
நான்
கோயம்பேடு மெட்ரோ ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் நுழையும் போது ரயிலும் வந்து கொண்டிருந்தது. அப்போது நேரம் காலை எட்டு மணி. சமீபத்தில்தான்
மெட்ரோ சேவை கோயம்பேடிலிருந்து ஆலந்தூர் வரை ஆரம்பிக்கப் பட்டிருக்கிறது . ரயில்
நின்றதும் கதவு திறந்தது. பிளாட்பாரத்தில் ஒரு இளைஞன் என் பக்கத்தில் நின்றிருந்தான்.
அவன் கையில் ஒரு ரோசா பூவை வைத்திருந்தான்.
சில வினாடிகள் தான் ரயில் நிற்கும் என்பதால்
நான் ரயிலில் உடனே ஏறி விட்டேன். அவன் யாருக்காகவோ காத்திருந்தான். அப்போது ஒரு இளமங்கை ஒடி வந்தாள். அவள் ஒல்லியான உடற்கட்டுடன் அதீத அழகுடன் இருந்தாள். அடர்த்தியான கூந்தல் இடுப்புக்குக்
கீழே தொங்கிக் கொண்டிருந்தது. அவனும்
சிரித்த முகத்துடன் தன்னிடமிருந்த ரோசா
பூவை அவளிடம் கொடுத்தான். அவள் ரோசாவை தலையில் சூடிக் கொண்டாள். இருவரும் அவசரமாக
ரயிலுக்குள் ஏறினார்கள். உடனே கதவு
மூடியது. கதவிலே பாதி கண்ணாடி . பிளாட்பாரத்தில் நிற்பவர்களை எல்லாம் உள்ளேயிருந்து தெளிவாகப்
பார்க்க முடியும். சாதாரண மின்சார
வண்டி போல் கூட்டமாக இல்லை. தாரளமாக
உட்கார்ந்து போக இடம் இருந்தது.
ஏசி
கம்பார்ட்மெண்ட் என்பதால் வண்டி முழுவதும் சில்லென்று குளிர்ச்சியாக இருந்தது. ரயில் ஓட ஆரம்பித்தது.
என்னுடன் ரயிலில் பயணம் செய்யும்
நண்பர் ராகவன் எனக்கு வணக்கம் கூறி
வரவேற்றார்.
”செல்லம் காசு கொடு, ராஜா காசு கொடு”என்று கேட்கும் திருநங்கைகளின் அன்பு தொல்லை இங்கே இல்லை கவனிச்சிங்களா?” என்றார் சக பயணி சர்மா. எல்லோரும்
சிரித்தார்கள். நாங்கள் நான்கைந்து நண்பர்கள் தினந்தோறும் அலுவலகத்திற்கு ரயிலில் பயணம் செய்யும் போது ஜாலியாக பேசிக்கொண்டு போவோம்.
அந்த இளைஞனும்
பெண்ணும் என் பக்கத்தில் அமர்ந்தார்கள். ” டெல்லி மெட்ரோ ரயிலில்
போவது போல் இருக்கிறது” என்றான்
அந்த இளைஞன். அவன் பெயர் பிரசாத். அவன் அவளை ”ரம்யா “ என்று அழைத்தான் .
அவர்களைப் பார்த்தாலே காதலர்கள் என்று புரிந்தது. நான் ரம்யாவைப் பார்த்து ” பிரசாத், ரோசா பூவால் தன்
அன்பைக் காண்பிக்கிறார் போல இருக்கு” என்றேன். நாணத்தால் அவள்
முகம் சிவந்தது. வெட்கத்தால் தலை கவிழ்ந்தாள்.
இரவு
என் மனைவியிடம் அந்தக் காதலர்களைப் பற்றிச் சொன்னபோது அவள் மிகவும் குதூகலம்
அடைந்தாள். காதல் சீக்கிரம் கல்யாணத்தில் மலரட்டும் என்று வாழ்த்தினாள்.

