Photo

முதலில் இருவர் 
பசியற்று பரமசுகத்திலிருந்தனர்
பின் சுகமற்றல் குறித்து
யோசித்த வேளையில் 
பசித்தது
நியதிகளைச் சொல்லி 
கனிந்தது மரம்
கனி ஒன்றை இருவரும்
பகிர்ந்துண்டனர்
இருவர் மூவராக 
மூவர் நால்வராயினர்
நான்கு கனிகளை
ஆளுக்கு ஒன்றெனத்  தந்து
நியதிகளைத் தொடர்ந்து 
சொன்னது மரம்

இப்படியே நால்வர் ஐவராகி
அடுத்துப் பெருகி
ஆயிரமாயிரம் ஆயினர்
ஆயிரமாயிரம் கனிகளை
இறைஞ்சினர்
நியதிகளோடு கனிந்தது மரம்

நியதிகளைக்  காப்பதாக
உறுதி சொல்லி
மொத்தக்  கனிகளையும்
தந்துவிட்டு் மௌனமாய்
மறையச் சொல்லினர் 
மரத்தை எல்லோரும்…
“எனது நியதிகளே நான்”
என
நினைவுபடுத்தி
பேசாப்  பெருமரமென
மறைந்தது.

முதலில் இருந்தவர்கள் 
முடிந்தவரை அள்ளிக் கொள்ள
கடைசியிலிருந்தவர்கள்
கனியற்று நின்றனர்.

கனிகளுடையோர் கோலேச்ச
கனியற்றோர் நொந்தனர்
மரத்தின் நியதிகளை மறைத்து
புது நியதி செய்தனர்
கனிகளுடையோர்

எங்களிடம் தருவதற்கில்லை
எல்லாம் மரம் செய்த பிழை
என எப்போதும்
மரத்தை தூற்றினர் சிலர்
நியதிகளை தூற்றினர் சிலர்
தாமே அம்மரமென்றனர் சிலர்
மறைந்த பின்
மரமென்று ஏதுமில்லை 
என்றனர் சிலர் 
கனிகளே நிஜமென்றனர் சிலர்
கனியுடையோர் சிலர் 
மறுத்திருக்க
கனிவுடையோர் சிலர் 
பகிர்ந்துகொண்டனர்.