( 5-9-2015 – ஆசிரியர் தினம் )


கற்றவர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு
பொற்பையும் வீழ்த்திடும் வலியதாம் நட்பு
சிறப்புடன் வாழவே உலகியலும் வேண்டும்
முற்றுமிசை யோங்கிடவே நுண்ணறிவு வேண்டும் !
மேன்மக்கள் நீர்தந்த அமுதினையே யுண்டு
நன்றியெனும் வார்த்தைதனை சொல்லிடவே நின்று
பொங்கிவரும் நன்றிகாட்ட போதாதது கண்டு
தேன்தமிழில் சொல்தேடி விழிக்கின்றோம் நொந்து !
கடல்கொள்ளா கல்வியும் மாசில்லா வுலகியலும்
நட்புக்கு உறைவிடமா மொழுக்கமும் மனப்பாங்கும்
மட்டற்ற மகிழ்வோடு அளித்தவர் நீவீர் !
எட்டாத மதிப்புடைய தாய்தந்தை ஆவீர் !
புரியாத வுளத்திற்குப் புரியும்படி சொல்லி
பேரறிவை யெங்கட்கு அளித்தநல் பெருந்தகையீர்
நீர்செய்த உதவிக்கு அச்சொல்லும் போதுமோ
விரிந்தவெம் நன்றிதனை எங்ஙனமே சொல்வோம் !
எங்களொடு வாழ்ந்து எங்கள்மன முணர்ந்த
உங்கட்கெம் நன்றிதன் னாழமும் புரியும்
தீந்தமிழில் வேறுசொல் கிடையாது கூறுகிறோம்
எங்களுடை நன்றிநன்றி நன்றிநன்றி நன்றிநன்றி !
பக்கம் ………………………………10
