உங்களைத் தானே !

குவிகம் செப்டெம்பர்  2015 இதழில் வழக்கம் போல  25 பக்கங்கள் இருக்கின்றன !

நீங்கள் கீழே ஸ்க்ரோல் செய்து  செல்லும்போது உங்களுக்கு முதல் பதினைந்து பக்கங்கள் மட்டும் தெரிந்தால் click older entries என்ற அறிவிப்பைக் கிளிக் செய்யவும். மற்றப்  பத்துப் பக்கங்களையும் பார்க்கலாம்.

அதேபோல்  click older entries என்ற தலைப்பை அது தோன்றும் சமயத்தில்  கிளிக் செய்தால்   சென்ற மாதங்களின் குவிகம் இதழையும் படிக்கலாம்.

இதுவரையில்  554  டிஜிட்டல் பக்கங்கள் உள்ளன . அவற்றை எப்போது  வேண்டுமானாலும் படிக்கலாம் !

குவிகம் இலக்கியவாசல் – ஆறாம் நிகழ்வு


குவிகம் இலக்கியவாசலின் ஆறாம் நிகழ்வு  

கலந்துரையாடல்

தலைப்பு :“திரைப்படப் பாடல்களில் கவிநயம்" 


நாள்:- 19-09-2015 சனிக்கிழமை  @ 6.00 PM

இடம்: J G கண்ணப்பன் வாசுகி அரங்கம்
           எண்: 68, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை,
           (ஹோட்டல் பிரசிடென்ட் எதிரில்),
           சென்னை 600004


நீங்கள் ரசித்த கவிநயம் மிக்க திரைப்படப் பாடல்களை அனைவருடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்

அனைவரும் வருக.

குவிகம் இலக்கிய வாசல்  

பக்கம் ………………………………2

ஷாலு மை வைஃப்

image

‘ஹய்யா! இன்னிக்கி அம்மா வரப் போறாளே!  இன்னிக்கி அம்மா வரப் போறாளே ’ காலையில்  ஷிவானி அரைத் தூக்கத்தில் – தூங்கி முழிச்சதும் சொன்ன முதல் வார்த்தை  இது தான்.

 நான் பத்து நாள் செய்ததற்குக் கிடைத்த  பரிசு! 

ஷிவானி சும்மா சொல்லவில்லை பக்கத்தில் படுத்திருந்த ஷியாமைக் காலால் உதைத்துவிட்டுச் சொன்னாள். ஷ்யாம் ஒரு  தூங்கும் புலி.  நல்ல வேளை  அவன் அதை சீரியஸாக எடுத்துக்கலை . ‘ஆமாண்டி மம்மி ரிடர்ன்ஸ். ஏன் தூங்க  விடாம கத்தறேன்னு’ கத்திவிட்டு பூனைக்குட்டி மாதிரி சுருண்டு படுத்துக் கொண்டான் . அவனுக்கு கிரிக்கெட் எக்ஸ்பாக்ஸ் அம்மா அப்பா எல்லாம் தூக்கத்துக்கு அப்பறம் தான்.

image

ஒருதடவை வெள்ளிக்கிழமை ராத்திரி கமலோட ‘தூங்காதே தம்பி தூங்காதே’ படத்தை கே டிவியிலோ வேற எந்த சானலிலோ பார்த்துட்டு ’ சே ! சனியன்! என்ன படம், என்ன பேரு’ என்று கத்திவிட்டு ஷாலு பண்ணின ரவா உப்புமாவை சாப்பிட்டுவிட்டுத் தூங்கினான்.

சனிக்கிழமை காலையில ஷாலுவும் ஷிவானியும் அவளோட குருஜினி வீட்டில நடக்கிற பூஜைக்குப் போகக் கிளம்பினார்கள்.

“சாயங்காலம் தான் வருவோம்.  எல்லாம் சமைச்சு வைச்சிருக்கேன் வேளா  வேளைக்குச் சாப்பிடுங்கோ.   (எனக்கு என்னவோ கொட்டிக்குங்கோ என்று காதில் விழுந்தது. சே! சே! ஷாலு அப்படியெல்லாம் சொல்லமாட்டாள். )

அந்தக் குட்டிக் கும்பகர்ணனை எழுப்பி சாப்பிடவைச்சு ஹோம் வொர்க் எல்லாம் முடிக்கச் சொல்லுங்கோ.

இந்தப் பேப்பர்காரன் வந்தான்னா  போனமாசம் சினேகிதியோட இலவச இணைப்பு வரலைன்னு சொல்லிக் கொண்டுவரச் சொல்லுங்கோ.

பால்காரப் பையன் கிட்டே நேத்திக்குப் பால் கெட்டுப்போச்சுன்னு சொல்லி வேற பாக்கெட் வாங்குங்கோ.

மேல்வீட்டுக்குப்  புதிசா  வந்த பாட்டி வெளக்கமாறு ஒசி வாங்கிட்டுப் போயிருக்கா .திருப்பிக் கொடுத்தா பத்திரமா வாங்கி வையுங்கோ!

இந்தக் கேபிள்காரத் தடியன் வந்தான்னா ‘நீயா நானா’ பாக்கறச்சே மட்டும் பிக்சர் எகிறி எகிறிக் குதிக்குது ஏன்னு  கேட்டுட்டு இந்த மாசக் காசைக் கொடுங்கோ!

உங்க சித்தி பொண்ணு இன்னிக்கு சாயங்காலம் வர்ரேன்னு சொல்லியிருக்கா! மறக்காம போன் பண்ணி இன்னிக்கு நான் பூஜைக்குப் போயிருக்கிறேன். அடுத்த வாரம் வான்னு சொல்லுங்கோ!

இப்படி எத்தனையோ ‘கோ’ .

அப்பறம் பழைய பேப்பர்காரன் , கத்திக்குச் சாணை பிடிக்கிறது, வேலைக்காரிக்குப் பாத்திரம் ஒழிச்சுப் போடறது, வாஷிங் மெஷின்ல துணியைப் போடறது, அயர்ன்கரன் கிட்டே நேத்திக்கு போட்டத் துணியை வாங்கி போனவாரம் அவன் தரவேண்டிய மூணு ரூபாயைப் பிடிச்சுட்டு பைசா கொடுக்கிறது  எக்ஸெட்ரா ….

"பாக்கி ஏதாவது விட்டுப் போச்சுன்னா .குருஜினி வீட்டிலேர்ந்து  ‘வாட்ஸப்’ அனுப்பறேன்.”

செய்யவேண்டிய வேலைகளை எல்லாம்  சொல்லிமுடிக்கவே அரை நாள்  ஆயிருக்குன்னா அதையெல்லாம் செய்ய எத்தனை நாளாகும் ?  போகிறபோக்கில்     ’ மறக்காம ஷேவ் பண்ணித் தொலைங்கோ! டைபாய்டில விழுந்தவன் மாதிரி இருக்கு! ( போன வாரம் ராப்பிச்சைக்காரன்). இத்தனை  வேலைகளைக் கொடுத்துவிட்டுக் காலை ஏழு மணிக்கே பறக்கப் பறக்கப் போய் விட்டாள். இதில ஏதாவது நாலைஞ்சு செஞ்சாக் கூடப் போறும். ஷாலு கிட்டே நல்ல பேர் வாங்கிடலாம்.

ஆனா ஷாலுவை நினைச்சா எனக்குப் பெருமையா இருக்கு. இவ்வளவு வேலையையும் அவள் எப்போதும் ஒண்டியா செய்வாள். நாங்க மூணு பெரும் அவளுக்குக் ஹெல்ப் பண்ணறோம்னு போனா தெனாலி  படத்தில சொல்ற மாதிரி அது கிறுக்குத்தனமாத் தான் முடியும்.

அரைச்ச மாவை எடுத்து வைக்கிறேன்னு ஷ்யாம் வருவான். மாவுல அவனோட கிரிக்கெட் பந்து விழுந்து எல்லா மாவும் கோவிந்தா!

அவள் ‘என் கணவன் என் தோழன்’ சீரியல் பாத்துக்கிட்டு இருக்கும் போது ‘பாவம் அவளுக்கு வேர்க்குமே’ன்னு ஏ‌சியை ஆன் பண்ணுவேன். கரெண்ட் டிரிப் ஆகி அவளை சீரியல் பாக்க விடாம செஞ்சுடும்.

’ ஷிவானி இந்த கிளாசை கிச்ச’னில்  வையேன்’  என்று   நான் சொல்லி முடிக்கறதுக்குள்ளே  அந்த கிளாஸ் தரையில் விழுந்து சுக்கு ஐநூறா உடையும். 

‘நீங்களும் உங்க ஹெல்ப்பும் . உபகாரம் பண்ணாட்டிக் கூடப் பரவாயில்லை உபத்ரவம் செய்யாமல் இருந்தாப் போதும்’. என்று அவள் அத்தைப்பாட்டியோட  டயலாக்கை அடிக்கடி எடுத்து விடுவாள். அதையே சாக்கா வைச்சுக்கிட்டு நாங்க மூணு பேரும் சனி ஞாயிறு எல்லாம் சோம்பேறி மூடுக்குப் போயிடுவோம்.

