Daily Archives: November 15, 2016
தலையங்கம்
நவம்பர் எட்டு – இரவு எட்டு மணி
மதிப்பிற்குரிய பிரதமர் மோடி அவர்கள் அறிவிப்பு!
” 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது.”
மெத்தப் படித்த மேதைகளும் அன்றாடங்காய்ச்சிகளும் – சிவாஜி the boss மற்றும் பிச்சைக்காரனும், ஏன்- நீங்களும் நானும் பலமுறை பல இடங்களில் சொல்லி வந்தது!
” எந்த அரசியல்வாதிக்காவது தில் இருக்கா ? ஐநூறு ஆயிரம் ரூபாயைச் செல்லாது என்று அறிவித்து கறுப்புப் பண முதலைகளின் வாயைக் கிழிக்க முடியுமா? ”
‘என்னால் முடியும் தம்பி’ என்று ஒருவர் துணிந்து செயல் படுத்தியிருக்கிறார்.
அவரது காலில் விழுந்து வணங்குவோம்!
நமது புரையோடிய புண்ணுக்கு – அடைப்புள்ள இதயத்துக்கு இது தேவையான பொருளாதார அறுவை சிகிச்சை !
பணத்தைக் கடலுக்கு அடியில் பதுக்கி வைத்திருந்த அதிகாரக் கும்பலின் வயிற்றைக் கிழித்த பண உலகின் சுனாமி !
நாசவேலை செய்யத் தூண்டிவிடும் வெளி நாட்டு வெறிநாய்களுக்கு போட்டுவிட்ட விஷ ஊசி !
அக்கிரமம் செய்யும் புலிகளும் நரிகளும் ஓநாய்களும் வேட்டையாடப்படும்போது மான்களும் முயல்களும் அடிபடுவது இயற்கை!
ஆனால் பின்னால் நமக்குக் கிடைக்கப் போகும் ஆனந்த சுதந்திரத்தை எண்ணி இந்தத் தற்காலிகத் துயரங்களை நாம் தாங்கிக்கொள்ளத்தான் வேண்டும்!
நாட்டுக்காக இதைக் கூட நாம் செய்யவில்லை என்றால் நாம் மனிதர்களே அல்ல!
நாளை நமதே!
( இது பற்றிய பிரதமரின் ஆங்கிலப் பேச்சைக் கேட்கத் தவற விட்டவர்கள் இங்கே கேட்கலாம்)
வசந்த காலம் …! நித்யா சங்கர்
‘நானும் கல்யாணமாகி வந்த நாளா பார்த்துட்டிருக்-
கேன்.. எதை, நான் கேட்டவுடனே என்னிக்கு வாங்கித் தந்-
திருக்கீங்க…’ என்று பொரிந்து தள்ளினாள் அகிலா.
‘அகி … நான் என்ன வாங்கித் தரமாட்டேன்னா
சொல்றேன். இந்த மாதம் கொஞ்சம் டைட்டா இருக்கு. அது
உனக்கும் தெரியும்.. அடுத்த மாதம் வாங்கலாம்னுதானே
சொல்றேன்…’.
‘நான் அப்படி என்ன பெரிய சாமானா கேட்டுட்டேன்..
ஆ·ப்டர் ஆல் ஒரு பட்டுப் புடவை… அதது ஆசைப்பட்டதும் வாங்கி அனுபவிக்கணும். எப்பவாவது வாங்கினா அதனுடைய த்ரில்லே போயிடும். என் ·ப்ரெண்ட்ஸெல்லாம் அந்த புது மோஸ்தர் புடவையைக் கட்டிட்டு தினம் மீட்டிங்கிற்கு வரும்போது நான் மட்டும் அழுது வடிஞ்சுண்டு… சேச்சே .. என்ன லை·ப்டா சாமி இது..?’ என்று உச்சஸ்தாயியில் கத்தினாள் அகிலா.
திடுக்கிட்டு விக்கித்துப் போய் உட்கார்ந்திருந்தான்
சபேசன். என்ன சொல்வதென்றே புரியவில்லை. ஏதாவது
பேசினால் அவள் கத்துவது அதிகமாகுமே தவிர குறையாது.
‘பதில் சொல்றாரா பார் மனுஷன்.. தன் மேலே குற்றத்தை
வெச்சுட்டு எப்படி பதில் சொல்ல முடியும்? வேலைக்குப்
போயிட்டிருந்தப்போ அந்த ·ப்ரெண்டு இதுக்காகப் பணம்
கேட்டான்.. அதுக்காக பணம் கேட்டான்னு இருக்கிறதை
யெல்லாம் தூக்கிக் கொடுத்தாச்சு.. ஒருத்தரும் நமக்கு வேணும்ங்கறப்போ நம்ம குழந்தை கல்யாணத்துக்கு.., இந்த சின்ன வீடு கட்டறதுக்கு .. பணம் இல்லாம தவிச்சப்ப திரும்பிக் கூடப் பார்க்கலே… நமக்கு ஒரு சமயம்னா உதவி இருக்கானே.. அவனுக்கு தேவையா இருக்கிறப்போ நாமும்
உதவலாம்னு ஒரு சுண்டு விரலைக் கூட அசைக்கலே..
ஏமாந்து போய் அசடு மாதிரி நின்னுட்டிருக்கோம்…’ என்று
புலம்பிக் கொண்டே இருந்தாள் அகிலா.
சபேசனின் குரல் கேட்கவேயில்லை. பேசாமல் மன
வருத்தத்துடன் படுத்துக் கொண்டிருந்தான்.
பக்கத்து ஹாலில் படித்துக் கொண்டிருந்த யமுனாவுக்கு
அவர்கள் பேசுவது எல்லாம் துல்லியமாகக் கேட்டுக் கொண்-
டிருந்தது. வாரத்தில் அட்லீஸ்ட் இரண்டு நாளாவது இரவு
பத்து மணிக்குமேல் பழைய பல்லவிகளைப் பொரிந்து தள்ளுவாள் அகிலா – அவள் அம்மா. அப்பா பதிலே பேசாமல்
எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு உட்கார்ந்திருப்பார்.
அப்பா பதில் பேசவேயில்லையே என்பதை எல்லாம்
பொருட்படுத்த மாட்டாள் அம்மா. அவள் பாட்டுக்கு ஒரு
தடவை கல்யாணமான நாள்லேருந்து இன்று வரை, கேட்டுக்
கிடைக்காதவற்றையும், தாமதமாகக் கிடைத்தவற்றையும்
பட்டியலிட்டு விடுவாள். அப்பா பேசாமல் இருந்தாலும்
அவர் முகத்தைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கும்.
வேதனையால் வெந்து கொண்டிருப்பார்.
ஒரு நாள் இதைப் பற்றி அவரிடம் கேட்டே விட்டாள்
யமுனா.
‘அப்பா.. உங்களுக்கு இதெல்லாம் வேணுமாப்பா..?
நீங்க ரெண்டு பேரும் இப்படி மனசு கஷ்டப்படறதப் பார்த்தா
எனக்கு ரொம்ப வேதனையா இருக்கு… நீங்களாவது இருக்-
கிற பணத்தை யெல்லாம் உங்க ·ப்ரெண்ட்ஸ¤களுக்கு
கொடுக்காம இருந்திருக்கலாம் இல்லையா..?’
