தமிழனுக்கு மட்டும் ஏன் இந்தத் தலைக் குனிவு ?
பதவியில் இருக்கும் அரசியல்வாதிகளின் காலை வருடும் பூனையாக நாயாக ஏன் அவன் தன்னைத் தானே தாழ்த்திக் கொள்கிறான் ?

தலைவர்களைக் கடவுளாக நினைக்கும் மனப்பாங்கு நம்மிடையே ஊறிப் போய்விட்டதா? உலகில் எந்த நாட்டிலும் இல்லாத ஒரு கலாசாரம் நம் தமிழகத்தில் மட்டும் ஏன் தழைத்து வேரூன்றி நிற்கிறது ?
ஒபாமாவை எந்த அமெரிக்கனாவது ஜீசஸ் என்று சொல்லியிருக்கிறாரா? இல்லை பிரிட்டிஷ் ராணியைப் பார்த்து யாராவது மேரி மாதா என்று சொல்லியிருக்கிறார்களா?
நம்முடைய தலைவர்களின் விளம்பர ஆசை ஆபாசமாக இல்லை ?
பிளாஸ்டிக் மாசில் மிகவும் அசிங்கமான மாசு நமது கட் அவுட்டுக்களும் , பேனர்களும் தான்.
ரஜினிகாந்த்தின் கட் அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்யும் செம்மல்கள் நிறைந்த நாடு இது.
கலைஞர் முதல்வராக இருந்த போது கவிஞர்களும், மற்றவர்களும் அவரை சந்திரன், சூரியன், தானைத் தலைவன், என்று அவர் காது குளிரும் வரை – மக்கள் காது கூசும் அளவிற்குத் துதி பாடிய நாடு இது ! தினம் ஒரு பாராட்டு விழா இல்லையென்றால் அவருக்குத் தூக்கமே வராது போலும்.
இன்று அம்மா நேரம். அவருக்கு வைக்கப் பட்டிருக்கும் ப்ளெக்ஸி பேனர்களை கூரையாக வைத்தால் உதய சூரியனின் ஒளி தமிழகத்தில் படவே படாது.
கட் அவுட்டுகளில் பொறித்துள்ள வாசகங்களை நமது கவிஞர் பாஷையில் சொன்னால் – எழுதிய பேனாக்களுக்கே கூச்சம் வரும்; மேகத்துக்கே கண்ணீர் வரும்; நிலவுக்கே குளிரும்; சூரியனுக்கே வியர்க்கும்; மின்னலுக்கே கண் கூசும்; இடிக்கே நடுக்கம் வரும்.
அரசுத் திட்டங்கள் எல்லாம் இந்திரா திட்டம், கலைஞர் திட்டம் , அம்மா திட்டம் மோடி திட்டம் என்று சொல்ல இவர்களுக்கு உரிமை இருக்கிறதா ?
சமீபத்தில் 68 பேருக்கு ஒரே மேடையில் நடைபெற்றத திருமண விழாவில்
அம்மாவின் புகைப்படம் மணமக்கள் அனைவர் தலையிலும் தலைப் பட்டத்தோடு அமைக்கப்பட்டுள்ளதாம். அம்மா தலை(மை)யில் திருமணம் என்பதைத் தொண்டர்கள் தவறாகப் புரிந்து கொண்டார்களோ?
கலக்கராங்க!!
