Image result for old village house with garden flowers in tamilnadu
 
 
மூச்செல்லாம் மணம்நிரப்பும் பவள மல்லி
   மொய்க்கின்ற அரளியுடன் செம்ப ருத்தி
பூச்செடிகள் புன்னகைத்து வரவேற் கின்ற
   பொலிவான முன்வாயில் அமைந்த  வீடு.
கீச்சென்று கிளிக்கூட்டம் கொஞ்சிப் பேசிக்
  கிழக்கிருக்கும் வேம்பின்மேல் ஆட்டம் போடும்.
பாச்சுவைபோல் இனிக்கின்ற கனிகள் தொங்கும்
   பாங்கான மாமரங்கள் வீட்டின் பின்னே.
  
கல்லிருக்கும் கிணற்றடியில் துவைப்ப தற்கு;
  கருவேப்பி லைக்கன்று நெருங்கி நிற்கும்.
கொல்லையிலே வெட்டிவிட்ட வாய்க்கால் ஓரம்
  குலைத்தெங்கோடு இலைவாழை இணைந்தி ருக்கும்
செல்லரித்த பந்தலதன்  கூரை மீது
  சிறுபாகல் கொடியோடு பிணையும் பீர்க்கு.
சொல்லினிலே அடங்காத அழகுத் தோட்டம்
   சுவைசேர்க்கும் நாவினுக்கும் வாழ்வி னுக்கும்.
 
 மாடத்தில் மங்கலமாம் துளசிக் கன்று;
   மரக்கிளையில் ஆடுகின்ற கயிற்றின் ஊஞ்சல்;
கூடத்தில் புகைப்ப டங்கள் அரைநூற் றாண்டு
     குடும்பத்தின் வரலாற்றை எடுத்து ரைக்கும்.
நாடித்தான் வருகின்ற உறவும்,நட்பும்
     நாட்டுநிலை பேசிப்பின் செல்வ துண்டு.
பாடித்தான் பறக்கின்ற பறவை போல
     பல்வேறு திசைபிரிந்து விட்டோம் இன்று.
 
  தாயுடனே அனைவருமே வாழ்ந்த வீடு
     தாலாட்டுப்    பலகேட்டு வளர்ந்த வீடு
சேயிசைக்கும் மழலையுடன், சிரிப்பும்,பேச்சும்
     சிறியவர்கள் விளையாட்டின் ஓசை யாவும்
பாயுமொரு காலவெள்ளம் அடித்துச் செல்லப்
     பழங்கதையாய் மாறிப்போய் மெல்ல,மெல்ல
ஓயுமென ஒருநாளும் நினைக்க வில்லை
     ஒருகனவோ என்பதுவும் தெரிய வில்லை.