
‘ஹய்யா! இன்னிக்கி அம்மா வரப் போறாளே! இன்னிக்கி அம்மா வரப் போறாளே ’ காலையில் ஷிவானி அரைத் தூக்கத்தில் – தூங்கி முழிச்சதும் சொன்ன முதல் வார்த்தை இது தான்.
நான் பத்து நாள் செய்ததற்குக் கிடைத்த பரிசு!
ஷிவானி சும்மா சொல்லவில்லை பக்கத்தில் படுத்திருந்த ஷியாமைக் காலால் உதைத்துவிட்டுச் சொன்னாள். ஷ்யாம் ஒரு தூங்கும் புலி. நல்ல வேளை அவன் அதை சீரியஸாக எடுத்துக்கலை . ‘ஆமாண்டி மம்மி ரிடர்ன்ஸ். ஏன் தூங்க விடாம கத்தறேன்னு’ கத்திவிட்டு பூனைக்குட்டி மாதிரி சுருண்டு படுத்துக் கொண்டான் . அவனுக்கு கிரிக்கெட் எக்ஸ்பாக்ஸ் அம்மா அப்பா எல்லாம் தூக்கத்துக்கு அப்பறம் தான்.

ஒருதடவை வெள்ளிக்கிழமை ராத்திரி கமலோட ‘தூங்காதே தம்பி தூங்காதே’ படத்தை கே டிவியிலோ வேற எந்த சானலிலோ பார்த்துட்டு ’ சே ! சனியன்! என்ன படம், என்ன பேரு’ என்று கத்திவிட்டு ஷாலு பண்ணின ரவா உப்புமாவை சாப்பிட்டுவிட்டுத் தூங்கினான்.
சனிக்கிழமை காலையில ஷாலுவும் ஷிவானியும் அவளோட குருஜினி வீட்டில நடக்கிற பூஜைக்குப் போகக் கிளம்பினார்கள்.
“சாயங்காலம் தான் வருவோம். எல்லாம் சமைச்சு வைச்சிருக்கேன் வேளா வேளைக்குச் சாப்பிடுங்கோ. (எனக்கு என்னவோ கொட்டிக்குங்கோ என்று காதில் விழுந்தது. சே! சே! ஷாலு அப்படியெல்லாம் சொல்லமாட்டாள். )
அந்தக் குட்டிக் கும்பகர்ணனை எழுப்பி சாப்பிடவைச்சு ஹோம் வொர்க் எல்லாம் முடிக்கச் சொல்லுங்கோ.
இந்தப் பேப்பர்காரன் வந்தான்னா போனமாசம் சினேகிதியோட இலவச இணைப்பு வரலைன்னு சொல்லிக் கொண்டுவரச் சொல்லுங்கோ.
பால்காரப் பையன் கிட்டே நேத்திக்குப் பால் கெட்டுப்போச்சுன்னு சொல்லி வேற பாக்கெட் வாங்குங்கோ.
மேல்வீட்டுக்குப் புதிசா வந்த பாட்டி வெளக்கமாறு ஒசி வாங்கிட்டுப் போயிருக்கா .திருப்பிக் கொடுத்தா பத்திரமா வாங்கி வையுங்கோ!
இந்தக் கேபிள்காரத் தடியன் வந்தான்னா ‘நீயா நானா’ பாக்கறச்சே மட்டும் பிக்சர் எகிறி எகிறிக் குதிக்குது ஏன்னு கேட்டுட்டு இந்த மாசக் காசைக் கொடுங்கோ!
உங்க சித்தி பொண்ணு இன்னிக்கு சாயங்காலம் வர்ரேன்னு சொல்லியிருக்கா! மறக்காம போன் பண்ணி இன்னிக்கு நான் பூஜைக்குப் போயிருக்கிறேன். அடுத்த வாரம் வான்னு சொல்லுங்கோ!
இப்படி எத்தனையோ ‘கோ’ .
அப்பறம் பழைய பேப்பர்காரன் , கத்திக்குச் சாணை பிடிக்கிறது, வேலைக்காரிக்குப் பாத்திரம் ஒழிச்சுப் போடறது, வாஷிங் மெஷின்ல துணியைப் போடறது, அயர்ன்கரன் கிட்டே நேத்திக்கு போட்டத் துணியை வாங்கி போனவாரம் அவன் தரவேண்டிய மூணு ரூபாயைப் பிடிச்சுட்டு பைசா கொடுக்கிறது எக்ஸெட்ரா ….
