
நான் நடக்க வேண்டும் என்று என்றுமே ஆசைப்பட்டுளேன். ஆனால் நட என்றுசொன்னால் அல்லது நடக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் மட்டும்மண்டைப் பிரளயம் ஏற்பட்டு விடும் . அதாவது ஒன்னு கெடைக்கிறதுக்கு அவளோ கஷ்டப்படுவோம்..ஆனா அது கிடைச்சதும் அத வெச்சு என்னசெய்றதுன்னு தெரியாது..அந்த மாதிரி..
பேட்மேன் படத்துல சோக்கர் சொல்வது போல..
‘I’m a dog chasing cars. I wouldn’t know what to do with one if I caught it’
அந்த மாதிரி..
நண்பன் குளிக்கிறப்ப வாடா வாடானு கதவத் தட்டி இம்ச பண்ணுவேன்..ஆனாஅவன் வெளில வந்ததும் மறுபடியும் போய் படுத்துக்குவேன்..அவன் அவசரஅவசரமா வர்றதுல ஒரு சந்தோசம்..சொல்லப் போனா குரூர சந்தோசம்..ஒருகிறுக்குத்தனம்..
அந்த மாதிரி..
எல்லாமே ஒரு கிறுக்குத்தனம்தான்..
எங்கேயாது போகணும்..தனியா போகணும்..யாருமே இல்லாத எடத்துக்குப் போகணும்..நாலு நாள் நிம்மதியா இருந்துட்டு வரணும்னுதோணும்..திங்கள்கிழம காலைல இருந்து வெள்ளிக்கிழம வரைக்கும்தோணும்.. வண்ண வண்ணமா மனசுல மின்னும்..பறக்கும்..தனியா போய் புத்தர் மாதிரி ஞானம் அடையற மாதிரி கனவு வரும்..ஆனா வெள்ளிக்கிழம சாயங்காலம் ஆறு மணி ஆனதும்..ஞான புத்தர் பயந்த புத்தரா சோம்பேறிபுத்தரா மாறிடுவார்..
அந்த மாதிரி..
அந்த அஞ்சு நாள், ஏக்க சந்தோசம்..மீதி ரெண்டு நாள், கவலைப்படற குரூரசந்தோசம்..அவ்ளோ தான்..
இதெல்லாம் எதுக்கு சொல்றேன்னா..எனக்கு நடக்கணும்னு ஆசைலாம்இல்லை..ஆனா நடக்கிறது எனக்கு பிடிக்கும்னு சொன்னா இந்த உலகம்நம்மள செமயா ஒரு பார்வை பாக்கும்..அந்த பார்வை தர்ற போதைக்குத்தான்இத்தனையும்..
ஆனா எவன்/எவ கண்ணு பட்டுச்சோ தெரியல.. இன்னிக்கு நடக்க வேண்டிய நிலமை வந்துடுச்சு..கெரகம்..எப்படியாவது தள்ளி விட்டுடலாம்னு பாத்தேன்..முடியலை..போயே ஆகணும்..வண்டி இல்லாததனால நடந்துதான்போயாகணும்..
சரி போய் தொலைதுனு கிளம்பி வெளிய வந்து நின்னா சுள்ளுனுவெயிலு..கெரகம்..மெட்ராசுல என்ன மயித்துக்கு வாழணும்னு தோணுச்சு..அப்புறம் உடனேயே இன்னொன்னும் தோணுச்சு..இது ஏன் வண்டில போறப்போலாம் உனக்கு தோணலைன்னு? இதுக்கு என்ன பதில்னு தெரியுது..ஆனா சொன்னா நான் சுகம் விரும்புற-பிரச்னை வந்தா மட்டும்மெட்ராசை வெறுக்குற-மனிதன் இல்லாத ஒருத்தனா தெரியலாம்..அதனால அத நான் சொல்லப் போறது இல்ல ..
கெரகம்..கெரகம்..