இதிலே என்ன வேடிக்கைன்னா, சில சமயம் ஷாலுவோட அரட்டை பிரண்டஸ்  எல்லாம் வரும்போது  ஒட்டடைக் குச்சியோட முகமூடிக் கொள்ளைக்காரன் மாதிரி வருவேன். ‘பாரு! ஷாலுவோட ஹஸ்பெண்ட்! வீட்டு வேலையெல்லாம் எவ்வளவு இண்டிரஸ்டோட செய்யறாருன்னு’ பேரு கிடைக்கும். ஷாலுவால ஒத்துக்கவும் முடியாது, மறுக்கவும் முடியாது. அவங்களெல்லாம் போனபிறகு ஷியாமுக்கு செம டோஸ்  கிடைக்கும். அது எனக்கான டோஸ் என்று தெரிந்து கொண்டு மனதுக்குள் சிரித்துக் கொள்வேன்.

ஆனா ஷாலு  காலையிலே  காப்பி பில்டரை வேகமா டங் டங் என்று மூணு தடவை தட்டும் போதே எங்களுக்குத் தெரிந்து விடும் . ‘அம்மா ஆங்க்ரி பேர்ட்’ என்று ஷ்யாம்   சிக்னல் வேறு  கொடுப்பான். நான் ஜாக்கிரதை ஆயிடுவேன். அன்னிக்கு நான் எதுக்கும் வாயைக் கொடுக்க மாட்டேன். ஹிண்டு பேப்பரைக் கூடப் படிக்க மாட்டேன்.  சட்னியில உப்பு இல்லேன்னாக்  கூட சொல்ல மாட்டேன். முடிஞ்சா ஆபீசில பாஸ் வரார்னு சொல்லி லஞ்ச் கூட எடுத்துக்காம  சீக்கிரம் ஓடிப் போயிடுவேன். ஏன்னா எதால அவ டிரிகர் ஆவான்னு சொல்லமுடியாது.  ஆனா ஒண்ணு. காலையில ஆங்கிரி பேர்ட் மூடில்  இருந்தா சாயங்காலம் ஷாலு பயங்கர  ஜாலி பேர்ட் ஆயிடுவா. அவ கோபம் ஆத்திரம் எல்லாம் கொஞ்ச நேரம் தான். சாயங்காலம் அவ கோபத்தைப்  பத்தி பயங்கரமா கலாய்ப்போம் . அப்போ அவளுக்குக் கொஞ்சம் கூட கோபம் வராது. அவ செம மூடில் இருப்பா!

image

எதை  எதையோ பேசி சொன்ன விஷயத்தை விட்டுட்டேனே! அந்த சனிக்கிழமை ஷாலு ஷிவானியோடஏழு மணிக்குக்  கிளம்பிப் போனபிறகு காப்பியைக் குடிச்சுட்டு நானும்  ஷ்யாம் கிட்டே படுத்துட்டுத் தூங்கிப்போயிட்டேன். ‘அது என் போர்வைப்பா உன் போர்வையை எடுத்துக்கோ" ஷ்யாம் கத்தக் கத்தத் தூங்கிட்டேன். ஆனா  கொஞ்ச நேரத்துக்கெல்லாம் யாரோ கதவைத் தட்டற  சத்தம் கேட்டது. மணி பாத்தா ஏழே கால். ஷாலுவும் ஷாலினியும் வாசலில். . ‘என்னாச்சு? பூஜைக்குப் போகலியா? என்று கேட்டுக் கொண்டே  கதவைத் திறந்தேன்.

அப்பறம் தான் எனக்கே புரிந்தது. நானும் ஷியாமும்  சாயங்காலம் ஏழேகால் வரை தூங்கியிருக்கோம் என்று. ஏதோ ஒரு ராமநாராயண் படத்தில ரோஜா பச்சைக் கலர் காளியா வந்து கையில சூலத்தோட டான்ஸ் ஆடுவாளே  அந்த மாதிரி ஷாலு ஆடப் போகிறா என்று நினைக்கும் போது ‘ஹாய் அண்ணா!’ என்று என் சித்தி பொண்ணு அவ பசங்களோட வந்தா! அவளை ஆபத்பாந்தகின்னு சொல்லறதா இல்லை நிலநடுக்கத்தைக் காட்டும்  ரிக்டர் ஸ்கேல் என்று சொல்லுவதா என்று தெரியலை.

அன்னிக்கு ஷாலு ஆங்க்ரி பேர்ட் இல்லை. ஆங்க்ரி டயனோசார்.

ஆனா ஷாலு ஜாங்கிரி பேர்டா இருந்தபோதே எனக்குத் தெரியும்.

இவ்வளவு நாள் நான் சொல்ற கதையைப் படிச்சுட்டு எனக்கும் ஷாலுக்கும் அம்மா அப்பா பாத்து, ஜோசியம் பார்த்து, பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிட்டு பொண்ணைப்  பாத்துட்டு ஊருக்குப் போய் இன்லெண்ட் லெட்டர் போட்ட கேசுன்னு தானே நீங்க நினைச்சிங்க! 

நாங்க லவ் பண்ணிக் கல்யாணம் பண்ணிக்கிட்டவங்கன்னு சொன்னா நம்புவீங்களா? ஆனால் அது தான் உண்மை. நான் அவளை முதன் முதலா பாத்தது  ……………………………………

image
image

பக்கம் ………………………. 3 

கோவை போஸ்ட்

image

 கோவை போஸ்ட் – இது கோவையிலிருந்து வெளி வரும் புதிய  ஆன்லைன் இ-பேப்பர்.  

இதன்  சிறப்பே இதன் முறுக்கான  செய்திக் கதம்பமும் அழகான டிசைனும். 

மொபைலில் படிக்கலாம். லேப்டாப்பில் படிக்கலாம். 

பேப்பரில் வரும் தினசரிகளை மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து கொண் டு வரும் இந்தக் கால கட்டத்தில் ( இன்றைய இளைய சமூகம் செய்தித் தாள்களை  படிப்பது  இல்லையாமே? ) கோவைபோஸ்ட் புதிய வடிவத்தில் அனைத்துச் செய்திகளையும் நமக்குத் தருகிறது. 

ஆசிரியர் வித்யாஸ்ரீ தர்மராஜன். 

பக்கம் ………………………………4

படைப்பாளி –                           நீல பத்மநாபன்                 (எஸ் கே என்)

image

முதியோர் இல்லத்தை நிலைக் களனாகக் கொண்ட
‘இலையுதிர் காலம்’ நாவலுக்காக 2007ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது
பெற்றவர்  திரு நீல பத்மநாபன்.

திரு பஷீர் அவர்களுடைய மலையாளக் கவிதைகளின் தமிழ்
மொழிபெயர்ப்பிற்காக சாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்புக்கான விருதையும்
பெற்றிருக்கிறார்.

இவரது தலைமுறைகள் என்னும் புதினம் பெரும் வரவேற்புப் பெற்று,
தமிழ் இலக்கியத்தில் ஒரு மைல்கல் என்றும் பாராட்டப்பட்டது. 

இவரது
‘பள்ளிகொண்டபுரம்’ என்னும் புதினம் திருவனந்தபுரத்தின் ஆன்மாவைப் பிரதிபலிக்கிறது
என்றும் சொல்வார்கள். அந்நகரத்தின் பெயர் எங்குமே சொல்லப்படாததும், ஒரு விடிகாலைப்
பொழுதில் தொடங்கி மறுநாள் அதே நேரத்தில் முடிவடைவதும் அனந்தன் நாயரின் வாழ்க்கை
முழுவதும் சொல்லப்படும் நேர்த்தியும் இதன் சில சிறப்பு அம்சங்கள். 

தமிழ் தவிர,
மலையாளம் மற்றும் ஆங்கிலத்திலும் இலக்கியம் படைத்தவர்.

இவரது சிறுகதைகள் ஆர்ப்பாட்டமில்லாத ஒரு சிறுபொறியை வாசகனுக்குக் காட்ட
வல்லவை.  

ஒரு
பிரத்யேக கணத்தின் தெறிப்பில்
, ஏனோ ஒரு
சொல்லத்தெரியாத தன்மையில் சிலிர்த்துப்போய் நேரிலும் காணும்
, சொல்லிக்கேட்கும் சில கருத்துக்களை மட்டும் என் மனம் சுவீகரித்துக்
கொள்கிறது. உதறினாலும் விலகாமல் உள்ளத்தில் இறுகப்பற்றிக்கொள்ளும் இந்தக்கரு தன்னை
எடுத்தாள என்னை விடாப்பிடியாக நிர்பந்திக்கிறது. இரும்பு இதயம் படைத்தவர்களுக்காக
நான் எழுதவில்லை. காரணம் எனக்கு இரும்பு இதயம் இல்லை என்பதுதான்
, என்னைப்போல் சாதாரண ஆசை நிராசைகள் கொண்ட சாதாரண மனித ஜீவிகளுடன் என்
பிரச்னைகள்
, உணர்ச்சிகளை, வியப்புகளை, வெறுப்புகளை பரிமாறிக் கொள்ளவே நான் எழுதுகிறேன்”

இவரது ‘அனாயசமாய்…’
என்னும் சிறுகதை இப்படிப்போகிறது.