"பாக்கி ஏதாவது விட்டுப் போச்சுன்னா .குருஜினி வீட்டிலேர்ந்து ‘வாட்ஸப்’ அனுப்பறேன்.”
செய்யவேண்டிய வேலைகளை எல்லாம் சொல்லிமுடிக்கவே அரை நாள் ஆயிருக்குன்னா அதையெல்லாம் செய்ய எத்தனை நாளாகும் ? போகிறபோக்கில் ’ மறக்காம ஷேவ் பண்ணித் தொலைங்கோ! டைபாய்டில விழுந்தவன் மாதிரி இருக்கு! ( போன வாரம் ராப்பிச்சைக்காரன்). இத்தனை வேலைகளைக் கொடுத்துவிட்டுக் காலை ஏழு மணிக்கே பறக்கப் பறக்கப் போய் விட்டாள். இதில ஏதாவது நாலைஞ்சு செஞ்சாக் கூடப் போறும். ஷாலு கிட்டே நல்ல பேர் வாங்கிடலாம்.
ஆனா ஷாலுவை நினைச்சா எனக்குப் பெருமையா இருக்கு. இவ்வளவு வேலையையும் அவள் எப்போதும் ஒண்டியா செய்வாள். நாங்க மூணு பெரும் அவளுக்குக் ஹெல்ப் பண்ணறோம்னு போனா தெனாலி படத்தில சொல்ற மாதிரி அது கிறுக்குத்தனமாத் தான் முடியும்.
அரைச்ச மாவை எடுத்து வைக்கிறேன்னு ஷ்யாம் வருவான். மாவுல அவனோட கிரிக்கெட் பந்து விழுந்து எல்லா மாவும் கோவிந்தா!
அவள் ‘என் கணவன் என் தோழன்’ சீரியல் பாத்துக்கிட்டு இருக்கும் போது ‘பாவம் அவளுக்கு வேர்க்குமே’ன்னு ஏசியை ஆன் பண்ணுவேன். கரெண்ட் டிரிப் ஆகி அவளை சீரியல் பாக்க விடாம செஞ்சுடும்.
’ ஷிவானி இந்த கிளாசை கிச்ச’னில் வையேன்’ என்று நான் சொல்லி முடிக்கறதுக்குள்ளே அந்த கிளாஸ் தரையில் விழுந்து சுக்கு ஐநூறா உடையும்.
‘நீங்களும் உங்க ஹெல்ப்பும் . உபகாரம் பண்ணாட்டிக் கூடப் பரவாயில்லை உபத்ரவம் செய்யாமல் இருந்தாப் போதும்’. என்று அவள் அத்தைப்பாட்டியோட டயலாக்கை அடிக்கடி எடுத்து விடுவாள். அதையே சாக்கா வைச்சுக்கிட்டு நாங்க மூணு பேரும் சனி ஞாயிறு எல்லாம் சோம்பேறி மூடுக்குப் போயிடுவோம்.
இதிலே என்ன வேடிக்கைன்னா, சில சமயம் ஷாலுவோட அரட்டை பிரண்டஸ் எல்லாம் வரும்போது ஒட்டடைக் குச்சியோட முகமூடிக் கொள்ளைக்காரன் மாதிரி வருவேன். ‘பாரு! ஷாலுவோட ஹஸ்பெண்ட்! வீட்டு வேலையெல்லாம் எவ்வளவு இண்டிரஸ்டோட செய்யறாருன்னு’ பேரு கிடைக்கும். ஷாலுவால ஒத்துக்கவும் முடியாது, மறுக்கவும் முடியாது. அவங்களெல்லாம் போனபிறகு ஷியாமுக்கு செம டோஸ் கிடைக்கும். அது எனக்கான டோஸ் என்று தெரிந்து கொண்டு மனதுக்குள் சிரித்துக் கொள்வேன்.
