
உண்டென்றால் அது உண்டு
இல்லையென்றால் அது இல்லை
எனக்கு ஒரு வேலை கிடைத்ததை அம்மா ‘கடவுள் செயல்’ என்று சொல்வதை நான் கேட்டிருக்கிறேன். எங்கள் தெருமுனைப் பிள்ளையார் கோவிலுக்கு வரும் அர்ச்சகர் சொன்ன ‘தெய்வ சங்கல்பம்’ என்பதன் தமிழாக்கம் என்று வைத்துக் கொள்ளலாம்.
நேரடியாகக் காரணம் சொல்ல முடியாத நடப்புகளுக்கு சௌகர்யமாக ‘கடவுள் செயல்’ என்றோ ‘முற்பிறவிப் பயன்’ என்றோ சுலபமாகச் சொல்லிவிட்டுப் போய்விடலாம். நாத்திகர்கள் வேறு ஏதேனும் காரணம் தேடவேண்டியிருக்கும். ‘மறுபிறவி’ நம்பிக்கை இல்லாத மதத்தினர் முதல் காரணம் மட்டும்தான் சொல்ல முடியும்.
என் வாழ்க்கையில் ‘சாமி’ எப்போதெல்லாம் குறுக்கிட்டார் என்று யோசிக்கிறேன். எல்லோரையும்போல குழந்தைப் பருவத்திலே ‘உம்மாச்சி காப்பாத்து’, ‘சாமி கண்ணைக் குத்தும்’ எல்லாம் இருந்திருக்கவேண்டும். எனக்கு நினைவு தெரிந்து குலதெய்வத்திற்குக் கோலாகலமாய் படையல் இட்ட சம்பவம்தான் முதலில்.
அப்போது நாங்கள் நகரத்திற்கு வரவில்லை. நான் இரண்டாம் அல்லது மூன்றாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். ஊருக்குச் சற்று வெளியே அந்தக் கோயில். அதில் மூன்று பகுதிகள்.

முதல் பகுதியில் சாமி சிலை எல்லாம் பளபள என்று ஜொலிக்கும். பூஜை செய்யும் ஐயருக்கு ஓரளவிற்கு நல்ல வருமானம். அவரும் அவர் மகனும் குளத்திலிருந்து குடம்குடமாகத் தண்ணீர் கொண்டுவந்து அபிஷேகம் செய்வார்கள். மேலும் வெண்கலச் சிலைகளையும் துடைத்த வண்ணம் இருப்பார்கள். அந்தப் பகுதியுடன் எங்களது தொடர்பெல்லாம், ஒருமுறை சுற்றி வருவது, சூடம் காண்பிக்கும்போது கன்னத்தில் போட்டுக்கொள்வது, தட்டிலோ, உண்டியலிலோ காசு போடுவது இவ்வளவுதான்.
இரண்டாம் பகுதிதான் நாங்கள் பெரும்பாலும் நேரம் செலவிடும் இடம். சாமி சிலைகள் அவ்வளவு பளபள கிடையாது. படையல் போடப்படுவதும் இங்குதான். மூன்று பகுதிகளையும் சுற்றி வயல் வெளிதான் என்றாலும் ஒரு பக்கம் ஒரு பெரிய குளம். ஒவ்வொரு பகுதியிலும் குளத்தில் படித்துறை உண்டு. நடுப் படித்துறை என்று அழைக்கப்படும் இடத்தில் அந்தக் பக்கவாட்டுச் சுவரும் அருகே ஒரு வளைந்த தென்னை மரமும் உண்டு. நன்றாக நீச்சல் தெரிந்த வயசுப் பையன்கள் அந்தச் சுவரில் தடதட என்று ஓடிவந்தோ தென்னையிலிருந்தோ குளத்தில் குதித்து நீச்சல் அடிப்பார்கள்.
குளத்திற்கும் கோவிலுக்கும் இடையே உள்ள திறந்தவெளியில் செங்கல்களால் செய்யப்பட்ட அடுப்புகள் இருந்தன. நாளடைவில் இடையிடையே சிமென்ட் அடுப்புகள் முளைத்தன. (ஐந்தாண்டுகளுக்கு முன் கோவில் புதுப்பிக்கப்பட்டபோது. ஒரு சிறு அறையும் அதில் நான்கு காஸ் அடுப்பும் வந்துவிட்டது.)