பிரசாத்
ரம்யா காதல் நாளொரு ரோசா பூவுடனும் பொழுதொரு
எஸ்.எம்.எஸ்வுடனும் வேகமாய் வளர்ந்தது . ஒரு
நாள் காலை பிரசாத் கம்பார்ட்மெண்டில் உள்ள
அனைவருக்கும் கல்யாணப் பத்திரிக்கையைக் கொடுத்து
”அடுத்த வாரம் திருநீர்மலையில் எங்களுக்குக் கல்யாணம், அவசியம் வாருங்கள் “ என்று அழைத்தான்.
அன்று
இரவு என் மனைவியிடம் கல்யாணப் பத்திரிகையைக் காண்பித்ததும் அவள் மகிழ்ச்சியில்
துள்ளிக் குதித்தாள். கல்யாணம் ஆகி சீக்கிரம் குழந்தை பிறக்க வேண்டும் என்று
ஆசிர்வதித்தாள். ”
அவர்களுக்குக்
குழந்தை பிறந்தால் என்ன பெயர் வைப்பது
என்பது பற்றி எங்களுக்குள் கடுமையான வாக்குவாதம் நடந்தது. நான் சொன்ன பெயர் அவள்
ஒப்புக்கலை . அவள் சொன்ன பெயர் எனக்குப்
பிடிக்கல.
கோபமடைந்த
என் மனைவி மேசை மேலிருந்த ஒரு ஆப்பிளை எடுத்து என் மேல் வீசுவதற்காக கையை ஓங்கினாள்.
என் மண்டையில் சுரீர் என்று உறைத்தது. நிறுத்து !
என்று கத்தினேன்.”இனிமேல்தான்
இரண்டு பேருக்கும் கல்யாணம் ஆக வேண்டும். அவர்கள் பெற்றெடுக்காத குழந்தைக்குப் பெயர்
வைக்க நாம் அடிதடியில் இறங்குவது நன்றாகவா
இருக்கிறது? “என்றேன்.
”அதானே”
என்றாள் என் மனைவி சிரித்துக்கொண்டே. எங்கள் முட்டாள் தனத்தை நினைத்து ரொம்ப நேரம்
விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தோம். எந்த ஒன்றும் மனிதன் போடுகிற
கணக்குப்படி நடப்பதில்லை எனபதை அப்போது நாங்கள் உணரவில்லை.
அன்று
பிரசாத், ரம்யா இரண்டு பேரும் பயணம் செய்ய வரவில்லை. எங்கேயாவது
தென்படுகிறார்களா? என்று பார்த்தேன் . ”காதல் ஜோடியைக் காணோமே என்று
பார்க்கிறீங்களா? கல்யாண வேலை ஏதாவது
இருக்கும். அதனால் அவர்கள் இன்று வரவில்லை.
நாமெல்லாம் ஆளுக்குக் கொஞ்சம் பணம் போட்டுப் பரிசுப் பொருள் ஏதாவது வாங்கிக் கல்யாணத் தினத்தன்று கொடுக்கலாம்”என்றார் ராகவன் . நானும் மற்ற
நண்பர்களும் அதற்கு ஒப்புக் கொண்டோம். ரயிலில்
தினந்தோறும் அலுவலகத்திற்குப் பயணம் செய்பவர்களிடம் நட்பும் பாசமும ஏற்பட்டு விடுகிறது .
அடுத்த
நாள் ரயிலுக்குள் ஏறியதும் “விசயம் தெரியுமா? என்று பதட்டத்துடன் கேட்டார் ராகவன் . ”என்ன விசயம்?”
என்றேன்.
”நேற்று ஒரு துர்ச்சம்பவம் நடந்து விட்டது” என்று சொல்லி விட்டு அழ
ஆரம்பித்தார்.
”உங்கள் வீட்டில் ஏதாவது
பிரச்சனையா? என்னிடம் சொல்லுங்கள்” என்றேன்.
”எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. நம்
கம்பார்மெண்டில் பயணம் செய்யும் கல்யாணப்
பெண் ரம்யா நேற்று நடந்த பேருந்து விபத்தில் பலியானார். புகைப்படத்துடன் தினமலரில் போட்டிருக்கிறதே
நீங்கள் படிக்கவில்லையா? ”
என்று தினமலர் நாளிதழை என்னிடம் கொடுத்தார். என்க்கு துக்கம் நெஞ்சை அடைத்தது.
அவள் போய் விட்டாளா? ………. அதற்கு மேல் என்னால் பேச இயலவில்லை. தினமலரைப்
படித்தேன். என் கண்ணிலிருந்து குபு குபுவென்று கண்ணீர் வழிந்தது ”.
என் பக்கத்தில் அமர்ந்திருந்த சர்மா ”. வருத்தப்படாதீங்க சார். ரயில்
பயணத்துக்கும் வாழ்க்கைப் பயணத்துக்கும் வித்தியாசம் இருக்கிறது. ரயில் பயணத்திலே
நாம் எந்த ஸ்டேஷனில் வேண்டுமானுலும் ஏறலாம். எந்த ஸ்டேஷனிலும் இறங்கலாம். ஆனால் வாழ்க்கைப்
பயணத்தில் இறப்பு நம் கையில் இல்லை. கடவுளின் விருப்பப்படி நாம் திடீரென்று ஒரு நாள் வானுலகத்துக்கு
அனுப்பப் படுகிறோம். “ என்றார். ”நாம் இறங்க வேண்டிய கடைசி ஸ்டேஷன் ஆலந்தூர்
வந்தாச்சு. எல்லாரும் இறங்குங்க ”என்று கத்தினார் ராகவன். நாங்கள் ரயிலிலிருந்து இறங்கினோம்.
இரவு இந்த விசயத்தைக் கேட்டதும் என் மனைவி ”அடக் கடவுளே”
என்று அலறினாள். அவளுக்கு அச்சமயத்தில் கடவுளின் பேரில் ஏற்பட்ட கோபம் அவ்வளவு
இவ்வளவு என்று சொல்ல முடியாது. நான் அவளைச்
சமாதானப் படுத்த வேண்டியதாயிற்று.
மறுநாள்
நான் பிளாட்பாரத்தில் நுழையும் போது பிரசாத் கையில் ரோசாவுடன் நின்றிருந்தான்.
அடடா! யாருக்காக அவன் ரோசாவுடன் நிற்கிறான் ? எனக்குப் புரியாத புதிராக
இருந்தது. . பிரசாத்திடம் ”ரம்யா பற்றிக் கேள்விப்பட்டேன் ரொம்ப
வருத்தமாயிருக்கிறது”
என்றேன். அதற்கு அவன் ”அவள் வருவாள்” என்று அழுத்திச் சொன்னான். நான்
அதிர்ச்சி அடைந்தேன். அப்போது ரயில் பிளாட்பாரத்தில்
நுழைந்தது. “வா உள்ளே போகலாம்” என்று அவன் கையைப் பிடித்து இழுத்தேன். என் கையிலிருந்து திமிறிக்
கொண்டு விடுபட்ட அவன் ”அவள் வருவாள்” ”அவள் வருவாள்”
என்று சொன்னதையே சொல்லிக்கொண்டிருந்தான் ;
வண்டியில் ஏறாமல் பிளாட்பாரத்திலேயே தங்கி
விட்டான். கண்ணாடிக் கதவுக்கு
அப்பால் அவனைப் பார்த்தேன்.
இறந்த காதலி வருவாள் என்ற நம்பிக்கையோடு ரோசாப்பூவுடன் காத்திருந்தான். அவனை ஒரு போலீஸ்காரன் தடியால்
அடித்து விரட்டிக் கொண்டிருந்தான் . எனக்குக்
கண் கலங்கிப் போச்சு.
எதையும்
சட்டை செய்யாமல் மெட்ரோ ரயில் தண்டவாளத்தில் ஓடிக்கொண்டிருந்தது.
பக்கம் ……………………………..17
