சரித்திரம் பேசுகிறது! –யாரோ – பாஹியான்-2


பாஹியான் மெல்ல மெல்ல … மதுராபுரி வந்தான்!
‘ஆஹா! நாடு என்றால் இப்படியல்லவா இருக்கவேண்டும்!’
பாஹியான் பெரு வியப்புக்கு ஆளானான்.
காரணம்:
மக்கள் செழிப்பாக இருந்தனர்!
மகிழ்ச்சியாக இருந்தனர்!
அரசாங்கத்தின் கெடுபிடி எதுவும் இல்லை!
சுதந்திரத்தை முழுவதும் அனுபவித்தனர்!
தண்டனைகள் குறைவு!
நாடு முழுவதும்:
மக்கள் உயிர் வதை செய்வதில்லை!
மது அருந்தவில்லை!
மண்ணில் இது ஒரு சொர்க்கமோ?

கபிலவஸ்து…
இன்றைய இந்தியா-நேபாளம் நாட்டு எல்லைப் பகுதியில் இருந்தது.
புத்த சமயத்தினரின் புனித யாத்திரைத்தலங்களுள் ஒன்று.
புத்தர் பிறந்த இடம்.
பெரும் எதிர்பார்ப்புகளுடன் பாஹியான் கபிலவஸ்து அடைந்தான்.
அது பாலைவனமாக இருந்தது.
வெறும் சில மக்களே இருந்தனர்.
பாஹியான் மனம் கனமாகியது.
புத்தர் பிறந்த இடமா இது?

வீதியில் சந்தித்த சில புத்த பிக்ஷுக்கள் பாஹியானையும் அவன் நண்பன் ‘தௌ செங்’ இருவரையும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

“நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்?”
“சீனாவிலிருந்து”
பிக்ஷுக்கள் பெருமூச்சு விட்டனர்.
“நல்லது.
புத்த சமயத்தை நாடி வெகு தொலைவிலிருந்து இது வரை ஒருவரும் வந்ததில்லை. உங்கள் வரவு எங்களுக்கு ஆறுதலையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது”

பின்னர் பாடலிபுத்திரம் சென்றபோது ‘அசோகரது அரண்மனை’ பாழடைந்து கிடந்தது..


(பாழடைந்த அரண்மனையைப் பார்வையிடும் பாஹியான்
By Unknown – Hutchinson’s story of the nations, Public Domain, https://commons.wikimedia.org/w/index.php?curid=20046493)

இருப்பினும் மகத நாடெங்கும் புத்த மதம் கொண்டாடப்பட்டது.
எங்கெங்கு காணினும்… ஸ்தூபிகளும், புத்த விஹாரங்களும் இருந்தது.
அது பாஹியானுக்கு மன நிறைவை அளித்தது.

பாஹியான் தனது குறிப்பேடுகளில் இவ்வாறு எழுதினான்:
“குப்தர்கள், மௌரியர்களது ஆட்சியைப் பின்பற்றினர்.
ஆனாலும் அவர்கள் நிகழ்த்திய கொடுமைகளை நிகழ்த்தவில்லை.
நாட்டில் அமைதியும் ஒழுக்கமும் நிலவியது.
குப்தர்கள் ஆட்சி செய்த நாட்டில் 6 வருடங்கள் சுற்றியுள்ளேன்.
ஒரு முறை கூட கள்வரால் தாக்கப்படவில்லை.
வருத்தப்படும்படியான எந்த நிகழ்வும் நடைபெறவில்லை”.

இவ்வளவு எழுதிய அவன் ‘சந்திரகுப்த‘ மன்னனைப்பற்றி ஒரு வரி கூட எழுதவில்லை!
என்ன விந்தையோ?
ஒருக்கால் அவன் எழுதியது நமக்குத்தான் கிடைக்கவில்லையோ?

பத்துபேர்கொண்ட குழுவுடன் தொடங்கிய பயணத்தில்…
இப்பொழுது பாஹியானுடன் ‘தௌ செங்’ மட்டுமே கூடஇருந்தான்.