விரக்தியாகச் சிரித்தார் சபேசன்.. ‘இப்போ அதைப்
பத்தி நினைச்சா நீ சொல்றது சரிதான்மா… இது எல்லாம்
ஒரு ஏஜ்லே நடக்கிறது.. அந்தக் காலத்திலே ஒரு க்ளோஸ்
·ப்ரெண்டு ஒரு ·பங்க்ஷனுக்கோ, மருத்துவச் செலவுக்கோ
பணம் பத்தலைன்னு கேட்கறப்போ நம்ம கையிலே பணம்
இருந்தா கொடுக்கத்தான் தோணிச்சு..ஏன் பணம் இல்லேன்னா
கடன் வாங்கிக் கொடுக்கத் தோணிச்சு. அவ்வளவு
நெருங்கிய பழக்கம் எங்களுக்குள்ளே.. அட, அப்படி
நமக்குத் தேவைப்பட்டா அந்த நண்பர்கள் நம்மளை கை
விட்டுடப் போறாங்களா என்ன என்ற ஒரு அதீத நம்பிக்கை.
அம்மா அடிக்கடி சொல்ற மாதிரி, அந்த நாள்லே அசட்டுத்தனமா இருந்துட்டேனோன்னு இப்போ தோணுது.. ஏன்னா
நமக்கு ஒரு தேவை வந்தபோது அந்த நண்பர்கள் யாருமே
கண்டுக்கவே இல்லே.. சிலர் பணம் வெச்சுட்டே இல்லேன்னுட்டாங்க. சிலர் கிட்டே பணம் இருக்கலே. ஆனா நான்
செய்த மாதிரி லோன் போட்டு யாரும் உதவி செய்ய முன்
வரலே. நான் கொடுத்த பணத்தைக் கொஞ்சம் கொஞ்சமா
திருப்பிக் கொடுத்திருந்தாலும் நமக்கு அது உதவியாய்
இருந்திருக்கும். ஆனா அவங்க பஞ்சப் பாட்டுப் பாடிண்டு
அதையும் தரலே. இப்போ சொல்ற அம்மா அப்போ என்
கிட்டெ மல்லுக்கு நின்னுருந்தா, ஒரு வேளை அவர்களுக்கு
பணம் கொடுக்காமல் இருந்திருப்பேன். இல்லேன்னா நூறு
ரூபாய் கொடுத்த இடத்திலே இருபத்தஞ்சு ரூபாய்தான்
கொடுத்திருப்பேன்’
‘அப்பா.. இதுக்கு என்னதான்பா முடிவு..? அம்மா
இப்படி அடிக்கடி புலம்பிண்டிருந்தா ஒரு நிம்மதியே
இருக்காதேப்பா…!’
‘என்னம்மா செய்யறது.. உப்பைத் தின்னவன் தண்ணி
குடிச்சுத்தானே ஆகணும். என் தலை விதி. நடக்கறபடி
நடக்கட்டும்…’
யமுனா யோசனையோடு உட்கார்ந்திருந்தாள்.
அகிலா ஹாலில் பேப்பர் படித்துக் கொண்டிருந்தாள்.
யமுனாவும் அருகில் சோபாவில் அமர்ந்திருந்தாள்.
‘நான்ஸென்ஸ்.. இதைப் பார்த்தியா.. பல ஆண்டுகளுக்கு
முன்னால் பாபர் மசூதியை இடிச்சுட்டாங்க.. அதையே
சொல்லிச் சொல்லி இந்த முஸ்லீம் இனத்தினர் கலவரம்
பண்ணிட்டே இருக்காங்க. அன்னிக்கு ஏதோ ஒரு மாஸ்
ஸைகாலஜிலே. எமோஷனலா நடந்து போச்சு. அது தப்புன்னு அந்த பார்ட்டி லீடர்ஸ¤ம் ஓபனா மன்னிப்புக்கேட்டாச்சு.
அப்படி இருக்கும்போது அது மாதிரி நடக்காமல் இருப்ப-
தற்கும், ரிலீஜியஸ் ஹார்மனி நம் நாட்டிலே இருப்பதற்கும்
என்ன செய்யலாம் என்று யோசிப்பதை விட்டு விட்டு இன்று
அதை முன்வெச்சு கலவரம் செய்துட்டிருந்தா அது புத்தி-
சாலித்தனமா என்ன… முஸ்லீம் மன்னர்கள் நம் நாட்டை
முற்றுகையிட்டு எத்தனை கோயில்களை இடிச்சிருக்காங்க..
அதைக் காரணம் காட்டி இந்துக்களும் கலவரம் பண்ண
ஆரம்பிச்சா அதில் அர்த்தம் இருக்கா. அழிச்சதைத்
திருப்பி ஒரிஜினல் ரூபத்தில் கொண்டு வா என்றால் முடியற
காரியமா..?’
லேசாகச் சிரித்தாள் யமுனா.
‘ஏண்டி.. நான் சீரியஸா ஏதோ சொல்லிட்டிருக்கேன்..
நீ பாட்டுக்கு சிரிக்கிறே..’
‘அம்மா.. இது வரை நீ கேட்ட எதையாவது அப்பா
வாங்கித் தராமல் இருந்திருக்காரா..?’
‘இல்லை..’ என்று இழுத்தபடி கூறினாள் அகிலா,
எதற்காக திடீரென்று பேச்சை மாற்றுகிறாள் என்று
புரியாமல்.
‘அ·ப் கோர்ஸ்.. நீ ஆசைப்பட்டதை நீ கேட்டவுடனே
வாங்கித் தராமல் இருந்திருக்கலாம். ஆனா அதை நெனவு
வெச்சுண்டு வெகு சீக்கிரத்திலே, முடிஞ்சபோது வாங்கித்
தந்திருக்காரா இல்லையா..?’ என்று அகிலாவை உறுத்துப்
பார்த்தாள் யமுனா.
‘ஆமா நீ சொல்றது சரிதான்.. ‘ என்றாள் அகிலா
ஏதும் புரியாமல்.
‘அப்படி இருக்கும்போது ஏன் அப்பாகிட்டே வாரத்திலே
ரெண்டு நாளாவது பழைய பல்லவியையே பாடிப் புலம்பறே.
உன்னுடைய நிம்மதி போறது.. அப்பாவுடைய நிம்மதி
போறது.. ஏன் எனக்குக் கூட என்னவோ போல இருக்கு..’
‘ஓ.. அதுவா சேதி… அப்பாவுக்கு வக்காலத்து வாங்கறியா..? நான் வேணும்னு கேட்டதை என்னிக்காவது அவர்
உடனடியா வாங்கித் தந்திருக்காரா சொல்..’
‘இருக்கலாம்… தாமதமா, பணம் வந்தபோது வாங்கித்
தந்திருக்கலாம். ஆனா உனக்கு என்ன தேவையோ அதைப்
பார்த்துப் பார்த்து செஞ்சிட்டுத்தானேம்மா இருக்கார்..’
‘ஆமாமா.. அசடு மாதிரி இருக்கற பணத்தை யெல்லாம்
இந்த நண்பன் கேட்டான் அந்த நண்பன் கேட்டான்னு
கொட்டிக் கொட்டிக் கொடுக்காம இருந்திருந்தா எனக்கு
வேண்டியது அப்பப்போ கிடைச்சிருக்கும் இல்லையா..?’
‘அம்மா அப்பா அப்படிக் கொடுக்கும்போது என்னிக்-
காவது நீ வேண்டாம்னு தடுத்திருக்கியா…’
‘அதெப்படி முடியும்..? க்ளோஸ் ·பாமிலி ·ப்ரெண்ட்ஸ்
அண்ணா அண்ணான்னு பழகினப்புறம் கல்யாணத்துக்கும்,
மருத்துவச் செலவுக்கும் கேட்கும்போது எப்படீடி இல்லேன்னு
சொல்ல முடியும்..?
‘எக்ஸாக்ட்லி… அப்பாக்கும் அந்தத் தயக்கம் இருந்திருக்கலா மில்லையா..? நம்ம கஷ்ட காலம்.. நமக்கு தேவைன்னு வந்தபோது அந்த நண்பர்களெல்லாம் சமத்தாயிட்டாங்க.