இந்த மண்டைய மொதல்ல ஒன்னாக்கணும்..முதலாளித்துவம் கம்யூனிசம்னுபிரிஞ்சு பிரிஞ்சு கடுப்பேத்துது..எவன் எப்படி போனா எனக்கென்ன..தெனமும்மெட்ராசுல பல கோடி பேர் இந்த வெயில்ல திரியறாங்கதான்..அதுக்கு நான் என்ன பண்றது..அது அவங்க தலையெழுத்து..செத்தா சாவுட்டும்..மூடிக்கிட்டுகெட கம்யூனிச முண்ட..
அப்படினு தலைல அடிச்சு கம்யூனிசத்த அடக்கி வெச்சு நடக்கஆரம்பிச்சேன்..ஆனா கண்டிப்பா இது அடங்காது..அடுத்த முக்குல கட்டடம்வேலை செய்றவங்களையோ, தெரு நாயையோ, ஐ.டி காரனையோ,வெள்ளை சட்டை வெள்ளை வேட்டி போட்டவனையோ, எதுத்தாப்புல கவசத்தை மாட்டிகிட்டு புர்ருனு வர்ற உன்னையோ, ஏன் சில சமயம் அந்தகவசத்துல பட்டுத் தெறிக்கிற என் மூஞ்சியோ..இப்டி எதப் பாத்தாலும் சிலுப்பிகிட்டு நிக்கும்..கெரகம்..கம்யூனிசம்ன பெரிய மயிருனு நெனப்பு..மொதல்ல புடிங்கி எறியயணு..
சரி அது கெடக்குது..சந்தானம் சொல்ற மாதிரி அது உள்ளூர் ஓணான்..எப்ப வேணும்னாலும் அடிக்கலாம்..நாம போவோம்..நேரமாச்சு..அப்படினு ராம் நகர்எட்டாவது சாலைல பீச்சாங்கை பக்கம் திரும்பினேன்..அப்பனு பாத்தா எதுத்தவீட்ல இருந்து அந்த பொண்ணு வெளில வரணும்? கல்யாணம்ஆயிடுச்சு..நல்லாவே தெரியுது..ஆனா மனசு எங்க கேக்குது..காஞ்சு போன கேவலமான மனசு..அழகா வேற இருக்கா..சரி கொஞ்சமே கொஞ்சம்பாத்துக்கலாம்னு தோணுச்சு..ஆனா அதுவும் இந்த கம்யூனிச முண்டையோடமொக்க மூளைக்கு உறைக்கறதுக்குள்ள பாத்துடனும்..இல்லைனா கல்யாணம்கச்சேரின்னு ஆரம்பிச்சுடும்..அப்டியே ஓரக்கண்ணுல ஒரு பார்வைய போட்டுட்டு நடக்க ஆரம்பிச்சேன்..
ஒரு நூறடி நடந்துருப்பேன்..அப்போதான் நடக்குறது எவ்ளோ கஷ்டம்னு தெரிஞ்சுது..கால் வலிக்க ஆரம்பிச்சுடுச்சு..உடம்பெல்லாம் வேத்துக்கொட்டுது..கெரகம்..கெரகம்..இப்போதான் தெரியுது எல்லாரும் எதுக்கு உள்பனியன் போடறாங்கனு..அடுத்த தடவ கண்டிப்பாப் போடணும்..ம்ம்ம்..அடுத்ததடவ நடந்தா பாத்துக்குவோம்..இன்னும் ஒரு நூறடி போனேன்..கால்நல்லாவே வலிக்க ஆரம்பிச்சுடுச்சு..இரட்டைக் கெரகம்..
வவ்..வவ்..