“தௌ செங்!
நீ ஒருவனாவது என்னுடன் பயணத்தில் இருப்பது நினைத்தால் மகிழ்ச்சி!
சீனா சென்று நம் இருவரும் புத்த மதம் பற்றி அனைவரிடமும் எடுத்துச் சொல்லலாம்”
‘தௌ செங்’ மௌனமானான்.
முகம் வாடி இருந்தது.
கண்கள் கலங்கியது.
“பாஹியான்! நான் சொல்வது உனக்கு அதிர்ச்சியாக இருக்கும்”
“…..?”
“இந்நாட்டு புத்த பிக்ஷுக்களின் இறை உணர்வு என்னை வெகுவும் ஆகர்ஷித்துவிட்டது.
நான் இங்கேயே இருந்து ‘புத்தராகி’… வாழ முடிவு செய்து விட்டேன்”

பாஹியான் தனியனானான்!
அவன் பயணம் நிற்கவில்லை!

பாஹியான் நாளந்தா அடைந்தான்.
அங்கிருந்து அருகில் இருந்த ராஜகிரிஹ நகர் சென்றடைந்தான்.
அது மகதத்தின் முதல் தலைநகரம்.
அங்கிருந்த ‘கழுகு மலை’ சென்ற போது பாஹியானின் உணர்ச்சிகள் கரைபுரண்டன.
கண்ணில் நீர் வழிந்தோடியது.

 

‘கழுகு மலை’

‘’புத்தர் பெருமான் ..
முன்பு இங்கு வாழ்ந்து…
இங்குதானே ‘சுரகாம சூத்திரம்’ போதித்தார்!
நான்… தாமதமாகப் பிறந்ததால் புத்தர் பெருமானை சந்திக்க இயலாது போனேனே!” என்று தன் அவலங்களைக் குறித்தான்.

பின்னர் கயா, பாடலிபுத்திரம், வாரணாசி சென்று புத்த கோவில்களைத் தரிசித்தான்.

ஒரு வருடம் சென்றது.

கங்கை நதியில் பயணம் செய்து வங்காள குடாவிலிருந்த ‘தம்லக்’ என்ற துறைமுக நகர் அடைந்தான்.
அங்கு இரண்டு வருடங்கள் தங்கினான்.
முதலில் சமஸ்கிருத மொழியை நன்கு கற்றுக்கொண்டான்.
புத்த சூத்திரங்கள் அனைத்தையும் சீன மொழியில் மொழிபெயர்த்தான்.
தான் கண்ட அனைத்தையும் படங்களாக வரைந்தான்.

பாஹியான் தன் கடமைகளை நன்கு உணர்ந்திருந்தான்:
‘இந்த பொக்கிஷங்களை சீனாவுக்குப் பத்திரமாகக் கொண்டு சென்று அங்கு அதை போதிக்க வேண்டும்!’

கனத்த மனத்துடன் பாஹியான் புத்தர் பிறந்த நாட்டிலிருந்து விடை பெற்றான்.

வணிகக் கப்பல் ஒன்றில் ஏறிப் புறப்பட்டான்.
கப்பல் பதினான்கு நாட்களுக்குப் பின் ‘இலங்கை’ சேர்ந்தது.
இலங்கையில்..
புத்த இலக்கியம் களஞ்சியமாகக் கிடந்தது.
அத்தனையும் சமஸ்கிருதத்தில்!

புதையல் கண்ட கள்வன் ஆனான்!
மேகம் கண்ட மயில் ஆனான்!

இரண்டு வருடம் அங்கு தங்கி அனைத்தையும் மொழி பெயர்த்து எழுதினான்.

பிறகு ஒரு வணிகக்கப்பலில், அங்கிருந்து புறப்பட்டான்.
கப்பலில் 200 பேர் பயணிகள்.
இரண்டு நாள் பயணித்தபின் ஒரு நாள் மாலை..
கரு மேகங்கள் வானத்தை நிறைத்தது.
குளிர்ந்து வீசிய காற்று மெல்லமெல்ல வலுவடைந்து புயலானது.
கப்பல் ஆடியாடி அலைக்கழிந்தது.
ஊழிக்காற்று தொடர்ந்தது.
பதிமூன்று நாட்கள் புயலின் சீற்றம்!
அது அனைத்தையும் அந்த இலங்கைக் கப்பல் தாக்குப்பிடித்தது.
அந்நாள் வரை..
அன்று காலை கப்பலின் அடித்தளத்திலிருந்து நீர் கசியத் துவங்கியது.
கப்பலின் தலைவன் :
“எல்லாப் பயணிகளும் தங்களிடமுள்ள கனமான உடமைகளை உடனடியாகக் கடலில் வீசி எறியவேண்டும்.
அப்பொழுதுதான் இந்த நீர்க் கசிவை சமாளிக்க முடியும்”

பயணிகள் வேறு வழி இல்லாமல் தங்கள் உடமைகளைத் துறந்தனர்.

