வீடு வாங்கிக்கொண்டு வந்த நாளிலிருந்து தெரு அப்படியே இருக்கிறது. தெருவில் கூட்டம் அதிகரித்து விட்டது. தெருவிலிருந்து பிரதான சாலை எட்டும் தூரம். அங்கிருந்து செல்லும் பல்லவன் போக்குவரத்து நகரத்தின் எந்தப் பகுதிக்கும் செல்லும். 2 கிலோ மீட்டர் தூரத்தில் ரயில்வே நிலையம். வாகனங்களின் இரைச்சலுடன் பிரதான சாலை கம்பீரமாகக் காட்சி அளிக்கும்.
தெருவில் சண்முகம் குடிவந்த நாளிலிருந்து, சாதாரண அசுத்தமாய் தோற்றமளித்த தெரு, படு அசுத்தமாய் மாறிவிட்டது. சண்முகத்தின் தொழில் மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்வது. தெருவின் முதல் வீட்டில் அவன் குடிவரும்போது நாலைந்து மாடுகளுடன் வந்தவன், தற்போது ஏழெட்டு மாடுகளுக்கு அதிபதி ஆகிவிட்டான். மாடுகளும் தெருவில் எங்களுடன் வசிக்க ஆரம்பித்து விட்டன. எப்போதும் சில மாடுகள், வால்களை அசைத்துக்கொண்டிருக்கும். சாக்கடையில் சயனித்துக்கொண்டிருக்கும் சில எருமை மாடுகளைப் பார்க்கும் போது நிறபோதம் புரியாது.

தெரு மாநகராட்சியால் அங்கீகரிக்கப்படாத ஒன்று. ஆரம்பிக்கும் இடத்திலிருந்து கடைசி வரை இரண்டு பக்கமும் சாக்கடைகள். சண்முகம் இருந்த பகுதியில், மாடுகளின் புண்ணியமும் சேர்ந்து, சாக்கடைத் தண்ணீர், அந்த வரிசையிலுள்ள வீடுகளின் வாசல்களில் தேங்கி நிற்கும். கொசுக்கள் தொந்தரவு தாங்க முடியாது.
தெரு உருப்படுவதற்கென்ன வழியென்ன என்று சிலர் யோசித்ததன் விளைவால், நலவாழ்வு சங்கம் ஒன்று ஆரம்பித்தோம். சங்கத்தின் தலைவர் ராமன். அவர் விருப்பப்படி சங்கம் கூடும். கூட்டம் கூடும்போது தெருவிலுள்ள எல்லா அங்கத்தினர்களும் வரமாட்டார்கள். சிலர் வருவார்கள். பெரும்பாலும் கூட்டம் ராமன் வீட்டு மொட்டை மாடியில் நடைபெறும். அவர் ஒரு பொறுப்புள்ள அரசாங்க அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர்.
தலைவர் பதவி ஏற்ற ஆரம்ப காலத்தில், ராமனின் குரல் தெரு முழுவதும் அலறும். தெருவிலுள்ளவர்களைப் பார்த்து சத்தம்போடுவார். தெருவிலுள்ள சிறுவர்கள் சாக்கடை ஓரமாக உள்ள பகுதிகளில் மலம் கழிப்பார்கள். சிலர் வீட்டுக் குப்பையைக் குப்பைத் தொட்டியின் அருகே வாரி இறைத்துவிட்டுப் போவார்கள். அவர் சத்தத்தைக் கேட்டு எந்த ஜீவனும் நடுங்காது. சிறுவர்கள் அவசரம் அவசரமாக வீட்டிற்குள் ஓடுவார்கள்.
