தொடரைத் தொடங்குவதற்கு முன்பு இந்த முன்னோட்டம்.

இது நடந்து இப்ப இருபது வருஷம் இருக்கும்.

“அப்பா, எனக்குக் கொஞ்சம் இதை வரைஞ்சு தரியா?” என்று தனது சயின்ஸ் புத்தகத்தில் இருந்த ஒரு படத்தைக்  காட்டிக் கேட்டாள் ஆறாவது படித்துக் கொண்டிருந்த என்  மகள்.

சரியாக அப்போதுதான்  யாரோ  ஒரு சாவு செய்தி சொல்ல வந்தார். “யாரோ வந்திருக்காங்க. நீ போய் அம்மாகிட்ட கேளு.” என்று அவளை அனுப்பிவிட்டேன்.

சரியான சமயத்தில் அந்த ஆள் வராவிட்டால்கூடத் தட்டிக்கழிக்க வேறு சாக்கு தேடியிருப்பேன்.

உண்மையிலேயே, நான் படித்த நாட்களிலேயே படம் வரைவது எனக்கு எப்போதுமே வந்ததில்லை. சயின்ஸில் பரிசோதனைகளும், பூகோளத்தில் வரைபடங்களும், ஜ்யாமெண்டரியிலும்  வரைவதை எப்படியாவது தவிர்த்து விடுவேன். ஒரு முறை இந்தியா வரைபடம் எல்லோரும் வரைந்தே ஆகவேண்டும் என்று ஆகிவிட்டது. நான் வரைந்த படத்தைப் பார்த்துவிட்டு “என்ன ஆடு போட்டிருக்கியா” என்று கேட்டார்  ஆரவமுது சார். “நீ இனிமே படம் போட்டா கீழே  என்ன வரஞ்சேன்னு எழுதிடுப்பா” என்றார். அது தீர்வாக இருப்பதும் சந்தேகம்தான். என் கையெழுத்தும் அவ்வளவுதான். கும்பகோணத்திலிந்து திருவாரூர் போகும் என்று சொல்வார்கள். சமயத்தில திருப்பதியிலிருந்து திருமலை போற மாதிரி வளைஞ்சு வளைஞ்சு மேலே ஏறிடும்.

ஒரு தடவை ஒரு கல்யாணத்திற்கு வேற ஊருக்குப் போகவேண்டியிருந்தது. ரயிலில் வருகிறேன்னு எழுதியிருந்தேன். போனதும் நீ எப்படி வந்தேன்னு கேட்டார்கள். அதான் ‘லெட்டர் போட்டேனே’ என்றேன்.

“இல்ல.. ‘காலைல ,.,.,.,., வரேன்’ அப்படின்னு எழுதியிருந்தே. நடுவில  தமிழ் வார்த்தையா இங்க்லீஷான்னு தெரியல. தமிழுன்னா அது ரயில் இங்க்லீஷ்னா  பஸ். அதுதான் கேட்டேன்.”

வரையறதும் எழுதறதும் சிக்கல் என்பது மட்டுமில்லை. பள்ளிக் கூடத்தில ஒரு வருஷமும் பெயில் ஆகாததே ஒரு ஆச்சரியந்தான். “இந்தக் கையெழுத்தை இன்னும் ஒரு வருஷம் பாக்க பயந்துதான் சார் பாஸ் போட்டிருப்பார்” என்பான் ராதா.  எனக்கு ஸ்கூல்ல ஒரே க்ளோஸ் பிரண்டுன்னு சொல்லக்கூடிய ராதா என்கிற ராதாகிருஷ்ணன். ஸ்கூலில என்னை எல்லோரும் ‘பெரியவனே’ என்றுதான் கூப்பிடுவார்கள். நான் கொஞ்சம் உயரம். அதுக்கேத்த மாதிரியே பெருமன். புதுசா வந்த வி.கே.எஸ் சார் உட்பட வாத்தியார்களே அப்படித்தான் கூப்பிடுவார்கள். வி.கே.எஸ் சார், முப்பத்தேழு பசங்களோட பேரே பழக்கமாயிருக்க வாய்ப்பே இல்லாத  இரண்டாம் நாளே என்னை பெரியவனே என்று  கூப்பிட்டார்.

அண்ணன் தம்பி எல்லாம் ஏதேதோ நல்ல வேலை கிடைச்சு மெட்ராஸ், பம்பாய்னு  போயிட்டாங்க. அப்படி இப்படின்னு பாஸாகி, எனக்கு  எங்க ஊரிலேயே ஒரு வேலையும் கிடைத்தது. அது கவர்மெண்டும் இல்லை, ப்ரைவேட்டும் இல்லாத ஒரு ஸ்தாபனம்.

கூட சேர்ந்தவன் எல்லாம் வேற வேலைக்குப் போயிடுவான், இல்லைன்ன ஏதோ ப்ரமோஷன்னு போயிடுவான். நான் சேர்ந்த அன்னியிலிருந்து ரிடையர் ஆகிற வரைக்கும் ஒரே போஸ்ட்தான். அப்பப்ப இங்கே அங்கேன்னு பக்கத்தில வேற வேற ஆபீஸ்ல மாற்றல் இருக்கும். வேலையிலும் அவ்வளவு நல்ல பெயர் இல்லை. நான் செஞ்ச வேலையில தப்பே கண்டுபிடிக்காத ஒரே ஆபீசர் ரத்னவேலு தான். (அவருக்கே ஒண்ணும் தெரியாதுன்னு ஆபீசில பேச்சு.)

