
மு க சு :
மும்பையில் கடந்த இரண்டு மாதங்களில் நடந்த, ஐந்தாவது அமைதியான கொலை.
முதலில், ஒரு பஞ்சாப் சிங்க், இரண்டாவது, ஒரு மராட்டியப் பாட்டி. மூன்றாவது, ஒரு பார்சிப் பெண்மணி. நான்காவது, ஒரு கன்னடக் கிழவர். ஐந்தாவது ஒரு பாலக்காட்டுப் பாட்டி.
ஏதோ, எங்கோ, ஒரு லிங்க் இருக்கவேண்டும். எங்கே, என்ன என்பதுதான் புரியவில்லை.
போலீஸ் ஆபீசர் மணி துப்புத் துலக்க வந்திருக்கிறார் …..
![]()
விசித்திரமாக இருந்தது. கொலையுண்ட அனைவருமே , அறுபத்தி ஐந்து , எழுபதைத் தாண்டியவர்கள். வெவ்வேறு மாநிலத்துக்காரர்கள். வெவ்வேறு மொழி வேறு. இரண்டு மூன்று மாமாங்கமாக பம்பாய் ரேஷன் கார்டில் ஏற்கனவே பதிவானவர்கள்.குறிப்பாக, மும்பையில் தனியாக வசிப்பவர்கள்.
பஞ்சாப் சிங்கின் மகன் கனடாவில் இருந்து ஓடி வந்திருந்தான். மராட்டியப் பாட்டிக்கு சிட்னியில் இருந்து ஒரு பேரன் வந்து மௌனமாகக் கண்ணீர் விட்டுப்போனான். தாய் , தந்தை இறந்த பிறகு பாட்டியிடம் வளர்ந்தவன். பாசம், நன்றி மறவாது , பாட்டிக்குப் பணம் அனுப்பிக்கொண்டிருந்தான். இனிமேல் கல்யாணத்திற்கு அவனுக்கு, யார், இந்தியப் பெண் பார்க்கப்போகிறார்கள், என்று வருந்தியவன்.
பார்சிப் பாட்டிக்கு இரண்டும் பெண்கள்.இருவருமே நியூ ஜெர்சியில் எம்.எஸ் படித்து, டாக்டர்களாக இருந்தவர்கள். கன்னடத்துக் கிழவரின் மகன், லண்டன் புறநகர்ப் பகுதியில் ஒரு ‘இந்தியா காஃபி ஹவுஸ்’ நடத்திக்கொண்டு இருக்கிறவர்.
வந்தவர்கள் அனைவருமே பிறகு சொன்ன ஒரே பதில், ‘’லாஸ்ட் டைம் பார்த்தவை எல்லாம் அப்படியேதான் இருக்கு.ஒண்ணுமே காணாம போனமாதிரி தெரியலே… சார்..”
‘டி.எஸ்.பி. சார், எப்படியாவது கண்டு பிடியுங்க… எங்களுக்கு, லீவு , விசா எல்லாமே ப்ராப்ளம்…. தொழிலைவிட்டு ரொம்ப நாள் இங்கே இருக்க முடியாது..”
எல்லோரும் வந்த வேகத்தில் பறந்தும் விட்டார்கள். இனி இருந்து, அழுது என்ன பயன் என்பதாலா? அல்லது இந்திய, போலீஸ் மீது அவ்வளவுதான் நம்பிக்கையா / அல்லது அவ்வளவு நம்பிக்கையா?
விந்தையாக இருந்தது. பின்னணி ,கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான். ரொம்ப மூர்க்கத்தனம் இல்லாத கொலைகள். மண்டை தாக்கப்பட்டு, நெஞ்சில் குண்டு பாய்ந்து , உடல் கன்னாபின்னாவென்று குத்திக் கிழிக்கப்பட்டு, தலை வேறு, கைகால் வேறு என்று அறுக்கப்பட்டு, முகம் சிதைக்கப்பட்டு ……என்றெல்லாம் கோரங்கள் கிடையாது. அமைதி வழி . படுக்கையில் தூங்குவதைப்போல். லேசான வலி. விஷ ஊசிதான்.
கொலைகளின் நோக்கம்தான் புரிபடவில்லை. மாநிலச் சண்டைகளுக்கு வழி வகுக்கவா? நேஷனல் இண்டகரேஷன் கௌன்சிலில், பஞ்சாப், கன்னட, கேரள முதல்வர்கள், மகாராஷ்டிர முதல்வர் மீது பாயவா..? எதற்காக இந்தக் கொலைகள்?