நல்வாழ்வு சங்கத்தின் சார்பாக ராமன் முதன் முதலாக சண்முகத்திடம் மாடுகளைப் பற்றிப் பேச்செடுத்தார். அவர் தெருமுறையில் குடிவந்த புதுசு. பயபக்தியுடன் இன்னும் சில மாதங்களுக்குள் வேறிடம் சென்றுவிடுவதாகவும், அதுவரை மாடுகளை வைத்துக்கொள்ள அனுமதி வழங்குமாறும் கேட்டுக் கொண்டான். அவரும் பிரச்சினை தீர்ந்துவிட்டதாக எண்ணிப் பரவசமடைந்தார். சில மாதங்களென்று சொன்ன சண்முகம், சில ஆண்டுகளாக அதையே சொல்லி நிரந்தரமாக இருக்கப் பழகிக்கொண்டான். முதலில் குடி வந்தவன், அந்த வீட்டுச் சொந்தக்காரரின் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டான். ராமனுக்கு இது பலத்த அடி. நாலைந்து அங்கத்தினர்களுக்கு முன்னால் அவர் சண்முகத்தைப் பற்றிப் பேச்செடுப்பதில்லை.
நாளுக்கு நாள் தெருவில் சத்தம் அதிகரித்துக்கொண்டு வருகிறது. தெருவிலுள்ள சிறுவர்கள் கோலி, பம்பரம், கிரிக்கெட் விளையாடத் தெருவிலுள்ள சாக்கடைகளையும் சேர்த்துக் கொள்வார்கள். அவர்களுக்குள் நிகழும் யுத்தங்களில் யார் அலறலாவது நிச்சயம் கேட்கும்.
மழைக் காலங்களில் தெருவிலுள்ள எல்லோருக்கும் மாடுகள் பிரச்சினை பெரிதாகத் தோன்றியது.வடிவு சண்முகத்தைப் பற்றி எல்லோரிடமும் பேசிக்கொண்டிருப்பாள். கள்ளச்சாராயம் விற்றுக் காசு சம்பாதிப்பதில் ஒரு காலத்தில் பெயர் பெற்றவள். வட்டாரத்திலுள்ள எல்லாப் போலீஸ்காரர்களுக்கும் அவளைத் தெரியும். உருக்கமான தமிழ் சினிமாப் படங்களைப் பார்த்து, கண்ணீர் வடிப்பாள். யாரிடமாவது சண்டைக்குப் போனால், அவள் வாயிலிருந்து விழும் கெட்ட வார்த்தைகளைக் காது கொடுத்துக் கேட்க முடியாது. அவள் வார்த்தைகளுக்குப் பயந்து யாரும் அவள் வம்பிற்குப் போவதில்லை. ஆனால் ஒரு சமயம் சண்முகத்துடன் நடந்த தகராறில் அவன் அவளை அதிரடித்துவிட்டான் . அதிலிருந்து அவனிடம் அவள் வம்பிற்குப் போவதில்லை.தெரு பார்ப்பதற்கு ‘ப’ வடிவில் இருக்கும். எல்லோரும் ஒரே வழியாகத்தான் பிரதான சாலைக்குப் போகமுடியும். இது குறுகிய தெருவாக இருப்பதால், தெரு முடிவில் பெரிய மதிற்சுவர் நின்றிருக்கும். சுவரைத் தாண்டினால் வேறு தெருவில் முடியும் வீடுகளின் கொல்லைப்புறம் எதிர்ப்படும். மழைக்காலத்தில் மட்டும் வேறு ஒரு பிரதான சாலைக்குச் செல்ல, வடிவின் வீட்டுக் குறுக்குச் சந்தை எல்லோரும் பயன்படுத்துவோம். அவள் வீடு எங்கள் தெருவில் இருந்தாலும், வீட்டின் இன்னொரு பகுதி மூலம் வேறு ஒரு பிரதான சாலைக்குப் போகமுடியும். அவளுக்கு நாங்களிருந்த தெருவைப்பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்பதில்லை. இது பொதுவாக நடந்துகொண்டிருந்த வழக்கம். சண்முகத்துடன் அவளுக்கு ஏற்பட்ட சண்டைக்குப் பிறகு, இந்தத் தெருவிற்கும், அவளுக்கும் எந்தவித சம்பந்தமுமில்லாதபடி ஒரு காரியம் செய்தாள். அவள் வீட்டுக் குறுகிய சந்து வழியாக எவரும் போகாதபடி வேலி அமைத்து, கதவு ஒன்றை ஏற்படுத்திப் பூட்டிவிட்டாள். அன்றிலிருந்து எல்லோரும் மாடுகள் கட்டியிருந்த வழியாகப் பிரதான சாலைக்குச் செல்லும்படி ஆகிவிட்டது.
