(படம்: நன்றி,  நவீன விருட்சம்)

மரபுக் கவிதையின் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகியவற்றிலிருந்து விடுவித்துக் கொண்ட கவிதைகளை புதுக்கவிதை அல்லது  நவீனக் கவிதை என்றும் சொல்லலாம்.  

இரண்டும் ஒன்றா? வெவ்வேறா?

கவியரங்கத்திலும் , வாரப் புத்தகங்களிலும் வசனத்தை அப்படி இப்படி உடைத்து தங்களைத் தாங்களே சிலாகித்துக் கொள்வதுதான்   புதுக் கவிதை என்று சொல்லிக் கொள்ளப்படும் வசன கவிதை.  புதுக் கவிதைகளைப் படிக்கும் போது ஒவ்வொரு வரியையும் இரண்டு தடவை படிக்கணும். கேக்கறவங்க ரெண்டாவது தடவை படிக்கும் போது கை தட்டணும். பெரும்பாலும் முகஸ்துதியாகவே இருக்கும்.
 
 
 நவீன கவிதை என்பது ந.பிச்சமூர்த்தி, க.நா.சு, நகுலன், பிரமிள், ஆத்மாநாம், ஞானக்கூத்தன்,   சுந்தர ராமசாமி ( பசுவய்யா ), சி.மணி, கலாப்ரியா, கல்யாண்ஜி, தேவதேவன், தேவதச்சன், சுகுமாரன், சமயவேல், மனுஷ்ய புத்திரன் போன்றவர்களின் கவிதைகளையே சொல்லவேண்டும்.
 
அது சரி, இந்த நவீன கவிதைகள்  எப்படியிருக்கும் ?
 
வித்தியாசமான களமாக இருக்கும்.
 
கொஞ்சம் புரிகிற மாதிரி இருக்கும்.  கவிஞன் படிப்பவனுடன் நேராக உரையாடுவான். சங்கப் பாடல் மாதிரி இவற்றையும் யாராவது விளக்கிச் சொன்னால் தான் புரியும். புரிந்த பிறகு மீண்டும் படித்தால் ‘ஆகா..ஆகா..’ என்று சொல்லிச் சொல்லிக் குதிக்கத் தோணும்.
 
நவீனக் கவிதைகள் ஆழ் மனத்தில் ஒருவிதத்  தாக்குதலை ஏற்படுத்துகின்றன. நவீனக் கவிதைகளின் முக்கியச் சாறு  அதில் கொப்பளிக்கும் அனுபவங்கள் தான். கவிஞன் மனத்திலிருந்து படிப்பவன் மனத்திற்கு அப்படியே அம்பு போலப் பாயும். மனத்திற்கு வலி உண்டாகும். இன்ப வலியாகவும் இருக்கலாம். துன்ப வலியாகவும் இருக்கலாம். அது என்ன என்பதைப் புரிந்து கொள்ள நேரமும் ஆகலாம். அல்லது புரியாமலும் போகலாம்.  புரிந்தபிறகு கிடைக்கும் சுகானுபாவம் அப்படியே வெகு காலம் இருக்கும். 
 
படிமம், குறியீடு, பின்புலம் , பங்களிப்பு, வீச்சு, பெண்ணீயம் போன்ற பல சமாசாரங்கள்  இந்த நவீனக் கவிதைகளின் ‘ஜார்கன்’கள்.
 
உதாரணத்திற்கு ‘உடைந்த பாறை’ என்பது ஒரு படிமம்.  பாறை என்பது வெறும் கற்பாறை மட்டுமே இல்லை. அது நொறுங்கிய மனதினைக் குறிப்பிடக் கூடியதாக  இருக்கலாம். படிப்பவன் தன்  அனுபவத்தைச் சேர்த்து  அந்த படிமத்தைப் புரிந்து கொள்வான்.  ஆனால் எல்லாக் கவிதைகளிலும் படிமம் இருக்க வேண்டிய அவசியமுமில்லை. மிக எளிமையான, நேரடியான நவீன கவிதைகள் இருக்கின்றன. படிமக் கவிதையின் சிக்கனத்திற்கும் பளிச்சிடும்தன்மைக்கும் இணையாக உலகக் கவிதை வரலாற்றிலேயே வேறொன்றையும் முன்னுதாரணமாய்க் காட்ட முடியாது.
  