பாஹியான் திகைத்தான்:
‘நாம் ஒரு ஆயுட்காலம் உழைத்து சேமித்த கிரந்தங்கள் அனைத்தும் நீரில் போகுமோ’ – வேதனையால் துவண்டான்.

‘புத்தர் பெருமானே!
உங்கள் திருவடியே சரணம்!
என்னைக் காக்காவிட்டாலும் எனது இந்த புத்தக் கிரந்தங்களைக் காக்கவேண்டும்’

அதிசயம் உடனே நடந்தது.
பறவைகள் தென்பட்டன.
சிறிய தீவு கண்பட்டது.
கப்பல் கரை சேர்ந்தது.
அந்த ஓட்டை சரி செய்யப்பட்டு கப்பல் மீண்டும் புறப்பட்டது.
தொண்ணூறு நாட்கள் பயணத்திற்குப் பின்..
ஜாவா தீவுக்குப் போய்ச் சேர்ந்தது.
பாஹியான் அங்கு ஐந்து மாதம் தங்கினான்.

பிறகு அங்கிருந்து மறுபடியும் இன்னொரு பெரிய வணிகக் கப்பலில் சீனா செல்லப் புறப்பட்டான்.
50 நாட்களுக்குத் தேவையான உணவுப்பண்டங்கள் கப்பலில் இருந்தது.
பாஹியான் மனது பெரும் நிம்மதியில் இருந்தது.
முடிவில்..
‘நமது கடமைகள் நிறைவேறப்போகிறது…
தாய் நாடே!
இதோ வருகிறேன்!”
அவன் மனம் இன்பத்தில் மிதந்தது!

(இதை சினிமா எடுத்தால் இங்கு ஒரு பாட்டு போட்டிருப்பார்கள்!)

சோதனைகள் முடிந்தது என்று நினைத்த போது…
அதே சூறாவளிக் காற்று…
மீண்டும்..
கப்பல் பயணிகள் – பாஹியானின் முன் கப்பல் பயணத்தில் புயலால் அடைந்த துன்பங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தனர்.

ஒருவன்:
“இந்த சீனன் நம்முடன் வருவதால்தான் இந்தப் புயல் வருகிறது.
இந்த ஒருவனால் நாம் அனைவரும் ஏன் புயலில் மடியவேண்டும்?”
பாஹியான் இதை எதிர்பார்க்கவில்லை.

“நான் ஒரு பாவமும் அறியாதவன்.. புத்தர் பெருமானே இது என்ன சோதனை?”

பாஹியான் அருகிலிருந்த இன்னொருவன் பெரும் வீரன்.
பாஹியான் பயணங்களைப்பற்றி அறிந்திருந்தான்.
அவன் சொன்னான்:
“இந்தச் சீன மனிதர் பெரும் புத்த பக்தர்.
மேலும் புத்த இலக்கியங்களை சீனாவில் போதிப்பதற்காகச் செல்கிறார்.
இவரால் புயல் வந்தது என்பது பெரும் மூடத்தனம்.
யாரேனும் இவரைக் குறை கூறினால்..
அவர்கள் இந்த புயலிருந்து தப்பிப்பார்கள்.
அது உண்மை தான்.
ஆனால்…
அவர்கள் எனது வாளிலிருந்து தப்பிக்க இயலாது!
இது சத்தியம்”
வாளை உயர்த்தினான்.
வீரனின் குரல்… புயல் சத்தத்தையும் மீறிப் பயங்கரமாக ஒலித்தது.
அனைவரும் அடங்கினர்.

‘புத்தரின் கருணை எப்படி யார் மூலமாகவோ வருகிறது!’ – பாஹியான் வியந்தான்.

70 நாட்கள் கப்பல் கடலில் அலையுண்டுத் தள்ளாடியது.
உணவுப் பொருட்கள் தீர்ந்தது.
பின்னர் திசை மாறிய கப்பல் சரியான திசையில் செலுத்தப்பட்டு..
12 நாட்களில்…
சீனா அடைந்தது.