சுண்டு விரலைக் கூட அசைக்கலே.. அப்படி இருக்கும்போது
அப்பாவைக் குறை கூறிட்டிருந்தா அது சரியா அம்மா..?’
அகிலா மௌனமாக உட்கார்ந்திருந்தாள்.
‘அம்மா.. நான் உன் மனதைப் புண்படுத்தணும்னு
இதையெல்லாம் சொல்லலே.. நாம விரும்பினாலும் அந்தக்
கடந்த காலத்தை நம்மாலே திருப்பிக் கொண்டு வர முடியுமா
அம்மா..? வீ கான்ட் புட் தி க்ளாக் பாக்.. நடந்தது நடந்து
போச்சு.. நடந்தது நடந்ததுதான்… அது சரியா தப்பான்னு
இப்போ விவாதித்துப் பிரயோஜனமில்லே.. இனி தப்புப்
பண்ணாம இருக்கறதுதான் புத்திசாலித்தனம். அந்தக்
கடந்த காலத் தப்புக்களையே அடிக்கடி பட்டியலிட்டு
தன்னையும் வருத்திண்டு, மற்றவர்களையும் வருத்திண்டு
நிகழ்காலத்துலே உள்ள வசந்தங்களை அனுபவிக்காமல்
விட்டுட்டிருக்கறது புத்திசாலித்தனமா அம்மா.. கொஞ்சம்
யோசித்துப் பாரும்மா… கடந்த காலத்தை மறக்க முயற்சி
செய். நிகழ்காலத்திலே, எதிர்காலத்திலே வாழப் பார்…
நான் ஏதாவது தப்பா பேசியிருந்தா மன்னிச்சிடும்மா..’
என்றவாறு யமுனா உள்ளே சென்றாள்.
யோசனையோடு அமர்ந்திருந்த அகிலாவுக்கு ஏதோ
புரிவது போலிருந்தது.
சிசு கதை (எஸ்.எஸ் )
சிசு கதை ( சின்னஞ்சிறு கதை)
ஹெமிங்க்வே எழுதிய உலக பிரசித்தி பெற்ற ஆறு வார்த்தை சிசு கதை!
விற்பனைக்கு: குழந்தையின் செருப்பு – ஒருமுறை கூட அணியவில்லை.
குழந்தை பிறக்குமுன் வாங்கி வைத்த செருப்பு – குழந்தையின் மரணம் – செருப்பை விற்கும் அவலம் –
ஆறு வார்த்தைகளில் ஒரு கண்ணீர் கதை!
இன்னொரு திகில் சிசு கதை – பிரெடெரிக் பிரௌன் எழுதியது:
தலைப்பு : சத்தம்
The last man on Earth sat alone in a room. There was a knock on thedoor…“
உலகத்தின் கடைசி மனிதன் தன் அறையில் தனியே அமர்ந்திருந்தான். அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டது…!
நம்ம பாரதியார் எழுதியிருக்கிறார் ( அவர் தொடாத விஷயமே இல்லை)
கடவுள் கேட்டார் – “பக்தா ! இது தான் பூலோகமா?”
இந்தப் பாணியில் நாமும் எழுதுவோமே என்று யோசித்ததின் விளைவு:
விற்பதற்கு குழந்தை வந்தது
பால் கசந்தது – பக்கத்தில் பாட்டில் !
கத்தியால் குத்தியவன் துடித்தான் – துடித்த உடல் நின்றது!
பசிக்கு விலை உடல் என்றாள்.
அடுத்த தடவை என்னை கனவில் தான் காண்பாள்!
பால் பொங்கியது- அணைத்தேன்!
நாணத்தோடு நின்றேன்- வரையத் தொடங்கினான்!
மனதில் அவளைப் பூட்டிவிட்டு சாவியைத் தொலைத்து விட்டேன்!
பிறந்த பெண் குழந்தை மரணம் . கொடுமை -பெற்றோர் கண்களில் ஆனந்தக் கண்ணீர்!
திருவிழாவில் நான் தொலையவில்லை – தொலைத்தார்கள்!
என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள் ..! போஸ்ட் மார்ட்டம் பண்ண வந்த டாக்டர் திணறினார்!
இலக்கியவாசல் 20
குவிகம் இலக்கிய வாசலின் இம்மாத நிகழ்வாக
“எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன் – த. ஜெயகாந்தன்”

|
சாத்தானின் நடைபயலல் – பரத் பொன்னுசாமி
நான் நடக்க வேண்டும் என்று என்றுமே ஆசைப்பட்டுளேன். ஆனால் நட என்றுசொன்னால் அல்லது நடக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் மட்டும்மண்டைப் பிரளயம் ஏற்பட்டு விடும் . அதாவது ஒன்னு கெடைக்கிறதுக்கு அவளோ கஷ்டப்படுவோம்..ஆனா அது கிடைச்சதும் அத வெச்சு என்னசெய்றதுன்னு தெரியாது..அந்த மாதிரி..
பேட்மேன் படத்துல சோக்கர் சொல்வது போல..
‘I’m a dog chasing cars. I wouldn’t know what to do with one if I caught it’
அந்த மாதிரி..
நண்பன் குளிக்கிறப்ப வாடா வாடானு கதவத் தட்டி இம்ச பண்ணுவேன்..ஆனாஅவன் வெளில வந்ததும் மறுபடியும் போய் படுத்துக்குவேன்..அவன் அவசரஅவசரமா வர்றதுல ஒரு சந்தோசம்..சொல்லப் போனா குரூர சந்தோசம்..ஒருகிறுக்குத்தனம்..
அந்த மாதிரி..
எல்லாமே ஒரு கிறுக்குத்தனம்தான்..
எங்கேயாது போகணும்..தனியா போகணும்..யாருமே இல்லாத எடத்துக்குப் போகணும்..நாலு நாள் நிம்மதியா இருந்துட்டு வரணும்னுதோணும்..திங்கள்கிழம காலைல இருந்து வெள்ளிக்கிழம வரைக்கும்தோணும்.. வண்ண வண்ணமா மனசுல மின்னும்..பறக்கும்..தனியா போய் புத்தர் மாதிரி ஞானம் அடையற மாதிரி கனவு வரும்..ஆனா வெள்ளிக்கிழம சாயங்காலம் ஆறு மணி ஆனதும்..ஞான புத்தர் பயந்த புத்தரா சோம்பேறிபுத்தரா மாறிடுவார்..
அந்த மாதிரி..
அந்த அஞ்சு நாள், ஏக்க சந்தோசம்..மீதி ரெண்டு நாள், கவலைப்படற குரூரசந்தோசம்..அவ்ளோ தான்..
இதெல்லாம் எதுக்கு சொல்றேன்னா..எனக்கு நடக்கணும்னு ஆசைலாம்இல்லை..ஆனா நடக்கிறது எனக்கு பிடிக்கும்னு சொன்னா இந்த உலகம்நம்மள செமயா ஒரு பார்வை பாக்கும்..அந்த பார்வை தர்ற போதைக்குத்தான்இத்தனையும்..
ஆனா எவன்/எவ கண்ணு பட்டுச்சோ தெரியல.. இன்னிக்கு நடக்க வேண்டிய நிலமை வந்துடுச்சு..கெரகம்..எப்படியாவது தள்ளி விட்டுடலாம்னு பாத்தேன்..முடியலை..போயே ஆகணும்..வண்டி இல்லாததனால நடந்துதான்போயாகணும்..