 இந்த நவீன கவிதையின் ஆரம்பமாக பிச்சமூர்த்தியின் முதல் கவிதை ‘காதல்’மணிக்கொடி இதழில் வெளிவந்தது.  பிறகு எழுத்து’-வில் எழுதத் தொடங்கிய தர்மு சிவராமு என்கிற பிரமிள்.  பிறகு  தேவதேவன். சுகுமாரன் . சத்யன் ,  ரமேஷ்-பிரேமின் போன்றோர் படிமக் கவிதைகளுக்கு உயிர் கொடுத்தனர்.
படிமம் தமிழ்க்கவிதைக்கு ஒரு முக்கிய வரவு. ஆனால் அதைப் பயன்படுத்திய பெரும்பான்மையோர் வெறும் உத்தியாகவும் அலங்காரமாகவும் பார்க்கத் தொடங்கியவுடன் ‘படிமம்’ வீழ்ச்சியடைந்தது. சங்கக் கவிதைகளில் இருந்த  உருவகம், ஒப்புமை, அணி போன்றவற்றின் மாறுபட்ட வரவு தான்   படிமம்.
 

இம்மாதிரிக்  கவிதைகள்  ஒரு சிறு குழுவுக்கான மொழியாகச் சுருங்கிப் போய்விட்டது. அறிவு ஜீவிகளுக்கென்று இந்தக் கவிதைகள்  முத்திரை குத்தப்பட்டு தற்போது அழியும் நிலையில் இருக்கின்றன.

சில  அருமையான நவீனக் கவிதைகளைப் பார்ப்போம் :


IMG_3066

ந .பிச்சமூர்த்தியின் கவிதை

வாழ்க்கையும் காவிரி
அதிலெங்கும் கிளிக்கூண்டு;
வார்த்தையே மணல்
ஓசையே ஜலம்
என் தீராத வேட்கையே
குவிக்கும் விரல்கள்.
பாட்டென்னும் கூண்டொன்று அமைத்தேன்;
அழகென்னும் கிளியை அழைத்தேன்.
ஆறெங்கும் கிளிக்கூண்டு கட்டுவேன்
அழகினை அழைப்பேன் நான் எந்நாளும்

க.நா.சு அவர்களின் கவிதை :

மழை பெய்யும்போது அதில் நனைந்தால்
சளி பிடிக்கும் என்று நனைய மறுத்துவிட்டேன்
காற்று அடிக்கும்போது தொண்டையில்
புழுதிபடியும் இருமல் வந்து தூங்க
விடாது துன்புறுத்தும் என்று
ஜன்னல்களைச் சாத்தி விட்டேன்
யாரோ எழுதிய நூல்களைக் கிடைக்கும்போது
படித்துப் படித்துப் பார்வை
குறுகிப் போகிறதே தவிர ஞானம்
பிறக்கவில்லை என்று படிப்பதை
நிறுத்தி விட்டேன் புஸ்தகங்களைத்
தலைமாட்டில் வைத்துக்கொண்டு
படிக்காமல் இருக்கப் பழகிவிட்டேன்
காதலிகள் தேடி வந்தபோது ஆசை
அடித்துக்கொண்டாலும்
ஊரார் ஏதாவது சொல்வார்கள்
ராஜி ஆக்ஷேபிப்பாள் என்று
பயந்து ஒதுங்கி ஒதுங்கிப்
போய் விட்டேன். காதலி
வேறு யாரையோ நாடிப்
போய் விட்டாள். அவள்
போவதை சாத்திய கதவு
வழியாகப் பார்த்துப் பெரு
மூச்சு விட்டு நின்றேன்.
சாவு என்கிற அனுபவம் ஏற்படும்போது
மறுபடி அதை விவரிக்க ஒரு
சந்தர்ப்பம் ஏற்படும் என்று
இரண்டாவது சாவுக்கும்
காத்து நிற்கிறேன்.