புத்தர் கருணையை எண்ணி பாஹியான் நெகிழ்ந்தான்.

(சீனா திரும்பிய பாஹியானுக்கு வரவேற்பு)

சீனாவில் பாஹியானுக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது!

(பாஹியான் சினிமாவுக்கு இங்கே ஒரு பாட்டுப் போட்டு முடிக்கலாம்!)

ஒரு மனிதன்..
மத்திய சீனாவிலிருந்து கால்நடையாகப் புறப்பட்டு…
கோபி பாலைவனம், ஹிந்து குஷ் வழியாக குப்தராஜ்யத்தில் பயணித்து..
புத்த கிரந்தங்களை கிரகித்து, மொழிபெயர்த்து..
வங்காள விரிகுடாக் கடல் வழியாக, இலங்கை, ஜாவா சென்று..
உயிர் எப்பொழுது போகுமோ என்ற நிலையில் கடல் பயணம் செய்து..
சீனா திரும்பினான்.

அவன் போதனைகள்..
சீனாவில் புத்த சமயம் வளம்பெறப் பெரும் காரணம்.
அவன் ஒரு சரித்திர ‘நாயகன்’!
சரித்திரம் அவன் புகழ் பாடட்டும்…

நமது சரித்திர ஆய்வு தொடரட்டும்…

தலையங்கம்

சென்னையில் மழைக் காலம்

 

 

 

 

Image result for சென்னை மழை 2017

2015 டிசம்பர் ஒன்றுக்குப் பிறகு சென்னையில் லேசாக மழை பெய்தால் கூட வெள்ளம் முதல்மாடிவரை வந்துவிடுமோ என்று பயப்படவைத்துவிட்டது. 

மழை வெள்ளமும் ஏரித்திறப்பும் சென்னை வாசிகளுக்குப் புதியதல்ல என்றாலும் பயம் புதிது. 

எம் ஜி ஆர் முதல்வராக இருந்தபோதே, உடல் நலமின்றி இராமாவரம் இல்லத்தில் இருந்தபோதே செம்பரம்பாக்கம் ஏரி  திறந்ததால் வெள்ளம் அவரது  வீட்டைச்சூழ, அவரைக் கட்டமரத்தில் அழைத்து வந்து கன்னிமரா  ஹோட்டலில் தங்கவைத்தனர். இது நடந்தது 1985இல்.

மக்களின் இன்றைய பயத்துக்குக் காரணம் நீர் நிலைகளை அழித்தது, பிளாஸ்டிக் குப்பைகளைக் கொட்டியது, ஏரிகளில் வீடு கட்டியது,  அரசு இயந்திரங்களின் கையாலாகாததன்மை இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். 

மழை வேண்டும்; வெள்ளம் வேண்டாம். அதற்கு வழி, நாம் திருந்துவதுதான். 

இல்லையென்றால் இயற்கையால் மீண்டும் மீண்டும்  தண்டிக்கப்படுவோம்.  

 

ஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் (5) – புலியூர் அனந்து

Image result for malgudi days

நல்ல பொழுதை எல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள்
நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார்
அல்லும் பகலும் வெறும் கல்லாயிருந்துவிட்டு
அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக்கொண்டார்..

சீக்கிரமே வேலைக்குப் போய்விட்டேன். ஆனால் பள்ளிப் படிப்பு முடிந்து வேலைக்கென்று போவதற்கு இரண்டு வருடங்கள் இடைவெளி இருந்தது. அது ஒரு முக்கியமான காலகட்டம் என்று சொல்வதற்கில்லை.

அந்தக் காலத்தில் எஸ். எஸ். எல். ஸி. முடித்துவிட்டு கல்லூரிக்கோ பாலிடெக்னிக்கிற்கோ படிக்கப் போகாத பெரும்பாலானவர்கள் டிம்மி பேப்பரை உருட்டி எடுத்துக்கொண்டு டைப்பிங் கற்றுக்கொள்ள இன்ஸ்டிடியூட் போவார்கள். நானும் ஒருமணிநேரம் இன்ஸ்டிடியூட்டில் பொழுதுபோக்கினேன்.  கொஞ்சம் தீர்மானமாக இருப்பவர்களோ அல்லது யாரேனும் அறிவுறுத்தியபடியோ சிலர் சுருக்கெழுத்தும் கற்றுக்கொள்வதுண்டு.