சர்க்கரைப் பொங்கல், புளிச்சோறு, தேங்காய் அல்லது எலுமிச்சம் சோறு, தயிர் சோறு என்று நான்கு விதமாய் தயார் செய்வார்கள். சமையல் இன்றும் வீட்டுப் பெண்களே செய்கிறார்கள். அதிலும் அளவில் ஏதோ கணக்கு வேறு.
நடுவில் ஒரு பெரிய வாழையிலையில் சர்க்கரைப் பொங்கல், மூன்று பக்கங்களிலும் மற்ற மூன்று பதார்த்தம், நாலாவது பக்கத்தில் பழம் வெற்றிலை, பாக்கு, தேங்காய், சுற்றிலும் மாலைகள் என்று அழகானதொரு அலங்காரம் செய்வார்கள். பிறகு பூசாரிக்காகக் காத்திருப்பார்கள்.

என் பள்ளிநாட்களில் இருந்த பூசாரி வயசாளி. தூக்கம் தூக்கம் என்றால் அப்படி ஒரு தூக்கம். இரவில் தூங்க ஆரம்பித்த அவர் எழுந்திருப்பதற்கு ஒரு கணக்கு இல்லை. பதினொன்றோ, பனிரெண்டோ சிலசமயம் அதற்குப் பிறகும்தான் எழுந்திருப்பார். எழுந்ததும் விடுவிடென்று குளத்தில்போய் விழுவார். கரையேறுவது எப்போதென்று சொல்லமுடியாது. கூப்பிடவும் முடியாது.
கரையேறி நெற்றி முழுதும் விபூதியும் குங்குமமும் பூசி கருவறையில் புகுந்துவிடுவார். அலங்காரம் செய்து சூடம் காண்பித்துப் பிறகு அருகில் ஏதோ ஒரு இடத்தில் ஒரு சொம்பினைக் கவிழ்ப்பார். அந்தச் சொம்பின் அருகேதான் மேற்சொன்ன படையல் இடவேண்டும். படையல் இடுபவர்களே சாம்பிராணி, சூடம் காண்பித்துப் படையலை சமர்ப்பிப்பார்கள்.
முதல் சோறு பூசாரிக்குத்தான். பிறகு குடும்பத்தினரைத் தவிர மற்றவர்கள் எல்லோருக்கும் கொடுத்தபிறகுதான் படையலிட்ட குடும்பத்தினர் சாப்பிடலாம்.
சாப்பிட்ட பிறகுதான் பூசாரி மௌனம் கலைப்பார். அதுவரையில் இருந்த ஆளே வேறு. கறாராக காசு வாங்கிக்கொள்வார். அதில் ஏதேனும் பேச்சு தடித்தால் அவரிடமிருந்து வசவுகளும் கெட்ட வார்த்தைகளும் அருவியாகக் கொட்டும். அவர் நல்ல வார்த்தை சிறிதுநேரம் தொடர்ந்து பேசி நான் கேட்டதில்லை. சம்பிரதாயமோ அல்லது மேற்கண்ட காரணத்தினாலோ படையல் முடியும்வரை வாய் திறக்காதது நியாயமே. எல்லாம் முடிந்து வீட்டுக்குப் போய்விட்ட பூசாரியைப் பிறகு பார்க்க வேண்டுமானால் மாலையில் சாராயக்கடைக்குத்தான் போகவேண்டும். பின்னாட்களில் இருந்த பூசாரிகளின் நடவடிக்கைகள் சற்று நாகரீகமாக இருக்கும்.
கோவிலின் மூன்றாவது பகுதிக்குப் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அனுமதி இல்லை. மேலும் அங்கு கிடாவெட்டு போன்ற பலி கொடுப்பது உண்டு என்பதாலோ (நாங்கள் சைவம்), அங்கு காத்து, கருப்பு, பில்லி, சூனியம், வினை ஆகியவற்றிற்கு பரிகாரம் செய்யப்படுகிறது என்பதாலோ நாங்கள் அங்கு போவதில்லை.
