அலாரம் – அழகியசிங்கர்

அழகியசிங்கர் நவீன விருட்சம் என்ற சிற்றிதழை கிட்டத்தட்ட முப்பது வருடங்களாகத் தொடர்ந்து  நடத்தி வருபவர். சிறந்த கதாசிரியர் – பதிப்பாளர் -மேடைப் பேச்சாளர். அவரது நவீன விருட்சத்தின் 100 வது இதழ் விரைவில் வெளிவரப் போகிறது. அவர் குவிகத்திற்கு மாதம் ஒரு கதை எழுத ஒப்புக் கொண்டது குவிகத்தின் அதிர்ஷ்டம் . 
 
                             
வந்து இறங்கியபோது மணி எட்டாகிவிட்டது.  குருமூர்த்தி அலுத்துக்கொண்டான்.  வண்டியை வாசலில் வைத்தான்.  மாடிக்குப் போய் அறைக் கதவைத் திறந்தான்.  ஃபேனைப் போட்டு சேரில் காலை நீட்டியபடி உட்கார்ந்து கொண்டான்.  பின் ச்சூ..கொட்டினான். அலுப்பாக இருந்தது.  தினமும் அவனால் எப்படி இவ்வளவு தூரம் வண்டியில் சென்று திரும்பி வந்து இருக்க முடியும் என்று யோசித்துக் கொண்டிருந்தான். அவனால் அவனை நம்ப முடியவில்லை.  கடந்த சில மாதங்களாக அவன் இப்படித்தான் வந்து கொண்டிருக்கிறான்.ART 8
 
சட்டையைக் கழட்டினான்.  பின் லுங்கியைக் கட்டிக்கொண்டு பேண்டை மாட்டினான்.  பாத்ரூம் சென்று முகத்தை தண்ணீர் விட்டு அலம்பிக்கொண்டான். குளிர் தண்ணீர் பளிச்சென்று முகத்தில் பட்டவுடன் ஆரோக்கியமாக இருந்தது.  பவீத்திரா மெஸ்ஸிற்கு போன் செய்தான்.
 
என்ன டிபன்?” என்று கேட்டான்.
 
ரவா உப்புமா..” என்று பதில் வந்தது.
 
அலுப்பாக இருந்தது குரூமூர்த்திக்கு…ஏன் பேசாமல் அர்ச்சனா ஓட்டலுக்குப் போகலாமா என்று யோசித்தான். அப்படித்தான் முடிவு செய்தான்.
அப்போதுதான் அந்தப் போன் வந்தது.
 
சார்,  நீங்கள் ஏஎம் மா?”
 
ஆமாம்.  ஆமாம்.”
 
“உடனே வாங்க…உங்கள் பாங்கிலிருந்து பர்கலரி அலார்ம் சத்தம் போடுகிறது..திருடர்கள் வந்திருப்பார்கள்..”
 
சொன்னது பந்தநல்லூரிலுள்ள சப் இன்ஸ்பெக்டர்.  ஒரு லேடி.
குருமூர்த்தி யோசித்தான்.  பின் சொன்னான் :
 
திருடர்கள் வர வாய்ப்பே இல்லே..”
 
சீக்கிரம் வாங்க…உங்க பாங்க் முன்னாடி ஒரே கூட்டம்..”
 
கூட்டமா…இதோ வர்ரேன்..”
 
திரும்பவும் பந்தநல்லூருக்குப் போக வேண்டுமென்பதை நினைத்தபோது குரூமூர்த்திக்கு அலுப்பாக இருந்தது.  ஏன்டா இதுமாதிரி அவஸ்தையில் மாட்டிக்கொண்டோம் என்று யோசித்தான்.
 
ராஜேந்திரனுக்குப் போன் செய்தான்.  “ஏன் சார்?”
 
ராஜேந்திரன் வாங்க..பர்கலரி அலாரம் கத்தறது…பாங்க் முன்னாடி கூட்டம்..”
 
வாங்க வாங்க..நான் ரெடியா இருக்கேன்..”
 
ராஜேந்திரன் பந்தநல்லூரில் குரூமூர்த்தியுடன் பணிபுரிபவர்.  க்ளார்க். அவருக்கு குரூமூர்த்தி மாதிரி ஆக வேண்டுமென்ற ஆசை..
 
திரும்பவும் பாண்டை மாட்டிக்கொண்டு, ஜோல்னா பையில் இருக்கும் ஆபீஸ் கீயை பாண்டில் வைத்துக்கொண்டு. வாசலில் வீற்றிருக்கும் வண்டியை எடுத்துக்கொண்டு, கீழே குடியிருக்கும் மாமியிடம் வாசல் கேட்டைப் பூட்ட வேண்டாமென்று சொல்லி அவர்கள் வீட்டின் உள்ளே நோட்டம் விட்டான். ரம்யா கண்ணில் தட்டுப்படவில்லை.
 
பின் அர்ச்சனா ஓட்டலுக்குச் சென்று இட்டிலியும் காப்பியையும்   உண்டு அவசரம் அவசரமாக பந்தநல்லூருக்குக் கிளம்பினான்.
 
அதற்குள் இன்னொரு போன் வந்துவிட்டது.  “இதோ வர்ரேன்..”என்றான்
 
குரூமூர்த்தி.  அவசரத்தில் ஆபிஸ் சாவியை எடுத்துக்கொண்டு வந்தோமா என்று யோசித்தான்.  இப்படி அடிக்கடி அவனுக்கு சந்தேகம் வந்துகொண்டே இருக்கும். பின் பேன்ட் பையில் கையை வைத்து சோதித்துக்கொண்டான்.  சரி..எல்லாம் இருக்கு..
 
பாதி தூரம் டூவீலரில் பறந்து சென்று கொண்டிருந்தபோது,
ஸ்ரீனிவாசனிடமிருந்து போன் வந்தது.  “நான் கும்பகோணம் வந்து விட்டேன்..நீ போய்ப் பாக்கறியா?” என்றான் சீனிவாசன்.
 
நான் பாத்துக்கறேன்..நீ கவலைப்படாதே..” என்றான் குரூமூர்த்தி.
 
சீனிவாசனும் அவனைப்போல ஒரு ஏஎம்.  நடிகர் நீலூ ஜாடையில் இருப்பான்.  காலை ஆபீஸ் நேரத்தில் பக்கத்திலிருக்கும் டீ கடையில் போய் போண்டா சாப்பிடுவான். போண்டா சீனு என்று செல்லமாகக் கூப்பிடுவான்.
 
மானேஜர் பழனிச்சாமியும் போன் செய்தார்.  அவர் அன்று லீவு.  திருச்சியில் இருந்தார்.  “என்னப்பா பர்கலரி அலாரம் கத்தறதாமே..போய்ப் பாருங்க…எனக்குப் போன் பண்ணுங்க்..”
 
சரி சார்..”என்றான் குரூமூர்த்தி.
 
மயிலாடுதுறை மேம்பாலத்தைத் தாண்டி வரும்போது.  எதிரில் வண்டிகள் ஒளிக் கற்றைகளை குரூமூர்த்தி மீது வாரி இறைத்தன.   தடுமாறியபடி வண்டியை ஓட்டினான்.
 
முதலில் ராஜேந்திரனைப் போய்ப் பார்க்க வேண்டும்.  அங்கு டூவீலரை வைத்துவிட்டு பின் ஒரு வாடகைக் காரை எடுத்துக்கொண்டு பந்தநல்லூருக்குப் போக வேண்டும்.  இருட்டில் ஹோன்னு இருக்கும் பந்தநல்லூருக்கு டூவீலரை எடுத்துக்கொண்டு ஓட்ட முடியாது.
 
ராஜேந்திரன் வீட்டிற்கு வந்தவுடன், ராஜேந்திரன் ரெடியாக இருந்தார்.
உடனே இருவரும் கிளம்பினார்கள்.
 
ஏன் இப்படி ஆயிற்று என்று தெரியவில்லை,”என்றான் குரூமூர்த்தி.
 
எனக்கு அந்த ஊர்ல இருக்கிற அக்பர் பாய் போன் பண்ணினார்..பாங்க் முன்னாடி ஒரே கூட்டமாம்…”
 
இதெல்லாம் தலையெழுத்து ராஜேந்திரன்…நிம்மதியா ஹெட் ஆபிஸிலே இருந்தேன்.  ஒருத்தன் கேள்வி கேட்கமாட்டான்…ஏன் பிரமோஷன்னு மாட்டிக்கொண்டேன் தெரியலை..”
 
இது சகஜம்..இதுக்கெல்லாம் ஏன் அலுத்துக்கிறீங்க…நல்ல காலம் நீங்க சாவியை வைச்சிருக்கீங்க..”
 
சீனிவாசன்கிட்டேயும் சாவி இருக்கு..”
 
அவர் வேஸ்ட்…அவர் எங்க கும்பகோணத்திலிருந்து வர்றப் போறாரு..”
 
ராஜேந்திரன் நீங்க இந்த ஊர்க்காரரு..தவறிப்போய்க் கூட பிரமோஷன்ல போயிடாதீங்க…”
 
அதான் கிடைக்க மாட்டேங்கறதே….நானும் பரீட்சை எழுதறேன்.  தேறவே முடியலை..”
 
கவலைப்படாதீங்க..ஆனா எழுதாதீங்க…எழுதினாலே புடிச்சுப் போடுவாங்க..”
 
அப்படியா?”
 
காலம் மாறிப்போயிடுத்து..எங்கும் ஆள் இல்லை..எழுதினாப் போதும் கொடுத்துடுவாங்க..”
 
“இந்த ஒரு தடவ மட்டும் எழுதுவேன்…அப்புறம் எழுத மாட்டேன்..”
 
“ராஜேந்திரன் ஒவ்வொருத்தர் தலையெழுத்தை மாத்த முடியாது…என்ன செய்யறது..என்னை நீங்க பாக்கலை..நான் சந்தோஷமாவா இருக்கேன்..முழுக்க முழுக்க ஆபீஸ்ன்னு ஆயிடுத்து..வேற சிந்தனை இருக்கா..விலங்கை மாட்டறாப்பலே சாவியை வேற கொடுத்துட்டாங்க..சரி ஆபிஸ விட்டு சீக்கிரமா கிளம்ப முடியறதா…அப்படியே கிளம்பினாலும் பழனிச்சாமிக்குப் பிடிக்கலை..அவர் இன்னும் ஆபிஸிலேயே உட்கார்ந்திருக்காரு..”
 