பொழுதுபோகவில்லை என்றுதான் எல்லாரும் சொல்வார்கள். எனக்கென்னவோ பொழுது நம் கண்முன்னாலேயே யாதொரு பயனும்இன்றிப் போகிறது என்பதுதான் சரி.

மாலைவேளைகளில் ஒரு சிறு கோஷ்டியுடன் காலாற நடந்து ஊரைச் சுற்றிவருவோம். அங்கத்தினர் பதிவேடு இல்லாத அந்தக் குழுவில் பலதரப்பட்ட நபர்கள். அவர்களைப்பற்றி பின்னால் சொல்லவேண்டும். அந்தக் குழுவில் அதிகம் பேசாத நபர் நான் மட்டுமே.

மதியம் நூலகத்தில் நிறைய நேரம் போகும்.உரையாடல்களில் கலந்துகொள்ளாவிட்டாலும் , நாலு பேர் மத்தியில் பொழுதுபோக என்னென்ன விஷயங்கள் நமக்குத் தெரிந்திருக்கவேண்டும் என்று ஒரு பட்டியல் போட்டேன்.

சினிமா, அரசியல் மற்றும் கிரிக்கெட்.

அதற்குத் தினசரிகளையும் வாரப்பத்திரிகைகளையும் படிப்பது அவசியம். டெக்ஸாஸ் கோப்பையில் ரிச்சர்ட்ஸ் அடித்த 189, ஆலன் நாட் கொடுக்காத காட்சை காட்ச்சாக மாற்றி அவுட் ஆக்கிய ஏக்நாத் சோல்கர், திண்டுக்கல் இடைத்தேர்தல், சமீபத்தில் வந்த படங்களும் அவற்றில் வந்த பிரபல பாடல்களும் என்று பலர் அளந்து விடும்போது ஒன்றும் புரியாமல் பார்த்துக்கொண்டிருப்பது ரொம்பக் கஷ்டம்.
விவரங்கள் தெரிந்திருந்தும், சில அதிகப்படி செய்திகள் கைவசம் இருந்தும் வாயைத் திறக்காமல் இருப்பதுதான் வழக்கம். என் அப்பா சொன்ன ஒரு கருத்து இதற்குக் காரணமாக இருக்கலாம்.

‘நாலு பேர் ஒரு விஷயத்தில் சர்ச்சை செய்யும்போது நாம் பேசாம இருந்தா நமக்கு ஒண்ணும் தெரியாதுபோல என்று மத்தவங்க நினைச்சுக்குவாங்க. நாம் ஏதாவது சொல்லிட்டா அவங்க நினைச்சது சரிதான்னு ஊர்ஜிதம் ஆயிடும்.’

தவிர கோர்வையா ரசிக்கும்படியாக, ஏன் குறைந்தபட்சம் புரியும்படியாக நமக்குச் சொல்லவராது என்று ஒரு அசாத்தியத் ‘தன்னம்பிக்கை’(?) இருந்திருக்கவேண்டும்.

அல்லது தத்துவரீதியா ஒரு விளக்கம் சொல்லலாம்.
ஆட்டுக்கே வாலை அளந்து வைத்த கடவுள் மனிதனுக்கும் எல்லாவற்றையும் அளந்துதான் வைத்திருக்கிறான்.சுவாசிக்க, நுகர ஆகிய இரண்டு வேலைகளுக்கு இரண்டு மூக்குத் துவாரங்கள். கேட்பது மட்டும் செய்யும் ஒரு வேலைக்கு இரண்டு காதுகள். பார்ப்பதற்குமட்டும் இரண்டு கண்கள். ஆனால் பேசுவதும் சாப்பிடுவதும் ஆகிய இரண்டு வேலைகளுக்கு ஒரே வாய். கண்ணும் காதும் உள்வாங்கிக்கொள்ளும் அளவில் எட்டில் ஒரு பங்குதான் பேச வேண்டும் என்றுதான் இறைவன் படைத்திருப்பான் என்று சொல்லலாம்.