தான் முன்பு வசித்து வந்த
ஊருக்கு வெகுநாட்களுக்குப் பிறகு செல்லும் ராமதாஸ், அக்காலத்தில் தன்னுடன் மிக
நட்புகொண்டிருந்த சந்தானம் என்பவரின் வீட்டிற்குச் செல்கிறார்.

இப்படி, அழையா
விருந்தாளியாக, விடிந்தும் விடியாத காலைப்பொழுதில் முன்கூட்டி எந்த அறிவிப்பும்
இல்லாமல் திடுதிப்பென்று கதவைத் தட்டினால்.

இப்போது
வீட்டில் யாரிருக்கிறார்களோ! மகள் கல்யாணமாகிப் போயிருப்பாளா? பையனுக்கு வேலை
ஆகியிருக்குமா? வீட்டுக்காரி….

வீட்டில் இருந்தது  சந்தானத்தின் மனைவி.  நட்பு வேர்விட்டு இருந்த காலத்திலேயே ராமதாஸ்
சந்தானத்தின் வீட்டிற்கு வந்தது மிகக் குறைவு. திருமதி சந்தானத்திடம் பேசியதாக
நினைவுமில்லை. அவளைப்பற்றி அறிந்ததெல்லாம் சந்தானம் கூறியது தான்.

image

“இந்த
எழுபது வயது
பிராயத்திலும் காலையில் எந்திரிச்சு உடனே ஒரு கப்
டீயிலிருந்து ராத்திரி படுப்பது வரையுள்ள என் உணவை நானே ஸ்டவ்வில் சமைச்சு
சாப்பிடறேன்”

“ஷி
ஈஸ் எ டெவில்”

“என்
சொந்தப் பிள்ளைகளிடம் மட்டுமில்லே, வந்தவங்க போனவுங்க எல்லோரிடமும் இல்லாததையும்
பொல்லாததையும் சொல்லி என்னை ஒரு வில்லனாக சித்தரிப்பதே அவள் வேலை. இதுக்கெல்லாம்
காரணம் அவள் திமிர், அகங்காரம், நான் சொல்லிக் கேட்பதா என்று என்மீதுள்ள
இளக்காரம், வெறுப்பு.”

அவர் சொல்லுவதெல்லாம் ஒன்
சைடு தானே அவள் சொல்வதையும் கேட்டாத்தானே உண்மை தெரியுமென அபிப்பிரயப்பட்டாலும்,
அதிகம் பேசாத, அடக்கமான, வேறு யாராலும் மோசமாகச் சொல்லப்படாத, ஒரு குறையையும்
நண்பர்களால்கூட கண்டுகொள்ள முடியாத சந்தானத்தை நம்பாமல் இருக்க முடியவில்லை.
பெண்டாட்டி விஷயத்தில் அவரிடம் காணப்பட்ட இந்தக் கொந்தளிப்பும் குமைச்சலும்…

 மகளுக்கு
மணமாகி விட்டது. மகன் சற்றுமுன் வெளியே போயிருந்தான். சந்தானத்தின் மனைவி காப்பி
கொண்டு வந்து வைக்கிறாள்

“சும்மாத்தான்
இருந்தார். முந்தின நாளும்
யாந்திரம் வழக்கம்போல் வெளியே
போயிட்டு வந்தார். காலம்பரெ எந்திரிச்சு பாத்ரூம் போனவர்
வெளியே
வரவில்லை..”

அவள்
விழிகள் நிறைந்து வழிந்தன.

இந்தக்
கண்ணீரில் களங்கம் காணமுடியவில்லையே. பின் ஏன் உயிருடன் இருக்கும்போது பரஸ்பரம்
அந்த வெறுப்பு, துவேஷம்..!

ராமதாஸ் விடை பெறுகிறார். வெளியில்
இறங்கும்போது கண்களைத் துடைத்தவாறே அவள் சொல்கிறாள்

“ஹூம்.
அவருக்கு அனாயாச மரணம் கிடைச்சுட்டுது. ஆண்டவன் என் தலையில் என்ன
எழுதியிருக்கிறானோ..”

-அனாயாசமா!
பாவம், எத்தனை காலமாய் நடமாடும் சுடலையாய், எரிந்தெரிந்து வெண்ணீராகிக்
கொண்டிருந்தார் –   என்று கதையை முடிக்கிறார்.

 

நீல
பத்மநாபன் தான் எழுதுவது பற்றி சொல்லியது இப்போது நன்கு புரிகிறது    

இணையத்தில்
கிடைக்கும் மற்ற இரு கதைகள்

சண்டையும்
சமாதானமும்

மண்ணின்
மகன் பக்கம் ………………………. 5

எளிதில்லை கண்ணா ! — கோவை சங்கர்

    ( 5-9-2015 – கோகுலாஷ்டமி ) 

image
image

எளிதில்லை கண்ணா எளிதில்லை – கலியுகக் 

கள்ளரையே வெல்வது எளிதில்லை !


அழுக்குமனக் கம்சன் ஒருவனே அன்று – இங்கு 

அதட்டிவரும் கம்சர்கள் ஊரெல்லாம் இன்று 

அதர்மத்திலு மோர்தர்மம் இருந்தது அன்று 

அதர்மத்தில் அதர்மமே இருக்கிறது இன்று ! 


நீவென்ற நரகனின் மூச்செல்லாம் நஞ்சு – இங்கு 

உலவிவரும் நரகர்கள் உடம்பெல்லாம் நஞ்சு 

அன்பாலும் பண்பாலும் ஆட்கொண்டாய் அன்று 

அன்பிற்கும் பண்பிற்கும் விலையில்லை இன்று !


அரக்கர்கள் கொட்டத்தை அறவோடு ஒடுக்கிடவே 

ஒர்கண்ணன் அவதரித்தான் தரணியில் அப்போது 

கலியுக வில்லர்களை பூண்டோடு அழித்திடவே 

வீதிக்கொரு கண்ணன் தேவையடா இப்போது !


குழலூதும் கண்ணாநீ யுத்தசங்கு ஊதிடுவாய் 

தேரோட்டும் கண்ணாநீ விமானத்தில் வந்திடுவாய் 

அம்பெய்த கண்ணாநீ ஏவுகணை ஏவிடுவாய் 

வஞ்சகரும் வீழ்ந்திடவே ஹீரோவாய் ஜொலித்திடுவாய் !

பக்கம் ………………………………6

1974 -தரும.ராசேந்திரன்

image


கோவையின் விடியல் பொழுது மிகவும் இனிமையானது .எதிரில் வரும் நபர்களைக் காண்பதற்குப் பனித்திரை சற்றே  விலகவேண்டும் .அந்த அதிகாலைப்  பொழுதில்,அந்த ரேஸ் கோர்ஸ் ரோடில்,நடந்து கொண்டே படிப்பது பாடங்கள் பசுமரத்தாணிபோல் மனதில்பதிந்து நிற்க துணைசெய்யும்.  நேரம் ஆக ஆக கதிரவனின் முகம் கண்ட  பனித்துளிகள் விலகி பசும்புல்லும் பளிச்சிட்டன.மெல்ல காலை வெய்யில் கண்களை கூசவைத்தது. சரி இனி கல்லூரி விடுதிக்குச் சென்று குளித்துவிட்டு  கல்லூரிக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தான்  அண்ணாமலை .


அரவங்காடு, கோவையிலிருந்து உதகமண்டலம் செல்லும் பாதையில் உள்ள அழகிய சிற்றூர் . சூரியவொளியைப் பார்த்தால் அவ்வளவு ஆனந்தமாயிருக்கும். காரணம் என்னேரமும் கடுங்குளிர் உள்ளதால் வெய்யில் மிகவும் இதமாக இருக்கும் . சாலையோர தேநீர் கடையில் நண்பருடன் தேநீர்  அருந்திவிட்டு வேலைக்குப் போகத்  தயாராகிக்கொண்டிருந்தான் கோபாலன் .


கோவை கல்லூரியில் வகுப்புமுடிந்து விடுதிக்கு வந்தவுடன்’ தன் பெயருக்கு ஒரு தபால் வந்திருந்ததைப் பார்த்த அண்ணாமலை அனுப்பியது யார் என்று பார்த்தான் . அட நம்ம சந்துரு ! 


அரவங்காடு அலுவலகத்துக்கு போன கோபாலனுக்கு தபால்காரர் ஒரு தபால் கொடுத்துவிட்டுச் சென்றார் . அனுப்பியது யார் என்று பார்த்தான் கோபால் . அட நம்ம சந்துரு ! 


அண்ணாமலை , கோபாலன், சந்துரு மூவரும் இணைபிரியா பள்ளித் தோழர்கள் . அண்ணாமலை, இளங்கலை பட்டப்படிப்பு முடித்து முதுகலைப்  பட்ட  படிப்புக்காகக் கோவை கல்லூரியில் சேர்ந்து படித்து வருகிறான் .கோபாலன்  இளங்கலை பட்டம் முடித்து அரசாங்க வேலை கிடைத்து அரவங்காட்டில்  வேலை பார்த்து வருகிறான் . சந்துருவின் தபால் பார்த்த இருவருமே மிகவும் மகிழ்ந்து போனர்கள்.