மணி, டில்லியில் இருந்து மும்பைக்கு வந்ததே இதற்காக அல்ல.அவனது மத்தியப் புலனாய்வுத்துறைக்கு ஏற்கனவே மூச்சு முட்டும் அளவுக்கு ஏராளமான , சிக்கலான வழக்குகள் இருந்தன. மாநில எல்லைகளைத் தாண்டும் வழக்குகளும் உண்டு. இந்தியப் பொருளாதாரத்தையே ஆட்டி வைக்கும் , பொருளாதாரக் குற்றங்களின் நீளமான வரிசை அவனுக்குப் பரந்த அறிவைத் தந்திருந்தது.
ஹர்ஷத் மேத்தா வழக்கு, ஜெயின் டைரி, யூரியா ஊழல் வழக்கு, கால்நடைத் தீவன ஊழல், சுடுகாட்டு ஊழல், போஃபர்ஸ் வழக்கு, தமிழக அந்நியச் செலவாணி வழக்கு என்று இவை நீள நீள, மத்தியப் புலனாய்வுத் துறையின் இளைஞர் பட்டாளத்தின் குற்றவியல் அனுபவமும் நீள ஆரம்பித்தது.
மணியின் திறமைக்குச் சவாலாக ஒரு சில வழக்குகள் அவனிடம் தள்ளிவிடப்பட்டிருந்தன . முதலில் அவன் மும்பைக்குப் போக வேண்டும், மும்பையை கெட்டியாகப் பிடித்து உலுக்கி, அடித்தளத்தையே ஆட்டிவரும் கறுப்புச் சந்தை நிழல் அரசை அடையாளம் கண்டு வலு இழக்கச் செய்யவேண்டும்.
அவனுக்குச் சகல சௌகரியங்களையும் மராத்திய அரசு செய்து கொடுக்கும். தேவைப்பட்டால் அங்கு நடக்கும் எந்தக் குற்றத்தின் பின்னணியையும் ஆராய அவனுக்கு, நேரிடையாக சில நீதி மன்றங்களுக்கு சில அறிக்கைகள் தயார் செய்து அனுப்ப வேண்டிய உத்தரவும் இருந்தது. சூழலுக்கு ஏற்ப , தேவைப்பட்டால் , மாநிலக் காவல்துறைக்குத் துணையாக, உடனடியாகச் செயலில் இறங்கவும், மாநிலக் காவல் துறை அவனுக்கு உறுதுணையாக உதவவும், தேவையான ரகசிய சுற்றறிக்கைகள் அதிகாரப்பூர்வமாக, சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவிக்கப்பட்டு இருந்தன.
மணிக்கு இப்பொழுது, பழைய நான்கு கேஸ்களும் அத்துப்படி ஆகியிருந்தன. முதல் இரண்டுவரை அவன் தலையிடவில்லை. வேறு வேலைகளில் மும்முரமாக இருந்தான். மூன்றாவது கேசின்போதுகூடப் பின்னரே அவன் ஒத்துழைப்புக் கோரப்பட்டது. ஏதோ உள்உணர்வின் உந்துதலால், பழைய இரண்டு கொலைகளுக்குப் பின்னர், மூன்றாவதாக அந்தப் பார்சிப் பாட்டி வீட்டுக்கு வந்த மணி, அப்பொழுதே மல்ஹோத்ராவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தான் .
“மிஸ்டர் மல்ஹோத்ரா, ..ஒரு சின்ன ரிக்வெஸ்ட். . போஸ்ட்மார்ட்டம் முடிஞ்சு, பாடி ஆஸ்பத்திரியைவிட்டுக் கிளம்பி , வீட்டுக்கு வந்து, மயானம் போறவரை, கொலையானவங்களுக்குக் கடைசி மரியாதை செலுத்தற எல்லார்கிட்டேயும் , ஒரு ரெஜிஸ்டர்ல கையெழுத்து, அவங்க அட்ரெஸ் , வேலை விவரம் வாங்கிக்குங்க.”
ஆனால் அவனும், மல்ஹோத்ராவும் எதிர்பார்த்தபடியே , அதற்கு ஒரு பெரிய கூக்குரலே எழுந்தது.