மாநகராட்சி அங்கீகரிக்கப்படாத தெரு என்பதால், தார் ரோடு வசதி இல்லை. கழிப்புநீர் செல்லப் பாதாளச் சாக்கடை இல்லை. மின்சார விளக்கு இல்லை.
தெருவிற்கு விமோசனம் எப்போது ஏற்படப் போகிறதென்று தவித்துக் கொண்டிருந்த எங்களுக்கு, தேர்தல் நடக்கப் போகும் செய்தி, எங்கள் பிரச்சினைகளைப் பற்றி பேச வாய்ப்பளித்தது.
பல ஆண்டுகளாக எங்கள் தெரு இருக்கும் இந்தத் தொகுதி எதிர்கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.விடமிருந்தது. இந்தத் தொகுதியை அவருடைய கோட்டை என்பார்கள். தேர்தலின்போது அவர் வீசுகிற வீர முழக்கங்களை நான் கேட்டதில்லை. வசதி படைத்த அந்த எம்.எல்.ஏ. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறைகூட ஓட்டுக் கேட்க வந்ததில்லை. ஆனால் எந்தத் தெருவையும் விட்டு வைக்காத அவரது தொண்டர்கள், இந்தத் தெருவையும் சும்மா விடவில்லை. தோரணங்கள் கட்டுவதிலிருந்து போஸ்டர் ஒட்டுவதுவரை தெருவிலுள்ள எல்லாச் சுவரையும் பயன்படுத்தினர். எதிர்க்கட்சி சார்பில் நிற்கும் எம்.எல்.ஏ. இந்த முறையும் எங்கள் தெருவிற்கு வரவில்லை.
ஆனால் ஆளுங் கட்சி எம்.எல்.ஏ. பதவிக்கு நிற்கும் நபர் லேசுப்பட்டவராகத் தோன்றவில்லை. அவர் ஒரு காரியம் செய்தார். நேரிடையாக எங்கள் தெருவிற்கு வந்தார். ஒவ்வொரு வீடாகச் சென்று வாக்குறுதி அளித்தார். தெருவில் கூட்டம் போட்டார். இன்றுவரை இந்தத் தொகுதிக்கு எதிர்க்கட்சி எம்.எல்.ஏ. தேர்ந்தெடுக்கப்பட்டதால் ஒன்றும் செய்ய இயலவில்லை என்று குறிப்பிட்டார்.
அவருடைய வார்த்தைகளைக் கேட்ட காதுகள் இறக்கை கட்டிக்கொண்டு பறக்காத குறைதான். ராமனுக்குத் தேர்தல் முக்கியமாகப்பட்டது. தினமும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. பதவிக்கு நிற்கும் நபரைப் பார்க்கத் தொடங்கினார்.
ஒருமுறை நான் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வரும்போது, சிவன் கோயில் மைதானத்தில், ஆளுங்கட்சி அரசியல் கூட்டத்தில், ராமனும் ஒரு நாற்காலியில் மேடை மேல் அமர்ந்திருந்தார். என்னைப் பார்த்தவுடன் அசட்டுச் சிரிப்பு சிரித்துக்கொண்டு விழித்துக் கொண்டிருந்தார்.
அந்தமுறை தெருவிலுள்ள அனைவரும் ஆளுங்கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. பதவிக்கு நிற்கும் நபருக்கு ஓட்டுப் போட்டோம். அவர் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் எதிர்கட்சியின் கோட்டை என்று கூறப்படுகிற எங்கள் தொகுதியைப் பிடித்துவிட்டார். ஆளுங்கட்சி திரும்பவும் ஆட்சியைப் பிடித்தது. சில தினங்களில் எம்.எல்.ஏ. வீட்டிலிருந்து சில தொண்டர்கள் எங்கள் தெருவிலுள்ள ஒவ்வொரு வீடாகச் சென்று எங்கள் குறைகளை ஒரு குறிப்புப் புத்தகத்தில் எழுதிக் கொண்டார்கள்.