இதுல இந்த தெருநாய்ங்க வேற..இதுங்க நம்மகிட்ட சண்டைக்கு வருதா இல்ல அதுங்களுக்குள்ளேயே சண்ட போட்டுக்குதுங்குளானு தெரியல..அதுங்களுக்குள்ளேயே குரைக்குது..திடீர்னு என்னப் பாத்துக் குரைக்குது ..இரவு நேரம்னா கூட சரி..அதுங்க கூடலுக்கு தடையா இருக்கறதனாலனு சொல்லலாம்..ஆனா பட்டப்பகல்ல எதுக்கு? ஒருவேளை இப்பவேவோ? இல்ல அவங்க வீட்டு பிரச்னைனால வந்த ஊடலோ? என்ன எளவோ..போய்டுங்க ஒழுங்கா..வண்டில மட்டும் வந்துருந்தேன்னா பாம்பாம்னு சத்தம் வெச்சே வெரட்டி அடிச்சிருப்பேன்..அப்பவும் போகலைனா சாகடிச்சுருப்பேன்..மறுபடியும் குரைச்சுதுங்க. நாம நெனைக்கறது கேட்டிக்குமோ? கேட்டா என்ன இப்போ? இருங்கடி நாளைக்குவெச்சுக்கறேன்னு கொஞ்சம் ஓடி கொஞ்சம் நடந்து அதுங்களதாண்டிட்டேன்..நல்லவேள கம்யூனிச மூளை இன்னும் தூங்கிட்டுதான்இருக்கு..
இன்னும் கொஞ்ச தூரம் தான்..வந்துரும்..அய்யய்யோ இப்போதான் ஞாபகம்வருது..இந்த போலீசு வேற முன்னாடி நிப்பானே..ஹெல்மெட்கேப்பானே..என்ன பண்ணலாம்னு ஒரு அம்பது அடிக்கு யோசிச்சுட்டேவந்தேன்..அப்போதான் நான் நடந்து வர்றேன்றதே இந்த மண்டைக்குப் புரிஞ்சுது..எப்புடி பயமுறுத்தி வெச்சுருக்கானுங்க இந்த போலீசுக்காரனுங்க..கெரகம்..நல்லவேள நடந்து வந்துட்டோம்னு தோணுது..நடந்து வர்றது நல்லதுனு கூட தோணுது..
‘இதுலயும் சுயநலம் இருக்குனு’ உள்ள கம்யூனிசம் கத்துச்சு.. கெரகம்முழிச்சுடுச்சு..எல்லார மாதிரி நானும் கேட்டும் கேக்காத மாதிரி நடக்க ஆரம்பிச்சேன் மறுபடியும்..
இன்னோரு நூறு அடி..அப்பாடா வந்தாச்சு..ஒரு தம் வாங்கி பத்தவெச்சேன்..நல்லா ஒரு இழு இழுத்து விட்டேன்..கெரகம்..இதுக்காக எவ்ளோபிரச்னை பாரு..அவ்ளோ போதை..இல்லாம இருக்க முடியல..கெரகம்..
அடுத்து இழு இழுத்துட்டு என்ன பண்லாம்னு யோசிச்சுட்டு ரோட்ட வெறிக்க ஆரம்பிச்சேன்..கார் ஒண்ணு போச்சு..வெளிய வந்த புகையால அந்தக் காரஅடிச்சு நொறுக்கற மாதிரி கற்பனை பண்ணிக்கிட்டு நல்லா அழுத்தி ஊதினேன்..
“கெரகம் புடிச்சவன்..ஏ.சி போட்டுக்கிட்டு சம்முனு போறான் பாரு நாயி”
உள்ளார,
“ஒண்ணும் போடாத நாயி, கோவணம் போட்ட நாய பாத்து அம்மணக்கராநாய்னு திட்டுச்சாம்”
வழக்கம் போல கேட்டும் கேக்காத மாதிரி திரும்பி நடக்க ஆரம்பிச்சேன்..
சிறுகதைக்கான உத்வேகம்: க.நா.சுப்ரமண்யம் எழுதிய அசுரகணம் நாவல்