சரி போய் தொலைதுனு கிளம்பி வெளிய வந்து நின்னா சுள்ளுனுவெயிலு..கெரகம்..மெட்ராசுல என்ன மயித்துக்கு வாழணும்னு தோணுச்சு..அப்புறம் உடனேயே இன்னொன்னும் தோணுச்சு..இது ஏன் வண்டில போறப்போலாம் உனக்கு தோணலைன்னு? இதுக்கு என்ன பதில்னு தெரியுது..ஆனா சொன்னா நான் சுகம் விரும்புற-பிரச்னை வந்தா மட்டும்மெட்ராசை வெறுக்குற-மனிதன் இல்லாத ஒருத்தனா தெரியலாம்..அதனால அத நான் சொல்லப் போறது இல்ல ..
கெரகம்..கெரகம்..
இந்த மண்டைய மொதல்ல ஒன்னாக்கணும்..முதலாளித்துவம் கம்யூனிசம்னுபிரிஞ்சு பிரிஞ்சு கடுப்பேத்துது..எவன் எப்படி போனா எனக்கென்ன..தெனமும்மெட்ராசுல பல கோடி பேர் இந்த வெயில்ல திரியறாங்கதான்..அதுக்கு நான் என்ன பண்றது..அது அவங்க தலையெழுத்து..செத்தா சாவுட்டும்..மூடிக்கிட்டுகெட கம்யூனிச முண்ட..
அப்படினு தலைல அடிச்சு கம்யூனிசத்த அடக்கி வெச்சு நடக்கஆரம்பிச்சேன்..ஆனா கண்டிப்பா இது அடங்காது..அடுத்த முக்குல கட்டடம்வேலை செய்றவங்களையோ, தெரு நாயையோ, ஐ.டி காரனையோ,வெள்ளை சட்டை வெள்ளை வேட்டி போட்டவனையோ, எதுத்தாப்புல கவசத்தை மாட்டிகிட்டு புர்ருனு வர்ற உன்னையோ, ஏன் சில சமயம் அந்தகவசத்துல பட்டுத் தெறிக்கிற என் மூஞ்சியோ..இப்டி எதப் பாத்தாலும் சிலுப்பிகிட்டு நிக்கும்..கெரகம்..கம்யூனிசம்ன பெரிய மயிருனு நெனப்பு..மொதல்ல புடிங்கி எறியயணு..
சரி அது கெடக்குது..சந்தானம் சொல்ற மாதிரி அது உள்ளூர் ஓணான்..எப்ப வேணும்னாலும் அடிக்கலாம்..நாம போவோம்..நேரமாச்சு..அப்படினு ராம் நகர்எட்டாவது சாலைல பீச்சாங்கை பக்கம் திரும்பினேன்..அப்பனு பாத்தா எதுத்தவீட்ல இருந்து அந்த பொண்ணு வெளில வரணும்? கல்யாணம்ஆயிடுச்சு..நல்லாவே தெரியுது..ஆனா மனசு எங்க கேக்குது..காஞ்சு போன கேவலமான மனசு..அழகா வேற இருக்கா..சரி கொஞ்சமே கொஞ்சம்பாத்துக்கலாம்னு தோணுச்சு..ஆனா அதுவும் இந்த கம்யூனிச முண்டையோடமொக்க மூளைக்கு உறைக்கறதுக்குள்ள பாத்துடனும்..இல்லைனா கல்யாணம்கச்சேரின்னு ஆரம்பிச்சுடும்..அப்டியே ஓரக்கண்ணுல ஒரு பார்வைய போட்டுட்டு நடக்க ஆரம்பிச்சேன்..
ஒரு நூறடி நடந்துருப்பேன்..அப்போதான் நடக்குறது எவ்ளோ கஷ்டம்னு தெரிஞ்சுது..கால் வலிக்க ஆரம்பிச்சுடுச்சு..உடம்பெல்லாம் வேத்துக்கொட்டுது..கெரகம்..கெரகம்..இப்போதான் தெரியுது எல்லாரும் எதுக்கு உள்பனியன் போடறாங்கனு..அடுத்த தடவ கண்டிப்பாப் போடணும்..ம்ம்ம்..அடுத்ததடவ நடந்தா பாத்துக்குவோம்..இன்னும் ஒரு நூறடி போனேன்..கால்நல்லாவே வலிக்க ஆரம்பிச்சுடுச்சு..இரட்டைக் கெரகம்..
வவ்..வவ்..
இதுல இந்த தெருநாய்ங்க வேற..இதுங்க நம்மகிட்ட சண்டைக்கு வருதா இல்ல அதுங்களுக்குள்ளேயே சண்ட போட்டுக்குதுங்குளானு தெரியல..அதுங்களுக்குள்ளேயே குரைக்குது..திடீர்னு என்னப் பாத்துக் குரைக்குது ..இரவு நேரம்னா கூட சரி..அதுங்க கூடலுக்கு தடையா இருக்கறதனாலனு சொல்லலாம்..ஆனா பட்டப்பகல்ல எதுக்கு? ஒருவேளை இப்பவேவோ? இல்ல அவங்க வீட்டு பிரச்னைனால வந்த ஊடலோ? என்ன எளவோ..போய்டுங்க ஒழுங்கா..வண்டில மட்டும் வந்துருந்தேன்னா பாம்பாம்னு சத்தம் வெச்சே வெரட்டி அடிச்சிருப்பேன்..அப்பவும் போகலைனா சாகடிச்சுருப்பேன்..மறுபடியும் குரைச்சுதுங்க. நாம நெனைக்கறது கேட்டிக்குமோ? கேட்டா என்ன இப்போ? இருங்கடி நாளைக்குவெச்சுக்கறேன்னு கொஞ்சம் ஓடி கொஞ்சம் நடந்து அதுங்களதாண்டிட்டேன்..நல்லவேள கம்யூனிச மூளை இன்னும் தூங்கிட்டுதான்இருக்கு..
இன்னும் கொஞ்ச தூரம் தான்..வந்துரும்..அய்யய்யோ இப்போதான் ஞாபகம்வருது..இந்த போலீசு வேற முன்னாடி நிப்பானே..ஹெல்மெட்கேப்பானே..என்ன பண்ணலாம்னு ஒரு அம்பது அடிக்கு யோசிச்சுட்டேவந்தேன்..அப்போதான் நான் நடந்து வர்றேன்றதே இந்த மண்டைக்குப் புரிஞ்சுது..எப்புடி பயமுறுத்தி வெச்சுருக்கானுங்க இந்த போலீசுக்காரனுங்க..கெரகம்..நல்லவேள நடந்து வந்துட்டோம்னு தோணுது..நடந்து வர்றது நல்லதுனு கூட தோணுது..
‘இதுலயும் சுயநலம் இருக்குனு’ உள்ள கம்யூனிசம் கத்துச்சு.. கெரகம்முழிச்சுடுச்சு..எல்லார மாதிரி நானும் கேட்டும் கேக்காத மாதிரி நடக்க ஆரம்பிச்சேன் மறுபடியும்..
இன்னோரு நூறு அடி..அப்பாடா வந்தாச்சு..ஒரு தம் வாங்கி பத்தவெச்சேன்..நல்லா ஒரு இழு இழுத்து விட்டேன்..கெரகம்..இதுக்காக எவ்ளோபிரச்னை பாரு..அவ்ளோ போதை..இல்லாம இருக்க முடியல..கெரகம்..
அடுத்து இழு இழுத்துட்டு என்ன பண்லாம்னு யோசிச்சுட்டு ரோட்ட வெறிக்க ஆரம்பிச்சேன்..கார் ஒண்ணு போச்சு..வெளிய வந்த புகையால அந்தக் காரஅடிச்சு நொறுக்கற மாதிரி கற்பனை பண்ணிக்கிட்டு நல்லா அழுத்தி ஊதினேன்..