“அவர் செஞ்சாரா இது மாதிரி… இவரைப் பாருங்க. குறைகளைக் குறிப்புப் புத்தகத்தில் எழுதிக் கவனிப்பதாகச் சொல்றாரு” என்று ராமன் தெருவெல்லாம் சொல்லிக்கொண்டு திரிந்தார்.
குறிப்புப் புத்தகத்தில், சண்முகத்தையும், மாடுகளைப் பற்றியும் தெருவிலுள்ள எல்லோரும் எழுதியிருந்தோம். ராமன் இது விஷயமாகத் தெருவிலுள்ள சிலரை அழைத்துக்கொண்டு எம்.எல்.ஏ.வைப் போய்ப் பார்த்தார். எம்.எல்.ஏ.வின் வேண்டுகோள்படி தெருவிலுள்ள எல்லோருடைய கையெழுத்துக்களுடன் ஒரு புகார்க் கடிதமெழுதிக் கொடுத்தோம். என்ன நடக்கப்போகிறதென்று ஆவலுடன் காத்திருந்தோம்.
எப்போதும் போல் வால்களை அசைத்துக்கொண்டு மாடுகள் கம்பீரமாக நின்று கொண்டிருந்தன.
இது நடந்து ஒரு வருடம்ஓடிவிட்டது. எம்.எல்.ஏ.வைப் பார்க்கிற முயற்சிகளை ராமன் நிறுத்திக்கொண்டார். அவருக்கு வீட்டுப் பிரச்சினைகள் தலைகொண்டு போவது போலிருந்தன. சிலரிடம் தலைவர் பதவி வேண்டாமென்று சொல்லிப் பார்த்தார். யாரும் விடுவதாக இல்லை. அந்தப் பதவிக்கு எந்த மரியாதையும் இல்லாவிட்டாலும், தெருவிலுள்ள எல்லோருக்கும் அவர் சேவை தேவையாக இருந்தது. உண்மையில் மாடுகள் பிரச்சினையை அவரால் தீர்க்க முடியவில்லை. மற்றபடி மின்சாரம் போய்விட்டால், புகார் கொடுப்பது, சாக்கடை தள்ள ஒவ்வொரு வீடாகச் சென்று வசூல் செய்து, ஆள் ஏற்பாடு பண்ணுவது, குப்பை வாரிப்போட மாநகராட்சி அலுவலகத்திற்குச் செல்வது போன்ற உதிரி வேலையெல்லாம் அவர் ஈடுபாட்டின் பேரில் நடந்தது. இதனூடே மாநகராட்சி வரிப்பணம் கட்ட முடியாதென்று, நலவாழ்வு சங்கம் சார்பாக, கோர்ட்டில் வழக்குத் தொடுத்திருந்தார்.
தெருவில் நடக்கும் சிறு கூட்டங்களில், அரசியலைப் பற்றிப் பேச்சு வரும்போது ‘என்னத்தைக் கிழிச்சான் இந்த எம்.எல்.ஏ.’ என்று மற்றவர்கள் ராமனை கிண்டல் செய்வார்கள்.
மாடுகள் தொல்லை தாங்காமல், தெருமுனையில் குடியிருக்கும் ஒருவர் ரகசியமாகப் போலீசுக்குப் புகார் கொடுத்தார். போலீசுக்கு வழக்கமாகக் கிடைக்கும் மாமூல்காரர்களின் வரிசையில் சண்முகம் சேர்ந்து கொண்டான்.
அன்று ஒரு நண்பரின் கல்யாணத்திற்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தேன். வழியை அடைத்துக்கொண்டு எருமை மாடு நின்று கொண்டிருந்தது. தாண்டிப் போகவேண்டும். சைக்கிள் மணியை அடித்தேன். சண்முகம் வீட்டிலிருந்து அவன் மனைவி முறைத்தபடியே வந்தாள்.
