
ஆனந்த் நகர் புத்தாண்டு விழாக் கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கவிதை
பூமியில் மழை – இயற்கையின் அளப்பரிய வரம்
இதில் நாம் செய்யும் பிழை –
மரம் வளர்ப்பு மறந்தோம்
மண்பாண்டங்கள் துறந்தோம்
நெகிழிகளோடு * நெருங்கினோம்
இயற்கையை நொறுக்கினோம்
வெல்லமென இனித்த இயற்கை !
வெள்ளமென விரித்தது இறக்கை !
புரட்டிப் போட்டன மழையும் வெள்ளமும் –
அதனால் விரிந்தது மனிதனின் உள்ளமும் !
கைபேசியே கதியெனக் கிடந்த இளைஞர் கரங்கள் –
கலங்கியோரின் கைதூக்கி விட்ட இம்மண்ணின் உரங்கள் !
கணவன் குழந்தை உலகமாய் இருந்த பெண்ணின் யதார்த்தம் –
தன்னையும் மறந்து பொருளிழந்தார்க்கு செய்தனுப்பிய பதார்த்தம் !
பள்ளிக்கூடம் பொம்மைப்படம் என்றிருந்த குழந்தை கூட
தாய் தந்த கைச்செலவு பணம் –
பத்து இருபதென வாரி வழங்கிய குணம் !
மூன்றாம் மனிதன் தவிக்கிறான்
முன்பின் தெரியாதவன் கலங்குகிறான்
முகமறியா குழந்தை துடிக்கிறது
முன்வந்து மறுவாழ்வு அளித்த மகத்துவம் !
மழையில் விரிந்த கொடையாய்
மனிதநேயமே நம் வாழ்க்கைக்கு விடையாய்
கை கோர்ப்போம் !
கை கொடுப்போம் !!