“கெரகம் புடிச்சவன்..ஏ.சி போட்டுக்கிட்டு சம்முனு போறான் பாரு நாயி”
உள்ளார,
“ஒண்ணும் போடாத நாயி, கோவணம் போட்ட நாய பாத்து அம்மணக்கராநாய்னு திட்டுச்சாம்”
வழக்கம் போல கேட்டும் கேக்காத மாதிரி திரும்பி நடக்க ஆரம்பிச்சேன்..
சிறுகதைக்கான உத்வேகம்: க.நா.சுப்ரமண்யம் எழுதிய அசுரகணம் நாவல்
கொலு கேம்
இது ஒரு வித்தியாசமான கொலு விளையாட்டு !
குவிகத்தின் ஆலோசகர் அர்ஜூன் & அனன்யா தங்கள் சான்ஃபிரான்சிஸ்கோ நகர் இல்லத்தில் அமைத்த ‘மிகை யதார்த்த ( AUGMENTED REALITY ) கிராஃபிக் கொலு.’
ஒரு புதுமையான தேடல்! பார்த்து ரசியுங்கள்!
குவிகம் இலக்கியவாசல் -19 வது நிகழ்வு –
இணையத்தில் கோமல் சுவாமிநாதனின் சுபமங்களா
குவிகம் இலக்கிய வாசலின்
கோமலின் சுபமங்களா இதழ்களை இணையதளத்தில் வெளியிடும் விழா 15 அக்டோபர் மாலை மயிலாப்பூர் P S பள்ளி விவேகானந்தா அரங்கத்தில் நடைபெற்றது.
கதை படித்தவர் : திரு என் ஸ்ரீதரன் கவிதை படித்தவர் : கணபதி சுப்ரமணியன்
சரித்திரம் பேசுகிறது! –யாரோ
பாண்டியன்
முற்கால பாண்டிய நாட்டுக் கதைகளைச் சற்றுப் பார்ப்போம்.
இவைகள் எல்லாம் கி மு 300 – கி பி 100 வாழ்ந்த பாண்டிய மன்னர்கள் பற்றி.
பாண்டியர்கள் சந்திர குலத்தைச் சேர்ந்தவர்கள்!
- ஆதி காலத்தில், குமரிக் கண்டத்தில் பாண்டியர்கள் அரசாண்டனர். இந்தியப்பெருங்கடலில் மூழ்கிவிட்டதெனக் கருதப்படும் குமரிக்கண்டத்தில் பாண்டிய தலைநகர் தென்மதுரை.
ஒரு கடற்கோளினால் (tsunaami) இது அழிவுற்றது. - இக் கடற்கோளில் அழியாது இருந்த கபாடபுரம் பாண்டியர்களின் இடைச்சங்ககாலத் தலைநகரம்.
- கபாடபுரத்தில் – அகத்தியர், தொல்காப்பியர் இருந்து சங்கம் வளர்த்தனர்.
- இராமாயணம்:
சீதையைத் தேடி தென்திசை செல்லும் வானரப்படைகளிடம் சுக்கிரீவன்:
“நீங்கள் தென்திசை நோக்கிச் செல்லும் போது தங்கம், முத்து, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட மதில்களைக் கொண்ட ஒரு நகரத்தைக் காண்பீர்கள். அந்தப்பேரரசான பாண்டியனின் கபாடபுரத்திலும் சீதையைத் தேடிப்பாருங்கள்!” - இரண்டாம் கடற்கோளால் அந்நாடும் கபாடபுரமும் அழிவுற்றது.
- பின்னர் தற்போதுள்ள மதுரை பாண்டியர்களின் தலைநகராயிற்று.
மதுரை மாநகரம்!
- மகாபாரதம் :
கொடுமுடியின் புறநகரில் வன்னி மரத்தில்தான் பாண்டவர் தம் ஆடைகளையும் ஆயுதங்களையும் மறைத்து வைத்தனர். - அர்ஜுனன் பாண்டிய மன்னன் ஒருவன் மகளையும் மணந்தான்!
ஆஹா! எந்த நாடு இளவரசியையும் விட்டு வைக்கக் கூடாது என்ற என்னே ஒரு உத்தமமான கொள்கை! - பாண்டவர் அணியில் இருந்து மலையத்துவசப் பாண்டியன் துரோணர் மகன் அசுவத்தாமனுடன் போர் புரிந்ததாகக் கதை உள்ளது.
- சிவபெருமான் ஒரு பாண்டியன்!
- உமையவள் மலையத்துவசப் பாண்டியன் மகள் மீனாட்சியாகப் பிறந்தாள்.
பின்னர் சோமசுந்தரப் பெருமானை மணந்தாள்
பாண்டிய நாட்டை சோமசுந்தரர் ஆண்டார்
– என்று புராணங்கள் கூறும்.
“கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோடமர்ந்து
பண்ணுறத் தெரிந்து ஆய்ந்த இப் பசுந்தமிழ்”
- சிவபெருமான் கழகத்தைச் சேர்ந்த்தவர்!
- அந்நாளில் ‘கழகம்’ தமிழை வளர்த்தது!
- மதுரையை ஆண்ட பாண்டியர் மன்னன் ஒருவன் ரோமாபுரியின் அகஸ்டஸ் மன்னனுக்குத் தூதன் ஒருவனை அனுப்பினான்.
- நிலந்தரு திருவிற் பாண்டியன் அரசவையில் தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது.
மீன் கொடி!
மூன்று கதைகளைப் பார்ப்போம்.
முதல் கதை:
ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்
- சிலப்பதிகாரக் காவியத்தில் கூறப்படும் பாண்டிய மன்னன்.
- பட்டத்து ராணி கோப்பெருந்தேவி.
- வடநாட்டு ஆரிய மன்னர்களைப் போரில் வென்றதனால் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்ற சிறப்புப்பெயரைப் பெற்றான்.
- பெரும்படை மிக்கவனாகத் திகழ்ந்த இவன் தென்னாட்டு அரசர்கள் பலரை அடக்கி சேர,சோழர்கள் பலரையும் வென்றவனும் ஆவான்.
- சேரன் செங்குட்டுவன் காலத்தில் வாழ்ந்தான்.
- சரியாக ஆராய்ந்து அறியாது கோவலனைக் கொல்ல ஆணையிட்டு, நீதி தவறியமைக்காகத் தன்னுயிர் நீத்த பாண்டிய மன்னன்.
- கல்விச்சிறப்பினை முதன் முதலில் உலகினுள் உணர்த்திய மன்னன்.
இவனது புறப்பாடலில் இவன் கல்வியின் சிறப்புகளைக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. அப்பாடலில்:
“உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே!
பிறப்போரன்ன உடன்வயிற்றுள்ளும்
சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும்
ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும்
மூத்தோன் வருக என்னாது அவருள்
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்
வேற்றுமை தெரிந்த நாற்பா லூள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேல் பால் ஒருவனும் அவன் கண்படுமே”
இந்த பாடலின் பொருள்:
“ஆசானுக்கு உதவி செய்யவேண்டும்;
மிக்க பொருளைத் தரவேண்டும்.
பணிவோடு கற்பது நல்லது!
ஒரு குடும்பத்தில் பிறந்தாலும் கற்றவனையே தாய் விரும்புவாள்.
ஒரு குடும்பத்தில் மூத்தவனைக் காட்டிலும் கற்ற ஒருவனையே, இளையவனே ஆகிலும் உரிமை தந்து போற்றுவாள்.
அறிவுடையோன் வழியில்தான் ஆட்சி செல்லும்!
கீழ் இனத்தவன் கற்றால் மேலினத்தவனைவிட மேலாக மதிப்பர்!”
என கல்வியின் சிறப்பினைப் போற்றி உயர்த்திக் கூறியுள்ளான் இப்பாண்டிய மன்னன்.
