நாளை எழுதப்போகும் கவிதையை
நேற்றே கிழித்துப் போட்டுவிட்டேன்
காரணம் புரியவில்லை
இன்று எழுதிய கவிதையையும்
நேற்றே அழித்துத் தொலைத்து விட்டேன்
காரணம் புரியவில்லை
நேற்று எழுதிய குப்பைகளை மட்டும்
பொறுக்கிப் பதித்து வைத்திருக்கிறேன்
காரணம் புரியவில்லை
ஏனிப்படி ?
கண்ணை மூடி யோசித்துப் பார்த்தேன்
த க தி மி தா த க தி மி தா த க தி மி தா
காரணம் புரிந்தது காரணம் கவிதை

கவிதைக்கு எப்படி ஜனனம்?
சுகப் பிரசவமா ஆயுதக்கேஸா
இடுக்கி போட்டு எடுத்ததா?
எதுவானாலும் வலி உண்டு சுகம் உண்டு
கவிதைக்கு எப்படி மரணம்?
சிலது பிறக்கு முன்னே இறக்கிறது
சிலது பிறக்கும் போதே சிதைகிறது
சிலது சாவுக்காக எப்பவும் போராடுகிறது
சிலது செத்து செத்து பிழைக்கிறது
சிலது ரொம்பச் சிலது மட்டும் ஏனிப்படி
இதயத்தில் புகுந்து வானத்தில் பறக்கின்றன?
காரணம் புரியவில்லை
புரியத் தேவையுமில்லை
