ஒரு வழியாக ஷாலுவையும் அவள் குருஜினியையும் சிங்கப்பூர் விமானத்தில் ஏற்றிவிட்டு ஷ்யாம் ஷிவானியுடன் காரில் வந்துகொண்டிருந்தேன்.

அவ்வளவு அழகா ஆர்கியு பண்ணின ஷிவானி ஷாலு கிளம்பியதும் அழ ஆரம்பித்துவிட்டாள். அது தான் .குழந்தை – அது தான் தாய்ப்பாசம்.ஷ்யாம் அழவில்லை ஆனால் உர்ரென்று இருந்தான்.எனக்கும் கொஞ்சம் சங்கடமாகத் தான் இருந்தது.
திடீரென்று போன் அலறியது. என்னுடைய பாஸ்.ராத்திரி பதினொரு மணிக்கு போன் பண்றாரே என்று தடுமாறி எடுத்தால் ஸ்பீக்கர் வேறு ஆன் ஆகிவிட்டது. “ பெண்டாட்டி ஊருக்குப் போயிட்டாளா? தங்கமணி … என்ஜாய்..” என்று ஜனகராஜ் பாணியில் சொல்லிவிட்டு வைத்து விட்டார். தேவை தானா?
மறுபடியும் போன். இந்த தடவை ஷாலு. இமிகிரேஷன்,செக்கப் கஸ்டம்ஸ் எல்லாம் முடித்துவிட்டாளாம். செக்யூரிட்டி செக் முடியர வரைக்கும் குழந்தைகள் கூட பேசலாம்னு போன் பண்ணினாளாம். ஷ்யாம் முதல்லே போனைப் பிடுங்கினான். ஆனால் எதுவும் பேசவில்லை. அவள் நிறைய கேள்விகள் கேட்கிறாள் போல இருக்கு. அவன் எல்லாத்துக்கும் ஒரு வார்த்தையிலே பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.
சரி.
இம்ம்
ஓகே ..
சரி சரி..
ஓகே ஓகே .
முடியாது.
வேண்டாம்.
சரி சரி.
அம்மா பிளீஸ்..

இதுக்கு மேல் ஷிவானிக்குப் பொறுமை போய் விட்டது. ’ என்கிட்டே கொடு அண்ணா ’ என்று போனைப் பிடுங்கிக் கொண்டாள்.
அதற்குப் பிறகு நடந்தது ஒரு பாசப் போராட்டம். ஷிவானி தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டாள். கடவுளே! பத்து நிமிடம் கூட ஆகலை. இன்னும் பத்து நாளை எப்படி சமாளிப்பது?ஆனால் அந்த அழுகைக்கு மத்தியில என் ஆபீஸ் பாஸ் ‘பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா.. என்ஜாய்!“ என்று சொன்னதை ஷாலுவிடம் போட்டுக் கொடுக்க மறக்கவில்லை. அது தான் ஷிவானி!
அப்பா! அம்மா உன்கூட பேசணுமாம்!
என்னாச்சு உங்க பையனுக்கு?
என்னாச்சு?
எதைச் சொன்னாலும் அப்படியான்கிற மாதிரி பேசரான்!
அப்படியா?
இதே தான் ! உங்களை மாதிரி ஒத்தை வார்த்தையில் பதில் சொல்றான்?
ஓஹோ!
அப்படியே உங்களைக் கொண்டிருக்கான்! கல்லுளிமங்கன்!
நானா அவனா ?
ரெண்டு பெரும் தான்.
அப்போ ஷிவானி?
அவளுக்கு என்னை மாதிரி பூஞ்சை மனசு! ஏன் இப்படி அழறா?
இப்போ நீ எதுக்கு அழறே? அதே மாதிரி தான் அவளும்.அவ அப்படியே உன்னைக் கொண்டிருக்கா?
ரொம்ப சரி! நீங்க உங்க பாஸ்சொன்னமாதிரி என்ஜாய் பண்ணுங்கோ!
ஷாலு! கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணிக்கோ! நீயாத்தானே சிங்கப்பூர் போகணும்னு ஆசைப்பட்டே! பாக்கிறவா எல்லாம் நான் கொடுமைப் படுத்தி உன்னைப் பிறந்த வீட்டுக்கு அனுப்பறேன்னு நினைச்சுப்பா!
ஆமா! என் பொறந்த வீடு என்ன சிங்கப்பூரா? பிளேன்ல போறதுக்கு?
உங்க ஊர் கோனேரிராஜகீழ்ப்பாக்கத்துக்கு உன்னைப் பொண்ணு பாக்க வந்த போதே ஒத்தை மாட்டு வண்டியில தானே வந்தேன்!
இப்போ இது ரொம்ப அவசியமா? செத்தே இருங்கோ! குருஜினி ஏதோ சொல்கிறார். உங்களோட தத்துப்பித்துப் பேச்சைக் கேட்க இப்ப நேரமில்லை. நீங்க வீட்டுக்குப் போங்கோ! அப்பறம் கூப்பிடறேன்!
பாத்து ஷாலு! டேக் கேர்!
போன் ஏற்கனவே வைக்கப்பட்டிருந்தது.
வீட்டுக்குப் போய்ச் சேரும் போதே ராத்திரி பன்னிரண்டு மணி ஆகிவிட்டது. குழந்தைகள் இரண்டும் துவண்டு போய் தூக்கம் பிடித்து விட்டார்கள். எனக்கு வீட்டில் ஷாலு இல்லாதது என்னவோ போலிருந்தது. தூக்கமே வரவில்லை. ஷாலு பிளைட் கிளம்ப இன்னும் ஒன்றரை மணி நேரம் இருக்கு. கண்டிப்பா போன் பண்ணுவா. அதுவரைக்கும் டி வி ஏதாவது பாக்கலாம்னு ரிமோட்டை எடுத்து வழக்கம் போல் ஒவ்வொரு சானலா மாற்றிக் கொண்டிருந்தேன். என் பாஷையில் டி வி பிரவுஸ் செய்துகொண்டிருந்தேன்.
ஒரு சானலைக் கூட ஒழுங்கா பாக்க மாட்டீங்க! ! தானும் பாக்காம மத்தவங்களையும் பாக்கவிடாம அப்படியென்ன உங்க மனசில ஒரு சேடிசம்? – ஷாலு ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையிலும் நான் டி வி ரிமோட்டைத் தொட்டதும் பாடும் முதல் பல்லவி இது! அதுக்கப்பறம் அவ அனுபல்லவி பாடுவா! நான் சரணம் என்று ரிமோட்டைக் கொடுத்துட்டு ( அப்படி தூக்கி எறியாதீங்கோ! உடைஞ்சா உங்களுக்கென்ன? என் சீரியல் தான் அம்போ ஆயிடும்) கம்ப்யூட்டர் மவுசை எடுத்துக் கொண்டு விடுவேன். ( எப்பப் பாத்தாலும் கம்ப்யூட்டர்
கம்ப்யூட்டர் ! வீட்ல நாலு மனுஷா இருக்காளே அவா கூட கொஞ்சமாவது பேசணும்னு உங்களுக்குத் தோணவே தோணாதா ? – வீட்டிலே நாம மூணு பேர் தானே இருக்கோம். உன் கசின் சிஸ்டர் வந்திருக்கான்னு சொல்லவே இல்லையே! ) இந்த மொக்கை ஜோக்குக்கெல்லாம் அவள் மசிய மாட்டாள்.
அப்போது தான் நியூஸ் 7 சானலில் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு என்ற சேதி முக்கிய செய்தியாக வந்துகொண்டிருந்தது. எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. என்ன என்று பார்க்க முயலும் போது திடீரென்று கரண்ட் கட்டாகி டிவி ஆப் ஆகிவிட்டது. இன்வர்ட்டரை சரி பண்ணுங்கோன்னு ரெண்டு வாரமா ஷாலு சொல்லிக் கொண்டே இருந்தா. நான் தான் அசால்ட்டா இப்பெல்லாம் அம்மா கரண்ட் போறதேயில்லை தெரியுமோ? என்று சொல்லிக் கொண்டிருந்தேன்.
ஷாலுவுக்குப் போன் செய்தேன். ரிங் அடித்துக் கொண்டே இருந்தது. அவள் எடுக்கவில்லை. எனக்குப் பயத்தில் வேர்த்தது.

சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு
சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு
சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு
அந்த செய்தியே என் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது.
சட்டென்று வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தேன். இன்னிக்கென்று எந்த வீட்டிலும் லைட்டே இல்லை. யார் தூங்கிட்டா இல்லே யார் முழிச்சிட்டு உட்கார்ந்திருக்கானு தெரியலை. கரண்ட் கட் ஆனாலும் இன்வார்ட்டர் கரன்ட்டில் ராத்திரி பூரா டி வி பார்க்கும் நாலாம் மாடி சில்க் ஸ்மிதா…
( அப்படி சொல்லாதீங்கோ! அவ காதிலே விழப் போகிறது! அப்பறம் அவ ஊர் கடப்பா கல்லால தான் அர்ச்சனை நடக்கும் –
அவ கணவனுக்கு எப்போதும் நைட் டியூட்டி அவ என்ன பண்ணுவா?
)
சில்க் ஸ்மிதா…
வீடு கூட இருளடைந்திருந்தது. இன்னிக்கு அந்த தாடிக்கார தெலுங்கானா பாபுவுக்கு ஆபீஸில் நைட் டியூட்டி இல்லை போலிருக்கு.
யார் வீட்டுக் கதவைத் தட்டலாம்னு யோசிக்கும் போது மொபைல் அலறியது.
கோனேரிராஜகீழ்ப்பாக்கத்திலிருந்து அவள் அப்பா! "மாப்பிள்ளை ! ஷாலு சௌகரியமா பிளேன் ஏறிட்டாளா?” அவ சகட ராசிக்காரி.எப்பவும் துருதுருன்னு இருப்பா.! என்ன! பதிலே சொல்ல மாட்டேங்கிரேள்? சித்தே இருங்கோ! ஏதோ டிவியில ஏதோ சொல்றான்.. மொபைல் கட்டாகிவிட்டது. ஷாலுவிற்கு ஏழெட்டு முறை போன் செய்தேன். ரிங் போகிறது. “இந்த இணைப்பாளர் உங்களுடன் பேசப் பிரியப் படவில்லை” என்ற அர்த்தத்தில் தமிழ், ஹிந்தி, இங்கிலீஷ் பாஷையில் கைபேசி அலறியது.
எனக்கு டென்ஷன் ஏறத் தொடங்கியது.