“நீங்களும் சீனிவாசனும் வீட்டுக்குக் கிளம்ப போட்டிப் போடறா மாதிரி தெரியுதே…”
 
“அவன் என்ன கஸ்டமரைப் பார்த்து சத்தம் போடறான்…யாராவது மொட்டை எழுதினா…அவனைத் தூக்கிடுவாங்க…இன்னும் மோசமான இடத்துலப் போடுவாங்க..”
 
“அவர் எதுக்கும் கவலைப்பட மாட்டார்…”
 
“அவன் 6மணிக்கெல்லாம் கிளம்பிடறான்…இப்பப் போனாதான் பஸ் பிடித்துப் போக ஏழரை ஆகும்னு சொல்றான்…பழனிச்சாமி ஒண்ணும் சொல்ல மாட்டேங்கறாரு…நானும் சொல்லிட்டேன்…சீனு கிளம்பினா நானும் கிளம்பிடுவேன்னு..”
 
“பழனிச்சாமி பாவம் சார்…உங்க இரண்டுபேர்க்கிட்டேயும் மாட்டிண்டு முழிக்கிறாரு…”
 
“நான் பாவம்பா…சென்னையிலிருந்து இங்க வந்து எல்லார்கிட்டேயும் மாட்டிண்டு முழிக்கிறேன்..”
 
கார் அந்த இருட்டில் போய்க்கொண்டிருந்தது.  ராஜேந்திரன் பேசவில்லை.  அவருக்கு எப்படியும் ஆபிஸராக வேண்டுமென்ற வெறி இருந்துகொண்டு இருக்கிறது.  சிலருக்கு இப்படித்தான்.  ஆபீஸ். பின் அதைப் பற்றிய சிந்தனை இருக்கும்.  பழனிச்சாமிக்குக் கூட மேலும் மேலும் பதவி உயர்வு பெற்றுக்கொண்டே போக வேண்டுமென்ற வெறி.
 
குருமூர்த்தி ஏன் இதில் மாட்டிக்கொண்டோம் என்று யோசித்துக் கொண்டிருந்தான்.
 
சாலையோரங்களில் இருந்த பனை மரங்கள் காற்றில் சலசலத்துக்கொண்டிருந்தன.
 
“ராஜேந்திரன், இந்தப் பனை மரங்கள் இருட்டில் பேய்கள் டான்ஸ் ஆடுவதுபோல் ஆடுகின்றன.”என்றான் குருமூர்த்தி.
 
ராஜேந்திரன் சிரித்துக்கொண்டே,”உங்க கற்பனையே வித்தியாசமாக இருக்கிறது, சார்..”என்றார்.
 
குரூமூர்த்தி இப்படித்தான் எதாவது சொல்லிக் கொண்டிருப்பான்.  பின் ஏன் இப்படியெல்லாம் பேசுகிறோம் என்று யோசித்துக் கொண்டிருப்பான்.  பேசி முடித்தவுடன் அவனிடம் தென்படும் அமைதி அளவுக்கு அதிகமானது.
 
கார் வங்கி வாசலில் போய் நின்றது.  வங்கி முன் பெரிய கூட்டம் கூடியிருந்தது.  குருமூர்த்திக்கு திகைப்பாக இருந்தது.  காரை விட்டு அவனும் ராஜேந்திரனும் இறங்கியதைப் பார்த்தவுடன் எல்லோரும் சத்தம் போட்டார்கள்.
 
“வர்றாங்க…….பாரு,,,பாங்கா நடத்தறாங்க…”என்று.
 
குருமூர்த்தி காதில் வாங்காமல் பெண் இன்ஸ்பெக்டரைப் பார்த்தான். வங்கியின் கட்டடத்திலிருந்து ஊன்னு ஊளையிடுவதுபோல் சத்தம் காதைத் துளைத்தது.  முன்னால் கூடியிருந்த கூட்டம் சத்தம்போட்டபடி ஆவலாக இருந்தது.
 
வங்கிக் கதவைத் திறந்தவுடன், உள்ளே போய் உடனே சுவீட்டை ஆப் செய்தான்.  சத்தம் நின்று விட்டது.  பின் எல்லா விளக்குகளையும் போட்டுவிட்டு வங்கியின் உள்ளே போய் பெண் இன்ஸ்பெக்டரும் அவனும் போய்ப் பார்த்தார்கள்.  ஒன்றுமில்லை.  அன்று முழுவதும் மின்சாரம் இல்லை. திடீரென்று மின்சாரம் வந்தவுடன் பர்கலரி அலாரம் தானகவே அடித்திருக்கும். வாசலில் கூட்டம் கலைந்து போயிற்று.  யாராவது திருடன் உள்ளே புகுந்திருப்பான் என்று அவர்கள் எதிர்பார்த்திருந்தார்கள்.  அவர்களுக்குப் பெரிய ஏமாற்றம்.  எல்லோரும் போய் விட்டார்கள்.  அந்த ஊரில் வங்கி இருக்குமிடத்தில் எல்லாக் கூட்டமும் கூடும்.  பஸ் ஸ்டாப் அங்குதான் இருக்கும். கும்பகோணம், மயிலாடுதுறைக்கு அங்கிருந்துதான் போக வேண்டியிருக்கும். டீ கடை சிறிய ஓட்டல் என்றெல்லாம் இருக்கும்.
 
வங்கியில் எப்போதும் கூட்டம் கசகசவென்று இருக்கும்.  சமாளிக்கவே முடியாது.  நகைகளை அடகு வைப்பார்கள்.  பின் திருப்புவார்கள்.  பென்சன் வருகிறதா என்று கேட்பார்கள்.  பயிர் கடன் வாங்குவார்கள்.  ஒரு குழுவிற்கு தரவில்லை என்றால் சண்டை போடுவார்கள்.  பின் அந்த வங்கி இருக்கும் தெருவிலேயே கூட்டம் போட்டு வங்கி மேனேஜர் ஒழிக என்று கோஷம் போடுவார்கள்.  அங்கு இரண்டு ஜாதிகள்தான் பிரதானம்.  அந்த ஜாதிக்குள் நடக்கும் கலவரத்தைத் தீர்க்கவே முடியாது.  பிரதான ஜாதியில் உள்ள ஒருவரைத்தான் வங்கியில் மானேஜராகப் போடுவார்கள்.  இல்லாவிட்டால் பிரச்சினையைத் தீர்க்க முடியாது.
 
பழனிச்சாமியால் வங்கியை நடத்திக்கொண்டே போகமுடியவில்லை. சீனிவாசனையும், குரூமூர்த்தியையும் அவர் திட்டுவார் சீக்கிரம் வீட்டிற்கு ஓடி விடுகிறார்கள் என்று.  ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு அந்தக் கிராமத்தில் இருக்கவே முடியாது.
 
ஒருவழியாக வங்கிக் கதவுகளை பூட்டிக்கொண்டு திரும்பவும் காரில் ஏறி வீட்டிற்குக் கிளம்பினார்கள்.  பழனிச்சாமியிடம் போன் பண்ணி குரூமூர்த்தி என்ன நடந்தது என்று சொன்னான்.  பழனிச்சாமி வித்தியாசமானவர்.  அவர் மானேஜர் என்ற கோதாவில் அவனுக்குப் போன் பண்ணவே மாட்டார்.  ஆனால் அவன் போன் பண்ணி அவரிடம் பேச வேண்டும் என்று எதிர்பார்ப்பார். சீனிவாசனும் போன் பண்ணிக் கேட்டான்.
 
இந்த அலாரம் இல்லையென்றால் வாழ்க்கையே இல்லை என்பதுபோல் யோசிக்கத் தொடங்கினான் குரூமூர்த்தி.  ஒவ்வொரு ஞாயிறு இரவும் சென்னையிலிருந்து மயிலாடுதுறைக்கு அவனும், அவனுடைய சகலையும் ஒரே ரயில் வண்டியில் வருவார்கள்.  காலையில் நாலுக்கெல்லாம் மயிலாடுதுறைக்கு வண்டி வந்துவிடும்.  சகலை செல்போனில் அலாரம் வைத்துவிடுவார்.  சரியாக 4 அடிப்பதற்கு முன் அலாரம் அடிக்கும்.  சகலையும் குருமூர்த்தியும் உடனே இறங்க தயாராக இருப்பார்கள்.  அந்த நேரத்தில் அலாரம் அடிக்கவில்லை என்றால் கும்பகோணம் தாண்டித்தான் போக வேண்டியிருக்கும்.
 
சகலைதான் அவனுக்கும் சேர்த்து டிக்கட் ரிசர்வ் செய்வார்.  சில சமயம் சனிக்கிழமை அவருடன் குருமூர்த்தி செல்வான்.  பெரும்பாலும் ஞாயிற்றுக்கிழமை திரும்பி வரும்போது இரண்டு பேர்களும் ஒன்றாகத்தான் வருவார்கள். ஒவ்வொருமுறை ஞாயிறு செல்போனிலிருந்து அலாரம் அடிக்கும் சப்தத்தைக் கேட்காமல் தப்பிக்க முடியாது.
 
“என்ன சார் எதாவது யோசனையா?”
 
“இல்லை…இல்லை..இதுமாதிரி அலாரம் அடிக்கிறதைப் பற்றி யோசனை.  சென்னையில்  மாதாகோயில் பக்கத்தில் எங்கள் வீடு..ஒவ்வொரு முறையும் நேரத்தை குறித்து சர்ச் பெல் முழங்கும்..”
 
“இப்போதெல்லாம் சேவல் எல்லாம் நேரம் கெட்ட நேரத்திலதான் கூவறது.”என்றார் ராஜேந்திரன்.
 
ராஜேந்திரனை இறக்கிவிட்டு தன் வண்டியை எடுத்துக்கொண்டு மயிலாடுதுறைக்குப் போனபோது மணி 11 ஆகிவிட்டது.  வள்ளலார் கோயிலைப் பூட்டி விட்டார்கள்.  தெருவில் சில நாய்கள்.  ஆனால் குருமூர்த்தியைப் பார்த்து ஒன்று குலைக்கவில்லை.
 
கேட் கதவைத் திறந்து வண்டியை உள்ளே வைத்து கேட்டை மூடிக்கொண்டு உள்ளே நீளமான பாதையைக் கடந்து மேலே உள்ள தன் அறைக்கு குருமூர்த்தி சென்றான்.
 