அந்த இரண்டு வருடங்களில் இன்ஸ்டிடியூட், மாலை கோஷ்டி, நூலகம் போக மற்ற நேரங்களை வீட்டில்தான் கழிக்க வேண்டும். பகலில் தூங்குவதில்லை என்று தீர்மானமாக நான் இருந்தேன். வீட்டில் மதியம் தூங்காததற்கு மேலே சொன்ன பட்டுக்கோட்டையாரின் பழைய  பாடல்மட்டும் காரணமல்ல. எங்கள் தெருவிலேயே ‘காஞ்சான் ’ என்று அறியப்பட்ட ஒருவன் இருந்தான். அவன் யார், அவன் உண்மைப் பெயர் என்ன, இந்தப் பெயருக்குக் காரணம் என்ன, அவனுக்கு என்ன வயது என்றெல்லாம் யாருக்கும் தெரியாது. ஆற்றிலிருந்து குடம் குடமாகத் தண்ணீர் கொண்டு வரவோ மரம் வெட்டவோ, சுமைகள் தூக்கவோ எல்லோருக்கும் காஞ்சான்தான். யார் வீட்டில் வேண்டுமானாலும் அவனுக்கு உணவு கொடுத்துவிடுவார்கள். பழைய வேட்டியோ, சட்டையோ அவனுக்குப் பஞ்சமில்லை. அதனை வைத்துக்கொள்ள இடம் யார் வீடு வேண்டுமானாலும் போதும்.

யாரும் வேலை சொல்லாதபோது எங்கே வேண்டுமானாலும், பெரும்பாலும் யார் வீட்டுப் புழக்கடையிலோ, வெறும் தரையாக இருந்தாலும் தலைக்கும் ஒன்றும் வைத்துக்கொள்ளாமல் படுத்துவிடுவான். படுத்த இருபது வினாடிகளில் தூங்கிவிடுவான். கொஞ்சம் பலமாகக் குரல்கொடுத்தாலும் விழித்துக்கொள்வான். பிள்ளையார் கோவில் சுவரில் சாய்ந்து உட்கார்ந்துகொண்டே தூங்குவதையும் நான் பார்த்திருக்கிறேன். அவனும் அதிகம் பேசுவதில்லை . ஒரு மனிதனாக இல்லாமல் ஒரு ஜந்துவாகத்தான் அவன் எல்லோராலும் பார்க்கப்பட்டான். அந்தக் காஞ்சானிடமிருந்து என்னை வேறுபடுத்திக் காட்டிக் கொள்ளத்தான் நான் தூக்கத்தைக் குறைத்துக்கொண்டேனோ என்னவோ?

வீட்டிற்குள்ளேயே இருந்த நேரங்களில் அக்கம்பக்கம் உள்ள பெண்களுடன் அம்மாவின் அரட்டைக் கச்சேரி காதில் விழுந்தே தீரும். ‘இரண்டும் கெட்டான்’ போன்ற சில வார்த்தைகள் தெரிந்துகொண்டதும் அப்போதுதான். யாரையோ இரண்டும் கெட்டான் என்று குறிப்பிட்டுப் பேசிக்கொண்டிருந்தார்கள். ஒரு வகையில் பார்த்தால் நானும் அப்போது அந்த சொல்லிற்குப் பொருந்திவருவேனோ என்று தோன்றியது. வளர்ந்து விட்ட  சிறுவனோ, வளர்ந்து வரும் இளைஞனோ இல்லையே? அதனால் எளிதாக ‘இரண்டுங்கெட்டான்’ என்று சொல்லிவிடலாம் . ஆனால் அந்த வார்த்தையை இளக்காரமாகத்தான் உபயோகப் படுத்துவார்கள்.
மிதித்தால் கொத்திவிடும் பாம்பு என்று தாண்டிவிடவும் முடியாது, தாண்டினால் வறுமை வந்துவிடும் என்று சொல்லப்படும் பழந்துணி என்று மிதிக்கவும் முடியாது என்றெல்லாம் பழமொழி விளக்கம் பேச்சில் அடிபட்டுக் கொண்டிருந்தது.

அந்தச் சமயத்தில் எது தர்மசங்கடம் என்று எங்கேயோ படித்த விளக்கத்தை ஒரு பெண்மணி சொன்னது இன்னும் நினைவில் உள்ளது. ராமனுக்கு வாலிவதம் ஒரு தர்மசங்கடம் என்றுதான் சொல்லவேண்டும். மறைந்திருந்து கொன்றால் வீரத்திற்கு இழுக்கு. நேரில் நின்று போரிட்டுத் தோற்றுவிட்டால் ராஜ தர்மத்திற்கும் சினேக தர்மத்திற்கும் இழுக்கு.  எந்தத் தவறைச் செய்யவேண்டும் என்று முடிவுசெய்யத்தானே வேண்டும்?..