சமீபத்தில்தான் அண்ணாமலை அரவங்காட்டுக்கு வந்து கோபாலன் ரூமில் தங்கி குன்னூர் , உதகமண்டலம் எல்லாம் சுற்றிப்பார்த்துவிட்டு சென்றான்.கோபாலனின் அறை நண்பர்  அமல்ராஜ்   ஒரு  மாற்றுதிறனாளி .இருகண் பார்வையும் இல்லாதவர் . அவருக்கு கண்ணாக இருந்து பார்த்துக்கொண்டான் கோபாலன் .  அண்ணாமலையையும் அமல்ராசுக்கு மிகவும் பிடித்துபோய் விட்டது.


அப்படி சந்துரு தன்  தபாலில் என்னதான் எழுதி இருந்தான் ?அண்ணாமலை, கோபாலன் இருவருக்குமே தான் விரைவில் மதுரையிலிருந்து கோவைக்கும், அரவங்காட்டுக்கும் வருவதாக எழுதி இருந்தான் .

image

சந்துருவின் தபாலை படித்ததிலிருந்தே அண்ணாமலையும் கோபாலனும் தங்களது பள்ளிபருவ நாட்களை எண்ணியும் அப்போது நடந்த மறக்க முடியாத நிகழ்வுகளையும் எண்ணிப்பார்த்து மகிழ்ந்தனர்.  பாபநாசம் பள்ளி ஆண்டு மலரை சிறப்பாக தயாரிக்க வேண்டுமென்று தமிழாசிரியர் சொன்னதை சிரமேற்கொண்டு         பள்ளி இறுதி வகுப்பு மாணவர்கள் தங்கள் கதை கவிதை,கட்டுரை ஓவியம் எல்லாம் சேர்த்து சிறப்பான கையெழுத்து மலராக தயாரித்து பள்ளிஆண்டுவிழாவில் வெளியிட்டார்கள்.. அண்ணாமலை ,கோபாலன் , சந்துரு அதிலே முக்கிய பங்காற்றியதற்காக பாராட்டப் பெற்றார்கள் . அவ்விழாவில் ஆங்கிலப் பேச்சுப் போட்டியில் முதலிடம் பெற்று கோபாலன்  பரிசு பெற்றதும் , அப்போது நடந்த மாறுவேடப் போட்டியில்  மதுவின் தீமையை விளக்கி நண்பர்கள் மூவரும் போட்ட குறு நாடகத்தையும் நினைத்து மகிழ்ந்தார்கள் .பள்ளி இறுதிவகுப்பு முடிந்ததும் எல்லோரும் மேல் படிப்புக்காக வெவ்வேறு ஊர்களுக்கு சென்றுவிட்டாலும்  இன்லண்ட் தபால் மூலமாக நலம் விசாரித்து மகிழ்வார்கள் .

கோவை கல்லூரி விடுதிக்கு ஒரு நாள் காலை சந்துரு வந்தான் .அவனை இன்முகத்துடன் கட்டிப்பிடித்து வரவேற்றான் அண்ணாமலை .விடுதி அறை நண்பர்களை அறிமுகம் செய்து அவர்களுடன் கோவை பூங்காவிற்கு அழைத்து சென்று சுற்றிபார்த்து  மகிழ்ந்தார்கள் . நண்பர்களின் அனுபவங்களைநகைச்சுவையுடன் பரிமாறிக்கொள்ள அன்று  இரவு விடுதி உணவகத்தில்  அறுசுவை உணவு சந்துருவுடன் உண்டுமகிழ்ந்தனர் இரவு அண்ணாமலைஅறையில்  தங்கியிருந்தசந்துரு, காலை எழுந்தவுடன் நான்  மதுரை செல்லவேண்டும் என்றான்.  என்ன அவசரம் , கோவையில் தங்கிவிட்டுப் பிறகு அரவங்காடு சென்று கோபாலனையும் சந்தித்துச் செல்லலாமென்று அண்ணாமலை சொல்ல , இப்போது மதுரையில் ஒரு அவசர ஆடிட்டிங் வேலை இருக்கிறது . அடுத்த வாரம் அரவங்காடு சென்று கோபாலனை அவசியம் சந்திப்பதாகச் சொல்லிவிட்டு சந்துரு கிளம்பிவிட்டான் . சந்துருவை வழியனுப்பிவிட்டு  விடுதி அறைக்குத் திரும்பிவந்து குளித்துவிட்டு, கல்லூரி கிளம்பும்போது கைகடிகாரத்தை கட்டுவதற்காக கடிகாரம் எப்போதும் வைக்கும் இடத்தை பார்த்த அண்ணாமலைக்கு அதிர்ச்சி . அங்கே அவனது கைக்கடிகாரம் இல்லை . அறையின்  எல்லா இடங்களிலும் தேடினான் .கிடைக்கவில்லை.  விடுதி அறை நண்பர்களும் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை . இப்போது சந்துரு எல்லோருக்கும் முன்னால்எழுந்துஅதிகாலையில்அவசரஅவசரமாகக் கிளம்பியது      அனைவருக்கும் சந்துருமேல்தான் சந்தேகம் உண்டாக்கியது .  அண்ணாமலையும்  அதை நம்பவேண்டிய நிலை . அத்தான்  அன்பாக வாங்கிகொடுத்த விலைஉயர்ந்த கைகடிகாரம் இப்படி காணமல் போனது அண்ணாமலைக்குப் பெரிய அதிர்ச்சி.

ஒருவழியாக மனதைத் தேற்றிக் கொண்ட அண்ணாமலை , உடனடியாக அரவங்காட்டிலுள்ள நண்பன் கோபாலனுக்கு ஒரு கடிதம் எழுதினான் . அதில் சந்துரு  கோவை வந்து தன்னைப் பார்த்துச் சென்ற விபரங்களையும் , கைகடிகாரம் காணாமல் போன விபரத்தையும் எழுதி ,அரவங்காட்டுக்கும் அவன் விரைவில் வருவான் , எனவே மிகவும் கவனம் என்று எழுதி உடனே தபாலை அனுப்பிவைத்தான் .மறுநாளைக்குமறுநாள்  அரவங்காடு  நண்பர் கோபாலனிடமிருந்து தபால் வந்தது . அண்ணாமலை தபாலை வாங்கி பிரித்துப் படித்தான் . “ அன்புள்ள  நண்பர் அண்ணாமலைக்கு நண்பர் கோபாலன் எழுதியது . தாங்கள் நேற்று எழுதிய கடிதம் இன்று கிடைத்து விபரம் அறிந்தேன் . சந்துரு நேற்றே இங்கு வந்து இங்கு தங்கியிருந்து இன்று அதிகாலை மதுரை கிளம்பி சென்றுவிட்டான்  . கோவையில் தங்கள் கைகடிகாரத்தை எடுத்துசென்றதுபோல்  இங்கு எனது அறை  நண்பர் அமல்ராஜ், தனது தம்பிக்காக வாங்கி வைத்திருந்த புத்தம் புதியகைக் கடிகாரத்தையும் எடுத்துச் சென்றுவிட்டான் .அறை நண்பருக்கு நான் வேறு கைகடிகாரம் வாங்கித்தருவதாகச் சொல்லியிருக்கிறேன் . சந்துரு இப்படி செய்வான் என்று கனவிலும் நான் நினைத்ததில்லை. இப்படிக்கு உனது  அன்பு நண்பன் கோபாலன்.”  

பக்கம் ……………………………..7 

தனி ஒருவன்

சமீபத்தில் வந்து வசூலிலும் , ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்போடு பேசப்படும் படம் தனி ஒருவன்.  டிரைலர் பார்க்க மேலே சொடக்குங்கள்  !!

ஜெயம் ரவி , அரவிந்தசாமி இருவரும் தூள் கிளப்புகிறார்கள். 

விரைவில் மற்ற மொழிகளிலும் திருஷ்யம் மாதிரி வந்தால் ஆச்சரியம் இல்லை. 

இதன் திரை விமரிசனம்   (By வேதா )இதோ! 


தனி ஒருவன் ஹீரோவா வில்லனா?

.ஜெயம் ரவி இதில் சற்று எடை கூடி IPS க்குத்  தகுந்தாற்போல் தன் உடலைக் கூட்டியிருக்கிறார். குறிப்பாக்ச் சண்டைக் காட்சிகளில் தன் நண்பர்களும், சகாக்களுடன்   சேர்ந்து வில்லன்களுடன் மோதும் சண்டையிலாகட்டும், தன் நண்பனைத் தேடி வரும் இடத்தில் விக்கியுடன் போடும் சண்டையிலாகட்டும், காட்டும் வேகமும் ஆக்ரோஷமும் மிக அருமை.

துரத்தித் துரத்திக் காதலிக்கும் நயனிடம் காட்டும் விரைப்பும், நயன் ரவிக்குக் கூறும் அட்வைசைக் கேட்டுப் பின் அவர் மேல் காதல் வசப்படும் இடத்திலும் ரவியின் நடிப்பு அருமை.  நாளுக்கு நாள் என்ன மாயமோ நயனின் அழகு கூடி, வயது குறைகிறது.

நயனுக்கு இதில் நடிக்கவும் வாய்ப்பு, அதில் அசத்தியும் இருக்கிறார். ஏஞ்சலினாவுக்கும், தனக்கும் ஒரே உடை என்று தெரிந்ததும் காட்டும் அந்த உடல் மொழி சூப்பர்.