திரும்பவும் நாற்காலியில் தொப்பென்று விழுந்தான்.  அப்படியே சாய்ந்தபடி யோசித்தான்.  மின்சார விளக்கு எரிந்து கொண்டிருந்தது. மின் விசிறி எல்லாம் சுற்றிக்கொண்டிருந்தது.
 
நாற்காலியில் அப்படியே அசந்து தூங்கி விட்டான் குருமூர்த்தி.
 

ஷாலு மை வைஃப் (எஸ் எஸ் )

 

South Indian parents and children operating laptop MR748S 748T 748U 748V

ஷாலு சொன்னதைக் கேட்டு அதை என் மனசில் உள்வாங்கி நான் அதைப் புரிந்து கொள்ளக் கொஞ்சம் நேரம்  பிடித்தது. அப்படியும் சரியாகப் புரியவில்லை.

இதற்கு ஷாலு அடிக்கடி சொல்லும் வார்த்தை – “இந்த ஆம்பிளைங்களே இப்படித்தான். பொண்டாட்டி   சொன்னா  அதைப் புரிஞ்சிக்க முயற்சியே செய்ய மாட்டாங்க” இதற்குப் பதில் எப்பவும் என் மனசில் ஓடும் ‘ ஏம்மா, தாயிங்களா! புருஷன் காரன் புரிஞ்சிக்கிற மாதிரி என்னிக்காவது சொல்லியிருக்கீங்களா?” ஆனால் அதைச் சொல்லிவிட்டு அதனால் விளையும் பக்க விளைவுகளை  நன்றாகப் புரிந்துகொண்டதால் அந்தப் பதில் மண்டையில் உருவாகி தொண்டையிலேயே நின்றுவிடும் .

அதுக்கு மேலே  போய் “உங்களுக்கெல்லால் எதையும் ரெண்டாந்தரம் சொன்னாத் தான் புரியும். ஏன்னா முதல் தரம் எதைச் சொன்னாலும் நீங்க அதைக் காது கொடுத்துக் கேட்க மாட்டீங்க! ”  இந்த டயலாக்கை எப்போ கேட்டாலும்  எனக்கு ரெண்டாம் தாரம் – முதல் தாரம் அப்படின்னு காதில் விழுந்து நமுட்டுச் சிரிப்பு வரும். அதைப் பாத்தா ஷாலுவுக்குப் பத்திக்கிட்டு வரும்.

சமீபத்தில வாட்ஸ் அப்பில  ஒரு ஜோக் வந்திருந்தது. மனைவிக்கும் கேர்ள் பிரண்டுக்கும்  என்ன  வித்தியாசம் என்று விலாவாரியா சொல்லியிருந்தாங்க.

மனைவி இருக்கா.ளே  அவ டி வி மாதிரி. கேர்ல்பிரண்ட் மொபைல் மாதிரி.

வீட்டிலே டி‌வி பாப்போம். ஆனால் வெளியே போகும் போது மொபைலத் தான் எடுத்துக்கிட்டு போவோம்.

சிலசமயம் டி‌வி ஐப் பார்த்து ரசிப்போம். அதுவும் புதுசா வந்த போது. ஆனால் மொபைலோடத் தான்  எப்பவும் விளையாடிக் கிட்டே இருப்போம்.

டிவி ஆயுசுக்கும் ப்ரீ. ஆனால் மொபைலுக்கு நீங்க சரியா பணம் போடலைன்னா கனெக்ஷன்  துண்டாயிடும்

டிவி எப்பவும் பெருசா குண்டா இருக்கும். சிலது ஒல்லியா குச்சி மாதிரியும் இருக்கும். ஆனால் எல்லாம் பழசு. மொபைல் கவர்ச்சியா வளைவும் சுழியுமா கைக்கு அடக்கமா இருக்கும்.

என்ன, டிவிக்கு செலவு கொஞ்சம் கம்மி தான். ஆனால் மொபைல் உபயோகத்துக்கு தகுந்த மாதிரி செலவும் எகிறிக் கிட்டே  போகும்.

மொபைல்ல இன்னொரு  சவுகரியம். அதுக்கு ரிமோட் கிடையாது.

முக்கியமான சமாசாரம். மொபைல்ல கேட்கவும் செய்யலாம். பேசவும் செய்யலாம். ஆனால் டிவி , அது மட்டும் தான் பேசிக்கிட்டே இருக்கும். பிடிச்சாலும் பிடிக்காட்டியும் கேட்டுத்தான் ஆகணும்.

டிவியை கொஞ்சம் தள்ளி நின்னு பார்த்தா தான் நமக்கு நல்லது. மொபைல் அப்படி இல்லே. நெருக்கமா பாக்கெட்டில வைச்சுக்கலாம்.

இதை ஷாலு கிட்டே படிச்சுக் காட்டினேன். ” ஆனாலும் இந்த ஆம்பிளைங்களுக்கு ஏன் புத்தி இவ்வளவு சீப்பா போகிறது? நாங்களும் தான் மொபைல் வச்சுக்கிறோம். எப்பவாவது அதை பாய் பிரண்டு . புருஷன்காரனை  குத்துக்கல்லு, கிரிக்கெட் பாக்கிற மிஷின், தின்னுட்டு தூங்கற  ஜடம்,  கம்ப்யூட்டர் பைத்தியம், பக்கத்து வீட்டை எட்டிப் பாக்கிற  ஆந்தை, ஜொள்ளு பைப் அப்படின்னு அடிக்கடி சொல்றோமா?” என்று அடி மேல் அடி போட்டுத் தாக்கினாள்.

சும்மா ஒரு ஜோக் சொன்னா இப்படிக்  கோவிச்சுக்கிறியே?

பெண்கள்னா  உங்களுக்கு எப்பவுமே இளக்காரம்.   நானும் ஆம்பளைங்களைப் பத்திச் சொல்லுறேன் கேட்டுக்கோங்கோ ! நாங்க நாலு பெண்கள் சந்திச்சா பேரைச் சொல்லிக் கூப்பிட்டுக்குவோம் ! ஆனா நீங்க தடியா, மாமு, லூசுன்னு அப்படன்னு தானே கூப்பிடறீங்க?

அது சரி, நாங்க எங்களுக்குத் தேவையானா  பத்து ரூபாய் பெருமான சாமானை 20 ரூபாய் கொடுத்து வாங்குவோம். ஆனா நீங்க 20 ரூபாய் சாமானை 10 ரூபாய்க்கு உங்களுக்குத் தேவையில்லாட்டி கூட    தள்ளூபடின்னா  வாங்குவீங்க!

இதுக்கு ஒண்ணும் கொறைச்சல் இல்லே! நாங்க  ஏன் உங்க மாதிரி ஆட்களைக் கல்யாணம்  பண்ணிக்கறோம்னு தெரியுமா? அதுக்கக்கப்பறமாவது நீங்க திருந்துவீங்கன்னு தான். ஆனா நீங்க மாறறதேயில்லை.

நாங்க ஏன் உங்களைக் கல்யாணாமா செஞ்சுகறோம்னு தெரியுமா? நீங்க முன்னாடி இருந்த மாதிரி தேவதையா எப்பவும் மாறாம இருப்பீங்கன்னு நினைச்சு தான். ஆனா நீங்க கல்யாணம்  ஆன உடனே பத்ரகாளியா மாறிடறீங்க!

அதுக்கு என்ன காரணம்  தெரியுமா?   நாங்க கல்யாணம் ஆகிற வரைக்கும் எப்பவும் எங்க எதிர்கால நிலமையை நினைச்சு பயந்துகிட்டிருப்போம்.

ஆனா , எங்களுக்கு எங்க எதிர்காலத்தைப் பத்திய கவலையே கல்யாணத்துக்கு அப்புறம் தான்   வருது.

அது எப்படியோ போகட்டும்! நாங்க எப்பவும் எவ்வளவு டீஸண்டா  டிரஸ் பண்ணிக்கறோம். நீங்க எப்பவும் லுங்கி -கிழிசல் பனியன் தான்.   கொஞ்சம் கூட விவஸ்தையே கிடையாது.

அதெல்லாம்  விடு, நீங்க எத்தனை தடவை டிரஸ் மாத்துவீங்க ? காலையில எந்திரிச்சதும்,, குளிச்சிட்டு வந்ததும். கோவிலுக்கு போகும்  போது , குப்பையைக் கொட்டும் போது , புஸ்தகம் படிக்கும் போது, செடிக்கு தண்ணி ஊத்தும் போது – இப்படி ஒவ்வொரு வேளைக்கு ஒவ்வொரு டிரஸ். தேவை தானா? நாங்க கல்யாணத்துக்கோ எழவுக்கோ போனா தான் டிரஸ்சே மாத்திக்கறோம்.

நிறுத்துங்க ! உங்களுக்கு நம்ம ஷாSouth Indian parents and children MR748S 748T 748U 748Vலினி ,ஷ்யாம் அவங்களைப் பத்தி என்ன தெரியும்? போன காப்பரிக்ஷையில  ரெண்டு பேரும் என்ன ரேங்க் வாங்கினாங்கன்னு சொல்லுங்க பாப்போம்.

ரேங்க் கார்டை என்  கண்ணிலே  காட்டவே இல்லையே ?

உங்களை மாதிரி ஆளுங்களை எல்லாம் திருத்தவே முடியாது. இதைப் பத்தி தான் போன மாசம் எங்க மகிளா சபாவிலே .. “

இத நான் நூறு தடவை கேட்டுட்டேன். அதுக்கு மேல கேக்கிற பொறுமை எனக்கு அப்போ இல்லை.

அதெல்லாம் விடு, ஷாலு,  உன்னோட புது போஸ்ட் பத்தி நீ சொன்னது உண்மையா? நீ தமிழகக் கோமாதா-காமதேனு முன்னேற்றக்   கழகத்தின் கொ.ப.செ யா? GKMK பேரு நல்லா இருக்கு.

“சே! எவ்வளவு பெரிய  கான்செப்ட். அதைப் போய் இப்படிக் கழகம், கொ.பா.செ ஈனு கொச்சையா சொல்றீங்களே? பை த பை , அதென்ன கொ.ப.செ. கேட்டு ரொம்ப நாளாச்சு?

