
தமிழும் ஆங்கிலமும் கலந்து பேசுவது தங்கிலிஷ் !
அதைப்போல் தமிழும் மலையாளமும் கலந்து பேசுவது தலையாளம்.
அந்தத் தலையாளத்திற்கென்றே அழகாய் அமைந்தது பாலக்காட்டுத் தமிழ். அதில் ஒரு ஓசை நயம் இருக்கும். ஒரு சங்கீத வாசம் இருக்கும்.
பெரும்பாலும் பாலக்காட்டுப் பெண்ணைத் தஞ்சாவூர் மாப்பிள்ளைக்குக் கட்டுவார்கள். அவர்களுக்குள் இருக்கும் கலாசார மாறுபாடுகள் இரண்டு குழந்தை பிறந்த பிறகுதான் சம நிலைக்கு வரும்.
பல படங்களில் பேசப்பட்டாலும் மைக்கேல் மதன காமராஜனில்தான் பாலக்காட்டுத் தமிழ் கமலஹாசனால் ரசிக்கும்படிப் பேசப்பட்டிருக்கும்.

அதில் கமலும் ஊர்வசியும் பேசும் காட்சியைப் பாருங்கள். அந்த சீன் உங்களுக்காகக் கீழே காத்திருக்கு. அந்த ஓ.. ஓ.. சொல்லும் அழகு.. பாலக்காடுத் தமிழ் இழையும்.
சரி , பாலக்காட்டுத் தமிழின் ஸ்பெஷாலிடியைப் பார்ப்போமா? நெட்டில் பல இடங்களில் தேடியதில் கிடைத்த தகவல் இவை.
பாலக்காடு பிராமணர்களின் குடும்பக் கட்டுக்கோப்பு அழகாக இருக்கும்.
என்ன பிரச்சினை என்று வந்தாலும் கடைசியில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து சமாதானமாகிவிடுவார்கள். அதுதான் அவர்களின் மாபெரும் சிறப்பு.
கூட்டுக் குடும்பம், உறவினர்கள் – பெரியவர்களுக்கு மரியாதை, நளினம், பாந்தம், அமைதி, பொறுமை, குருவாயூரப்பன், பாரம்பரிய உடை, விஷுக்கனி, தலைக் குளியல், சுத்தம், சுகாதாரம், அழகு உணர்ச்சி, மூக்குத்தி, வேஷ்டி உடுத்தும் ஆனால் பனியன் போடாத ஆண்கள், பாவாடை தாவணி முண்டு பெண்கள், பாட்டு, ஸ்லோகம், தெய்வபக்தி, படிப்பு, இங்கிலீஷ் பிரியம், கொஞ்சம் தண்ணியா நிறைய கோப்பி ( கும்பகோணம் டிகிரிக்கு மாறுதல்) , நல்ல ரசனை, தெச்சிப்பூ, சந்தனம் இட்டுக் கொள்ளும் அழகு, குழந்தைகளைப் பாசத்துடன் வளர்க்கும் முறை, பால் பாயசம், நேந்தரம்பழம், பலாப்பழம்,வித்தியாசமான ருசியான சமையல், சத்தம் போட்டுப் பேசும் தன்மை, பிடிவாதம், பேச்சில் வாதம் போன்ற எல்லாமே நன்றாக நேர்த்தியாக இருக்கும்.
சமையலில் பாலக்காட்டுக்குத் தனித்துவம் உண்டு. தேங்காய் இல்லாமல் சமைத்தால் அது ஒரு சமையலா? என்பார்கள்.
பாலக்காட்டில் ‘வாடா போடா வாடி போடி’ கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். “அண்ணா வாடா !.. போனைக் கொடுடி ! ” இதெல்லாம் அங்கே சாதாரணம்.
நாம ரிசர்ச் பேப்பர் எழுதப் போறது இல்லை. பாலக்காட்டுத் தமிழை ஒரு குட்டி நாடகத்தின் மூலம் பாப்போமா ?
அதன் ஸ்கிர்ப்ட் இப்படி.
ஆண்: என்டே குருவாயூரப்பா !
பெண்: : விளிச்சேளோ?
ஆண்: ஏய்ய்.. பகவானைத் தொழுதேன்.
பெண்: அசலாத்தில என்ன பேசிண்டிருக்கா தெரியுமா?
ஆண்: நோக்கும் நேக்கும் சண்டைன்னா? ஓ……எத்தற பிராவஷ்யம் சொல்லி யிருக்கேன். அவாளெல்லாம் பிராந்தாக்கும். கிட்டியா? “
பெண்: அல்லா. நாம தான் மோஷமாம். எப்பவும் ஈஷிண்டிருக்கோமாம்.