 

நகுலன் அவர்களின் கவிதா வரிகள்:

 

பசவய்யா என்ற சுந்தர ராமசாமி எழுதிய கவிதை

என் நினைவுச்சின்னம்

இரங்கற் கூட்டம்போட ஆட்பிடிக்க அலையாதே
நம் கலாச்சாரத் தூண்களின்
தடித்தனங்களை எண்ணி
மனச்சோர்வில் ஆழ்ந்து கலங்காதே

இருப்பினும்
நண்ப,
ஒன்று மட்டும் செய்.

என்னை அறியாத உன் நண்பனிடம்
ஓடோடிச் சென்று
‘கவிதையை எழுப்ப முயன்று கொண்டிருந்தவன்
மறைந்து விட்டான்’ என்று மட்டும் சொல்.
உன் கண்ணீர் ஒரே ஒரு சொட்டு
இந்த மண்ணில் உதிரும் என்றால்
போதும் எனக்கு.

 

பிரிவு – சி.மணி கவிதை

வேதனை, விழிக்கு  விளிம்பு கட்ட
நீர்காணா ஏரிபோல் நெஞ்சு பிளக்க
தூறலிடைக் காடாக மாநிலம் மங்க
குளவியின் துளையொலி செவியில் சுழல
விழுந்த பிணமணம் நாசியில் ஏற
கசக்கும் நாக்கு மண்ணைச் சுவைக்க
அனலும்  பனியும் மேனிக்கு ஒன்றாக
சாக்காட்டு உலகில் என்னை விட்டு
கூடுவிட்ட பறவையென
ஓடி மறைந்தாய்

கல்யாண்ஜி (வண்ணதாசன்) அவர்களின் கவிதை முத்து

நிலா பார்த்தல்

ரயில் வண்டியின் குலுங்குகிற
ராத்திரி விழிப்பில்
கண்ணாடி ஜன்னல் வலி
கலங்கி தெரிந்தது
நீரற்று ஆற்று மணல் மேல் நிலா.

மரணத்திலிருந்து
தாபித்த கண்கள்
மருத்துவமனைக் கட்டிலில்
உறங்க,
கணக்கும் மனதுடன்
நிசியில் வெளிவந்தது நின்ற பொழுது
வேப்பமர கிளைகளுக்கிடையில்
நிலா அசைந்தது.

தானாக இப்படி
தட்டுப்பட்டது தவிர
நிலா பார்க்க என்று போய்
நிலா பார்த்து நாளாயிற்று.

தேவதேவனின் அன்பின் முத்தம் கவிதை

 

பார்த்திருக்கிறாயா?
பாலை நடுவே ஒரு கடலை?
அங்கே
உள்ளங் கைகளின் பாதுகாப்பில் வரும்
சுடராக, ஒரு குடம் தண்ணீரை, ஏந்தியபடி
அலைகளிலே அசைந்து வரும் படகை?

பருகியிருக்கிறாயா,
பருகும் ஒவ்வொரு துளி நீரிலும்
உள்ளதாம் அன்பின் முத்தம்?

கலங்கியிருக்கிறாயா என்றாவது,
எனக்கு எனக்கு எனப் பதறும் கைகளால்
குடம் நீர் கவிழ்ந்து
கடல் நீரோடு கலந்துவிட்டதைக் கண்டு?

பருகு நீர், பறவைகள், பூ, மரம், காடு
பொங்கும் குழந்தைமை – எங்கே? எங்கே?
தவிதவித்திருக்கிறாயா,
சூர்ய அடுப்பாக மாறி
இழந்ததையெல்லாம் மீட்பதற்கு?