எல்லோரையும் தூக்கி ஓரம் கட்டி விடுகிறார்.அரவிந்தசாமி.  அவரது ஓரச் சிரிப்பும், பாதி கண் மூடிய சாய்ந்த பார்வையும், அடேயப்பா! அந்த சாக்லேட் ஹீரோவா இவர்? இப்போதைய டிரண்ட் வில்லன்களுக்கு இவர் ஒரு சவால்.

தம்பி ராமையா தலையை நிமிர்த்தி நடக்கும்போதும் கொசு செத்து விட்டதா எனக் கேட்கும்போதும் தியேட்டரில் அப்ளாஸ் வாங்குகிறார்.

எடுத்துக் கொண்ட கதையை விறுவிறுப்பாக எடுத்துச் சென்று ரசிகர்களின் கவனம் சிதறாமல் ஒன்றச் செய்ததில் டைரக்டர் மோகன் ராஜா .வெற்றி பெற்றுள்ளார்.

தனி ஒருவன் டைரக்டர் தான்! 

பக்கம் ………………………………8 

அனுபவம் – சுபா சுரேஷ்

image


கல்லூரி வாழ்க்கை தந்த அனுபவங்களையும் ,
நண்பர்களுடன்
சேர்ந்து அடித்த லூட்டிகளையும், அசைபோட்டுக்
கொண்டே சூரியன் உதித்து பல மணி நேரமாகியும் படுக்கையை விட்டு எழுந்திருக்க
மனமில்லாமல் புரண்டு கொண்டிருந்தாள் கண்மணி. அப்பொழுது அவளுக்கு,வாசலில்
அம்மா கீரைக்காரரிடம் பேரம் பேசும்; சத்தம்
கேட்டது.

”இந்த அம்மாவுக்கு வேற வேலையே
கிடையாது. எப்போ பார்த்தாலும் 50 பைசா குறை,1ரூபாய்
குறைன்னு காய்க்காரன் கீரைக்காரன் கூட சண்டை போடுறதே வேலை” என்று
மனதில் நினைத்துக் கொண்டே புரண்டு கொண்டிருந்தாள் கண்மணி.

”எப்படியோ பேரம் பேசி 1ரூபாய்
குறைச்சிட்டோம். கண்மணி மணி 9 ஆகுது,இன்னும்
எழுந்திரிக்க மனசில்லயா,படிக்கிறேன்
படிக்கிறேன்னு 21 வருஷமா வீட்டுல ஒரு வேலை செய்யாம
சுத்திட்டு இருந்த,சரி படிக்கிற புள்ளனு விட்டேன்.
இப்ப படிப்ப முடிச்சாச்சு,சீக்கிரம்
எழுந்திரிச்சு அம்மாவுக்குக் கூட மாட ஒத்தாசையா இருப்போம்ன்னு புத்தியிருக்கா. இந்த
லட்சணத்துல நாளைக்குப் பொண்ணு பார்க்க வர்றாங்க ” என்று  கண்மணியின் தாய் புலம்பினாள்.

உடனே எழுந்த கண்மணி ”ஏம்மா
இப்ப கத்துற? அதான் நீ காய்க்காரன் கீரைக்காரன்
கூட பேசுற சுப்ரபாதத்த கேட்டுதான நான் தினமும் எழுந்திரிக்கிறேன். எந்த பொருள்
வாங்கினாலும் கஞ்சத்தனம் பண்ணிட்டு,எப்ப தான் நீ
இந்த பழக்கத்த விடப் போறியோ? ” என்று
சலித்துக் கொண்டாள்.  

”ஆமான்டீ,உங்கப்பா
வாங்குற சம்பளத்துல ஒவ்வொரு பொருள் வாங்கும் போதும் இப்பிடி பார்த்து பார்த்து
வாங்கி மிச்சப்படுத்தி தான் உன் கல்யாணத்துக்கு நகை சேர்த்துட்டு வர்றேன்.
குடும்பத் தலைவி பொறுப்பா இருந்தா தான் குடும்பம் உருப்படும். கல்யாணம்
பண்ணப்புறம் பாரு அப்ப தான் என் கஷ்டம் உனக்குப் புரியும். போற இடத்துல நீ எப்படித் தான் பொழைக்கப்போறியோ?”  என்ற
தாயிடம் , ”ஐயோ அம்மா காலங்காத்தால
ஆரம்பிச்சுடாத” என்று அந்த உரையாடலுக்கு
முற்றுப்புள்ளி வைத்தாள் கண்மணி.

காலங்கள் சென்றது. குடும்பம் ,கணவன்,குழந்தைகள்
என கண்மணியின் வாழ்க்கை மாறியிருந்தது. கண்மணியின் தாய்; அவளைப் பார்ப்பதற்காக ரயிலில் இருந்து இறங்கி  வீட்டுக்கு
ரிக்ஷாவில் வந்து கொண்டிருந்தாள்.

அப்பொழுது வீட்டு வாசலில்,கண்மணி
காய்காரனிடம் ”என்ன பகல் கொள்ளையா இருக்கு?
½ கிலோ கத்திரிக்காய் 10 ரூபாயா?
அதெல்லாம்
முடியாது நான் 8ரூபாய் தான் குடுப்பேன்…….
” ,என்று பேரம் பேசிக்கொண்டிருந்தாள். இந்தக் காட்சியைக் கண்ட
கண்மணியின் தாய்,மகளது மாற்றத்தை எண்ணித் தன்னையும்
மறந்து வியந்து நின்றாள்.  

எப்பேர்ப்பட்ட ஆசானும் கற்றுத் தர முடியாத பாடத்தை
எல்லாம் அனுபவம் கற்றுத் தரும் என்பது உண்மை தான் .

image

பக்கம் ………………………………9 

ஆசிரியப்பெருந்தகையீர்  நன்றி நன்றி ! — கோவை சங்கர்

 ( 5-9-2015 – ஆசிரியர் தினம் )

image
image

கற்றவர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு 

பொற்பையும் வீழ்த்திடும் வலியதாம் நட்பு 

சிறப்புடன் வாழவே உலகியலும் வேண்டும்

முற்றுமிசை யோங்கிடவே நுண்ணறிவு வேண்டும் !


மேன்மக்கள் நீர்தந்த அமுதினையே யுண்டு 

நன்றியெனும் வார்த்தைதனை சொல்லிடவே நின்று 

பொங்கிவரும் நன்றிகாட்ட போதாதது கண்டு 

தேன்தமிழில் சொல்தேடி விழிக்கின்றோம் நொந்து !


கடல்கொள்ளா கல்வியும் மாசில்லா வுலகியலும் 

நட்புக்கு உறைவிடமா மொழுக்கமும் மனப்பாங்கும் 

மட்டற்ற மகிழ்வோடு அளித்தவர் நீவீர் !

எட்டாத மதிப்புடைய தாய்தந்தை ஆவீர் !


புரியாத வுளத்திற்குப் புரியும்படி சொல்லி

பேரறிவை  யெங்கட்கு  அளித்தநல் பெருந்தகையீர்

நீர்செய்த உதவிக்கு அச்சொல்லும் போதுமோ 

விரிந்தவெம் நன்றிதனை எங்ஙனமே சொல்வோம் !


எங்களொடு  வாழ்ந்து எங்கள்மன  முணர்ந்த 

உங்கட்கெம் நன்றிதன்  னாழமும்  புரியும் 

தீந்தமிழில் வேறுசொல் கிடையாது கூறுகிறோம்

எங்களுடை நன்றிநன்றி  நன்றிநன்றி  நன்றிநன்றி !

பக்கம் ………………………………10

சாவு முடிவல்ல – துவக்கம் ?

image

மடிந்தபின் ?
மரணத்திற்குப் பிறகு நடப்பது என்ன ? 
இறப்பிற்கு  அப்பால் ?
சாவு முடிவல்ல துவக்கம்  ? 

இவற்றைப் பற்றி ஒரு சிறு சர்ச்சையை  facebook  இல் துவங்கியிருக்கிறோம்.

நண்பர்கள் கருத்துக்களை எழுதியவண்ணம் இருக்கிறார்கள். 

கடோ உபனிஷத்திலிருந்து குறிப்புகள், ஈஷா சத்குரு எழுதிய ‘மரணத்திற்கு அப்பால்’ என்ற புத்தகம், .கருட புராணம் ,இன்னும் நிறைய இன்டெர்நெட் தளங்கள் என்று வந்த வண்ணம் இருக்கின்றன. 

அடுத்த இதழ்களில் இது பற்றி மேலும் விவாதிக்கலாம் !

ஒரு பிரபல வக்கீல் (VICTOR J  ZAMMIT) இதைப்பற்றி உலகின் பெரிய மதங்கள் என்ன சொல்கின்றன என்று விரிவாக எழுதியிருக்கிறார். 

அவருடைய வாதத்தை முன்வைத்து இந்தத்   தலைப்பை ஆராய்வோம். . 

