ஏனோ புரியவில்லை ஏன் அவளை நான் வெறுக்கவில்லை என்று !
காரணம் தெரியவில்லை ஏன் அவள் மீது இன்னும் பரிவு என்று !

ஒன்று மட்டும் புரிகிறது  அவள் முழுக்க முழுக்க நல்லவள் அல்ல 
எனக்கும் அவளைப் பிடிப்பதில்லை  என்னிடமே நடிக்கிறாள்

அப்பாவி போல என்னிடம் கொஞ்சிச் சிணுங்கிச் சிரிக்கிறாள் 
வேஷம் போட்டு மோசம் செய்வதில் அவள் கைதேர்ந்த கைகாரி

அவள் மனதின் சாக்கடை உடம்பில் முத்துமுத்தாய் வேர்க்கிறது 
அழகான தோல் என்று அளவுக்கு மீறி கர்வம் திமிர் அகங்காரம்

பாசம் உறவு நட்பு எல்லாம் அவளுக்குக் காறித்துப்பும் எச்சில்
கண்மூடித்தனமான என் பரிவு பரிதாபம் நேற்றோடு முடிந்துவிட்டது.

நான் யாரென்று காட்டவேண்டும், தண்டித்தேயாக வேண்டும்!
எப்படி ?  எப்படி ? கத்தியா? கடப்பாறையா ? கடுவிஷமா ? 

பொல்லாதவள்  அவள் சாகசக்காரி என்னை ஏமாற்றிவிடுவாள் 
பொறுத்தது போதுமென பொங்கி  முடிவுகட்ட முடிவு செய்தேன் 

நினைத்ததை முடித்து விட்டேன் அவளைக் கொன்று விட்டேன் 
ஒன்று புரியவில்லை  ஏன் அதைத் தற்கொலை என்கிறார்கள் ?