happy images pictures sms greetings

கருக்கிருட்டு வேளையிலே ஒளியைக் கண்டேன்
இருட்டடை நெஞ்சினிலும் அறிவைக் கண்டேன்
கரத்தினி லேந்திய வாணம் போலே
மருட்டிடும் பகைவரை வெருட்டக் கண்டேன்!

அறமோங்கி மறம்வீழ்ந்த திருநா ளிதுவே
திறனோங்க அருளீந்த பெருநா ளிதுவே
மறங்கொண்ட வீரரைப் படைத்த வண்ணல்
அறமோங்க முரசார்த்த பொன்னா ளிதுவே !

அரக்கர்க்கு அழிவீந்த கண்ணன் திண்மை
குரங்கனைய பகைவர்க்கு அழிவைத் தேட
உரமுடை இந்தியர்தம் நெஞ்சில் ஓங்க
இறைவனி னருள்நோக்கி இறைஞ்ச வேண்டும் !

ஆசையெனும் பாவியினால் அழிவைக் கண்ட
இச்சையொடு மதிமருண்ட அரக்கர் நிலைமை
ஆசையினை வாழ்விலே அடைந்து கொள்ள
திசைமாறிச் செல்பவர் உணர்தல் வேண்டும் !

பளபளக்கும் மெய்யினிலே எண்ணெய் தேய்த்து
விளங்கிடவே வெந்நீரில் குளியல் செய்து
துலங்கிடவே புத்தாடை அணித லுடனே
உளத்தினிலும் தூய்மையினை யணிதல் வேண்டும் !

மின்னலொடு இடிகளுமே சேர்ந்தது போலே
கன்னங்கரு இருள்கிழிய வாணம் வைக்கும்
பொன்போன்ற நம்நாட்டு மக்கள் எல்லாம்
வன்மையினை ஒருமையொடு எதிர்த்தல் வேண்டும் !

எண்ணமொடு சொல்லையும் செயலில் காட்டி
திண்ணமொடு உலகினிலே பயின்றா ராகில்
கண்ணிய தீபாவளி விழாவின் நோக்கம்
இனிதுறவே நடந்திடலு மவரே காண்பார் !