இந்தப் படையல் நாட்களை நான் எதிர்பார்ப்பது விளையாட்டும் வேடிக்கையும் கலந்த பொழுதுபோக்கு என்பதனால் தவிர பக்தி என்று சொல்லமுடியாது. ஆனால், சற்று தூரத்து பங்காளி குடும்பத்து வரது அண்ணனின் மனைவி பார்வதி அண்ணி பக்தி பூர்வமாகத்தான் பங்குகொள்வாள். சொந்தத்தில் யார் படையலிட்டாலும் அங்கே அவள் ஆஜர். ‘குலதெய்வம் கொடுக்காததை வேறெந்த தெய்வமும் கொடுக்காது’ என்று தீவீரமாய் நம்புகிறவள். மற்றும் எங்கே கோவிலைக் கண்டாலும் விழுந்து விழுந்து கும்பிடுவாள். கோவிலிலிருந்து அவளைப் பிரித்தெடுப்பது சிரமமான காரியம்.
சாமி கும்பிடுவதில் யாருக்கும் எந்த ஆட்சேபனையும் இல்லை. வீட்டில் கூடவே வசிக்கும் வயதானவர்கள் (வரது அண்ணனின் பெற்றோர்) மற்றும் தன் குழந்தைகள் உணவு உண்டார்களா, அவர்களுக்கு ஏதாவது தேவையா என்று கவனிப்பது என்பது அக்கம் பக்கம் எந்தக் கோவிலிலும் விசேஷமொன்றும் இல்லையென்றால் தான். அது போன்ற சமயங்களில் வரது அண்ணன்தான் சாப்பாடு வாங்கிவந்து கொடுத்து, பிள்ளைகளையும் பள்ளிக்குத் தயார் செய்வார். அண்ணியை ‘சாமி பைத்தியம்’, ‘லங்கிணி’ என்றெல்லாம் கேலி செய்வார்கள். உறவினர்கள் மத்தியில் அண்ணனும்கூட கேலிக்குரியவர்தான்.
கிட்டத்தட்ட இதுபோலவே, எங்கள் தெருவில் வசித்து வந்த சாமிநாதன் என்றொருவர் குடும்பம் அவரது அபரிமித பக்தியால் அழிந்தது என்று சொல்வார்கள். ஊருக்குள் பட்டையோ நாமமோ, மொட்டையோ தாடியோ, சாமியார் என்று யாரேனும் வந்துவிட்டால் அங்கேயே பழியாகக் கிடந்து பணிவிடைகள் செய்வார். குடும்பத்துக்கு மட்டுமல்ல, வேலை பார்த்த இடத்திலும் அவ்வளவு உபயோகமில்லாதவராகக் கருதப்பட்டார். ஒரே மகன், ஒரு திருட்டு வழக்கில் தேடப்பட்டுத் தலைமறைவாகிப் போனவன்தான், பிறகு தகவலே இல்லை. அவர் மனைவி அடுத்த ஊர் குளத்தில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார். (ஊருக்குள்ளேயே ‘வசதி’யாகக் குளங்கள் இருக்கும்போது, ஏன் இதற்காக அடுத்த ஊர் போனார் என்று எனக்குச் சந்தேகம்). சாமிநாதனுக்கும் வேலை போய்விட்டது. ஆகவே, இப்போது எந்தக் குற்றமனப்பான்மையும் இன்றி, நிம்மதியாக (?) சாமியார்களுக்கு சேவை செய்கிறார். உள்ளூரில் யாரும் சாமியார் வரவில்லை என்றால் என்ன, சுற்று வட்டாரத்தில் யாராவது வரமாட்டார்களா?
இந்த அளவிற்கு இல்லையென்றாலும் இன்னொரு உதாரணம். என் நண்பனின் தந்தை அவர் ஊருக்கு வருகின்ற எல்லா சாமியாரையும் இவர் வீட்டில் நான்கு நாட்களாவது தங்கும்படி செய்வதில் அவருக்கு ஒரு மோகம். அவர் மறைந்து நண்பரின் தாயார் பல வருஷம் இருந்தார். தனது மகன்களுக்கு அவர் சொல்லி வைத்தது இதுதான். ‘ஒரு சாமியாரும் இனி நானிருக்கும் வீட்டில் காலடி வைக்கக்கூடாது. அப்படி யாரையேனும் நீ அழைத்து வருவதாக இருந்தால், உன் மனைவியையும் அழைத்துக் கொண்டு நான் அந்தச் சாமியார் போகும்வரையில் வேறு ஊருக்குப் போய்விடுவேன்.’