இறுதியாக,
உன் துயரங்களினின்றும்
உயிர்த்தெழுந்திருக்கிறாயா,
தன்னந்தனியாய் அப்படகில் வரும்
அந்தத் தண்ணீர்க் குடமாக?

 

தேவதச்சனின் கவிதை

சிறுமி கூவுகிறாள்.

நான் போகிற இடம் எல்லாம் நிலா
கூடவே வருகிறதே.
சிறுவன் கத்தினான்.
இல்லை. நிலா என்கூட வருகிறது
இருவரும் சண்டை போட்டுக்கொண்டு திருப்பத்தில்
பிரிந்தனர்.
வீட்டிக்குள் நுழைந்து, உடன்
வெளியே வந்து எட்டி பார்க்கிறாள்.
நிலா இருக்கிறதா?
இருக்கிறதே
அவள் சின்ன அலையை போல சுருண்டாள்
அந்தச் சின்ன அலையில் கரையத் தொடங்கியது நிலவொளி
எல்லோர் கூடவும் போன நிலா பிறகு
எங்கே போனதென்று
எல்லோருக்கும் தெரியவில்லை

 

சுகுமாரனின் கவிதை விளாசல்

காமம் செப்புதல்

நீ தாகபூமியும்
நான் நீர்மேகமுமாய் இருந்தோம்
பிணக்குக்கு முன்பு.

உன் விடாய் தணிக்கப்
பொழியத் தயங்கியதே பிணக்கின் காரணம்

பிணங்கிக் குமுறிய பூமி
மேல்நோக்கி உருண்டது
நின்று தயங்கிய மேகம்
தழைந்திறங்கி மல்லாந்தது

இந்த உடற்பெயர்ச்சியில்
இப்போது
பூமி நான்
மேகம் நீ

பூமியை உறிஞ்சிவிடப்
பொழிகிறது
பொழிந்து தணிகிறது மேகம்

சினம் தணியக்
கூடலும் ஆயுதம் ஆவதெப்படி?
யோசித்துக் கிடந்த என் உதடுகளில்
சொட்டி விழுகிறது உன்
ஒரு துளிக் கண்ணீர்

அந்த ஒற்றைத் துளியில்
நூறு கடலின் உவர்ப்பு
அந்த ஒற்றைத் துளிக்கு
உறைபனிப் பாறையின் கனம்.

சமயவேல் கவிதை

விடுமுறை வேண்டும் உடல்

எதைப் பற்றியும் கவலை இல்லை உடலுக்கு
தன்னைப் பற்றியே
பெரும் கவலை கொள்கிற உடல்
முடிந்த போதெல்லாம் விடுமுறை கேட்டு
நச்சரிக்கிறது
பேருந்துப் பயணம் ரயில் பயணம் அலுவலகம் என
எதுவும் வேண்டாம் என்று அடம் பிடிக்கிறது
சும்மா ஒரு பனை மரத்தைச் சுற்றியிருக்கும்
முசுமுசுக்கைச் செடி (சாறுண்ணி) போல் அல்லது
வற்றிய கண்மாயின் அளிச்சகதியில் புரளும் எருமை
என எப்படியும் இருப்பேன் என்கிறது
விடுமுறை விடுமுறை எனும்
யாசகச் சொற்களை பரப்பிக் கொண்டே அலைகிறது
எதுவும் செய்யாமல் அக்கடா என்று
சும்மா கிடக்கும் ஆனந்தம்
பற்றிய அனேக நிறமிகளை
மூளைக்கு அனுப்பிய வண்ணம் இருக்கிறது
மிகுதியும் கனவு காணும் விருப்ப்த்துடன்
வெண்சிவப்பு மதியங்களில் கொட்டாவி விடுகிறது
எனது உடல் என்னைவிட்டு வேறு யாரிடம்
கேட்கும் என சம்மதித்தபடியே இருக்கிறேன்.

