
- புது பாஸ்போர்ட் பெற அல்லது பழைய பாஸ்போர்ட்டைப் புதுப்பிக்க முதலில் அரசாங்க பாஸ்போர்ட் இணைய தளத்தில் https://portal2.passportindia.gov.in/AppOnlineProject/welcomeLink ) பதிவு செய்து பயனர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் பெறவேண்டும்.
- பிறகு உங்களைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும், மொபைல் எண் உட்பட அனைத்தையும் இணைய தளத்தில் பதிவேற்ற வேண்டும்.
- பிறகு என்றைய தேதியில் /நேரத்தில் பாஸ்போர்ட் கேந்திராவில் நேரடியாகச் செல்ல அனுமதி இருக்கிறது என்பதையும் இணைய தளத்தில் அறிந்து, அந்தக் குறிப்பிட்ட நேரத்தையும் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
- அதன்பின் பாஸ்போர்ட் பெறுவதற்கான தொகையை கடன் அட்டை அல்லது வங்கி இணையம் வழியாகக் கட்ட வேண்டும்.
- அப்போது உங்கள் நேர்காணல் நியமனம் உறுதியாகிவிடும். உங்கள் நியமனக் கடிதத்தை பிரிண்ட் செய்து எடுத்துக் கொள்ளுங்கள்.
- உங்கள் நேர்காணல் தேதி, நேரம் எல்லாம் உங்கள் மொபைலில் செய்தியாக வந்துவிடும்.
- குறிப்பிட்டுள்ள நாளுக்கு முதல் நாளும் அன்றும் உங்களுக்கு நினைவூட்ட செய்தியும் மொபைலில் வரும் .
- உங்கள் பிறந்த தேதி, தற்போதைய முகவரி, மற்றும் அலுவலக ஆட்சேபணை இல்லாக் கடிதம் , ஓய்வூதிய அட்டை போன்றவற்றின் உண்மை ஆவணங்களை பாஸ்போர்ட் கேந்திராவிற்குச் செல்லும் போது எடுத்துச் செல்லவேண்டும். ( எது எது எடுத்துச் செல்லவேண்டும் என்று இணைய தளத்திலேயே தெரிந்து கொள்ளலாம்)
தற்போது குறிப்பிட்டுள்ள நாளில் பாஸ்போர்ட் கேந்திராவிற்குச் செல்லுகிறீர்கள்.






- முதலில் பாதுகாப்பு சோதனை.
- பிறகு உங்கள் ஆவணங்களையும், நியமனக் கடிதத்தையும் சரிபார்த்து டோக்கன் கொடுப்பார்கள்.
- அதைப் பெற்றுக்கொண்டு ‘A’ பிரிவுக்குச் செல்லவேண்டும். அங்கே உங்கள் டோக்கனுக்கு எந்த கவுண்டர் என்று அறிவிப்புப் பலகையில் வந்ததும் அந்த இடத்துக்குச் செல்லவேண்டும்.
- அங்கே உங்கள் ஆவணங்களை ஸ்கேன் செய்து உங்களையும் வெப்காமில் படம் பிடித்து , பின்னர் இன்னொரு இடத்தில் உங்கள் எல்லா விரல் ரேகைகளையும் பதிவு செய்வார்கள்.
- பிறகு அறிவிப்புப் பலகையில் உங்கள் டோக்கனுக்கு எந்த ‘B ‘ பிரிவிற்கு (கவுண்டர்) செல்லவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ள இடத்திற்குச் சென்றால் பாஸ்போர்ட் அதிகாரிகள் உங்கள் தகவல்களும் ஆவணங்களும் சரியாக இருக்கின்றன்னவா என்று சரி பார்த்து பின்னர் ‘C’ பிரிவுக்கு அனுப்புவார்கள்.
- ‘C’ பிரிவில் பாஸ்போர்ட் வழங்கும் அதிகாரிகள் உங்கள் தகவல்களை சரிபார்த்து உங்களுக்குக் காவல்துறை சோதனை தேவையா என்பதைப்பற்றியும் மற்றும் பாஸ்போர்ட் எத்தனை நாட்களில் வரலாம் என்றும் கூறுவார்கள்.
- பிறகு நீங்கள் உங்கள் கருத்துப் படிவத்தையும் பூர்த்தி செய்து கொடுத்துவிட்டு வெளியேறலாம்.
இவற்றை முடிக்க , மொத்தமாக பாஸ்போர்ட் அலுவலகத்தில் எவ்வளவு நேரம் நீங்கள் இருக்கவேண்டும் என்று எண்ணுகிறீர்கள்?
அதிகமில்லை ஜெண்டில்மேன் , 30 – 40 நிமிடங்கள் தான்.
அதெல்லாம் சரி பாஸ்போர்ட் எத்தனை நாளைக்குப் பிறகு வரும்?
என் நண்பர் ஒருவருக்கு நேர்காணலுக்குப் போய் 24 மணிநேரத்தில் பாஸ்போர்ட் கையிலேயே வந்து விட்டது!
எனக்கு மூன்று நாட்கள் ஆயின.
அதை தவிர பாஸ்போர்ட் தற்சமயம் பிரிண்ட் ஆகிவிட்டது, தபாலில் சேர்க்கப்பட்டது என்ற தகவல்கள் உங்களுக்கு எஸ்எம்எஸ் மூலமாக வந்து கொண்டே இருக்கும்.
ஸ்பீட் போஸ்ட் எண்ணைக் கொடுத்து அது எந்த இடத்தில் இருக்கிறது என்று கண்காணிக்கும் வசதியையும் தருகிறார்கள்.
மொத்தத்தில் இது ஒரு சுகானுபாவம்.
வாரே வா ! ஹாட்ஸ் ஆஃப் ! என்றெல்லாம் சொல்லத் தோன்றுகிறதா?
சொல்லுவோம்.
அரசுக்கும் உருவாக்கிய டிசிஎஸ் நிறுவனத்துக்கும் நன்றி சொல்லி, அரசாங்கத்தில் ஒவ்வொரு இடமும் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டு முடிப்போம்.