கடவுள் மேல் எனக்கு எந்தக் கோபமோ, வெறுப்போ இல்லை. கடவுள் இருக்கிறாரா இல்லையா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்யவோ விவாதிக்கவோ நான் ஒரு சிந்தனாவாதி இல்லை. வாழ்வினை அப்படியே எடுத்துக்கொண்டு, சிற்றறிவுக்கு எட்டிய முடிவுகள் செய்து (சிச்சுவேஷனுக்கு தகுந்த ட்யூன் என்பாள் என் மனைவி) வாழ்ந்து வந்தவன். ஆனால் பக்தியைப்பற்றிக் கேள்விகள் உண்டு. (முதல் முறையாக ஒரு பட்டியலிடும் முயற்சி)
- அது என்ன பயபக்தி? பயமும் பக்தியும் எப்படிச் சேர்ந்தன? பக்தி பயத்தை உண்டு பண்ணுகிறதா அல்லது பயம்தான் பக்திக்குக் காரணமா?
- எனக்கு என்ன தேவை, அல்லது நான் எதற்கு அருகதை என்று எல்லாம் வல்ல சாமிக்குத் தெரிந்திருக்குமல்லவா? அப்போது நான் ஏன் ‘வேண்டி’க்கொள்ளவேண்டும்? (என்னுடைய தேவைக்குப் பதிலாக அவருக்கு ஒரு ட்ரெஸ் அல்லது 12 சிதறு தேங்காய் அல்லது எனது / என் குழந்தைகளின் முடி என்று கடவுளிடம் கான்ட்ராக்ட்.)
- சாமியிடம் ஒப்பந்தம்போட்டு அவரை நமது லெவலுக்கு இழுக்கும் அதே சமயம், பிறப்பால் மனிதர்களான சாமியார் சாமியாரிணிகளை கடவுளின் அம்சம் என்று ஆகா ஆகா ‘என்னே அற்புதம்’ என்று மனிதனைவிட ஒரு தட்டு மேல் வைக்கிறோம். கேட்டதை கொடுத்தால்தான் சாமி – அற்புதம் செய்தால்தான் மகான்.
- இந்தப் பிள்ளையாரைவிட அந்த விநாயகர் சக்திசாலி. ஆகவே நேரத்தை முதலாமவரிடம் வேஸ்ட் செய்ய வேண்டாம்.
- உனக்கு நடப்பதெல்லாம் ஊழ்வினை என்னும் பூர்வ ஜென்மப் பலன். இப்படி போதிக்கப்பட்டதற்கு என்ன காரணமாக இருக்கும்? அடுத்த ஜென்மத்தில் நீ சௌகரியமாக இருக்க வேண்டுமென்றால் இந்த ஜென்மத்தில் ஒழுங்காக இருக்கவேண்டும் என்றோ? அப்படியானால் ‘பரிகாரம்’ என்பது அந்த எபக்டைக் குறைக்காதா?
எனது எண்ண ஓட்டம் சரியா தவறா என்னும் சந்தேகம் எப்போதும் உண்டு. அதனால் வாதப் பிரதிவாதங்களில் ஈடுபடுவது இருக்கட்டும் , வாய்விட்டு கருத்தினைச் சொல்லும் பழக்கம்கூடக் கிடையாதே. சொல்லியிருந்தால், (கு)தர்க்கவாதி என்று என்னை வகைப்படுத்தி இருப்பார்கள். ஆத்திகத்திற்கு எதிரிகள் நாத்திகர்கள் அல்ல. ஆத்திகர்கள்தான் என்று சில சமயம் தோன்றும்.
கடவுள் ஏன் கல்லானான் –
மனம் கல்லாய்ப் போன மனிதர்களாலே
(ரிட்டையர் ஆன பிறகு போகிற வழிக்குப் புண்ணியம் சேர்த்துக் கொள்ளட்டும் என்கிற எண்ணத்தில் சில ஆன்மீக/பக்தி புத்தகங்களைப் பிரிவு உபசாரத்தின்போது கொடுத்தார்கள். இன்னும் பிரிக்கக்கூட இல்லை. உங்களுக்குத் தெரிந்து யாரேனும் இப்போது ஓய்வு பெறுவதாக இருந்தால் சொல்லுங்கள். பரிசளிக்க உங்களுக்கு உபயோகப் படலாம்.)