கிறித்தவ மதத்தின் நிலை என்ன என்பதைப் பற்றி அவரது கருத்தை வைத்து 

இந்தத்   தலைப்பைத் துவங்குவோம். 

image

கிறித்துவ மதம் இறப்பிற்குப் பிறகு இருக்கும் உலகை ஒப்புக் கொள்கிறது. இந்த உலகத்தில் நமது செயல்கள் கோட்பாடுகள் அடுத்த உலகத்தில் நமது நிலையை நிர்ணயிக்கின்றன. சொர்க்கம் நரகம் இரண்டையும் ஏற்றுக்கொள்கிறது. நல்லவர்களுக்கு சொர்க்கமும்  கெட்டவர்களுக்கு நரகமும் நிச்சயம் என்ற கோட்பாடு அவர்களுக்குச் சம்மதமே. இரண்டுக்கும் இடைப்பட்ட பாவக்கடன் என்ற  (PURGATORY)நிலையும் உண்டு. தவறு செய்தவர்களின் உயிர்  அந்த இடைப்பட்ட நிலையில் இருந்து பிராயச்சித்தக் காலம் முடிந்த பிறகு சொர்க்கத்தை அடையும். தவறு செய்தவன் மனதார திருந்தி மன்னிப்புக் கேட்டால் அவன் மன்னிக்கப் படுவான் என்பது அவர்களின் கருத்து. 

மற்ற மதங்களின் கருத்துக்களாக வக்கீல் சார்  என்ன  சொல்கிறார்?

பிறகு பார்ப்போம்.

பக்கம் ………………………………11 

சிறுகதை என்றால் என்ன?

சிறுகதைகளை வாசிக்கக் கேட்பது என்பது அலாதியான அனுபவம்.

 இலக்கிய வாசல் நடத்திய புதுமையான மனதைத் தடவும் நிகழ்ச்சி  " சிறுகதை வாசித்தல்".

அதுவும் எழுதிய எழுத்தாளரே வந்து வாசிப்பது மிகவும் சிறப்பான அம்சம்.

அது சரி, சிறுகதை என்றால் என்ன? 

image

நியுயார்க்கர் பத்திரிக்கை மாதந்தோறும் முக்கியமான எழுத்தாளர்களின் சிறுகதைகளை  மற்ற எழுத்தாளர்களைக்கொண்டு வாசிக்க வைத்து podcast ஆக வெளியிடுகிறது. கதைகளைப் பற்றிய சிறிய உரையாடல்கள்,  அறிமுகங்களுக்குப் பிறகு கதைகளை எழுத்தாளர்கள் வாசிக்கிறார்கள். உலகம் முழுவதும் எழுதப்படும் விதவிதமான சிறுகதைகளைப் பற்றி அறிந்துகொள்ள நியுயார்க்கர் பத்திரிக்கையின் மாதாந்திர சிறுகதை podcast நல்ல வழியாக இருக்கிறது.  


நியுயார்க்கர் சிறுகதை podcastஐ  http://www.newyorker.com/series/fiction-podcast  என்ற சுட்டியில் கேட்கலாம்.

சிறுகதை என்றால் என்னா? சுஜாதா சொல்கிறார்!

image

சிறுகதை என்பது சிறிதாக உரைநடையில் விவரிக்கப்பட்ட கதை.     A short fictional narrative in prose.  வேறு எந்த வரைமுறைக்குள்ளும் நவீன சிறுகதை அடங்காது. சிறுகதைகளில் ஒரு பொது அம்சம் இருக்கிறது. படித்த இரண்டு நிமிஷத்தில் மறந்து போய் விட்டால் அது சிறுகதை அல்ல; பஸ் டிக்கெட். ஒரு வாரம் அல்லது ஒரு வருஷம் கழிந்தோ அதை மற்றவரிடம் மாற்றியோ மாற்றாமலோ சொல்ல வைப்பது நல்ல சிறு கதைகளில் உள்ள பொதுவான அம்சம்

சிறுகதை என்பது தந்தத்தில் பொம்மையைக் கூர்மையாய்ச் செதுக்குவது போன்றது. நல்ல நடையினால் சிறுகதை செதுக்கப்பட வேண்டும். சொல்லுகின்ற செய்தியை, கூர்மையாய்த் தெளிவாய்ச் சொல்ல வேண்டும். இதன் மூலமே சிறுகதையின் கலையம்சத்தைப் பிரகாசிக்கச் செய்ய முடியும்.

சிறுகதையின் இலக்கணம் இப்படி இருக்கலாம்:


1) சிறுகதை என்றால் அளவில் சிறியதாய்  

முழுமை பெற்று இருக்க வேண்டும்

2) தனிமனித அல்லது சமுதாய வாழ்க்கையைச் சுவையோடு பிரதிபலிக்க வேண்டும்.

3) சிறுகதையில் ஒரு மனிதர் அல்லது ஓர் உணர்வு, ஒரு நிகழ்ச்சி அல்லது ஒரு சிக்கல் தான் தலைதூக்கியிருக்க வேண்டும்.

4) அளவுக்கு அதிகமான கதைமாந்தர்களுக்கு அங்கு இடமில்லை.

5) விரிவான வருணனைக்கும், சூழ்நிலைக்கும் சிறுகதை இடம்தரல் கூடாது.

6) குறைவான, ஏற்ற சொற்களால் இவை சுட்டிக்காட்டப்பட வேண்டும்.


7) பாத்திரங்களின் உரையாடல்களில் சொற்செட்டு அவசியம்.

8 ) சிறுகதை நம்பக் கூடிய உண்மைத் தன்மையினைக் கொண்டு விளங்குதல் வேண்டும்.

9) நல்ல சிறுகதை ஆல விதையைப் போல் விரிவாகக் கூடிய கதைக்கருவைக் கொண்டிருத்தல் வேண்டும்.

ஒரு நல்ல சிறுகதை என்பது ஒரு சுவைமிக்க மாம்பழத்தை இறுதிவரை விரும்பிச் சுவைப்பது போன்றதாகும். அவ்வாறு இன்றி, மாம்பழத்தை முதல் கடியிலேயே வீசியெறிந்து விட வேண்டும் என்ற எண்ணத்தை ஒரு சிறுகதை ஏற்படுத்தினால், அச்சிறுகதையினால் பயன் ஒன்றும் இல்லை.

ஒரு சிறுகதைக்குப் பின்னே உள்ள படைப்பாளரின் கலை ஆற்றல், கற்பனைத் திறன், சொல்லாட்சி, அவர் மறைமுகமாகக் கூறும் செய்தி – இவையனைத்தும் இலக்கண வரம்புகளை விட முக்கியமானவை.

மற்றவர்கள் சொல்லுவது:

வசன நடையில் உள்ள மிகச் சிறிய கற்பனைப் பொறி தான் சிறுகதை. அது 10000 வார்த்தைகளுக்குள் அரைமணி நேரத்தில் படித்து முடிக்கக் கூடியதாக இருக்கலாம்  என்கிறார். எச் ஜி வெல்ஸ்.

ஒரு குறிப்பிட்ட ஒரே சம்பவத்தைச் சொல்லும் கற்பனை சிறுகதை என்கிறார். சாமர்ஸெட் மாம்.  அது துடிப்போடு மின்னலைப் போல் மனதோடு இணையவேண்டும். ஆரம்பத்திலிருந்து முடிவு வரை சீராக  கோடு போட்டது போல்  செல்ல வேண்டும் என்கிறார்.

ஒரு சிறு செய்தியை அல்லது சிறு அனுபவத்தைக் கருவாகக் கொண்டு உரைநடையில் எழுதப்படுவது சிறுகதையாகும்.

தி.ஜானகிராமன் சிறுகதை எழுதுவது பற்றி இப்படிக் கூறுகிறார்: 

ஓர் அனுபவத்தைக் கலைவடிவில் வெளிப்படுத்த சிறுகதையில் இடமும் காலமும் குறுகியவை. எனவே எடுத்துக் கொண்ட விஷயம் உணர்வோ சிரிப்போ புன்சிரிப்போ நகையாடலோ முறுக்கேறிய துடிப்பான ஒரு கட்டத்தில் தான் இருக்கமுடியும். சிறிது நேரத்தில் வெடித்துவிடப் போகிற ஒரு தெறிப்பும் ஓர் அவசரத் தன்மையும் நம்மை ஆட்கொள்ளவேண்டும். தெறித்து விழுவது பட்டுக் கயிராக இருக்கலாம் அல்லது  எஃகு   வடமாகவோ பஞ்சின் தெறிப்பாகவோ குண்டு மருந்தின் வெடிப்பாகவோ இருக்கலாம். . 

தமிழ்ச் சிறுகதைகளின் வளர்ச்சிக்கு மிக அதிகமாகத் துணை நின்றவை, தமிழில் வெளிவரும் வார, மாத இதழ்களே ஆகும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய இந்தப் படைப்பிலக்கியம் இன்று மிகப் பெரும் வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

பக்கம் ………………………………12 

‘நடிகன்’-                                      ‘ஜி. பி. சதுர்புஜன்’

imageமுதலிலேயே சொல்லி விடுகிறேன்.  திடீர்த் திருப்பம் எதையும் எதிர் பார்க்காதீர்கள்.  என் நண்பனின் கதைதான் இது.

வெற்றி டிவி சேனலின் ’வெற்றி அவார்ட்ஸ்’ நிகழ்ச்சியின் ஒளிபரப்பு தன்
பிரத்யேக முழக்கத்துடன் தொடங்கிக் கொண்டிருந்தது.  உலகம் முழுவதும் லட்சோப லட்சம் குடும்பங்கள் அந்த ஞாயிறன்று
காலை கண்கொட்டாமல் தங்கள் வீட்டுத் தொலைக்காட்சிப் பெட்டியுடன் ஐக்கியம் ஆகியிருந்தார்கள்.