இவனது ஆற்றலை வியந்து இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில்:
“வடவாரிய படை கடந்து
தென்தமிழ் நாடு ஒருங்கு காணப்
புரைதீர் கற்பின் தேவி தன்னுடன்
அரசு கட்டிலிற் றுஞ்சிய பாண்டியன்
நெடுஞ்செழியன்”
என இப்பாண்டிய மன்னனைப் போற்றியுள்ளார்.
இரண்டாம் கதை:
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்
தனது தந்தையின் இறப்பிற்குப் பின்னர், சிறு வயதிலேயே முடிசூட்டப்பட்டவன் இவன்.
‘நெடுஞ்செழியன் இளையவன், வயது முதிராதவன் ஆற்றல் இல்லாதவன்’ என இகழ்ந்து சோழநாட்டை ஆண்ட இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, சேர நாட்டை ஆண்ட மாந்தரஞ்சேரல் இரும்பொறை, கொங்கு நாட்டினை ஆண்ட திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேள், பொருநன் ஆகிய குறுநில மன்னர்கள் போன்றோர் கூறினர்.
இவ்வனைவரும் சேர்ந்து பாண்டிய நாட்டின் மீது படையெடுத்துத் தலையாலங்கானம் என்னுமிடத்தில் தாக்கினர்.
இவன் போருக்குச் செல்லும் போது, சிறுவர்கள் அணியும் ஐம்படைத் தாலியைத் தன் காலில் இருந்து கழட்டவில்லை.
இவன் புலவனாகவும் விளங்கினான். இவனது ஒரே ஒரு பாடல் புறநானூறு 72 எண்ணுள்ள பாடலாக உள்ளது. அதில் அவன் வஞ்சினம் கூறுகிறான்.
‘இது’ செய்யாவிட்டால் எனக்கு ‘இன்னது’ நேரட்டும் என்று ‘பலர் முன்’ கூறுவது வஞ்சினம்.
“நாற்படை நலம் உடையவர் என்று தன்னைத் தானே புகழ்ந்துகொண்டு செருக்கோடு என்னைப்பற்றிச் சிறுசொல் கூறி, என்னோடு போரிடுவோர் எல்லாரையும் ஒன்றாகச் சிதைத்து, என் அடிக்கீழ் நான் கொண்டுவராவிட்டால்,
என் குடிமக்கள் என்னைக் கொடியன் என்று தூற்றுவார்களாக!
மாங்குடி மருதனைத் தலைவனாகக் கொண்ட என் புலவர்-சங்கம் என்னைப் பாடாது போகட்டும்!
என்னைப் பாதுகாப்போர் துன்பம் கொள்ள, இரவலர்களுக்கு வழங்கமுடியாத வறுமை என்னை வந்தடையட்டும்!”
எதிர்த்துப் போரிட்ட அனைவரையும் நெடுஞ்செழியன் தோற்கடித்தான்.
ரஜினி மாதிரி… செய்யறதைத் தான் சொல்வார் போலும்!
மூன்றாம் கதை:
உக்கிரப்பெருவழுதி:
உக்கிரப் பெருவழுதி என்னும் பாண்டிய அரசன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் மகன் ஆவான். படைக்களத்தில் சூறாவளி எனப் போரிடும் ஆற்றல் உள்ளவன். எனவே இவனை ‘உக்கிர’ என்னும் அடைமொழியுடன் அழைப்பது வழக்கம். அகநானூறு தொகுப்பித்த உக்கிரப்பெருவழுதி பெரும் புலவனாகவும் விளங்கினான்.
இவன் காலத்தில் பாண்டிய நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள கானப்பேரெயில் என்னும் கோட்டை உள்ள பகுதியை வேங்கைமார்பன் என்ற குறுநில மன்னன் ஆண்டு வந்தான். உக்கிரப் பெருவழுதி வேங்கை மார்பனை வென்று கானப் பேரெயிலைக் கைப்பற்றினான். எனவே இவன் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி எனப்பட்டான். கானப் பேரெயில் தற்போது சிவகங்கைக்குக் கிழக்கே 16 கி.மீ தொலைவில் காளையார் கோயில் என்னும் பெயரில் உள்ளது.
பாண்டியன் உக்கிரப் பெருவழுதி யாவருடனும் பகைமை பாராட்டாமல் மாரி மாவெண்கோ என்ற சேர மன்னனுடனும், இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என்ற சோழ மன்னனுடனும் நட்புப் பூண்டிருந்தான். இப்பாண்டிய மன்னன் சிறந்த புலவனாகவும், புலவர்களைப் போற்றிய புரவலனாகவும் இருந்தான். எல்லாவற்றிற்கும் மேலாக எட்டுத்தொகையுள் ஒன்றான அகநானூற்றைத் தொகுப்பித்தவன் இம்மன்னனே என்றும் கூறுவர். இப்பாண்டிய மன்னனைப் பற்றிய குறிப்புகள் இறையனார் அகப்பொருள் உரையிலும், சிலப்பதிகார உரையிலும் காணப்படுகின்றன. உக்கிரப் பெருவழுதியைப் பற்றி ஐயூர் மூலங்கிழாரும், ஔவையாரும் புறநானூற்றில் பாடியுள்ளனர்.
ஒரு நாள்:
மந்திரி: மன்னர் பிரானே! இன்று நம் அரசவைக்கு ஒரு புலவர் வருகை தந்திருக்கிறார்.
உக்கிரப் பெருவழுதி….
புலவரை நோக்கினார்.
முகமலர்ந்து வரவேற்றார்!
குறைந்த உயரம்
முகத்தில் கறுந்தாடி
அதைத் மீறிய வெண்பற்கள்
தலையில் தலைப்பாகு
வெள்ளை உடை
கரங்களில் ஓலைச்சுவடிக் கட்டு
மன்னர்: “புலவரே! தாங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்?”
புலவர்: “நான் மயிலையையிலிருந்து வருகிறேன்! தமிழ் மீது உங்களது காதல் அறிந்து உங்களைக் காண வந்தேன். நான் குறுங்கவிதைக் கொத்து ஒன்று படைத்துள்ளேன்! அதை உங்கள் சமூகத்திற்கு அளிக்க வந்துள்ளேன்”
மன்னர் அந்த குறுங்கவிதையில் ஒன்றைப் படித்தார்.
சுவைத்தார்!
மற்றொன்று!
சுவை கூடியது!
மற்றொன்று!
சுவையோ சுவை!
ஒவ்வொன்றும் இரண்டு அடிகள்!
ஆயினும் கோடி கருத்துகள்!
ஆயிரக்கணக்கான கவிதைகள்.
மன்னர் : “தமிழில் இப்படி இது வரை ஒருவர் எழுதியது இல்லை!
சுருக்கத்தில் பெருக்கம் இதுதானோ? காலம் அழியும் வரை இந்த கவிதைகள் தமிழுக்கு அலங்காரமாக இருக்கும். தெய்வப் புலவரே! என் பெயர் சரித்திரத்தில் இல்லாமல் போகலாம். ஆனால் உங்கள் பெயரும் இந்த குறள் தொகுதியும் தமிழர் மற்றுமல்லாது உலகெங்கும் பரவி புகழ் மணக்கும். தங்கள் பெயர்?”
“வள்ளுவன்”
மன்னர்: “ஆஹா! இதைத் திருவள்ளுவரின் திருக்குறள் என்று உலகம் போற்றும்”
மன்னன் உடனே திருக்குறளைப் பாராட்டும் வகையில் ஒரு வெண்பா இயற்றிப் பாடினான்.
கற்றாரைக் கற்றாரே காமுறுவர்!
இந்த பாடல் திருவள்ளுவ மாலையில் காணப்படுகின்றது.
பெருவழுதி நாணயம்
(நன்றி: https://ta.wikipedia.org/w/index.php?curid=136793)
பாண்டியர் தங்கள் பெயரில் மாறன், வழுதி, சடையவர்மன், மாறவர்மன், வர்மன், செழியன், முது குடுமி என்ற ஒட்டுக்களைக் சேர்த்துக் கொண்டனர்.
