந்த கம்பனியைப் பத்தித் தெரிஞ்சுக்கிறது தான் கிஃப்ட்!

அது சரி ! நம்ம BUFFET மீட்டிங் போய்ட்டு வந்ததும் சிம்பிளா இன்வெஸ்ட் பண்ண ஏதோ வழி இருக்குன்னு சொன்னியே ! அதுக்குப் பேரு கூட என்னவோ வலை வலைன்னியே !
அதுக்குப் பேரு நெட் நெட் இன்வெஸ்டிங் ! இதைக் கண்டு பிடிச்சவர் பெஞ்சமின் கிரஹாம் ! நம்ம வாரன் பாப்பட் இவரோட மாணவர்னா பாத்துக்கோயேன்!
அப்படியா?
இது ரொம்ப சிம்பிள் ! உன்னை மாதிரி பேங்க் ஆசாமிகளுக்கு நல்லா புரியும் !
என்னை மாதிரி பேங்க் ஆளுங்களுக்கெல்லாம் ஸ்டிரைக் பண்ணத் தான் தெரியும்!
இது வேற மாதிரி ஸ்டிரைக் ! – அடி- சரியான நேரத்தில சரியா அடிக்கணும் ! நம்ம ராயல் தியேட்டர் தெரியுமில்லே !
நல்லாத் தெரியுமே ! எத்தனை படம் அதிலே பாத்திருக்கோம்! ! கடைசில தியேட்டரைக் கல்யாண மண்டபமா மாத்திட்டங்க !
அதே தான் ! அந்த ராயல் தியேட்டர் ஒரு பப்ளிக் கம்பெனி. அந்த கம்பெனி 99ல ஒரு பெரிய ஸ்டார் படம் ரிலீஸ் பண்ணப் போய் பயங்கர லாஸ் ஆயிடுச்சு! அந்தக் கம்பெனியின் பங்கு 20 ரூபாயிலிருந்து ரெண்டு ரூபாய்க்கு வந்துடுச்சு!
ஆமாம்! நல்லா ஞாபகம் இருக்கு!
அந்தக் கம்பெனியின் மதிப்பு 20 கோடியிலிருந்து ரெண்டு கோடிக்கு வந்துடுச்சு! கம்பெனியின் மதிப்பை மார்க்கெட் கேப் ( market Cap )அப்படின்னு சொல்வாங்க! எவ்வளவு ஷேர் கம்பெனி வெளியிட்டுருக்கோ அத்தோட அதன் மார்க்கெட் விலையைப் பெருக்கினா மார்க்கெட் கேப் கிடைக்கும்! அதாவது
Market Cap = current price x Total shares
ஓகே! அப்படித் தான் அதன் மார்க்கெட் கேப் 20 கோடி யிலிருந்து ரெண்டு கோடிக்குப் போயிடுச்சா!
அதில இன்னொரு சுவாரசியாமான சமாசாரம் என்னன்னா ராயல் தியேட்டருக்கு அப்போ பேங்கிலே ஐந்து கோடி ரூபாய் டிபாசிட் இருந்தது !
ஆமாம் ! நான் தான் கேன்வாஸ் பண்ணி வாங்கினேன்!
கேளு! அந்த தியேட்டருக்கு வேற கடனும் கிடையாது !
நீ சொல்லறது கொஞ்சம் புரியற மாதிரி இருக்கு! அப்ப ரெண்டு கோடி குடுத்து ராயல் தியேட்டரை வாங்கினா ஐஞ்சு கோடி வாங்கரவனுக்குப் போகும்!
சரியா புரிஞ்சுகிட்டே! இந்த மாதிரி இன்வெஸ்ட்மெண்ட் பண்ணறது தான் நெட் நெட்
இன்வெஸ்ட்மெண்ட்!
அது சரி! இந்த ராயல் தியேட்டருக்கு அஞ்சு கோடி டெபாசிட்
இருக்கிற சமாசாரம் எல்லோருக்கும் தெரியுமே?
தெரியும் தான். ஆனால் ஸ்டாக் மார்க்கெட்டில மந்த நிலைமை இருக்கும் போது இந்த மாதிரி நிறைய நடக்கும். நிஜ வாழ்க்கையில இந்த மாதிரி சான்ஸ் ரொம்ப கம்மி, ஆனா ஸ்டாக் மார்க்கெட்டில இதெல்லாம் சகஜமப்பா!
இந்த வழியில இன்வெஸ்ட் பண்ணினா பைசா தொலையாதுன்னு நினைக்கிறேன்!
கரெக்ட்! ஆனால் இந்த கம்பெனி சமாசாரம் தெரிஞ்சுக்க அத்தோடபேலன்ஸ் ஷீட் , லாப நஷ்ட விவகாரம், எல்லாம் படிக்கணும். எல்லாரும் அந்த மாதிரி கம்பெனி ஷேரை வித்துட்டுப் போகும்போது நாம தனியா தைரியமா வாங்கணும். அது தான் மதிப்பு முதலீட்டில ஒரு கஷ்டம்.
நீ அந்த ராயல் தியேட்டர் ஷேரை அந்த சமயத்தில் வாங்கினியா?
வாங்காம இருப்பேனா?நிறைய வாங்கினேன். ரியல் எஸ்டேட் நல்லா போனப்போ தியேட்டரை வித்தாங்க. ஒரு ஷேருக்கு அம்பது ரூபாய் வந்தது.
ரெண்டு அம்பது ஆச்சா?’
இந்த மாதிரி வாய்ப்பு எப்பவும் வராது. ஆனா வரும்போது விட்டிடக் கூடாது. இதில வந்த பணத்தில தான் நான் வீட்டுக் கடனையே அடைச்சசேன்னா பாத்துக்கோயேன்!
ஓ! அப்படியா? நெட்-நெட் முதலீடு செய்ய நிறைய தைரியம் வேணும் போல இருக்கு!
கண்டிப்பா! மதிப்பு முதலீடு என்கிறது ஒரு எதிர்மறை இன்வெஸ்ட் என்று சொல்லலாம். இன்னிக்கு இது போதும் ! நான் கிளம்பறேன்! அடுத்த தடவை பெஞ்சமின் கிiரகாம் பத்தி சொல்றேன்!
ரொம்ப நன்றி சுப்பு!