கொள்கை பரப்புச் செயலாளர். அம்மாவுக்கு  அந்தக் காலத்தில எம்.ஜி.ஆர் இருந்த போது கிடைச்ச போஸ்ட். அது என்ன கோமாதா? காமதேனு?           நீ கொஞ்சம் விவரமா சொன்னாத் தானே புரியும்?     என்று சொல்லி நாக்கைக் கடித்துக் கொண்டேன். இனிமே அரை  மணிக்கு ஷாலுவை யாரும் நிறுத்தமுடியாது.

டி வி ஆரம்பமாகிவிட்டது.

உங்களுக்குப் புரியற  மாதிரி விளக்கமா சொல்றேன். நடுவில குறுக்க பேசக்கூடாது.

நாங்க  சிங்கப்பூர் போறதுக்கு முன்னாடி வீட்டிலே ஆபூஜை பண்ணினோமே  ஞாபகம் இருக்கா?

எனக்கு ஆயுத பூஜை தான் சட்டென்று ஞாபகம் வந்தது. அப்பறம் தான் குருஜினியும் இவளும் சேர்ந்து கோமாதா பூஜை செய்தது ஞாபகம் வந்தது.  அதிலிருந்து அவ ஆரம்பிச்சா இன்னும் மூணு மணிநேரம் பழைய சரஸ்வதி சபதம் மாதிரி ‘கோமாதா வண்ணக் குல மாதா’ அப்படின்னு ஈஸ்ட்மேன் கலரில் ஆரம்பிச்சிடுவா. அதனாலே பேச்சை மாற்றி ,   “அதில்லை. ஷாலு, சிங்கப்பூர் ஏர்போர்ட்டில் மோடிஜியை பாத்ததிலிருந்து சொல்லு.”

ஒரு பத்துப் பதினைஞ்சு நாளை பாஸ்ட் பார்வேர்ட் செய்ய முயற்சித்தேன்.

உங்களுக்கு நல்லா புரியனும்னா அந்த பூஜையிலிருந்து தான் ஆரம்பிக்கணும்.

விதி வலிது தான். சும்மாவா சொன்னாங்க ‘மனைவியோட ஆர்கியூ பண்ணற போது கடைசி ஆர்குமெண்ட் அவளோடது தான். அதுக்கப்பறம் கணவன் பேசறதெல்லாம் அடுத்த ஆர்கியூமெண்டுக்கு  ஆரம்பம்’ என்று. ஷாலு அப்படித்தான். ஏதோ ஒரு படம் வந்ததே. அது என்னா ஸ்பீட் இல்லே அன்ஸ்டாப்பபிள் . ஒரு ரயில் நிக்காமே ஓடிக்கிட்டிருக்குமே. அது தான் ஷாலு.

” சும்மா இருங்க! நம்ம குருஜினி நம்ம வீட்டிலே ஆபூஜை செஞ்ச நியூஸ் டெல்லி வரைக்கும் போயிடுச்சு. அதனால தான் குருஜினியை சென்னை ஏர்போர்ட்டிலே உலக யோக தினத்தில யோகா எல்லாம் செய்யச்சொன்னாங்க.   நாங்க சிங்கப்பூர் போற அன்னிக்கு அதைச் செஞ்சதில மோடிஜி  ரொம்ப  குஷி ஆயிட்டாராம்.  அதனால எங்களை சிங்கப்பூரிலேயே பாக்கணும்னு திட்டம் போட்டாராம். ஆனா அவர் வந்து சேர்ர  அன்னைக்குத் தான் நாங்க அங்கிருந்து கிளம்பற நாள்.  அன்னிக்கு சிங்கப்பூரில அவர் எக்கச்சக்கமான ஒப்பந்ததிலே கையெழுத்து வேற போடணுமாம்.

சரி, அடுத்த நாளைக்கு நான் பிரயாணத்தைச் சேஞ்ச் பண்ணிக்கலாம்னு பாத்தா எங்க விசா அன்னிக்கோடா முடிஞ்சு போகுது. அதனால ஏர்போர்ட்டில  சந்திக்க முடிவு செஞ்சோம். டெல்லி பஜ்ரங்க்பலி அங்கிள் தான் போனிலே குருஜினியோட பேசி எல்லா ஏற்பாடும் செஞ்சார்.

சிங்கப்பூர் ஏர்போர்ட்டிலே நானும் குருஜினியும் வி ஐ பி லவுஞ்சில் உக்காந்திருக்கோம். சுத்திலும் செக்யூரிட்டி. எனக்கு ஹார்ட் படபடன்னு அடிச்சுக்கிட்டிருந்தது. குருஜினியோ அலட்டிக்காம தைரியமா இருந்தாங்க. அப்போ தான் சொன்னாங்க. “எனக்கு மோடிஜியை ரொம்ப வருஷமா தெரியும். அவர் காந்திநகரில முதன் முதலா முதல் அமைச்சரா ஆன போது வாழ்த்து சொன்ன முதல் ஆள் நான் தான். அப்போ  அவர் வீட்டுக்கு எதுத்தாப்போல இருந்த ‘க பார்க்கில’  கோமாதா பூஜை செஞ்சுகிட்டிருந்தேன். ( ஷாலுவின் எக்ஸ்ட்ரா நியூஸ்: அந்த ஊரில ரோட்டுக்கு சர்க்கிளுக்குப் பேர் எல்லாம் க, கா, கி, கீ ,  என்று இருக்குமாம்.)

நடுவில நான் ஒரு கேள்வி மடத் தனமா கேட்டதில குருஜினிக்குக் கெட்ட கோபம் வந்திடிச்சு தெரியுமா?

எனக்கெப்படித் தெரியும்? நீ வழக்கமா கேக்கற மாதிரி கேட்டிருப்பே?

கதை சொல்ற ஜோரில் என்னோட கிண்டலை அவ கவனிக்கவில்லை.  அதனால நான் தப்பிச்சேன் 

“மோடிஜி எப்ப அடையார் காந்திநகரில் இருந்தார்னு கேட்டேன்”

இப்படிக்  கேட்டா குருஜினிக்கென்ன, எனக்கே கோபம் வரும். குஜராத்தின் கேபிடல் காந்திநகர்னு தெரியாதா? ஜியாக்கிரபி கிளாசில அதைச் சாய்ஸில  விட்டிட்டியா? இனிமே ஷிவானிக்கு வேற டீச்சர் பாக்க வேண்டியது தான்.

“எல்லாம் தெரிஞ்சவங்க நீங்களே இனிமே ஷிவானிக்கும் ஷியாமுக்கும் பாடம் சொல்லிக் குடுங்க. இனிமே எனக்கு எக்கச்சக்க வேலை இருக்கு”

இப்போ நான் ஜகா வாங்கவேண்டிய நேரம்.

” அத்தை விடு ஷாலும்மா,  நீ மோடிஜியை மீட் பண்ணினதைப் பத்தி இன்னும் சொல்லவே இல்லையே?

அந்த கோமாதா பூஜை பிரசாதத்தை  குருஜினி  மோடிஜி  கிட்டே கொடுத்த  அன்னிக்கு தான் அவர் சி எம் ஆகிட்டாராம். அதே மாதிரி 2014இல் குருஜினி டெல்லியில கோமாதா பூஜை செஞ்சு  மோடிஜி கிட்டே பிரசாதம் குடுத்த அன்னிக்கு தான் அவர் பி எம் என்ற நியூஸ் வந்ததாம். இதைப் பத்தி என்ன சொல்றீங்க? ரெண்டு தடவையும் பஜ்ரங்கி அங்கிள் தான் கூடவே இருந்திருக்காராம்.

என்ன சொல்வது? காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதைன்னு ஷாலுக்கிட்டே அப்போ சொல்ற தைரியம் எனக்கில்லே .

அப்படி நாங்க பேசிக்கிட்டிருக்கும் போது மோடிஜி அந்த ல
வுஞ்சுக்கு வந்தார். எனக்கு அப்படியே “36 வயதினிலே ” ஜோதிகா மாதிரி மயக்கம் போட்டு விழுந்திடுவேனோன்னு பயம் வந்திடுச்சு. தலை சுத்தற மாதிரி இருந்தது.

கொஞ்சம் இருங்கோ ஷிவானி கூப்பிடற மாதிரி இருக்கு.” என்று என்னை சஸ்பென்ஸ் லவுஞ்சில் நிறுத்தி விட்டு ஷாலு பறந்துவிட்டாள்.

எப்பவும் அவ இப்படித்தான். நல்ல மூடிலே இருக்கும்
 போது ‘ போன் அடிக்கிற மாதிரி இருக்கு . எங்க அப்பாவாத் தான் இருக்கும் ‘ னு ஓடிப் போய் விடுவாள்,

“காத்திருந்தேன்.. காத்திருந்தேன்.. “

 

குறும்படம்

கருணாகரன் நடிக்கும் நலனின் இந்தக் குறும் படத்தைப் பாருங்கள்!

குறும்படம் எடுப்பதைப் பற்றியே ஒரு குறும்படமா?

நல்லாவே இருக்கு !

 

மூன்று சகோதரிகள் – சிறுகதை – ராமன்

 

 

இந்த மூன்று பாறை வடிவமைப்பு ‘தி த்ரீ சிஸ்டெர்ஸ்’ – மூன்று சகோதரிகள் என்று அழைக்கப்படும். இருக்குமிடம் ஆஸ்ட்ரேலியா  ‘ந்யூ சௌத் வேல்ஸ்’ மாகாணத்தின் கடூம்பா பகுதியில் ‘ப்ளு மௌண்டன்’  மலைத் தொடர்களில் ‘எக்கோ பாயிண்ட்’டில் அமைந்துள்ளது.   கடல்  மட்டத்திலிருந்து 3000 அடிக்கு மேல்  கம்பீரமாக இருக்கும் அடுத்து அடுத்து அமைந்துள்ள இந்த மூன்று பாறை அமைப்பு ஆஸ்ட்ரேலியாவின் சுற்றுலா தளங்களின் முக்கிய இடங்களில் ஒன்று. மூன்று சகோதரிகளின் தனித்தன்மை நாள் முழுவதும் சூரிய கிரணங்களினால் வெவ்வேறாக மாறி பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கின்றன.

இந்த இடத்திற்கு ஆஸ்ட்ரேலியா ஆதிவாசிகளான அபரிஜினி குடிமக்களின் பழங்கால மரபுக் கதைகள் இரண்டு உள்ளன. இரண்டிலும் காரணங்கள், பாத்திரங்களின் பெயர்கள், முடிவுகள்  ஒரே மாதிரியாய் இருப்பதால்   அவைகளில் ஒன்றை மட்டும் இங்கு சொல்ல ஆசைப்படுகிறேன்.