- நீதி காக்க பாண்டியன் நெடுஞ்செழியன் உயிர் கொடுத்தான்.
- பொற்கைப் பாண்டியன் நீதிக்குத் தலை வணங்கி தன் கையை வெட்டிக் கொண்டான்.
சில சில்லறைக் கதைகள்:
வியட்நாம் வீடு:
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பாண்டிய மன்னன் வியட்நாம் நாட்டை ஆண்டிருக்கிறான்! அவன்தான் வரலாறு அறிந்த முதல் வியட்னாமிய மன்னன். அவனுடைய பெயர் ஸ்ரீமாறன். இவன் இடைச்சங்கத்தின் கடைசி மன்னன். அவன் அரசாண்ட காலத்தில் கடல் பொங்கி தென் மதுரையை அழித்ததால் அவன் தற்போதைய மதுரையில் கடைச்சங்கத்தை அமைத்தான். இந்த மன்னனோ இவனது குலத்தினரோ வியட்னாமில் ஒரு அரசை நிறுவியிருக்கலாம்.
தென்கிழக்கு ஆசியா முழுவதும் அகத்திய முனிவரின் சிலைகள் கிடைக்கின்றன. அகத்தியர் “கடலைக் குடித்த” கதைகளும் பிரபலமாகியிருக்கின்றன.
முதல்முதலில் கடலைக் கடந்து ஆட்சி நிறுவியதை “கடலைக் குடித்தார்” என்று பெருமையாக உயர்வு நவிற்சியாக குறிப்பிடுகின்றனர். வேள்விக்குடி செப்பேடு இந்தக் கதைகளைக் குறிப்பிட்டுவிட்டு அகத்தியரை பாண்டியரின் “குல குரு” என்றும் கூறுகிறது.
பாண்டியர் கால வரிசைப் பட்டியல்
முற்காலப் பாண்டியர்கள்
- வடிம்பலம்ப நின்ற பாண்டியன்
- நிலந்தரு திருவிற் பாண்டியன்
- முதுகுடுமிப் பெருவழுதி
- பசும்பூண் பாண்டியன்
- கடைச்சங்க காலப் பாண்டியர்
- முடத்திருமாறன்
- மதிவாணன்
- பெரும்பெயர் வழுதி
- பொற்கைப் பாண்டியன்
- இளம் பெருவழுதி
- அறிவுடை நம்பி
- பூதப் பாண்டியன்
- ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்
- வெற்றிவேற் செழியன்
- தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
- உக்கிரப் பெருவழுதி
- மாறன் வழுதி
- நல்வழுதி
- கூட காரத்துத் துஞ்சிய மாறன் வழுதி
- இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்
- குறுவழுதி
- வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி
- நம்பி நெடுஞ்செழியன்
Ref: http://kallarperavai.weebly.com/298630062979302129753007299129923021-299729922994300629933009.html
வாசக நண்பர்களே!
வட இந்தியாவில் மௌரியப் பேரரரசு அசோகருக்குப் பின் மெல்ல அழிந்த பின் ஒரு இருண்ட காலம் பிறந்தது. அதே காலக்கட்டத்தில் தமிழ் நாட்டில் நாம் இது வரை பார்த்த சேர சோழ பாண்டியர் -சங்கம் வளர்த்தும்- வீரம் போற்றியும் பொற்காலத்தை உருவாக்கினர். இதற்குப் பிறகு தமிழகம் இருண்ட காலத்திற்குத் தள்ளப்படுகிறது. ஒற்றுமை இல்லாத மன்னர்கள் தமிழகத்தை இருளில் தள்ளினர். அதே நேரம் வட இந்தியாவில் ஒரு பொற்காலம் உருவாகியது.
ஆக, அடுத்த இதழில் சரித்திரம் என்ன பேசப்போகிறது?
‘யாரோ’ அறிவர்?
விருட்சம் 1,2,3 ….. 100
விருட்சம் 100வது இதழ் வெளியீடு.
500-1000 சில உரையாடல்கள் – தரும . இராசேந்திரன்
பேருந்து நிலையத்தில் இருவர்
ஏற்கனவே பஸ்ல சில்லறை கொடுக்கமாட்டாங்க ….இப்ப டிக்கெட்டே கொடுக்கமாட்டாங்க …
கதை கேட்க வாங்க
அருமையாகக் கதை சொல்கிறார்கள்! கேட்போமா?
படைப்பாளிகள் – எஸ் கே என்
சு தமிழ்ச்செல்வி
எளிய மக்களின் நீண்ட வாழ்வின் நுண்ணிய பகுதிகளை அவர்கள் மொழியிலே பதிவு செய்யும் சு.தமிழ்ச்செல்வி, அவரது அளம், மாணிக்கம் மற்றும் கீதாரி ஆகிய நாவல்களுக்காக நன்கு அறியப்பட்டவர். இவரது சிறுகதைகளிலும் பெண் விவசாயக் கூலிகள் சந்திக்கும் அவலங்களும் இயலாமையும், பல சமயங்களில் வேறு வழிதெரியாது மூட நம்பிக்கைகளை கைக்கொள்ளுவதும் காணப்படுகின்றன. ஆசிரியராகப் பணியாற்றி வருபவர். “மாணிக்கம்” புதினத்திற்காக தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டுக்கான விருதினைப் பெற்றவர்.
அவரது ‘யதார்த்தம்’ என்கிற கதை..
* * * * * * *
“ஏய், இங்க யாரு ஊளையிடறது? கொஞ்சம்கூட அறிவில்லாம..” கத்திக்கொண்டே வந்தாள் அந்த நர்ஸ்.
என்று தொடங்குகிறது. இடம் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தாலுக்கா தலைநகரான திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை. அழுதழுது வீங்கிப் போயிருந்த மாரியப்பனும் தலைவிரிகோலமாய் மரத்தடியில் ஆஸ்பத்திரிக்கு வெளியே திடீர் திடீரென பெருங்குரலெடுத்து அழும் அவன் மனைவி கண்ணம்மாவும் அவனது அம்மா காலை நாலரை பஸ்ஸில் வருவாள் என எதிர்பார்த்துக்கிடந்தார்கள். வரும்போது ஏதேனும் பணம் தோதுபண்ணிக் கொண்டுவரலாம். அவள் வந்தால்தான் இவர்கள் ஊருக்குப் போகமுடியும். கையில் இருந்ததோ இரண்டு மூன்று ரூபாய்கள்தான். இயலாமையும், துக்கமும் நெஞ்சை அழுத்துகிறது.
இப்படியெல்லாம் ஆகுமென்று தெரியுமா என்ன? நேற்று காலையிலேயே மூன்றரை வயது மகனுக்கு உடம்பு காய்ந்து கொண்டு இருந்தது. பக்கத்து ஊர் ஆசுபத்திரியில் காண்பிக்கலாம் என மனைவியின் கோரிக்கை. ஆனால் அங்கு போய்விட்டு வந்து நடவுக்குப் போக சாத்தியமில்லை. இருவரும் சம்பாதிக்கும் குறைந்த வருமானத்தில்தான் வாழ்க்கை. வேலை கிடைக்கும் ஒரு சில நாட்களிலும் ஒருநாள் வேலைக்குப் போகாவிட்டால்..? ‘முக்குட்டு’ கடையிலிருந்து காப்பித்தண்ணியும் ‘சொர’ மாத்திரையும் வாங்கிக் கொடுத்துவிட்டு வேலைக்குப்போகத்தான் தீர்மானித்தாள்.