ஆனா ஷாலு காலையிலே காப்பி பில்டரை வேகமா டங் டங் என்று மூணு தடவை தட்டும் போதே எங்களுக்குத் தெரிந்து விடும் . ‘அம்மா ஆங்க்ரி பேர்ட்’ என்று ஷ்யாம் சிக்னல் வேறு கொடுப்பான். நான் ஜாக்கிரதை ஆயிடுவேன். அன்னிக்கு நான் எதுக்கும் வாயைக் கொடுக்க மாட்டேன். ஹிண்டு பேப்பரைக் கூடப் படிக்க மாட்டேன். சட்னியில உப்பு இல்லேன்னாக் கூட சொல்ல மாட்டேன். முடிஞ்சா ஆபீசில பாஸ் வரார்னு சொல்லி லஞ்ச் கூட எடுத்துக்காம சீக்கிரம் ஓடிப் போயிடுவேன். ஏன்னா எதால அவ டிரிகர் ஆவான்னு சொல்லமுடியாது. ஆனா ஒண்ணு. காலையில ஆங்கிரி பேர்ட் மூடில் இருந்தா சாயங்காலம் ஷாலு பயங்கர ஜாலி பேர்ட் ஆயிடுவா. அவ கோபம் ஆத்திரம் எல்லாம் கொஞ்ச நேரம் தான். சாயங்காலம் அவ கோபத்தைப் பத்தி பயங்கரமா கலாய்ப்போம் . அப்போ அவளுக்குக் கொஞ்சம் கூட கோபம் வராது. அவ செம மூடில் இருப்பா!

எதை எதையோ பேசி சொன்ன விஷயத்தை விட்டுட்டேனே! அந்த சனிக்கிழமை ஷாலு ஷிவானியோடஏழு மணிக்குக் கிளம்பிப் போனபிறகு காப்பியைக் குடிச்சுட்டு நானும் ஷ்யாம் கிட்டே படுத்துட்டுத் தூங்கிப்போயிட்டேன். ‘அது என் போர்வைப்பா உன் போர்வையை எடுத்துக்கோ" ஷ்யாம் கத்தக் கத்தத் தூங்கிட்டேன். ஆனா கொஞ்ச நேரத்துக்கெல்லாம் யாரோ கதவைத் தட்டற சத்தம் கேட்டது. மணி பாத்தா ஏழே கால். ஷாலுவும் ஷாலினியும் வாசலில். . ‘என்னாச்சு? பூஜைக்குப் போகலியா? என்று கேட்டுக் கொண்டே கதவைத் திறந்தேன்.
அப்பறம் தான் எனக்கே புரிந்தது. நானும் ஷியாமும் சாயங்காலம் ஏழேகால் வரை தூங்கியிருக்கோம் என்று. ஏதோ ஒரு ராமநாராயண் படத்தில ரோஜா பச்சைக் கலர் காளியா வந்து கையில சூலத்தோட டான்ஸ் ஆடுவாளே அந்த மாதிரி ஷாலு ஆடப் போகிறா என்று நினைக்கும் போது ‘ஹாய் அண்ணா!’ என்று என் சித்தி பொண்ணு அவ பசங்களோட வந்தா! அவளை ஆபத்பாந்தகின்னு சொல்லறதா இல்லை நிலநடுக்கத்தைக் காட்டும் ரிக்டர் ஸ்கேல் என்று சொல்லுவதா என்று தெரியலை.
அன்னிக்கு ஷாலு ஆங்க்ரி பேர்ட் இல்லை. ஆங்க்ரி டயனோசார்.
ஆனா ஷாலு ஜாங்கிரி பேர்டா இருந்தபோதே எனக்குத் தெரியும்.
இவ்வளவு நாள் நான் சொல்ற கதையைப் படிச்சுட்டு எனக்கும் ஷாலுக்கும் அம்மா அப்பா பாத்து, ஜோசியம் பார்த்து, பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிட்டு பொண்ணைப் பாத்துட்டு ஊருக்குப் போய் இன்லெண்ட் லெட்டர் போட்ட கேசுன்னு தானே நீங்க நினைச்சிங்க!
நாங்க லவ் பண்ணிக் கல்யாணம் பண்ணிக்கிட்டவங்கன்னு சொன்னா நம்புவீங்களா? ஆனால் அது தான் உண்மை. நான் அவளை முதன் முதலா பாத்தது ……………………………………


பக்கம் ………………………. 3