ஒரு முனிவர் கண்களில் ஒரு காட்சி தெரிகிறது. பூச்சி தன்னைக் கவ்வவரும் பல்லியைக் கவனிக்காமல் இருந்தது. அந்தப் பூச்சியை கையைத் தட்டி விரட்டினால் பல்லியின் உணவைக் கெடுத்த பாவமும் அப்படிச் செய்யாவிட்டால் உயிர்வதைக்கு உடந்தையாக இருந்த பாவமும் சேருமாம். என்ன செய்வார் அந்த முனிவர்?
(என்னவோ சொல்ல ஆரம்பித்து எதையோ சொல்கிறேனோ?)

என்னைப்போன்று பள்ளிப் படிப்புமுடித்து வேலைக்குப் போக வயதாகாத ஒரு சிலர் டைப்பிங், சுருக்கெழுத்துதவிர தங்கள் குடும்ப வியாபாரம் அல்லது சிறுதொழில்களில் தந்தைக்கு உதவி செய்து வந்தார்கள். பக்கத்து கிராமங்களில் நிலமிருந்த குடும்பத்தைச் சேர்ந்த பையன்கள் விவசாயத்தில் சிறுசிறு வேலைகள் செய்து வந்தார்கள்

ராமாஜி என்கிற பள்ளித் தோழன் அப்பாவின் தச்சு வேலைகளில் உதவியாக இருந்து ஒரே வருஷத்தில் நேர்த்தியான தச்சர் ஆகிவிட்டான். தச்சுவேலையை ஒரு கலையாகத்தான் அவன் பார்த்தான். ஐந்தே வருடங்களில் எங்கள் ஊரிலேயே மிகச் சிறந்த ஃபர்னீச்சர் மார்ட் முதலாளியும் தொழிலாளியும் ஆக விளங்கினான். சொந்தமாக வீடு வாங்கும் அளவிற்குக் குடும்பம் முன்னுக்கு வந்தது. எங்கள் குடும்பத்திலேயே வியாபார நோக்கு கொண்டவர்களோ, கைவினைஞர்களோ கிடையாது. நிலபுலன்களும் கிடையாது.
யாரோ சொன்னார்கள் என்று கொஞ்சம் கதை, கவிதை ஆகியவற்றை நூலகத்தில் படிக்க முயற்சி செய்தேன். சரிப்படவில்லை. நன்கு படித்துப் பிறகு எழுதவும் ஆரம்பித்து இருந்தால் இலக்கியத்தில் நோபல் பரிசு பெற்ற முதல் தமிழனாக நான் இருந்திருப்பேனோ என்னவோ?

இந்த நிலையிலிருந்து ஒரு விடுதலையைப் போல (என் வீட்டார் கருதியதைப்போல கடவுள் புண்ணியத்தில்) எனக்கு வேலை கிடைத்தது.

(ஆரம்பித்த இடத்திற்கே வந்துவிட்டேனோ? முன்னே சொன்னபடி உடன் ஊர்சுற்றிய நண்பர்களைப்பற்றி இனி சொல்ல வேண்டியது தான். பிறகு இருக்கவே இருக்கிறது நான் வேலை பார்த்த லட்சணம்!)

( அப்புறம் என்ன? அப்புறம் பாக்கலாம்)

   ஆண்டாள் ஊசல் !  – தில்லைவேந்தன்                

எமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்

 

Related image

சூரியதேவன் இதைக் கேட்டதும் ‘ ஆஹா , இந்தப் பிரச்சனைக்கு இப்படி ஒரு சுலபமான தீர்வு இருக்கும்போது கவலை எதற்கு ?’ என்று மனதில் நினைத்ததுமட்டுமல்லாமல் வாய்விட்டும் கூறினான். ஸந்த்யாவின் மீது இருந்த காதல் வெறியில் அவளுக்காத் தன் உடல் பொருள் பிரகாசம் அனைத்தையும் இழக்கும் மன நிலையில் இருந்தான் சூரியதேவன்.

