ஔரங்கசீப் – இந்திரா பார்த்தசாரதியின் நாடகம் (விமர்சனம் – கிருபாநந்தன்)

Panoramic Tale From ‘Aurangazeb’.

‘இந்நாடகம், இதில் வரும் கதாபாத்திரங்களின் ஒன்றுக்கொன்று முரண்பட்ட மன இயல்புப் போரட்டங்களைப் பகைப்புலனாகக் கொண்டிருக்கிறது’ என்றும் ‘இது ஒரு சரித்திர நாடகம் என்பது ஒரு எதேச்சையான சம்பவம்’ என்கிறார் திரு இந்திரா  பார்ததசாரதி.

அல்யான்ஸ்  ஃப்ராசன்சேஸ் (இதன் உச்சரிப்பை ஒருமாதிரி கூகிளிட்டு தெரிந்து கொண்டேன்) அரங்கில் “ஔரங்கசீப்’ நாடகத்தைப் பார்த்த பிறகுதான் இ பா வின் மேற்கண்ட கருத்துக்களைப் படித்தேன்.

வரலாற்றுப் பாடங்கள் மூலமாக நாமறிந்த ஔரங்கசீப் …. சங்கீத விரோதி, போர் வெறியன், , சகோதரர்களைக் கொன்று ‘ஷா இன் ஷா’ ஆனவன்,  எல்லை விஸ்தரிப்புக்காகவே வாழ்ந்து கிழடுதட்டி  மகனாலேயே சிறைவைக்கப்பட்டு மடிந்தவன் … என்பதுதான்.

நாடக அறிவிப்பைப் பார்த்துவிட்டுஃப் பலருக்கு எழுந்த சந்தேகம், இந்த நாடகம் கதாநாயகனை மகிமைப்படுத்துமோ என்பது தான். அரசாள்வதில் நேர்மை, ஊழலற்ற கட்டுக்கோப்பான அரசாங்கம் நடத்துவது, மதுவை ஒழிப்பது  ஆகியவற்றைக் குறிக்கோளாகக் கொண்டவன் என்றாலும் அதனை சாதிக்க சகோதர்களைக்     கொல்வது, தந்தையைச் சிறையிடுவது, நுண்கலைகளை ஒடுக்குவது போன்ற கேள்விக்குரிய வழிமுறைகளைப் பின்பற்றியவன் என்று சித்தரிக்கப் படுகிறான்.

எல்லா மனிதர்களையும் போன்றே  நல்ல மற்றும் தீய குணங்களைக் கொண்ட கலவை தான் ஔரங்கசீப் என்பது  நாடகத்தைப் பார்த்தபிறகு தோன்றுகிறது.

இனி நாடகம்.

ஒரே அரங்கு, நான்கே காட்சிகள், (ஒரு காட்சி மட்டும் அரண்மனை தர்பாருக்கு வெளியே என்றாலும் ஒரு மாற்றமும் காண்பிக்கவில்லை)..  

கதாநாயகன் தவிர

கடந்த காலத்திலேயே வாழ்ந்து நடைமுறைச் சாத்தியமில்லாத கனவுகளுடன் வாழ்ந்த அரசனான  ஷாஜஹான் (தாஜ்மஹால் கட்டியதால் இன்னும் அறியப்பட்டாலும், அது கட்டப்படும்போது மக்கள் பாடாய் பட்டார்கள்).

தானே இன்னொரு அக்பர் என்னும் கனவில், மத நல்லிணக்கம், மக்கள் மகிழ்ச்சி போன்ற குறிக்கோள்கள் கொண்டிருந்தாலும் சாமர்த்தியத்தில் தம்பி ஔரங்கசீபிடம் தோற்றுப்போகும் மூத்தவன் தாரா

தாராவிற்கு பக்கபலமாக ஜஹனாரா, ஔரங்கசீப்பிற்குத் துணையாக ரோஷனாரா என்று ஷாஜஹானின் புதல்விகள்.

ஆகிய முக்கிய பாத்திரங்கள்

ஜெயிப்பவர் பக்கம் சாயும் சந்தர்ப்பவாதிகளான சிற்றரசர்கள் மற்றும் படைத்தளபதிகள்,  தாராவை உஷார் படுத்தவரும் மௌல்வி  தனது உயிரையே காப்பாற்றியவன் தாரா என்றாலும், அவனையே சிறைப்பிடித்து ஒப்படைக்கும் மாலிக் போன்ற துணைக் கதாபாத்திரங்கள்.

இ பா வின் முத்திரையாக கூர்மையான, பொருள் பொதிந்த  தர்க்கபூர்வமான வசனங்கள் இந்த நாடகத்தின் பெரும் பலம். வசன உச்சரிப்புகளும் (குறிப்பாக உருது மற்றும் அராபிய சொற்கள்) மிக நன்றாக இருந்தது. நடிப்பிலும் எல்லோரும் நன்றாகச் செய்தார்கள்.

தர்பாருக்கு அரசகுடும்பத்தினர் ஒருபுறமிருந்தும் மற்றவர்கள் பிறபுறங்களிலிருந்தும் வருவதும் காட்சியில் இல்லாத உப பாத்திரங்கள் மேடையின் பின்புறத்தில் அரண்போன்று நிற்பதும் புதிய உத்திகளாகப் பட்டன.

சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய இந்த கதை, தற்போதும் தேவையாக உணரக் காரணமே இ.பா வின்  வசனங்கள்தான் என்று படுகிறது. நாடகம் தமிழில்தான் எழுதப்பட்டது என்றாலும், ஹிந்தி, ஆங்கிலம், குஜராத்தி என்று பலமொழிகளில் முன்பே அரங்கேற்றப்பட்டு, தமிழில் இப்போதுதான் நடிக்கப் படுகிறதாம். ஆச்சரியம்.

நாடகத்தைப் பார்த்தது ஒரு நல்ல அநுபவம். மீண்டும் அதனைப் படித்தது இன்னொரு நல்ல அநுபவம்.    

பார்த்தாலும் படித்தாலும் ஏமாற்றம் நிச்சயம் இருக்காது என்பது என் நம்பிக்கை.

 

img_7067

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.