ஆத்மாநாம் அவர்களின் கவிதை.

எனது சுதந்திரம்
அரசாலோ தனி நபராலோ
பறிக்கப்படு மெனில்
அது என் சுதந்திரம் இல்லை
அவர்களின் சுதந்திரம்தான்

உனக்கொரு அறை
உனக்கொரு கட்டிலுண்டு
உனக்கொரு மேஜையுண்டு
உனக்குள்ளே ஒரே உரிமை
சிந்திப்பது மட்டும்தான்

மலைகளைப் பார்
மரங்களைப் பார்
பூச்செடிகளைப் பார்
ஜீவநதிகளைப் பார்
பரந்த கடலைப் பார்
இதமூட்டும்
கடற்கரையைப் பார்
எவ்வளவு இல்லை நீ பார்க்க
ஏன் அக்கசடர்களைக் குறித்து
வருந்துகிறாய்
குமுறுகிறாய்
எழுத்துக் கூட்டங்களைச் சேர்க்கிறாய்

உன் வேலை
உன் உணவு
உன் வேலைக்கு போய்வரச் சுதந்திரம்
இவற்றுக்கு மேல்
வேறென்ன வேண்டும்
சாப்பிடு தூங்கு மலங்கழி
வேலைக்குப் போ
உன் மீது ஆசை இருந்தால்
குறுக்கிடாதே.

ஞானக்கூத்தன் கவிதை

  
பசு மாட்டின்
தலை
கால்
மடி
வால்
ஆசனம்
முதலான இடங்களைத்
தேவதைகள் தங்கள்
இருப்பிடங்களாகக் கொண்டுள்ளார்களாம்
இன்று நானொரு
யானையைப் பார்த்தேன்
தென்கலை நாமம் திகழ
பெரிய புல்லுக்கட்டு
தென்னை மட்டை
தேங்காய்களை நிதானமாகத்
தின்று கொண்டிருந்தது
யானையைக் கேட்டேன்
பசுவைப் போல் உன் உடம்பில்
தேவதைகள் இடம் பிடித்திருக்கிறார்களா என்று
எனக்கே போதாத என் உடம்பின்
எல்லா இடங்களிலும்
நானே வாழ்கிறேன்
என்றது யானை.
 
 

கலாப்பிரியாவின் கவிதை 

 

விதி

அந்திக்கருக்கலில்
இந்தத்திசை தவறிய
பெண்பறவை
தன் கூட்டுக்காய்
தன் குஞ்சுக்காய்
அலை மோதிக்கரைகிறது.

எனக்கதன்கூடும் தெரியும்
குஞ்சும் தெரியும்

இருந்தும்
எனக்கதன்
பாஷை புரியவில்லை.

மனுஷ்ய புத்திரன் கவிதை

 

ஒரு யானையென வீழ்ந்த
எங்கள் வயலோர மரம்
நெடுஞ்சாலை போக்குவரத்தை
ஸ்தம்பிக்கச் செய்துவிட்டதாகச் சொன்னார்கள்

எனக்கு போய்ப்பார்க்க
மிகவும் ஆசை

காலம் செறிந்த வேர்களின்
கடைசி உயிர் வாசமும்

ஒரு மரத்தின் வெற்றிடத்தில்
இம்மழை
எச்சலனங்களோடு
பெய்யுமென்றும்

இருமல்கள்
முணுமுணுப்புகள்
மலஜல ஈரக்கடன்கள்
ஏதும் அற்ற
ஒரு சாந்த நீங்குதலும்
நான் அறியாதவை

போய்ப் பார்த்துவிடவேண்டும்
எப்படியென

இன்றைய தலைமுறை இளைஞர்களும் வித்தியாசமான நவீனக் கவிதைகளை எழுதி நம் ஆழ் மனத்தில் தாக்கம் ஏற்படுத்துகிறார்கள். அவற்றைப் பிறகு பார்ப்போம்