ஆண்: ஓ….. ..கொஞ்சங்கூட விவஸ்தையே இல்லை. அவாளாலே நமக்கு எப்பவும் புத்திமுட்டு. எனக்கு வர்ற ஆத்திரத்தில அவாளை நாலு சவுட்டு சவுட்டணும் போல இருக்கு.
பெண்: நல்ல நாளா ஏன் இப்படி வையரேள்? நாளைக்கு நம்ம குட்டனுக்கு ஆத்யம் சோறு கொடுக்கப்போறோம். என்னென்ன பண்ணணும்னு வாத்தியார் சொன்னாரே ? ஒரு பிராவஷ்யம் திருப்பிச் சொல்லுங்களேன்.
ஆண்: மொதல்லே நேக்குக் கொறச்சு வெள்ளம் கொண்டுவா! …… நா வறள்ரது. அப்பிடியே இந்தக் கிடக்கை , போத்தி, பொதப்பு எல்லாம் எடுத்து மடிச்சு வச்சுடேன்.
பெண்: நீங்க உங்க தோர்த்து , முண்டு எல்லாம் சரிக்க போட்டுக்கோங்கோ அசலாத்து மாமி பாத்தா சிரிப்பா.
ஆண்: நேக்கென்னடி. நான் மிடுக்கன். நீயும் மிடுக்கி தான். ஒரேடியா விஸர்க்கரது. அதான் காத்து வாங்கறாப்போல இருக்கேன்.
பெண்: நேக்கு தணுக்கறது. நேத்திக்கு தோஷை சாப்பிட றச்சே எரிஞ்சு பத்தித்து. பனியோன்னு ஸம்ஸயம்
ஆண்: கிட்ட வா பாக்கறேன்.
பெண்: நீங்கிக்கோங்கோ! உங்களுக்கு களிப்பா இருக்கா? இன்னிக்கு மடி. சித்தே சும்மா இருங்கோ.
ஆண்: இங்கே பார். நான் அரி, பஞ்சாரை, பப்படம், மத்தன் ,எளவன், உள்ளி ,சக்கை,நேந்த்ரங்காய் ,மொளகாப்பழம் எல்லாம் மெனக்கிட்டு வாங்கிட்டு வந்துட்டேன், கிட்டியா ? மனசிலாச்சா?
பெண்: ஈஸ்வரா , உள்ளியை ஏன்னா வெறுமனே வாங்கிட்டு வந்தேள் ?
ஆண்: சாரமில்லை. தெரியாம வாங்கிட்டு வந்து இப்போ வாங்கிக் கட்டிக்கறேன். அதுக்கு ஏன் கரையரே?
பெண்: உங்களுக்கென்ன, மச்சில போய் சீட்டாடிண்டிருப்பேள். நான்னா அத்தரை ஜோலியும் இழுத்துப் போட்டுச் செய்யணும். உங்க அத்தங்கா, அம்மாஞ்சி, அத்தான்மன்னி, அம்மாமி எல்லாரும் . குத்தம் சொல்ல மட்டும் ஸ்பஷ்டமா வந்துடுவா.
ஆண்: அவாளை விடு , என்னென்ன அயிட்டம் பண்ணப் போறே நீ?
பெண்: பாலடைப்பிரதமன், மோர்க்கூட்டான், மொளகூட்டல் , பொரிச்சுழம்பு, புளிய குத்தி உப்பேரி, ரசகாளன், குறுக்குக் காளன், ஓலன், மசியல், பொடித்துவல், உப்பிலிட்டது, உப்படன், பப்படம், எரிசேரி, புளிசேரி, மெழுக்குபெரட்டி, சக்கைப் பிரதமன் , சக்கை வரட்டி, புழுக்கு, அரைச்சுக் கலக்கி, மொளஹாஸ்யம், தோரன், பச்சடி, அவியல், சம்மந்தி, சம்பாரப்பொடி, இடிச்சுப் பிழிஞ்ச பாயசம்,உக்காரை, நெய்யப்பம், புட்டு. குணுக்கு அப்பறம்..
ஆண்: என்னவாக்கும் அடிக்கிக்கிட்டே போறாய்? , நம்ம கோந்தைக்கு சோறுண்ண சமைக்கறயா இல்லே விஷுக்கனி சத்தியா? தெரியாமத் தான் கேக்கறேன்.குஞ்சு இத்தறையும் சாப்பிடுமோ? நாம சாப்பிட்டாலே வயறு கேடு வருமாக்கும். நாலு நாளைக்குத் தூரல் எடுக்கும்.