கடூம்பா ஜமைசன் பள்ளத்தாக்கு  ஆதிவாசிகளின் குடியில் ‘மீனி’ ‘விம்லா’ ‘குன்னெடூ’ என்று கன்னிபெண்களான மூன்று சகோதரிகள் வசித்து வந்தனர். இந்த அழகிய சகோதரிகள்  நேப்பியன் ஆதிவாசிகளின் குடியில் வசித்த மூன்று சகோதர்களுக்கு தமது உள்ளங்களைப் பறிகொடுத்தனர். ஆனால் ஆதிவாசிகளின் கட்டுப்பாடுகள் அதற்கு இடம் தரவில்லை.

சகோதரர்களின் காதல் அவர்கள் கண்களை மறைத்தன. சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு மூன்று சகோதரிகளையும் கட்டாயப்படுத்திக் கைப்பற்ற அவர்கள் முயன்றதால் அந்த செய்கை இரு ஆதிவாசிகளுக்குள்ளும் பெரிய யுத்தத்தை ஏற்படுத்தியது.

அந்த மூன்று சகோதரிகளுக்கும் பெரிய ஆபத்து நிகழப்போவதை அறிந்த கடூம்பா பள்ளத்தாக்கு மந்திரவாதி அவர்களை ஆபத்திலிருந்து மீட்க மூன்று கல் பாறைகளாக சமைத்துவிட்டான். யுத்தம் முடிந்ததும் மீண்டும் அவர்களை மீட்டுக் கன்னிப் பெண்களாக மாற்ற எண்ணியிருந்தான்.  யுத்தம் முடிவதற்குள் அவன் மாண்டே போனான். அவன் ஒருவனால் மட்டுமே  கற்களாய் சமைந்துவிட்ட சகோதரிகளை மறுபடி அழகிய கன்னிகளாய் மாற்ற இயலும்! அது இயலாததால் கன்னிகள் இன்றும் மூன்று கல் பாறைகளாகவே  இருந்து வருகின்றனர்.

இப்போது  The Great Continent Drift theory பற்றி ஒரு சிறு தொகுப்பு! பல மிலியன் நூற்றண்டுகளுக்கு முன் உலகின் ஏழு கண்டங்கள் உருவாவதற்கு முன் ஒரே ஒரு கண்டம் உலகின் தென் கோடியில் இருந்ததாக கூறப்படுகிறாது. அதன் பெயர் காண்ட்வானா. பிறகு மெதுவாக கண்டத்தின் பகுதிகள் வடக்கு நோக்கி ஆசைந்து அசைந்து மேலே சென்று இன்றைய கண்டங்களான வடக்கு அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியா உருவாகியன. பின் ஆஸ்ட்ரேலியாவின் வட கிழக்கிலிருந்து   ஒரு பகுதி மேலெழும்பி ஆசியாவின் தென் பகுதியில் மோதி இன்றைய இந்தியா 

3.2

உருவானது. இது 1915ன் ஆல்ஃப்ரெட் வெகெனெர் என்ற புவி தரை தோற்றவியலாளரின் தொகுப்பு.

ஆஸ்ட்ரேலியாவின் வடகிழக்கில் ஒரு விரிசல் இருப்பதைக் காணலாம். இந்த விரிசலும் இந்தியாவின் தீபகற்ப பகுதியும் சரியாக பொருந்துவது அந்த தொகுப்பை உறுதி செய்கிறது. ஆஸ்ட்ரேலியாவின் அபரிஜினியின் உடல் தோற்றம் கிட்டத்தட்ட தென் இந்திய இந்தியர்களின் தோற்றத்தை ஒத்து இருக்கிறது. சைவர்கள் வீபூதியை உடம்பில் பூசிக்கொள்வது போல அபரிஜினி சாம்பலை உடலில் பூசிக்கொள்ளுகிறார்கள். அவர்கள் மரபுக் கதைகள் இந்திய புராதன கதைகள் போல இருக்கின்றன. அவர்களின் உதடுகள் பெரியதாக உள்ளன. மேலும் இந்தியர்களை விட கருப்பு மிகுந்தவர்களாய் காணப்படுகிறார்கள்.

மரபுக்கதையில் வரும் பெயர் விம்லா நமது விமலாவா? மீனி கிட்டத்தட்ட நமது மீனாவாக இல்ல? மற்றும் தோற்ற ஒற்றுமைகளையும் சில செயல்பாடுகளைப் பார்க்கும்போது நமக்கும் அபரிஜினிகளுக்கும் தொடர்பு இருக்கக்கூடுமா?

சரித்திரம் பேசுகிறது ( யாரோ)

சந்திரகுப்த மௌரியர்

அலெக்சாண்டர் சென்ற பிறகு இந்தியாவில் பெரும் சரித்திர நிகழ்வுகள் நடந்தன. ஒரு மாபெரும் அரசாட்சி மறைந்து மற்றொரு பிரம்மாண்டமான அரச வம்சம் துவங்கியது. சந்திரகுப்த மௌரியர் அதன் நாயகர். அது பற்றி இன்று ஆராய்வோம்..

இராமன் கதை சொல்ல வேண்டுமென்றால் இராவணன் கதை சொல்வது  அவசியமாகும். ஆக – சந்திரகுப்த மௌரியரைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் – நந்த அரசாட்சியைப் பற்றி முதலில் சொல்லியே ஆகவேண்டும்.

அலெக்சாண்டர் வேண்டுமென்றால் பயப்படாமல் இருந்திருக்கலாம். ஆனால் அவரது சேனை – நந்தர்களைப் பற்றிக் கேள்விப்பட்டு – நடுநடுங்கினர். குறிப்பாக நந்தர்களது சேனை (காலாட்படை: 200000 குதிரைப்படை: 80000 ரதப்படை: 8000; யானைப்படை: 6000) பலம் கண்டு – நொந்தனர். போரஸின் 30 யானைகளே அவர்களைப் படுத்தி எடுத்தது என்றால் – 6000 யானைகளா? ஆள விடுங்க சாமி- என்றனர். அவ்வளவு சக்தி வாய்ந்தது தன நந்தனின் படை பலம்.

நந்தர்களின் ஆட்சி – வங்காளம் முதல் பஞ்சாப் வரையிலும் பரவியிருந்தது. தெற்கே விந்திய மலை வரை விரிந்திருந்தது. அவர்களது அபரிமிதமான செல்வக் குவிப்பு அவர்களது புகழை(?)க் கூட்டியது. தமிழ் நாட்டில் சங்கத்தமிழ்ப் புலவர் மாமூலனார் நந்தர்களது தலைநகரான பாடலிபுத்திரத்தைப் பற்றியும் நந்தர்களது செல்வச் சிறப்பைப் பற்றியும் பாடியுள்ளார்.

பல முதல்கள்:

மகாபத்ம நந்தன் – ‘முதல்’ நந்தன். இந்திய சரித்திரத்தில் க்ஷத்ரியரல்லாத ‘முதல்’ அரசன். அவன் ஆட்சிக்குப் பின்னர் மகன் தன நந்தன் அரசனானான். பெயரிலேயே ‘தனம்’ (‘நிதி’ J ).இவர்கள் இருவரும் இந்தியாவின் ‘முதல்’ மாபெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கினர். மக்களை மிரட்டி – இரக்கமில்லாமல் வரி வசூல் செய்து – பெரும் செல்வம் சேர்த்து மக்கள் மத்தியில் செல்வாக்கற்றிருந்தனர். இவர்கள் செய்த ஊழல் – இன்றைய 2G ஸ்பெக்ட்ரம் ஊழலை விடப் பெரியது! இவர்கள் தான் உலகின் ‘முதல்’ அரசியல்வாதிகள் போலும்.

அலெக்சாண்டரால் வெல்ல இயலாத நந்தர்களை – 20 வயதான சந்திரகுப்த மௌரியர் வென்றார். அலெக்ஸாண்டருக்குப் பிறகு வந்த கிரேக்கர்களையும் வென்றார். அவரை இந்தியாவின் ஜுலியஸ் ஸீசர் என்கிறார்கள் (உண்மையில் ஜுலியஸ் ஸீசரை ரோமின் சந்திரகுப்தர் என்றல்லவா  கூறவேண்டும்!!)

சந்திரகுப்தர் பாடலிபுத்திரத்தில் பிறந்தார். தகப்பனார் அரச குல க்ஷத்ரியர் என்றும் தாயார் சூத்திரக் குடும்பத்தினர் என்றும் அறியப்படுகிறது.

இந்த சரித்திர சம்பவங்களைப் பார்க்கும்போது கல்கி அல்லது சாண்டில்யன் இதை எழுதவில்லையே என்று என் மனம் ஏங்குகிறது.

நீங்கள் ஏன் ஏங்க வேண்டும்!

‘யாரோ’ எழுத இருக்க உங்களுக்கு அந்தக் கவலை ஏன்? J

மேலே படியுங்கள்!

 

இந்தியாவின் காவலன்

 

“என்ன பேறு பெற்றேனோ?!” -வியந்தான் அந்த இளைஞன்.

அவனது வியப்புக்குக் காரணம் இல்லாமல் இல்லை! தனக்கு முதலில் கல்வி கற்கக் கிடைத்ததோ உலகின் ‘முதல்’ பல்கலைக் கழகம். அதுவும் முதல் தரமான ஒன்று. பிரம்மாண்டமானது. பதினாயிரம் மாணவர்கள் கற்கும் உன்னதமான கல்விச் சாலை. கிரேக்கர்கள், பாபிலோனியர்கள், சீனர்கள் தவிர இந்திய நாட்டினர் என்று பல்லாயிரக்கணக்கான மாணவர்கள்!

தக்ஷசீலம்!

his1

கற்களாலே கோட்டை போல் அமைந்திருந்த பாடசாலைகள். மரங்கள் பாதை ஓரத்தை அலங்கரிக்க அலை அலையாக அதில் மாணவர்களும் ஆசிரியர்களும் பாட சாலைக்குச் செல்லும் அழகே அழகு! மயில்கள் சாலை ஓரம் தத்தி தத்தி நடை பழகியது.