“வருகிறது! நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்
காத்திருந்த வெற்றி அவார்ட்ஸ்!  திறமை வாய்ந்த நடுவர்களாலும் உங்கள் தீர்ப்பைச் சொல்லும் வாக்குகளாலும்
தேர்ந்தெடுக்கப்பட்ட பெஸ்ட் ஆக்டர் (மேல்), பெஸ்ட் ஆக்டர் (ஃபீமேல்) , பெஸ்ட் டைரக்டர், பெஸ்ட் கேமராமேன், பெஸ்ட் காமெடியன் என்று திரைத்துறையிலுள்ள நட்சத்திரங்களை அடையாளம்
காட்டும் நிகழ்ச்சி இதோ வந்தே விட்டது!”

நடிக, நடிகையர்களும் மற்ற பிரமுகர்களும் பலவித பளபள கார்களில் விழா
நடக்கும் ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு வந்து இறங்குவதையே பலவித கோணங்களில் காட்டிக் கொண்டிருந்தார்கள்.  ஒவ்வொரு நடிகையும் ஒவ்வொரு விதமான காஸ்ட்யூமில் ஒய்யாரமாக வந்து
இறங்கினார்.  உடலின் வேறு வேறு பகுதிகளை ஒவ்வொருவரும் அளவாகக் காண்பித்தது ரசிகர்களுக்கு விருந்தாக
அமைந்தது.

வந்த ஒவ்வொருவரிடமும், ’இந்த முறை உங்கள் படம் தேர்ந்தெடுக்கப்படுமா?  உங்களுக்கு அவார்ட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறீர்களா?  என்று கேட்பதும், அவர்களுடைய ட்ரேட் மார்க் ஸ்டைல்
பதில்களும் ரசிகர்களுக்குத் தீனி போட்டன.

பார்க்கப் பார்க்கப் போதாமலும், கேட்கக் கேட்கக் கிளர்ச்சியாகவும்
ரசிகர்களுக்கு இந்த ஆரம்பமே திகட்டாத விருந்தாக அமைந்தது.  யாருக்கு எந்த அவார்ட் கிடைக்கப் போகிறதோ என்ற பேரெதிர்பார்ப்பைக் கிளறி விட்டுக் கொண்டிருந்தன இந்தத் தொடக்க நிகழ்ச்சிகள்.

“வெற்றி டிவி ரசிகர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி! குட்மார்னிங் சென்னை!” என்று கறுப்புக்
கோட்டு ஆஸ்க்கர் கரகோஷமிட்டதும் கூட்டமும் அதை உற்சாக வெறியுடன் எதிரொலித்தது.  

ஒவ்வொரு துறைக்கும், நடுவர்களால் பரிந்துரைக்கப்பட்ட
நாமினீக்கள் யார், யார் என்பது திரையில் ஓடியது.  பின்னணியில் ஒரு அசத்தல் ஆங்கில வர்ணனைக்குரல் இதையே அறிவித்தது.  மாறி, மாறி, பழைய, புதிய நட்சத்திரங்கள் மேடைக்கு வந்து, பரிசு பெற்றவர்களின் பெயர்களை சஸ்பென்ஸ் கொடுத்து அறிவித்துச் சென்றார்கள்.

மேடைக்கு வந்து பரிசினை வாங்கிச் செல்லும்போது வெற்றி வாகை சூடியவர்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கெல்லாம்
நன்றி கூறிச் சென்றார்கள்.  சில சமயங்களில், முன்னரே பதிவு செய்யப்பட்ட வெற்றியாளர்களின்
பேட்டியும் காட்டப்பட்டது.  

எவ்வளவோ பேட்டிகள் இப்படி இடம் பெற்றாலும், எல்லாவற்றையும் மிஞ்சியது இளம்புயல் இனியவேந்தனின் பேட்டி தான்.  அப்படிப்பட்டவன் எனக்கு நண்பன் என்று சொல்வதில் எனக்குப் பிடிபடாத
பெருமைதான்.

ஆமாம்.  இரண்டே படங்களில் எகிறு எகிறென்று எகிறி, தமிழ்த் திரையின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக உருவாகிவிட்ட அதே இனியவேந்தன்தான்.  வெற்றி டிவியில் ஆங்க்கராக வந்து பலரின் இதயத்தைத் தன் புன்சிரிப்பாலும், சாமர்த்தியமான பேச்சாலும், இயல்பான டைமிங் காமெடியினாலும்
கொள்ளை கொண்ட இனிய வேந்தன், தனக்குக் கிடைத்த பட வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு, கிடுகிடுவென்று புகழேணியில் ஏறி
உச்சத்தில் உட்கார்ந்து விட்டான்.  

பட்டி தொட்டியெல்லாம் இனியவேந்தன் ஹீரோவாக
நடித்து வெற்றி பெற்ற பாடல்கள்தான் முழங்கிக் கொண்டிருந்தன. ”தலப்பாக் கட்டு பிரியாணி! தரயா எனக்கு உன்ன நீ!”  என்ற குத்துப் பாட்டும், ”டாப்பு டாப்பு டக்கரு! நீ சூப்பரான ஃபிகரு! என்ற கேலிப் பாட்டும் ரசிகர்களின்
ரிங்டோனாக அலறியது.  தொலைக்காட்சிப் பெட்டியில் எந்தச்
சேனலைத் திருப்பினாலும், இனியவேந்தனும் அந்த பத்தாவது படிக்கும் மலையாள
நடிகையும் மலைமேடுகளிலும் ஆற்றங்கரைகளிலும் ஆடிக் கொண்டிருந்தார்கள்.

இவ்வளவு புகழ் துரத்தித் துரத்தி வந்தாலும்
இனியவேந்தன் பந்தா சிறிதுமின்றி, அதே பக்கத்து வீட்டுப் பையனைப்போல் பேசிக்
கொண்டும் பழகிக் கொண்டும் பவனி வந்தது, அவனது புகழை இன்னும் இன்னும் என்று பலமடங்கு
பெருக்கிப் பரப்பி விட்டது.

அந்த இனியவேந்தன் ஒரு லட்சத்துக்கும் மேல் ஓட்டுகள் பெற்று, நடுவர்களின் ஏகோபித்த பேராதரவையும் பெற்று, ’பெஸ்ட் ஆக்டர்’ விருதைப் பெற்றதில் ஆச்சரியம் ஏது?

ஆனாலும், அவனுடைய வீட்டிலேயே, முன்னரே பதிவு செய்திருந்த அந்த பேட்டி அவனுடைய ரசிகர்கள் அனைவரையும் உலுக்கி விட்டது.

“நான் விழுப்புரம்
பக்கம் இருக்கிற வளவனூர் கிராமத்தைச் சேர்ந்தவன்.  எங்கப்பா ஏழை விவசாயி.  எங்க அக்கா, அண்ணன், தங்கை, நான் – நாலு பேரு பசங்க.  ஒரு வேளை சாப்பாட்டுக்கே நாதியில்லாம கஷ்டப்பட்டோம்.

ஸ்கூல் ஃபீஸ் கூட கட்டமுடியாம டென்த்துல நின்னுட்டேன்…  எப்பிடியாவது பொழைக்கணும், தலை நிமிர்ந்து நிக்கணும்… குடும்பத்தைக் காப்பாத்தணும்னு
வேலை தேடி இந்த சென்னைக்கு வந்தேன்…

மொதல்ல ஒரு ஹீரோயின் வீட்டு வாசல்ல, கூர்க்காவா இருந்தேன்.  அப்புறம் டீ வாங்கிக் குடுக்கறது, போஸ்டர் ஒட்டறதுன்னு பல எடுபிடி
வேலைன்னு செஞ்சேன்…!

ஷூட்டிங்குக்கு வர்ரவங்க மிச்சம் வெச்சுட்டுப்
போன பிரியாணிக்காக நான் ஏங்கின காலம்கூட இருந்தது.  இதே சென்னைல  மவுண்ட் ரோடுல ராத்திரி சாப்பிடாம கூட படுத்து
இருந்திருக்கேன்!”

கல்லையும் கரைய வைத்திருக்கும் இனியவேந்தனின்
வேதனை நிறைந்த கடந்தகால வாழ்க்கை.
அவன் கண்களில் நீர் வழிந்து ஓடிய போது பார்வையாளர்களும் அழுதார்கள்.  இனியவேந்தன் பட்ட கஷ்டங்கள் அவர்கள் இதயங்களில்
முள்ளாகத் தைத்தது.

அடுத்த நாள் காலையில் நான் ’கிட்டா பாஸ்’ என்ற புதிய படத்தின் முதல்நாள்
ஷூட்டிங்கில் சாலிக்கிராமத்தில் ஒரு ஸ்பாட்டில் இருந்த இனியவேந்தனை சந்தித்து வாழ்த்துக்கள்
சொன்னேன்.  என்னுடைய நெடுநாளைய பள்ளி நண்பனாயிற்றே
அவன்!