பெண்: இதுக்குத்தான் குருவாயூரப்பன் அம்பலத்தில சோறுண்ணல் வச்சுக்கலாம்னு சொன்னேன். கேட்டேளோ? ஆத்து மனுஷி சொன்னா கேக்கப்படாதுன்னு ஒரு வைராக்யம். – அழிச்சாட்டியம் பண்ணினேள். அங்கே போனா எல்லாத்திலும் ஒரு துளி போட்டு விளம்புவா? நாமளும் அப்படியே ஆகாரம் கழிச்சடலாம். இங்கே இதெல்லாம் பண்ணணும்னு குட்டனோட தாத்தி – உங்க அம்மா அடிச்சுச் சொன்னாளே, ஒர்மை இல்லையா ? அப்ப என்ன பண்ணிண்டிருந்தேள்?
ஆண்: அம்மா சொல்லிட்டாளோன்னோ? செய்யவேண்டியதுதான். நான்தான் மடியன். நீ பறக்கப் பறக்க சீக்கிரம் செய்வே . அதுசரி, அத்தறையும் காலம்பரைக்கா, உச்சைக்கா?
பெண்: காலம்பரைக்கு கஞ்சிவெள்ளம் தான். மனசிலாச்சா?
டீ! குட்டி, ஆத்துக்கே வரச்சே செருப்பை அழிச்சுட்டு வரணும்னு எத்தர பிராவஷ்யம் பறஞ்சிருக்கேன்? விருத்திகேடு ! விட்டா அடுக்களை வரைக்கும் வந்திடுவே?
குட்டி: சாரி மாமி ! பாவாடையத் தழயக் கட்டிண்டதனாலே அழிக்க மறந்துட்டேன்.
பெண்: என்னடி வர்த்தமானம்? மொள்ள வாயேன், அப்படிஎன்ன தெரக்கு?
குட்டி : மாமி, பாட்டிக்கு சீராப்பு மூக்குசளி, படலையாம் . விக்ஸ் வாங்கிட்டு வரச் சொன்னா?
ஆண்: சூர்ப்பனகா மருந்து வேணுமான்னு உங்க பாட்டியாண்ட கேளு!
பெண்: போறுமே உங்க குசும்பு. பாட்டி தான் சமைக்கறதுக்கு ஜாட மாடையா ஹெல்ப் பண்ணப்போறா? அவாளைப் போய்க் கரிச்சுக் கொட்டிண்டு. நீங்க உபகாரம் பண்ணாட்டியும் தோஷமில்லே. உபத்ரவிக்காம இருந்தா சரி. குட்டி! அந்த மாடத்தில இருக்கு விக்ஸ். எடுத்துண்டு போ. அப்படியே அந்த தாலத்தில மாம்பழக் கஷ்ணம் இருக்கு. அதை நீயும் கழிச்சுட்டு பாட்டிக்கும் எடுத்துண்டு போ. அப்பறம் பாட்டிக்கிட்டே அப்பக்காரை,சீஞ்சட்டி, ஆப்பை ,சட்டுவம், தளப்பிக்கறதுக்கு ஒரு வெந்நீர் அடுக்கு, நான் கேட்டேன்னு சொல்லு. உங்கம்மாகிட்டேர்ந்து கொஞ்சம் மந்தாரையும், தெச்சிப்பூவும் வேணும்னு சொல்லு.
ஆண்: ஏண்டி , விளக்குக் கத்தர நேரமாச்சு, நான் ஜெபிக்கணும் பஞ்சபாத்திரம் எடுத்துட்டு வா. இன்னிக்கு ராத்திரி என்ன டிபன்?
பெண்: கரைச்ச தோஷை சுட்டுத்தர்ரேன். வெல்லம் தொட்டுண்டு சாப்பிடலாம்.
ஆண்: நெஞ்சக் கரிக்காம இருக்க கொஞ்சம் ஸம்பாரமும் பண்ணிடு. மறக்காம குளிகை தந்திடு, கிட்டியா?
நாத்தனார்: மன்னி, குஞ்சு கரையறான். ஒருவேளை தூளியிலே மூத்திரம் கொல்லைக்கும் போயிட்டான் போலயிருக்கு. சீக்கிரம் வாங்கோ.
பெண்: அபிஷ்டு, அச்சுபிச்சு மாதிரி கத்தாதே. இப்போ தான் ஜட்டிய மாத்திட்டு வந்தேன். சந்தியில கொசு கடிச்சிருக்கும். எதுக்கும் வார்க்கட்டையும் சாணாச்சுருணையும் எடுத்து வை.
ஆண்: ஈஸ்வரோ ரஷது. எண்டே குருவாயூரப்பா!
.

அருமையான அற்புதமான சுவையான மிடுக்கான பதிவு.
LikeLike