
தடையின்றி ஆடிடுவோம் சுதந்திர நாட்டினிலே
படிப்படியாய் கனவுகள் பாரதிக்கன்று – இன்றோ
ஆடுகிறார் குடித்துவிட்டு சித்தம் தள்ளாட
பாடுகிறார் நஞ்சதுவும் நெஞ்சினிலே புரையோட
சிந்துநதிக் கரையினிலே கேரள மங்கையுடன்
சுந்தரத் தெலுங்கினிலே பாட்டிசைக்க – மக்களுடை
சிந்தையினில் செய்கைதனில் ஒருமைப்பா டதுகாண
பந்துக்களா யுறைகின்றார் பாரதியின் நாட்டினிலே !
இனவாரி மொழிவாரி மாகாணம் என்கின்றார்
நான்பெரிது நீபெரிதென மல்லுக்கே நிற்கின்றார்
எல்லையிலா பூசல்கள் பிரிவினையின் வாசல்கள்
பலப்பல தொல்லைகள் சுதந்திரப் பாரதத்தில் !
விண்முட்ட உயர்ந்திடுவோம் விஞ்ஞான உதவியினால்
மண்ணெல்லாம் பொன்னாகும் பயிர்களின் செழிப்பதனால்
எண்ணிய பொருள்களெலாம் கிடைத்திடும் மலிவாக
மண்ணுலகின் விண்ணுலகு பாரதியின் நாடாகும் !
விண்முட்ட ஏறுவதோ பொருள்களின் விலையிங்கே
எண்ணிய பொருள்வாங்க மிகநீண்ட கியூஇங்கே
மண்ணெல்லாம் பொன்னாகும் இனிதான நாளெங்கே
பணமொன்றே மலிவாக இருக்கிறது இங்கே !
இல்லாத ஏழையினை செல்வனாய் உயர்த்திவிடும்
நல்வாழ்வு கொண்டதுநம் கவிஞனின் சோஷலிசம்
இல்லாதார் பெருகிவர பெருஞ்செல்வர் கையோங்கும்
நல்வாழ்வே காணாத நம்நாட்டு சோஷலிசம் !
சாதிகள் வேற்றுமை இல்லாத நாடங்கே
சாதிபல இலையென்றால் அரசியலே இலையிங்கே
மதங்கள்பல இருந்தாலும் வேற்றுமை யிலையங்கே
மதப்பூசல் இல்லாத நாளில்லை இங்கே !
தித்திக்கும் கனவோடு தியாகங்கள் பலசெய்து
வித்திட்டார் சுதந்திர நாட்டிற்கு – நாமோ
தித்திக்கும் கனவுகள் கனவுகளா யிருந்திடவே
எத்துணை வழியுண்டோ அத்தனையும் செய்கின்றோம்!
பக்கம் ………………………………16