முகப்பு மண்டபத்தில் பல வண்ண ஓவியங்கள் தொங்கின. அந்த இளைஞன் அந்த படங்களை வெகு ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். மாலை  வெயிலில் அந்த ஓவியங்கள் தங்க முலாம் தீட்டியது போல் தக தகத்தது -மின்னியது. தினமும் பார்த்த ஓவியங்கள் தான் என்றாலும் அவன் மனதில் அன்றும் அவை பிரமிப்பை ஊட்டத் தயங்கவில்லை.

அந்த படங்கள் எல்லாம் அந்த பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணாக்கர்கள். எப்படிப்பட்ட மாணாக்கர்கள்  அவர்கள் என்றால் – அவர்கள் மாணாக்கர்களாக இருந்து  பின்னர் அங்கேயே ஆசிரியராகி உலகிற்கே பெருமை சேர்த்தவர்கள்!

முதல் ஓவியத்தில் பணிநி (Panini) –சமஸ்கிருதத்திற்கு இலக்கணம் அமைத்தவர்! அதன் விதிகளை அமைத்தவர்!

அடுத்து சராகா (Charaka) – ஒரு ஆயுர்வேத மருத்துவர்! இவரது சராகா சாமிதா (Charaka Samhita) இன்றைய ஆயுர்வேதத்திற்கே மூலமாக உள்ளது.

ஜீவக் – ஆஹா! இந்த ஆயுர்வேத மருத்துவர் – புத்தருடைய நோயைக் குணமாக்கியவர்! இவரது அறுவை சிகிச்சை  பற்றிப்  பேசாத வாயே இல்லையே!  அமராப்பள்ளி என்ற உலகப் பேரழகியை * (சென்ற குவிகம் இதழில் இவள் அழகைப் பற்றி ‘யாரோ’ எழுதியிருந்தார்) இளமை குன்றாமல் காத்து சிகிச்சை செய்தவர்! உலகின் முதல் Plastic surgeon போலும்!

அடுத்த ஓவியம் விஷ்ணு ஷர்மா- அரசியல் துறையில் புரட்சி செய்த ‘பஞ்ச தந்திர’ கதைகளால் பெரும் புகழ் பெற்றவர்!

பலப்பல ஓவியங்கள் கடந்து வந்தான் அந்த இளைஞன்.

கடைசியாக ஒரு ஓவியம் பாதி வரையப்பட்டிருந்தது.

அதன் ஓவியர் அதன் அருகிலே அமர்ந்து தூரிகையை வண்ணத்தில் தோய்த்துக் கொண்டு இருந்தார்.

“ஐயா. இது யார் ஓவியம்?”

“நீ யாரப்பா?” – ஓவியர்

“என் பெயர் சந்திரகுப்தன். இங்கு அரசியல் பாடம் பயில்கிறேன்”

“சரியான ஓவியத்தைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறாய்! – இது நீ இதுவரை பார்த்த படங்களில் இருப்பவர்களுக்குச் சற்றும் சளைத்தவர் இல்லை… மேலும் அரசியல் பாடத்திற்கும் ராஜதந்திரத்திற்கும் இவரை விடப் பெரிய மேதை இன்று இவ்வுலகில் யாரும் இல்லை”

சந்திரகுப்தன் குரலைத் தாழ்த்திக்கொண்டு கேட்டான்:

“அலெக்சாண்டர் தக்ஷசீலம் வாசல் வரை வந்து விட்டாரே! அவரை வெல்ல முடியுமா இவரது ராஜதந்திரத்தால்”

“அவரிடமே கேட்டுப்பார்” – ஓவியர் குரலில் பெரும் நம்பிக்கை ஜொலித்தது.

“அவர் எங்கே இருக்கிறார்? யார் அவர்?” சந்திரகுப்தன் குரலில் உற்சாகம் கொப்பளித்தது.

“அவர் பெயர் விஷ்ணு குப்தர். சாணக்யா என்றே அனைவரும் அழைப்பர்.

இதே ஊரில் குரு குல பள்ளி ஒன்று நடத்தி வருகிறார்”

“நன்றி ஓவியரே..ஆமாம்…என் படம் ஒன்றும் வரைவீரா?” சந்திரகுப்தன்  சிரிக்கவில்லை.

“அது நீ என்ன சாதிக்கிறாய் என்பதைப் பொறுத்தது”- ஓவியர் சிரித்தார்

“வரும் கிரேக்க எதிரிகள் அனைவரையும் நம் நாட்டிலிருந்தே ஒழித்து கொடுங்கோல் மன்னன் தன நந்தனையும் வென்றால்?” சந்திரகுப்தன் மெல்லச் சிரித்தான். அதில் உறுதியும் இருந்தது.

ஓவியன் (மனதில் ‘கண்ணா.. ரெண்டு லட்டு தின்ன ஆசையா’ என்று விளம்பரம் ஓடியது?) திகைத்துப்போனான். இந்த வாலிபன் உடல் வலிவு மட்டுமல்ல நெஞ்சத் துணிவும், கொள்கையும் கொண்டவன் தான் போலும்…

“அதைச் செய்தால் என் ஓவியம் மட்டுமல்ல – இந்திய சரித்திரத்திலேயே உனக்கு இடம் உண்டு..”

மயில் ஒன்று தவழ்ந்து வந்து சந்திரகுப்தன் அருகில் நின்றது. சந்திரகுப்தன் அதைத் தொட்டு என்ன மாயம் செய்தானோ, மயில் தோகை விரித்து ஆடியது.

ஓவியன் வியந்து போனான்.

“மயிலைப் பழக்குவது எங்கள் குலத்தொழில்” – சந்திரகுப்தன்.

“அப்படியானால், நீ சொன்னபடியே நீ மன்னனால்… உனது வம்சம் மௌரியர் (மயில்) என்றழைக்கப்படட்டும்”

அவனது சொல் சரித்திரத்தில் இடம் பெறும் என்று அந்த ஓவியன் கனவு கூட கண்டதில்லை.

அதற்கு மேலும் சந்திரகுப்தனுக்கு அங்கு இருப்புக்கொள்ளவில்லை. சாணக்கியரை சந்திக்க விருப்பம் கொண்டு ஓவியரிடம் விடை பெற்றான்.

மாலை வெயில் மறைந்து இருள் மெல்லப் பரவத் தொடங்கியிருந்தது.

சந்திரகுப்தன் வேகமாக நடந்து தனது குதிரை கட்டப்பட்டிருந்த இடத்துக்குச் சென்றான். குதிரையில் ஏறி வழி விசாரித்துச் செல்ல சற்றே தாமதமாகியது. இருள் கவ்வி நின்றது.

சாணக்கியரின் பெருங்குடில் அடைந்து கதவைத் தட்டப்போனான். அப்பொழுது சாணக்கியரின் வாசலில் இரண்டு குதிரை பூட்டிய ரதம் ஒன்று வந்து நின்றது. வாசலில் பத்து வீரர்கள் வேல் பிடித்துக் காவல் காக்கத் தொடங்கினர், சந்திரகுப்தன் அது  தக்ஷசீல மன்னன் அம்பியின் ரதம் என்று உணர்ந்தான். சற்றே ஒளிந்து மறைந்தான். அம்பி உள்ளே சென்று சாணக்கியரிடம் பேசத் தொடங்கினான். அவன் குரலில் பெரும் பதட்டம் இருந்தது. உள்ளே பேசுவது சந்திரகுப்தனுக்கு மெல்லக் கேட்டது. அலெக்சாண்டர் படையுடன் நாடு வாசல் நெருங்கியது பற்றிக் கூறி – என்ன செய்யலாம் என்று கேட்டான். சாணக்கியன் – எதிர்த்துப் போரிடுவது தான் சரியான முடிவு என்றான்.

அம்பி: “விஷ்ணு குப்தரே… அலெக்சாண்டரின் பிரதாபங்கள் நீங்கள் கேள்விப்படவில்லையா? பாரசீக மன்னர் எவ்வளவு பலம் பொருந்தியவர். அவரையே வீழ்த்தினானாமே? நகரங்கள் பல எரிந்து மக்கள் மடிந்தனரே!” சொல்லும்போதே அம்பியின் குரல் நடுங்கியது!

சாணக்கியர் – அம்பி அலெக்ஸாண்டரை எதிர்ப்பது எவ்வளவு அவசியமாகும் என்று பல விதமாக அறிவுரை கூறியும் அம்பி அதை ஏற்கவில்லை. அவன் உடல் முழுவதும் பயம் ஒன்றே பரவி இருந்தது.

சற்று நேரத்தில் அம்பி வெகு சோகமாகக்  குடிலை விட்டு வெளியேறினான். ரதத்தில் புறப்பட்டுச் சென்றான்.

சட்டென்று ஒரு கரம் சந்திரகுப்தனின் தோளைப் பிடித்தது. அது சாணக்கியன் கரம். ஒரு பிராம்மணனின் கரத்திற்கு இவ்வளவு சக்தியா!

“ஐயா வணக்கம்” – சந்திரகுப்தன்.

“சந்திரகுப்தா, இங்கு என்ன ஒட்டுக் கேட்டுக் கொண்டிருக்கிறாய்? இது அரச சமாசாரம்!”

சந்திரகுப்தனுக்குத் தூக்கிவாரிப்போட்டது.

‘உங்களுக்கு என் பெயர்?”

“நீ இங்கு ஒளிந்த போதே நீ யார் என்பதை அறிந்தேன். நீ நந்த குலத்தில் பிறந்தவன். 20 வயதே ஆனாலும் மாவீரன். ஒரே நேரம் 20 எதிரிகளுடன் போரிட்டு வெல்லக்கூடியவன். இதை தக்ஷசீலப்  பல்கலைக்கழகத்துப் போர் பயிற்சி சாலையில் நீ செய்யும்போது நான் பார்த்திருக்கிறேன். போர்க்கலையில் பெரும் திறமை சாலி. மக்களாதித்துவத்தில் (leadership) மிகச் சிறந்தவன். அம்பி போல் இல்லாமல் – பயமற்றவன். கொள்கை உள்ளவன்…” என்று சிலாகித்துக்கொண்டே போனார்.

சந்திரகுப்தன் சிறிது வெட்கமும் பெரும் பிரமிப்பும் அடைந்தான்.