அதிலேயும் அந்த பெரிய ஆபீஸ்லதான் நான் அதிகம் வேலை பார்த்தது.  ஆபீசுல எல்லோரும்  வேடிக்கையா பேசிக்கிட்டு  இருக்கும் போதெல்லாம் காதுல வாங்கிப்பேனே தவிர அதிகம் கலந்துக்கிறதில்ல. அவங்க வேடிக்கைகளில  என்னைப்பத்தியும் இருக்கும். பள்ளிக்கூடத்தில எனக்கு பெரியவனே என்று பெயர்னா இங்க நான்  “அ”. அதாவது அசடு, அசத்து, அப்பாவி எல்லாத்துக்கும் பொதுவா. அவங்கெல்லாம் என்னைப்பற்றி கிண்டலா பேசினதெல்லாம் சேர்த்தா ஒரு புஸ்தகமே போடலாம்.

ஆனா ஒண்ணு சொல்லணும். என் மனைவி என்னை எப்பவும் எதுவும் சொல்லமாட்டாள். நான் முன்னாடி சொன்ன ராதா ஒரு கவர்ன்மென்ட் ஆபீஸ்ல நல்ல வேலையில் இருந்தான். யோக்யமானவன். அவன் மனைவிக்கு அதில் சந்தோஷமில்ல. “இதே போஸ்ட்ல இருக்கிறவங்க எல்லாம் காரும் வீடுமா இருக்காங்க. இவர் லாயக்கில்ல” ன்னு சொல்றதை நானே கேட்டிருக்கேன்.  என் ஆபீஸ்ல வேலை பார்க்கும் அகிலா, “எப்படித்தான் என் வீட்டுக்காரரை  பார்த்த உடனே எவ்வளவு சமத்துன்னு தெரிஞ்சுக்கிறாங்கன்னு ஆச்சரியமா இருக்கு. காய்கறி விக்கறவன் கூட முத்தின வெண்டைக்காயையும் சொத்தைக் கத்திரிக்காயையும் தலையில கட்டிடறான்” என்று சொல்வாள்.

தாத்தா பாட்டியோட ஒரே  குடும்பமா நாங்க ஊரில இருந்தபோது உறவினர்கள் பலர் வந்து போவார்கள். அப்ப எல்லாரையும் பழக்கம். எங்க வீட்டுக்கு வராத உறவினரே கிடையாதுன்னு சொல்லலாம். அநேகமா எல்லா உறவுகளும் அண்ணன் தம்பி உட்பட மெட்ராஸ், பம்பாய், பெங்களூர் என்று   போயிட்டு, நான் மட்டும் ஊரிலேயே தங்கிவிட்டதாலோ என்னவோ சிலபேர் எனக்கு மட்டும் கல்யாணப் பத்திரிக்கை அனுப்ப மறந்து போவார்கள்.

எல்லாம் பழைய கதை.

இப்ப ரிடையர் ஆயாச்சு. ஐம்பது வயசிலிருந்தே ஆரோக்யமும் சுமார்தான். மனைவியும் போயாச்சு. குழந்தைகள் எல்லாம் நல்ல மார்க்கெல்லாம் வாங்கி நல்ல வேலையும் கிடைச்சு கல்யாணமும் ஆகி வேற வேற ஊருக்குப் போயாச்சு. நானும் ஊர்ல இருந்த வீட்டை விற்றுவிட்டு மெட்ராஸ்ல தனியாகத்தான் இருக்கேன். அப்பப்ப பசங்களோட கொஞ்சநாள் இருந்துட்டு வருவேன்.

அந்த நாட்களிலேயே சமைக்கத் தெரிஞ்சுக்கல. பெண்ணெல்லாம் சிறிசா இருந்தபோது மனைவிக்கு சுகமில்லாதபோது, அவள் சொல்லச் சொல்ல ஏதோ செய்வேன். இன்னொருநாள் செய்யணும் என்றாலும் அதேதான். காது கேக்கும் கை செய்யும்.   மண்டையில் ஏத்திக்கிட்டது கிடையாது. அதுனால மெஸ்ல சாப்பாடு, ஏதாவது ஹோட்டல்ல சிற்றுண்டி. தூங்கற நேரம், கோவிலுக்கோ, சாப்பிடவோ போகிற நேரம் தவிர பழச எல்லாம் மனசுல ஓட்டிப் பாத்துகிட்டு உட்கார்ந்து இருப்பேன். இனி சொச்ச நாளும் இப்படித்தானோ?

(அது சரி. இப்ப மட்டும் எப்படி வக்கணையா இதெல்லாம் எழுதினேன்னு நீங்க கேக்கறது புரியுது. ஏதோ ஒரு பழைய கம்ப்யூட்டரையும் கொடுத்து தமிழ்ல அடிக்கச் சொல்லியும் கொடுத்துட்டுப் போனான், ஒரு சொந்தக்காரன். இதை அடிச்சு முடிக்க பத்து  நாள் ஆச்சு. அதுவும் நல்லதுதான். இரண்டு வாரம் வெட்டி யோஜனை இல்லையே? இதை யாராவது படிச்சுட்டு பரவாயில்லியேன்னு சொல்லிட்டாங்கன்னா,   அவ்வளவுதான். நான் எழுதறத்துக்கு – ஸாரி- டைப் அடிக்க எத்தனையோ கதைகள், உப கதைகள் என் வாழ்க்கையிலேயே இருக்கு. ஜாக்கிரதை).

மேல உள்ளது ஒரு பத்திரிக்கையில “எனக்குப் படம் வரைய வராது” என்கிற பேருல வெளியாச்சு. அப்புறம் என்ன? தொடர வேண்டியது தானே? அதுதான்  ‘ஊமைக்கோட்டான் என்கிற ஞான பண்டிதன்’ தொடர்.

( இனி அடுத்த இதழில்)