image


திருவள்ளுவர் பரம்பரையில் தோன்றிய இந்த சித்தரின் இயற்பெயர் நாயனார். இந்த மகான் நெசவுத் தொழில் நடத்தி வாழ்ந்து வந்தார். தொழிலில் நல்ல வருமானம் கிடைத்தது. எனினும் சித்தர் பெருமானின் மனம் பொருளாசையை விடுத்து அருளைத் தேடி அலைந்தது.

மக்களை மாயையிலிருந்து மீட்பதற்காக, முதலில் தனக்கு ஒரு குருவைத் தேடி காடுகளில் எல்லாம் திரிந்தார். அப்பொழுது ஜோதி மரம் ஒன்று இவர் கண்களுக்கு தெரிந்தது. உடனே அந்த மரப்பொந்துக்குள் புகுந்து கொண்டு வியாசர் பெருமானை தன் மனக் கோவிலில் குருவாக தியானித்து தவம் இருக்கத் துவங்கினார். இவரின் கடுந்தவத்தினை மெச்சிய வியாசர் நேரில் தோன்றினார். மிகப்பெரும் தவப்பேற்றை அகப்பேய் சித்தருக்குக் கொடுத்து அரியபல மந்த்ர உபதேசங்களையும் செய்தார். அகப்பேய் சித்திரைவாழ்த்தி விட்டு வியாசர் மறைந்தார், மனிதர்கள் ஒருவரை ஒருவர் ஏமாற்றி வாழும் தீய செயல்களையும் தீய எண்ணங்களையும் நீக்குவதற்காக இவர் அகப்பேய் சித்தர் பாடல்கள் 90 என்ற நூலை எழுதினார்.

அங்கும் இங்கும் ஓடும் மன அலையை மட்டுப்படுத்தினால், நஞ்சுண்ணவும் வேண்டாம் நாதியற்றுத் திரியவும் வேண்டாம். அந்த இறை நாதன் உன்முன் தோன்றுவான் என்பது இவரின் வாக்கு.

நஞ்சுண்ண வேண்டாவே – அகப்பேய்
நாயகன் தாள் பெறவே
நெஞ்சு மலையாதே – அகப்பேய்
நீ ஒன்றுஞ் சொல்லாதே!

என்று இவர் அலையும் மனதைப் பெண்பேயாக உருவகப்படுத்தி, முன்நிறுத்தி, அகப்பேய் என்று ஒவ்வொரு அடியிலும் விளித்துப் பாடுவதால் அகப்பேய்ச் சித்தர் எனப்பட்டார். ‘அகப்பேய்’ என்பது மருவி, இவரை ‘அகப்பைச் சித்தர்’ எனக் கூறுவதும் உண்டு.

இவரைப் பற்றிய மற்றெந்தக் குறிப்பும் இல்லை.

இவர் பாடல்களில் சைவம் என்பதற்கு அன்பு என்று பொருள். அகங்காரம் அற்று வாழவேண்டும், சாதி வேற்றுமை, சாத்திர மறுப்பு போன்ற கருத்துகள்பேசப்படுகின்றன.

அகப்பேய் சித்தர் பாடல்கள்


நஞ்சுண்ண வேண்டாவே ……அகப்பேய்
நாயகன் தாள் பெறவே
நெஞ்சு மலையாதே …..அகப்பேய்
நீ ஒன்றுஞ் சொல்லாதே. 1
பராபர மானதடி …..அகப்பேய்
பரவையாய் வந்தடி
தராதலம் ஏழ்புவியும் …..அகப்பேய்
தானே படைத்ததடி. 2

நாத வேதமடி …..அகப்பேய்
நன்னடம் கண்டாயோ
பாதஞ் சத்தியடி …..அகப்பேய்
பரவிந்து நாதமடி. 3
விந்து நாதமடி …..அகப்பேய்
மெய்யாக வந்ததடி
ஐந்து பெரும்பூதம் …..அகப்பேய்
அதனிடம் ஆனதடி. 4

தன்னை அறியவேண்டும் – அகப்பேய்!

சாராமல் சாரவேண்டும் பிள்ளை

அறிவதெல்லாம் அகப்பேய்!

பேய் அறிவு ஆகும் அடி

ஒப்பனை அல்லவடி – அகப்பேய்!

உன் ஆனை சொன்னேனே!

அப்புடன் உப்பெனவே – அகப்பேய்!

ஆராய்ந்திருப்பாயே!

கருத்து:

தன்னை அறியவேண்டும் – தன்னுடைய இயல்பினை ஆற்றலை உணர வேண்டும். தன்னை அறிந்து தீய நெறியிலே பிளவை (விரிவை) உண்டாக்கும் வழியிலே சேராமல் உண்மை நெறியிலே சேர வேண்டும்.

நீருடன் உப்புக் கலந்திருப்பதுபோல் இறைவன் இருக்கிறார். தெய்வத்தன்மை இருக்கிறது. இதை ஆராய்ந்து உணர்ந்து ஆனந்தமாய் வாழ்வாயாக. தன்னை அறிவதனால் கடவுளை அறியலாம் என்று கூறுகிறார் அகப்பேய்ச் சித்தர்.

பக்கம் ………………………………21