இருபோக சாகுபடி நடந்த நாட்களில் எதாவது வேலை கிடைத்துக்கொண்டே இருக்கும். வாய்கால் எல்லாம் காய்ந்து அல்லாடும் விவசாயத்தில் வேலை என்று கிடைப்பதே மிகச் சொற்பம்.
வேலை முடிந்து வீடு திரும்பும் கண்ணம்மா, காய்ச்சல் கண்ட மகனுக்கு ரசம் வைத்துக் கொடுக்க சிறு நண்டுகளைத் தேடிப்பிடித்து மடியில் கட்டிக்கொண்டு வந்தாள்.
மகனுக்குக் கிட்ட நெருங்கவே முடியாத காய்ச்சலில் தூக்கித்தூக்கிப் போட்டுக்கொண்டிருந்தது. வேலை சீக்கிரம் முடிந்தாலும் கூலி பெறத் தாமதமாகி அப்போதுதான் வீடு திரும்பிய மாரியப்பன், மகனைத் தோளில் போட்டுக்கொண்டு, மனைவியுடன் ஏழரை மணி பஸ் பிடித்து இந்த ஆஸ்பத்திரிக்கு வந்தான்.
ஆஸ்பத்திரிக்கு வந்தபோது நைட் ட்யூட்டி டாக்டர் வந்திருக்கவில்லை. இவ்வளவு மோசமான ‘கேஸ்’ பார்க்க நர்ஸ்களுக்கும் விருப்பமில்லை. காலில் விழாத குறையாக கெஞ்சியதால் வைத்தியம் பார்த்தார்கள். வேண்டாத தெய்வமில்லை. ஊசிபோட்ட மயக்கத்தில் குழந்தை உறங்குகிறான் என்ற நினைப்பிலும், இனி பிள்ளையைக் காப்பாற்றிவிடலாம் என்ற நம்பிக்கையிலும் ஏதோ டீயும் பன்னும் தின்று கண்ணயர்கிறார்கள். இடையில் திடுக்கிட்டுக் கண்விழிக்கும்போதுதான் புரிகிறது பிள்ளை இறந்து கிடப்பது.
பதினைந்து ரூபாயுடன் முதல் பஸ்ஸில் வந்த கிழவி, பேரப்பிள்ளை போய்விட்டது என்று அறிந்து ஒருபாட்டம் அழுது தீர்த்தாள்.
சரி. இப்போது ஊர் திரும்பவேண்டுமே? கார் என்றால் இருநூற்றைம்பது ஆட்டோ என்றாலும் நூற்றைம்பது.
“அம்மா, நீங்க ரெண்டியரும் அழுது ரெகள பண்ணாதிய. புள்ளைய மடில போட்டுக்கிட்டு பஸ்ஸுலேய போயிருவம்” என்றான்.
துக்கத்தைத் தொண்டையில் அடைத்துக்கொண்டு மூன்றரை டிக்கெட் எடுத்தான். கண்ணம்மாவை சமாளிக்கும் கடமை கிழவிக்கு.
பஸ் நான்கைந்து ஊர்களைக் கடந்திருந்தது. கண்மூடி மயங்கிக் கிடந்தவள் சாமி வந்தவளைப்போல் திடீரென்று எழுந்தாள். கிழவி சுதாரித்துக்கொண்டு பிடித்து அழுத்தி உட்காரவைப்பதற்குள், “ஐயோ.. நான் பெத்த தங்கமே.. ” என்று அலறிக்கொண்டு மகனிடம் பாய்ந்தாள் கண்ணம்மா. ஓடிக்கொண்டிருக்கும் பஸ்சில் நிலைதடுமாறி விழுந்தாள்.
கம்பியில் குத்தி ரத்தம் வழிய மூவரும் இறக்கிவிடப்படுகிறார்கள். எல்லோரும் இரக்கப்பட்டாலும் உதவி செய்ய முன்வரவில்லை. மாரியப்பனுக்குத் துக்கத்தைவிட மனைவிமேல் கோபம் பெரிதாக வந்தது.
அந்த ஊரில் இங்கொன்றும் அங்கொன்றுமாய் இருந்த டீக்கடைகளில் கிழவி துக்கத்தைச் சொல்லி அழுதாள்.
பிள்ளை இறந்த இரண்டாம் நாள், துக்கத்துடன் அவனது பொருட்களை வெறித்துப் பார்த்துகொண்டிருந்தாள் கண்ணம்மா. அவளிடம் ‘இப்படியே அழுதுகொண்டிருந்தாலும் செத்த பிள்ளை திரும்பி வரப்போவதில்லை, எல்லோருடன் நடவுக்குப் போனால் வேலை நினைப்பில் எல்லாம் மறந்து போகும்’ என்கிறாள் கிழவி. அந்த ‘டீக்கடை மவரசனுக்கு’ பணம் திருப்பித் தர வேண்டுமல்லவா?
தெருவில், ‘இன்று வேலை கிடைக்கவேண்டுமே’ என்ற பரபரப்புடன், ஓட்டமும் நடையுமாக போய்க்கொண்டிருந்தார்கள் நடவு நடப்போகும் பெண்கள். அவளுடன் கண்ணம்மாவும் சேர்ந்து கொண்டாள்.
என்று முடிகிறது.
* * * * * * *
‘இயல்பில் ஆண் பெண் என்னும் ஏற்றத்தாழ்வெல்லாம் இல்லை; உடல் தோற்றத்திற்குத்தான் இந்த ஆண் பெண் அடையாளமெல்லாம்’ என்று சொல்லும் தமிழ்ச்செல்வி பெண்ணியம் குறித்த கோட்பாட்டுரீதியான வாசிப்புப் புரிதலெல்லாம் பெரிய அளவில் தான் கொண்டிருக்கவில்லை என்கிறார். இன்னல்களுக்காட்பட்ட பெண்ணொருத்தி இயல்பாகத் தனது வாழ்வியலைப் பதிவு செய்யும்போது அதுவே பெண்ணெழுத்திற்கான சாத்தியங்களைக் கொண்டிருக்கத்தான் செய்யும் என்கிறார்
இவரது வலைப்பூவில் மற்ற படைப்புகளின் விவரங்களும் குறிப்புகளும் கிடைக்கின்றன.
ஒரு கதை இரு முடிவுகள் – அழகியசிங்கர்


எனது கவிதை – எஸ் எஸ்
நாளை எழுதப்போகும் கவிதையை
நேற்றே கிழித்துப் போட்டுவிட்டேன்
காரணம் புரியவில்லை
இன்று எழுதிய கவிதையையும்
நேற்றே அழித்துத் தொலைத்து விட்டேன்
காரணம் புரியவில்லை
நேற்று எழுதிய குப்பைகளை மட்டும்
பொறுக்கிப் பதித்து வைத்திருக்கிறேன்
காரணம் புரியவில்லை
ஏனிப்படி ?
கண்ணை மூடி யோசித்துப் பார்த்தேன்
த க தி மி தா த க தி மி தா த க தி மி தா
காரணம் புரிந்தது காரணம் கவிதை
கவிதைக்கு எப்படி ஜனனம்?
சுகப் பிரசவமா ஆயுதக்கேஸா
இடுக்கி போட்டு எடுத்ததா?
எதுவானாலும் வலி உண்டு சுகம் உண்டு
கவிதைக்கு எப்படி மரணம்?
சிலது பிறக்கு முன்னே இறக்கிறது
சிலது பிறக்கும் போதே சிதைகிறது
சிலது சாவுக்காக எப்பவும் போராடுகிறது
சிலது செத்து செத்து பிழைக்கிறது
சிலது ரொம்பச் சிலது மட்டும் ஏனிப்படி
இதயத்தில் புகுந்து வானத்தில் பறக்கின்றன?
காரணம் புரியவில்லை
புரியத் தேவையுமில்லை