“என்னைப்பற்றி   இவ்வளவு விபரம்..எப்படி…”

“அரசியலில் இது ரொம்ப சகஜமப்பா! ஒற்று அறிவது அரசியலின் முக்கிய அங்கம். உன்னைப்போன்ற திறமைசாலிகளைக் கண்டெடுத்து அவர்களுக்குப் போதிப்பது தான் எமக்குத் தொழில். உன்னைச் சந்திக்க வேண்டும் என்று நானும் ஆவலுடன் இருந்தேன்”

சந்திரகுப்தனுக்குப் பழம் நழுவிப் பாலில் விழுந்ததைப் போல் இருந்தது.

“உண்மையைச் சொல்லப் போனால் பாடலிபுத்திரத்தில் உனது வீரத்தையும் அறிவையும் பார்த்து நான் தான் உன் தந்தையிடம் சொல்லி உன்னைத் தக்ஷசீலத்துக்குக் கல்வி கற்க அனுப்பினேன். இது உனக்கும் தெரியாது”

his2

‘இது தான் இறைவன் திருவுளமோ’ – வியந்தான் சந்திரகுப்தன்.

சாணக்கியர் சந்திரகுப்தனை இருக்கையில் அமரச் சொல்லிப் பின் தொடர்ந்தார்.

நாட்டின் பல பகுதிகளின் நிலைமை மற்றும் அரசாட்சிகளின் பலம் மற்றும் பலவீனம் – இவை அனைத்தையும் சுருக்கமாக சாணக்கியர் விவரித்தார்.

தக்ஷசீலாவின் ஒரு மூலையில் இருந்து கொண்டு பாடலிபுத்திரத்திலிருந்து மாசிடோனியா வரை எப்படி அரசியலை ஆராய்ந்து இருக்கிறார் இந்த மேதை!

சந்திரகுப்தனுக்கு ஒரு கேள்வி!

“அலெக்சாண்டர் – நந்தன் இந்த இருவரும் நமது நாட்டை உடைத்து விடுவரோ? இதற்கு என்ன செய்யலாம்?”

“நீ தான் அதைச் செய்ய வேண்டும்” – உறுதியுடன் – ஆணை இட்டார்.

சாணக்கியரின் அந்தத் தொனியில் சந்திரகுப்தனுக்கு மெய் சிலிர்த்தது.

“மன்னன் புருஷோத்தமனைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாயா?”

“யாரே அந்த மாவீரரை அறியாதவர்கள்” – சந்திரகுப்தன்.

“அவனது நட்பு உனக்கு வேண்டும்; நீ ஒரு அரசியல் கூட்டணி அமைக்க வேண்டும். புருஷோத்தமனைச் சந்தித்து அலெக்ஸாண்டரைத் தடுக்கச் சொல்லவேண்டும். அவனுடன் ஒரு நட்பு ஒப்பந்தம் செய்து கொள். அலெக்சாண்டரையும் சந்தித்துப் பேசு.  அவனும் நந்தனும் இணைந்து விட்டால் இந்த நாட்டைக் காக்க இந்த சாணக்கியராலும் இயலாது!” சாணக்கியரின் முகம் லேசாகக் கருத்தது.

“அலெக்சாண்டரிடம் என்ன பேசுவது?” ஆச்சர்யத்தில் ஆழ்ந்தான் சந்திரகுப்தன்.

“நந்தனின் பெரும் செல்வக் களஞ்சியங்களைப் பற்றிக் கூறு. பாரசீகத்தில் கிடைத்த செல்வத்தை விட நூற்றுக்கணக்கான மடங்கு செல்வம் இருப்பதைக் கூறி அவனை உசுப்பேத்து!”

“இதில் நமக்கு என்ன லாபம்?”

“அதே சமயம் அலெக்ஸாண்டரின் தளபதிகளைச் சந்தித்து நந்தனின் பெரும் படை பலம் பற்றிப் பேசு. முக்கியமாக கங்கை நதி தாண்டினால் அங்கு இருக்கும் 6000 யானைப்படைகளைப் பற்றிப் பேசு.”

“அலெக்சாண்டர் நந்தனை வென்றால் நமக்கு ஒரே எதிரி அலெக்சாண்டர் மட்டும் தான். அலெக்சாண்டர் திரும்பிச் சென்றால் நமக்கு ஒரே எதிரி நந்தன் மட்டும் தான்!! நாம் இந்தப் பூசலில் வேடிக்கை மட்டுமே பார்க்கவேண்டும்”

என்ன ராஜதந்திரம்! சந்திரகுப்தன் பெரு வியப்பில் ஆழ்ந்தான்.

“சந்திரகுப்தா .. இன்னுமொன்று சொல்ல வேண்டும்.உன்னிடம் மட்டும் தான் இதைச் சொல்வேன். இது எனது சொந்த விஷயம்” சாணக்கியர் முகம் சிவந்தது. துக்கச் சாயல் முகத்தில் விரிந்தது.

“எனது அரசியல் புகழ் தன நந்தனையும் சென்றடைந்திருந்தது. அவன் என்ன தான் கொடுமையான வசூல் ராஜா வானாலும் அவன் நிர்வாகம் மெச்சத் தகுந்ததே! பல மந்திரிகள் – சில ராஜதந்திரிகள் ஆலோசனை கேட்டு நடப்பவன். என்னை ராஜதந்திர ஆலோசனையாளனாக நியமிக்க அழைத்தான்”

“அவன் ராஜ கொலு மண்டபத்திற்குச் சென்றேன்! அவனது வரிக்கொடுமையால் மக்கள் படும் இன்னலைச் சொன்னேன்.”

“நந்தன் அதை சற்றும் விரும்பவில்லை. பெருங்கோபத்தில் என்னை அவமானம் செய்தான்”

“நான் என் உயிரைப்பொருட்படுத்தாமல் சொன்னேன்”

“உன்னையும் உன் குலத்தையும் அடியோடு அழித்த பின்னரே எனது குடுமியை முடிப்பேன் – என்று சூளுரைத்தேன்”

“நந்தன் என்னை அங்கேயே கொல்ல விரும்பினான்.ஆனால் அவனது ஆலோசகர்கள் தடுத்ததால் நான் இன்று இங்கு இருக்கிறேன்”

சாணக்கியரின் விரிந்த குடுமி மேலும் பரந்து கோபம் கொண்ட முகம் நெருப்புப் போல் சிவந்தது.

“ஆசிரியரே! நான் வாக்களிக்கிறேன். தன நந்தனை வென்று உங்கள் பழி தீர்க்கிறேன்”- என்றான் சந்திரகுப்தன்.

 

அன்றிலிருந்து சந்திரகுப்தன் தினமும் சாணக்கியரைச் சந்தித்து – அரசியல் பாடம் கற்றான். இடையில் புருஷோத்தமனைச் சந்தித்துப் பேசினான். அம்பியின் துரோகம் பற்றியும் அலெக்சாண்டரை எதிர்ப்பதின் அவசியத்தையும் கூறினான்.

“புருஷோத்தமரே, எனது படை மகதத்தில் பரந்து கிடக்கிறது. நந்தனை வீழ்த்த பின்னாளில் உங்கள் துணை எனக்குத் தேவை. ஆனால் இன்று நீங்கள் அலெக்ஸாண்டரை நிறுத்த வேண்டும்”

புருஷோத்தமன் பெரு மகிழ்ச்சி கொண்டான். சந்திரகுப்தனின் பிரதாபங்களைப்  பற்றிக் கேள்விப்பட்டிருந்தான். அவனது துணிவையும் தீர்க்க தரிசனத்தையும் கண்டு இவன் நட்பு தனக்குத் தேவை என்று முடிவு செய்தான்.

மழைக்காலம் வந்தது. அலெக்ஸாண்டரின் படையும் வந்தது. எதிர்பார்த்தபடி அம்பி அலெக்ஸாண்டரிடம் சரணடைந்தான். பரிசு பல கொடுத்துப் பிழைத்தான். மாமன்னன் புருஷோத்தமனைப் பற்றி பல விவரங்களைக் கூறி அலெக்ஸாண்டருக்குப் பேருதவி செய்தான்.

புருஷோத்தமன் மாபெரும் யுத்தம் செய்தான். இந்த சண்டையில் அலெக்சாண்டர் வென்றதாக கிரேக்க இலக்கியம் கூறும். ஆனால் இது சற்றே சர்ச்சைக்கு இடம் பெற்ற விஷயம். போருக்குப் பின் புருஷோத்தமன் மன்னனாக ஆட்சி செய்தான். மற்றும் அவனது நாட்டுக்கு மேலும் பல பகுதிகள் (அலெக்சாண்டர் முன்பு வென்ற பகுதிகள் உட்பட) சேர்ந்தது. எனவே போரானது வெற்றி-தோல்வியல்லாமல் – ஒரு உடன்படிக்கையால் முடிந்தது என்றும் ஒரு பேச்சு உண்டு. மொத்தத்தில் அலெக்ஸாண்டர் படைக்கு புருஷோத்தமன் ஒரு பெரும் கலக்கம் கொடுத்தான்.

அலெக்சாண்டர் சன்டிரகொட்டோஸ் (Sandrokottos) –(நமது சந்திரகுப்தன் தான்) என்னும் மாவீரன் நந்தருக்கு எதிராக படை திரட்டி வருவதை அறிந்திருந்தான். அவனைப் பார்ப்பதில் அவனும் விருப்பம் கொண்டிருந்தான். இவன் உதவி பின்னாளில் தேவைப்படுமோ?

சந்திப்பு நிகழ்ந்தது.

முன்னம் கூறிய படி சந்திரகுப்தன் நந்தனின் பெரும் செல்வக் களஞ்சியங்களைப் பற்றிக் கூறி அவனை உசுப்பேத்தினான்.

மேலும் அலெக்ஸாண்டரின் தளபதிகளைச் சந்தித்து:

“தளபதிகளே! போரஸின் 30 யானைகள்  உங்களை எப்படித் தாக்கியது? கங்கை நதியைத் தாண்டினால் அங்கு 6000 யானைப்படைகள் உங்களை துவம்சம் செய்யத் தயாராகக் காத்திருக்கிறது. நன்று யோசித்து அலெக்சாண்டருக்கு  அறிவுரை கூறுங்கள்”

மாதங்கள் பல சென்றன.

அலெக்சாண்டர் மற்றொரு போரில் காயப்பட்டான். ஆனாலும் நந்தனின் செல்வம் அவனை ஈர்த்திருந்தது. ஆனால் தளபதிகள் முரண்டு பிடித்ததால் அலெக்சாண்டர் இந்தியாவிலிருந்து திரும்பினான்.

