
மருத மலைமீது பெரிய நவரத்ன பாம்பு ஒன்று இருப்பதைக் கேள்விப்பட்ட பாம்பாட்டி சித்தர் அதனைப் பிடிக்கச் சென்றார்.
அப்போது திடீரென்று அங்கே வந்த சட்டைமுனி சித்தர் “நவரத்ன பாம்பை நீயே உனக்குள் வைத்துக் கொண்டு வெளியே தேடுகின்றாயே! என்று உபதேசித்தார். !
அற்புதமான இந்த மனித சரீரத்தினுள் ஆதியிலிருந்தே
குண்டலினி
ஒரு பாம்பு படுத்துக்கொண்டிருக்கிறது. அது தூங்கிக் கொண்டிருக்கும். இறைவனை உணரப் பாடுபடுபவர்களுக்கு சுவாசம் ஒடுங்கும். அப்பொழுது `குண்டலினி’ என்ற அந்தப் பாம்பு விழித்து எழும், அதனால் தியானம் சித்தியாகும். இறைவன் நம்முள் வீற்றிருப்பார்.
பாம்பாட்டியார் செய்த தொடர் யோக சாதனையால் குண்டலினி கை கூடியது. எல்லாவகை சித்துக்களும் சித்தியானது. கூடு விட்டு கூடு பாயும் சக்தியும் அவருக்குக் கிட்டியது. இவர் தவம் செய்த குகை மருதமலையில் இருக்கிறது.
இவர் மருதமலையில் சித்தியடைந்ததாகச் சிலரும், துவாரகையில் சித்தியடைந்ததாகச் சிலரும், விருத்தாசலத்தில் சித்தியடைந்ததாகச் சிலரும் கூறுகின்றனர். மூன்று தலங்களிலும் இவரது நினைவிடம் உள்ளது. இவரை முறைப்படி வழிபட்டால் நாகதோஷம் அகலும். மாயை அகன்று மனத்தெளிவு ஏற்படும்.
அவரது தத்துவஞான பாடல்களைப் படியுங்கள்!
தெளிந்து தெளிந்துதெளிந் தாடுபாம்பே – சிவன்
சீர்பாதங் கண்டுதெளிந் தாடு பாம்பே
ஆடும்பாம்பே தெளிந்தாடு பாம்பே – சிவன்
அடியினைக் கண்டோமென் றாடு பாம்பே.
நாதர்முடி மேலிருக்கும் நாகப் பாம்பே
நச்சுப்பையை வைத்திருக்கும் நல்ல பாம்பே
பாதலத்திற் குடிபுகும் பைகொள் பாம்பே
பாடிப்பாடி நின்றுவிளை யாடு பாம்பே.
நாடுநகர் வீடுமாடு நற்பொரு ளெல்லாம்
நடுவன் வரும்பொழுது நாடி வருமோ
கூடுபோன பின் பவற்றாற் கொள்பய னென்னோ
கூத்தன் பதங் குறித்துநின் றாடாய் பாம்பே.
சிக்குநாறுங் கூந்தலைச் செழுமை மேகமாய்ச்
செப்புவார்கள் கொங்கைதனைச் செப்புக் கொப்பதாய்
நெக்குநெக்கு ருகிப்பெண்ணை நெஞ்சில்நினைப்பார்
நிமலனை நினையாரென் றாடாய் பாம்பே.
மயிலென்றுங் குயிலென்றும் மாணிக்க மென்றும்
மானேயென்றும் தேனேயென்றும் வானமு தென்றும்
ஒயிலான வன்னமயிற் கொத்தவ ளென்றும்
ஓதாமற் கடிந்துவிட் றாடாய் பாம்பே.
மின்னற்கொடி யென்றுஞ்சோதி விளக் கென்றும்
மெல்லியென்றும் வல்லியென்றும் மேனகை யென்றும்
கன்னற்கட்டி யென்றுஞ்சீனிக் கற்கண் டென்றும்
கழறாமற் கடிந்தோமென் றாடாய் பாம்பே.
பூவையென்றும் பாவையென்றும் பொன்னே யென்றும்
பூந்திருவே என்றுமென்றன் பொக்கிஷ மென்றும்
கோவையென்றுங் கோதையென்றுங் கோகில மென்றும்
கூறாமல் துறந்தோம்நாமென் றாடாய் பாம்பே.
ஊத்தைக் குழிதனிலே மண்ணை எடுத்தே
உதிரப் புனலினிலே உண்டை சேர்த்தே
வாய்த்தகுய வனார் பண்ணும் பாண்டம்
வறகோட்டுக்கு மாகாதென் றாடாய் பாம்பே.
ஆசையென்னுஞ் செருப்பின்மேல் அடிமை வைத்தே
ஆங்கார முட்காட்டை அறவே மிதித்தே
காசையெனுந் துர்குணத்திற் கனலைக் கொளுத்திக்
காலாகாலங் கடந்தோமென் றாடாய் பாம்பே.
உள்ளத்துக் குள்ளே யுணர வேண்டும்
உள்ளும் புறம்பையு மறிய வேண்டும்
மெள்ளக் கனலை யெழுப்ப வேண்டும்
வீதிப் புனலிலே செலுத்த வேண்டும்
கள்ளப் புலனைக் கடிந்து விட்டுக்
கண்ணுக்கு மூக்குமேற் காண நின்று
தெள்ளு பரஞ்சோதி தன்னைத் தேடிச்
சீர்பாதம் கண்டோமென் றாடாய் பாம்பே.