‘எவன்கிட்டே வேண்டுமானாலும் சொல்லு… எவன் என்ன செய்ய முடியும்?… எங்களை எதிர்க்க எவனுக்கு தில்லு இருக்கு?…. சும்மா கட்டலை… மாமூல் கொடுக்கிறோம்’… என்று சத்தம் போட்டாள். மாட்டை இழுத்து ஓரமாகக் கட்டினாள். எனக்கு வந்த ஆத்திரத்தில், இவளுடன் என்ன பேசுவது என்று தோன்றியது. வேகமாக சைக்கிளை எடுத்துகொண்டு கிளம்பினேன்.ஏதாவது முடிவு கட்ட வேண்டுமென்று வேகம் ஏற்பட்டது. எம்.எல்.ஏ. வீட்டிற்குச் சென்றேன். அங்கு கூட்டம் அதிகமாக இருந்தது. என்னை ஓரிடத்தில் உட்காரச் சொன்னார்கள். சிறிதுநேரம் கழித்து எம்.எல்.ஏ.வைப் பார்க்க அனுமதி கிடைத்தது. எம்.எல்.ஏ. அமர்ந்திருந்த அறையில் அவரைச் சுற்றிலும் மனிதர்கள். அவர் எதிரில் நாலைந்து பேர்கள் இருந்தனர்.
எம்.எல்.ஏ. என்னைப் பார்த்து என்ன? என்று விசாரித்தார். என் தெருப் பெயரைக் குறிப்பிட்டு, அங்கிருந்து வருவதாகச் சொன்னேன்.
‘நற்சான்றிதழ் வேணுமா’
‘அதுக்கு வரலை.’
‘வேற என்ன விஷயம்?’
‘நான் இருக்கிற தெருவைப் பத்திப் பேசணும்.’
‘சொல்லுங்க.’
‘ஒங்களுக்கு ராமனைத் தெரியுமா?’
‘ராமனா!’
நான் திகைப்புடன் அவரைப் பார்த்தேன். அதற்குள் எதிரிலிருந்தவர்களில் ஒருவன், ‘அதான் அந்த அய்யரு’ என்றான்.
‘அவரா… தெரியும்’ என்று தலை ஆட்டினார் எம்.எல்.ஏ. அவருக்கு எல்லாம் புரிந்துவிட்டதுபோல் அவர் முகபாவம் தென்பட்டது.
நான் ஒரு புராணத்தை ஆரம்பித்தேன். எல்லாவற்றையும் முடித்து அவரை நிமிர்ந்து பார்த்தபோது அவர் மீது எந்த நம்பிக்கையும் ஏற்படவில்லை.
‘ஒங்க விஷயங்களைக் கவனிக்கிறேன். இன்னொரு பெட்டிஷன்’ கொண்டு வாங்க. ஏதாவது நடவடிக்கை எடுக்கலாம்….
‘தெரு முனையில மாடு கட்டியிருங்காங்க… தெருவே அசுத்தமா இருக்கு… அதை எங்களாலே தாங்க முடியலே.’
‘நிச்சயமா ஏதாவது பண்ணலாம்… அப்புறமா வாங்க’
நான் நன்றி தெரிவித்துவிட்டு விடைபெற்றேன். எம்.எல்.ஏ. வீட்டைவிட்டு வெளியில் வந்தபோது, முதன்முறையாக அவர் வசிக்கும் தெருவை கண்களால் அளந்தேன். அகலமான தெரு. இரு பக்கமும் மரங்கள் பெரிதாக வளர்ந்து நிழல் பரப்பிக்கொண்டிருந்தன. பசுமையாகக்
காட்சி அளித்த மரங்களின் நிழல்கள் சாலை முழுவதும் ஒன்றையொன்று தொட்டுக் கோலம் போட்டிருந்தன. வெய்யிலின் கடுமை காலை நேரத்தில் தெரியவில்லை. மரங்களைச் சுற்றிலும் பூக்கள் சிதறிக் கிடந்தன. பறவைகளின் சப்தங்கள் சேர்ந்து தெருவிற்கு மேலும் அழகூட்டுவது போலிருந்தது.