சந்திரகுப்தன் – சாணக்கியர் இருவரும் தக்ஷ்சீலத்தை விட்டு ரதத்தில் பாடலிபுத்திரத்தை சென்று அடைந்தனர். காட்சிகள் மாறின. பாடலிபுத்திரம் மாட மாளிகைகளுடனும் பரந்த சாலைகளுடனும் விளக்கின் ஒளியாலே அலங்கரிக்கப்பட்டு மின்னியது. நகரின் எந்த பகுதியிலும் ராணுவ வீரர்கள் அணிவகுத்து சென்றனர். மக்கள் தங்களுக்குள் – நந்த ராஜனைப் பற்றியும் அவனது வரி பற்றியும் பேசித் துயருற்றனர். வளர்ந்து வரும் தலைவன் சந்திரகுப்தன் அவர்களுக்கு ஒரு தெய்வ தூதனாகவே தோன்றினான்.

சந்திரகுப்தன்- சாணக்கியர் நேரடியாக நந்தனின் அரண்மனையை கத்தியில்லாமல் – ரத்தமில்லாமல் வெல்ல முயன்று தோற்றனர்.

அனைவரும் அறிந்த கதை தான் இது:

மகத நாட்டு எல்லையில் ஒரு சிறு கிராமம். அங்கு ஒரு குடும்பத்தோடு சந்திரகுப்தன் தங்கியிருந்தான். அவன் தான் சந்திரகுப்தன் என்று அவர்களுக்குத் தெரியாது. அந்த வீட்டில் சிறுவன் சூடான சப்பாத்தி சாப்பிடும் போது அவசரமாக நடுவில் கையை வைக்க –  சூடு தாங்காமல் அலறினான்.

அதற்கு அவன் அன்னை:

“அட.. ஏன் நடுவில் இருந்து சாப்பிடுகிறாய்? சந்திரகுப்தன் நந்தனின் அரசை நடுவில் தாக்கியது போல செய்கிறாயே!  விளிம்பில் இருந்து சாப்பிடு. சுகமாகச் சாப்பிடலாம்.”

சந்திரகுப்தனுக்கு இது வேத வாக்காகத் தெரிந்தது. படைகளைத் திரட்டினான்.

பல இளைஞர்கள் அவனுடன் சேர்ந்து கொண்டனர்.

சந்திரகுப்தன் ஓலை அனுப்ப – புருஷோத்தமனும் படைகளை அனுப்பி உதவி செய்தான். சாணக்கியர் தனது உயர்ந்த மாணாக்கர்களைச் சேர்த்துக் கொண்டார். தக்ஷசீலத்தின் தளபதி – சந்திரகுப்தரின் நண்பன். அவனும் இந்த சேனையில் சேர்ந்தான்.

‘மலை நாயகன்’ என்று அழைக்கப்பட்ட குறு நில மன்னன் – மிகவும் சக்தி வாய்ந்தவன்.  அவன் படையும் திறமை மிக்கது. சாணக்கியர் மலை நாயகனனுடன் சந்திரகுப்தனுக்காக ஒரு கூட்டணி அமைத்தார்.

சாணக்கியர்: “நாம் வென்றால் நந்த நாட்டில் ஒரு பகுதி உனக்கு”!

மலை நாயகன் சந்திரகுப்தரின் படையில் சேர்ந்தான்.

மகத எல்லையிலிருந்து மெல்ல உள்நோக்கிப் படைஎடுத்து – அங்கு மக்கள் ஆதரவும் பெற்றுப் பின் நந்தனை வென்றான் சந்திரகுப்தன்.

‘தன நந்தன்’ கைது செய்யப்பட்டு அரண்மனைக் கூடத்தில் கொண்டு வரப்பட்டான்.

அன்றைய நாளின் மிகப்பெரிய கேள்வி:

‘நந்தனை என்ன செய்யலாம்?’

சாணக்கியன் குடுமியை முடித்திருந்தான்.

முகத்தில் வெற்றிப் பெருமிதம்.

தன நந்தன்: “சாணக்கியரே! அன்றொரு நாள் நீங்கள் என் நிலையில் இருந்தீர்! உம்மை நான் உயிருடன் விட்டேன் என்பதை நினைவு கூறும்”

சந்திரகுப்தன் சாணக்கியரின் பதிலுக்காகக் காத்திருந்தான்.

“உண்மை தான் தன நந்தரே! நீர் சாவது எங்களுக்கு முக்கியமல்ல… நாடு சாவாமல் இருப்பதே முக்கியம். தன நந்தா! நீ உன்னால் சுமக்க முடிந்த தனங்களை மட்டும் எடுத்துக் கொள். எங்கள் கண் காணாத இடத்துக்குச் சென்று விடு. ஆனால் எங்கள் கண்ணில் பட்டால்.. அதன் பிறகு உன் உயிருக்கு எந்த உத்தரவாதமும் இல்லை”

தன நந்தன் சரித்திரத்திலிருந்து மறைந்தான்.

பாடலிபுத்திரம் புதுப் பொலிவு பெற்றது.

சந்திரகுப்தன் மகதத்தின் அரசனானான்.

மௌரியர் ராஜ்யம் மலர்ந்தது.

மக்கள் விரும்பிய மன்னன்.

சாணக்கியர் போன்ற மகா மந்திரி.

பொற்காலம் ஒன்று பிறந்தது.

his3

இத்துடன் இந்தக் கதையை முடித்திருக்கலாம். ஆனால் சந்திரகுப்தன்- சாணக்கியர் கூட்டணி இன்னும் பல வெற்றிகளை அடைந்தது.

அரண்மனை ஆலோசனைக்கூடம்:

சந்திரகுப்தன்: “ஐயா! மலை நாயகன் மறைவு பற்றி”

சாணக்கியர்: “அவன் தான் அகால மரணம் அடைந்தானே! நாட்டின் எல்லாப் பகுதிகளும் உனக்கே!” – அவரது குரலில் சோகத்தை விட ஒரு சந்தோஷமே தென்பட்டது.

சந்திரகுப்தன்: “அவன் விஷமிடப்பட்டதாக….ஒரு வதந்தி…”

சாணக்கியர்: “அரசியலில் சில விஷயங்கள் நடக்கும்… அது விஷமாகவும் இருக்கும். விஷமமாகவும் இருக்கும். அது நமக்கு விசேஷமாக உதவினால் அதை ஆராயக்கூடாது”

சந்திரகுப்தனுக்குப் புரிந்துவிட்டது…

“அப்ப புருஷோத்தமன்?”

“புருஷோத்தமன் நமக்குத் தேவை. அவனால் தான் மேற்கு நாட்டைக் காக்க முடியும். மேலும் கிரேக்கர்கள் வருவதைத் தடுத்து நிறுத்துவது அவசியம்”

“ஆஹா… நீங்கள் இருக்கும்போது எனக்கு என்ன கவலை”

சாணக்கியர் குறுக்கும் நெடுக்குமாக நடக்கத் தொடங்கினார்.

கவலை அவர் நெற்றிச் சுருக்கத்தில் நெளிந்தது.

சந்திரகுப்தன்: “இன்னும் என்ன யோசனை தலைவா?”

சாணக்கியர்: “சந்திரகுப்தா .. நமது வெற்றி முழுமையாகவில்லை… புரிந்தததா?”

சந்திரகுப்தன்: ”ஆமாம் … நமது திட்டத்தின் படி நந்தனை வென்றோம். ஆனால் … அலெக்சாண்டர் போன பிறகு மாசிடோனியாவின் செலுகஸ் நிகேடர் (Seleucus Nicator)  … மேற்கில் ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்க உள்ளான். அதை…அவனை.. முறியடிக்க வேண்டும்”

“சரியாகச் சொன்னாய்”his4

வெகு விரைவில் காரியங்கள் நடந்தேறின.

படையெடுப்பு நடந்ததது. செலுகஸ் நிகேடர் தோல்வி அடைந்தான். உடன்படிக்கைப் படி இளவரசியான தன் மகள் ஹெலெனா (helena) வை சந்திரகுப்தனுக்கு மணம் முடித்தான்.

his5

மேலும் அவன் வசமிருந்த- காந்தாரம், காம்போஜம், காந்தகார், பலோசிஸ்தான் பகுதிகள் சந்திரகுப்தன் அரசுடன் இணைந்தது. பதிலுக்கு 500 யானைகளைப் பெற்றான்.

his6

‘இந்தியாவின் காவலன்’ என்ற இந்தக் குறுங்கதை  நிறைவு பெறுகிறது.

(சாண்டில்யனும் – கல்கியும் மன்னித்து அருள்வார்களாக)

சரி….எந்த கதை நாயகனுக்கும் – அவனது வெற்றிக்காலம் முடிந்த பின் கஷ்டங்கள் வரும். மனிதனாகப் பிறந்தாலே இது சகஜம் தானே!

பரசுராமருக்கு ராமனைச் சந்திக்கும் வரை தான் வெற்றி.

ராமன் பட்டாபிஷேகம் முடிந்த பின் அடைந்ததது சோகங்களே.

கிருஷ்ணன் தன் மகன்கள் அனைவரும் அடித்துக்கொண்டு சாவதைக் கண்டு நொந்தான்.

பாண்டவர்கள் மகாபாரதம் முடிந்த பின் சந்தோஷமென்பதே அறியவில்லை.

அதே போல் நம் நாயகன் சந்திரகுப்தன் கதையிலும் சோகங்கள் … அதை விட்டு விடுவோம்.

இன்னும் சில வருடங்கள் கழித்து –இந்த வம்சத்தில்- உலகம் போற்றும் மாமன்னன் – ‘மகா அசோகன்’ தோன்றுவான்.

சரித்திரம் இன்னும் பேசும்….

***சிறு குறிப்பு:

‘இந்தியாவின் காவலன்’ என்ற சரித்திரக் கதையா?.. மருந்துக்கு ஒரு பெண் பாத்திரமே இல்லை என்ற குற்றம் சொல்பவர்களே! அமரப்பள்ளி என்ற அழகியைப் பற்றி கோடி காட்டியுள்ளேன்! நீங்கள் ஆணையிட்டால் அமரப்பள்ளி என்ற சரித்திரக்குறுங்கதை எழுதத் தயார். Circulation worry கொண்ட குவிகம் ஆசிரியரும் மகிழ்வார் !