’’ஏண்டா, இப்பிடி என்னென்னமோ கஷ்டமெல்லாம்
பட்டேன்னு புளுகின அந்த வெற்றி அவார்ட்ஸ் ரெக்கார்டிங்கில? நீ ஓரளவு வசதியான வீட்டுப் புள்ளதானடா?’’ என்றதற்கு, “டே! அதெல்லாம் ஒரு சென்ட்டிமெண்ட்
மச்சி! இப்பிடியெல்லாம் டூப் விட்டு பில்ட் அப் பண்ணாத்தான்
நம்ப மேல மக்களுக்கு கூட கொஞ்சம் பாசம் வரும்!  இதெல்லாம் ஹீரோ சீக்ரெட் மச்சி – ஒனக்கெங்க புரியப்போவுது?”, என்றானே பார்க்கலாம்.

நடிகன்டா!

பக்கம் ……………………………..13 

இந்தியா – அமெரிக்கா

image

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் உள்ள வேறுபாடுகளைப் பற்றி கொஞ்சம் யோசித்தோம். அதன் விளைவு :

இந்தியா  பழைய உலகத்தைச் சேர்ந்தது. அமெரிக்கா புது உலகம். 

இந்தியாவில் சாலையில் வண்டிகள் எல்லாம் இடது  சாரி.  அங்கோ வலது சாரி. அதனால் இந்தியாவில் வண்டி ஓட்டுனர்கள் எல்லாம் வலதுபுறம் இருப்பார்கள். அமெரிக்காவில் இடது புறம். 

 இந்தியாவில் எலெக்ட்ரிக் சுவிட்செல்லாம்  மேலிருந்து கீழாகத் தான்  ‘ஆன்’’ செய்யப்படுகின்றன. அமெரிக்காவில் கீழேயிருந்து மேலே!

நம்ம ஊரில 240 வோல்ட்.பாத்தாலே ஷாக் அடிக்கும். அங்கே 110 வோல்ட் தான். 

இந்தியாவில் மெட்ரிக் சிஸ்டம் வந்து கிட்டத்தட்ட அரை   நூற்றாண்டு ஆயிற்று. அமெரிக்காவில் இன்னும் எடை பவுண்டில், பெட்ரோல் காலனில் , தூரம் மைலில், உயரம் அடியில்.  

இந்தியா குட்டி நாடு ஆகையால் ஒரே நேரம் தான் கொஹிமா விலிருந்து கட்ச் வரை. அமெரிக்கா அகலத்தில் பெரிசு. அதனால் மூணு நேரம் இருக்கும். 

இந்தியாவில் குளிர் வெயில் காலத்துக்கேற்ப நேரத்தை மாற்றுவதில்லை. அமெரிக்காவில் பகல் நேரம் மிச்சம் பிடித்தல் என்று சொல்லி  வெயில் காலத்தில் வாட்சை ஒரு மணி நேரம் .முன்னாடியும் , குளிர்காலத்தில் ஒரு மணி நேரம் பின்னேயும்  தள்ளி வைப்பார்கள்.

நம்ம ஊரில் எத்தனையோ கட்சிகள். அவர்கள் ஊரில் ரெண்டே ரெண்டு கட்சி. இங்கே பிரதம மந்திரி மற்ற மந்திரிகள் எல்லாம் உண்டு.  அங்கே ஒரே ஒரு பிரசிடெண்ட் தான். 

இந்தியாவில் காதல் கல்யாணம் கம்மி. அங்கே பெற்றோர் தங்கள் பிள்ளைங்களுக்குக் கல்யாணத்துக்குப் பார்க்கிற வழக்கமே கிடையாது. 

நாம ஹோட்டலில் சாப்பிட்டுட்டு பில் கேப்போம். அவங்க செக் கேப்பாங்க. 

நம்ம காபியில நிறைய பால் கொஞ்சம் டிகாஷன். அவங்க ஊரில நிறைய டிகாஷன் – பால் கொஞ்சம்- இல்லைன்னா இல்லை. 

இங்கே மெடிக்கல் இன்சூரன்ஸ் ஆயிரத்தில ஒருத்தர் கிட்டே இருக்கும் . அங்கே அது இல்லாதவங்களே கிடையாது. 

இங்கே ஆதார் நம்பர் கட்டாயம் இல்லை. அங்கே எல்லாருக்கும் சோசியல் செக்யூரிட்டி நம்பர் உண்டு. 

நம்ம ஊரில பெரும்பாலும் பஸ் ரயிலில் போவோம். அங்கே கார்.. கார் தான். 

நம்ம ஊரில தண்ணி அடிச்சா தப்பு. அங்கே குடும்பத்தோட தண்ணி அடிப்பாங்க. தப்பே இல்லை. குடிச்சுட்டு வண்டி ஓட்டினா ரெண்டு இடத்திலும் போலீஸ் தான். 

போலீஸ் மாமூல் நம்ம ஊரில மாமூல். அங்கே அது சுத்தமா கிடையாது. 

இங்கே வீடுகள் எல்லாம் செங்கல் சிமெண்ட் தான். அங்கே எல்லாம் மர  வீடு தான்.

இங்கே வீடுகளில் தரை சிமெண்ட் அல்லது டைல்ஸ். அங்கே மரம் -அதுக்கு மேலே கார்பெட். 

இந்தியாவில் தேசிய மொழி மொத்தம் பதினாலு. அமெரிக்காவில் தேசிய  மொழி ஒன்றே ஒன்று – இங்கிலீஷ். 

இங்கே மொழிவாரி ராஜ்யங்கள் உண்டு. அங்கே கோலம் போடறமாதிரி நேர்கோடு போட்டு 50 ராஜ்யங்களா பிரிச்சிருக்காங்க!

இங்கே பெட்ரோல்,அதையே அங்கே கேஸ். ஆனால் நம்ம ஊர் கேஸை (சமையல்) அவங்களும் கேஸ் என்று தான் சொல்வாங்க. 

 நம்ம ஊரில மிலிட்டரி ஹோட்டலுக்குத் தான் மதிப்பு. மிலிட்டரி ஆட்கள் பென்ஷன் வாங்கக் கூட அலையணும். அங்கே மிலிட்டரி ஆட்களை ஏர்போர்ட் மற்ற பொது இடத்தில் பார்த்தால் கை தட்டி வரவேற்று மரியாதை செய்வார்கள். 

நம்ம ஊரில கு.கழுவ தண்ணி . அங்கே பேப்பர்தான். 

கை துடைக்க கர்சீஃப் நம்ம ஊரில . அங்கே டிஷ்யு .

நாம கிரிக்கெட் பைத்தியம். அவங்க பேஸ்பால்.

நாம நிறைய தண்ணி குடிப்போம். அவங்க பீர் கோக் தான். 

இங்கே ரோட்டில கிஸ் அடிச்சா பட்டையைக் கிளப்பிடுவாங்க. அங்கே அது மரியாதை. 

நம்ம ஊரில டைவர்ஸ் கம்மி. அங்கே அது அதிகம். 

கல்யாணத்துக்கு முன் உறவு இங்கே தப்பு. அங்கே அது சகஜம். 

நம்ம கால்பந்து விளையாட்டை அவங்க சாக்கர் என்று சொல்வாங்க. அவங்க அமெரிக்கன் கால் பந்து ஆட்டம் வித்தியாசமா இருக்கும் .

சாப்பாடு நாம் எப்பவும் கை தான். அவங்க ஸ்பூன் தான். 

இங்கே பெரும்பாலும் மனித உழைப்பையே நம்பித் தான் இருக்கிறது. அவர்கள் மெஷின், சிஸ்டம் எல்லாவற்றிற்கும்.

பக்கத்து வீடு தான் நம்ம குப்பைத் தொட்டி. அவங்க குப்பையைக் குப்பைத் தொட்டியில் தான் போடுவார்கள். 

மனித உரிமை என்றால் என்ன என்று கேட்போம் நாம். அவர்கள் அதுக்குத் தரும் மரியாதையே தனி. 

கோர்ட் கேஸ் எல்லாம் நமக்கு ரொம்ப கஷ்டமான வேலை. அவங்க தும்மினாக் கூட கேஸ் போடுவாங்க. 

இன்னும் நம்ம ஊரில குடும்பத்தில் சேர்ந்து வாழ்கிறோம். அங்கே பிரிந்து வாழ்வது தான் வாழ்க்கை என்று வாழ்பவர்கள். 

மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படுவது நமக்குப் பிடித்த வேலை. அது அவர்களுக்குப் பிடிக்காத வேலை. 

நாம தான் இன்னும் எவர்சில்வர், பித்தளை பாத்திரங்கள் . அவர்கள் பீங்கான், கண்ணாடி தான். 

சொல்லாம கொள்ளாம யார் வீட்டுக் கதவை வேணுமுன்னாலும் நாம தட்டுவோம். அவங்க சொந்தப் பிள்ளையாக இருந்தாலும் சொல்லிக்காம வந்தா கதவைத் திறக்க மாட்டாங்க. 

 இவ்வளவு வேறுபாடு இருந்தாலும் நமக்கு அமெரிக்கா ரொம்பப் பிடிச்சிருக்கு. அவங்களுக்கு இந்தியாவில் முதலீடு செய்து வியாபாரம் செய்ய ரொம்பப் பிடிச்சிருக்கு. 

இது தான் ஜெய்-ஜெய் (win -win ) தத்துவம்.

பக்கம் ………………………………14