“ இது என்ன புதுப் பழக்கம்? கண்டோலேன்ஸ் ரெஜிஸ்டர்ல கையெழுத்தா…? போலீசுக்குப் புத்தி இருக்குதா, இல்லியா..? சாவை மதரீதியா நடத்தி வைக்குற பண்டிட்ஜிங்ககூட கையெழுத்துப் போட்டு இருக்காங்க… இது என்ன இந்து சமய எதிர்ப்பு மகாநாடா..? இல்லை…. இங்கிலாந்து அரசா ..? சாவுக்கு வர்றவங்ககிட்டே இப்பவே கண்டோலன்ஸ் ரெஜிஸ்டரும்போட்டு, கையெழுத்தும் வாங்கியாச்சு. இனிமே இத்தாலிய ஆட்சிதான்.’ – சில பத்திரிகைகள் கிண்டலாகக் கண்டனம் தெரிவித்து இருந்தன.
இது எந்த வகையிலும் புத்திசாலித்தனமாகப்படாததால் மல்ஹோத்ராவே சற்று எரிச்சலடைந்திருந்தான்.
இப்பொழுது இந்தப் பாலக்காட்டுப் பாட்டி.
“ஃபோட்டோ எல்லாம் எடுத்தாச்சா ?” மணி வினவ, மல்ஹோத்ரா , “ம்… ம்”, என்றான்.
“லாஸ்ட் டைம் மாதிரியே இந்த முறையும் கண்டோலன்ஸ் ரெஜிஸ்டர் போட்ருங்க.”
“தேவையா, மிஸ்டர் மணி? போலீஸ்காரங்க எங்களை, பத்திரிகைல கிழி கிழின்னு கிழிக்கறானுங்க.”
“ அவங்க அவங்க வேலையச் செய்யறானுங்க. நாம நம்ம வேலையச் செய்வோம்.”
:இல்ல, மிஸ்டர் மணி….”
“மிஸ்டர் மல்ஹோத்ரா, ப்ளீஸ் ..”
“மணி சாப், இங்க இதுகூட ஒரு சென்சிடிவ்வான விஷயம்.. தாமரையா, குல்லாவான்னு எல்லாக் காரியத்தையும் பார்க்க ஆரம்பிச்சுட்டானுங்க. வெவகாரமாப் போயிடும்.. மும்பை அந்த நிலைக்குத் தள்ளப்பட்டாச்சு…”
வீட்டை ஆராய்ந்துகொண்டே வந்த மணி நின்றான்.
“எனக்கும் புரியாம இல்ல, மிஸ்டர் மல்ஹோத்ரா.. இன்னைக்குத் தேதிலே இதோ, இது அஞ்சாவது கொலை. .. ஒரு தடயமும், இதுவரை கெடைக்கில. .. ஏன், எதுக்கு இந்தக் கொலைன்னே புரியலை. நாம புத்திசாலிங்க கூட, அதி மேதாவிங்க கூட எல்லாம் போர் நடத்த வேண்டி இருக்கு. க்ளீனா கொலையைச் செய்யறாங்க.. ஒரு தடயம் மிச்சமாகறதில்லே. ரொம்ப உஷாராயிட்டாங்க. நமக்கு ஏதாவது ஒரு முனை வேணும்.. அதுக்காகத்தான் ப்ளீஸ்.. சரி, லாஸ்ட் ட்ரயல்னு வச்சிப்போம்..”
“ஓகே, மிஸ்டர் மணி. இட் வில் பி டன்.”
“ஏற்கெனவே அந்தப் பூனாக்காரனால் ஒரு மில்லி மீட்டர்கூட விடாமல் ஆராயப்பட்டுவிட்ட அந்தப் பாலக்காட்டுப் பாட்டியின் வீட்டை , மணியின் தீட்சண்யமான கண்கள், பூச்சியைப் பிடிக்கும் பல்லி போல் தேடின.
இதோ து…? …
அது ஒரு கம்ப்யுட்டர் ஸ்டேட்மென்ட். மேஜையில் இருந்த ஒரு கல்கி இதழின் ஏதோ ஒரு பக்கத்தில் , கொஞ்சம் கசங்கலாக மடித்து வைக்கப்பட்டு இருந்தது. என்னவாக இருக்கும் இது..?
( சஸ்பென்ஸ் தொடரும்)

Alfred Hitchcock suspense! Great!
LikeLike