“விஸ்வகர்மா அவர்களே! கவலையை விடுங்கள். நானே என்னைப் படைத்த பிரும்ம தேவரிடம் சென்று, என் பிரகாசத்தின் அளவை ஸந்த்யா தாங்கும் அளவிற்கு நிரந்தரமாகக் குறைத்துக் கொள்கிறேன்.அதனால் உலகத்தில் எந்த மூலைக்கும் பாதிப்பு இல்லாமலும் பார்த்துக்கொள்கிறேன்” என்றான்.

 “வேண்டாம்! வேண்டாம்! ஸந்த்யாவின் பிறப்பு ரகசியத்தில் நான் குறுக்கிட்டதற்கே அவர் என்னிடம் கோபமாக இருக்கிறார். இதை அவர்  நிச்சயம் ஏற்றுக்கொள்ளமாட்டார். அதனால் அவருக்குத் தெரியாமல்தான் இந்தக் காந்தச் சாணை பிடிக்கப்படவேண்டும். இந்தச் சிகித்சைக்குப் பிறகு தங்கள் திருமேனியின் செவ்வண்ணம் சற்றுக் குறைந்து கருமை படரக்கூடும். இதனால் உலகின் சில பகுதிகளில் வெப்பம் குறைந்து குளிர் அதிகமாகும். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் பழைய பிரகாசம் வளரும். ஸந்த்யாவால் தங்களைத்  தாங்க முடியாதபோது மீண்டும் தாங்கள் இந்தச் சாணையைப் பிடித்துக் கொண்டால்  போதும்” என்றார் விஸ்வகர்மா.

“தங்கள் ஆசைப்படியே நடந்து கொள்கிறேன். தங்கள் ஆசியும் ஸந்த்யாவின் அன்பும் எனக்குக் கிடைத்தால்போதும்” என்று கூறி சூரியதேவன் அவரை வணங்கினான்.

ஸந்த்யாவின் நெஞ்சம் விம்மித் தணிந்தது. கண்களில் கண்ணீர் பெருகியது. பெருமையில் அவள் உள்ளமும் பூரித்தது.

“ ஸந்த்யா! இப்பொழுதே அந்த சந்திரகாந்தச் சாணைச்   சிகிச்சையை நான் சொல்லிக் கொடுத்ததுபோலச் செய்துவிடு. இதை, ஒரு மனைவிதான் தன் கணவனுக்குச் செய்யமுடியும். பத்துப் பதினைந்து நாழிகைகளில் இதைச் செய்துவிடலாம். ஆனால், அது முடியும்வரை நீ சூரியதேவருடன் இணைந்துவிடக்கூடாது. அது மிக மிக முக்கியம். உங்கள் ஆசை எல்லை மீறினால் உன் மேனியை  அவரது கிரணங்கள் உருக்கிப் பொற்குழம்பாக  மாற்றிவிடும். அதன்பின் உன்னை பழைய உருவிற்குக் கொண்டுவருவது பிரும்மராலும் முடியாது. ஆகவே மகளே! இந்தக் கறுப்புத் திரையை உன் கண்களில் கட்டிக்கொள். இதன் வழியாக நீ அவரை நன்கு பார்க்கமுடியும். ஆனால் அவரின் வெப்பம் உன் கண் மூலமாக வந்து உன்னை ஊடுருவாது. உங்கள் இருவரையும் எமது ஆராய்ச்சிச் சாலைக்கு அழைத்துப்போக புஷ்பக விமானங்கள் வரும். மகளே உன் சமத்து! ” என்று கூறிவிட்டுக் கனத்த இதயத்துடன் விஸ்வகர்மா சென்றார்.

இரு விமானங்களில் தனித்தனியே சென்று மேரு மலையின்  அடிவாரத்தில் இருக்கும் ஆராய்ச்சிச் சாலைக்குக்குள் நுழைந்தார்கள்.

யாருமில்லாத அந்தத் தனியிடத்தில் இருக்கும்போது அவர்களுக்கு அதில் உள்ள ஆபத்து புரிந்தது. இருவர் இதயங்களும் வரப்போகிற ஆபத்தைப் புறக்கணித்துவிட்டு இணைந்து கொள்ள விரும்பின.அவ்வளவு ஆழமாக காமன் கணைகள் இருவர்மீதும் பாய்ந்திருந்தது.  ஆசை பயத்தை வெல்லுமா , இல்லை பயம் ஆசையை வெல்லுமா  என்பது  புரியாத  நிலையில் இருவரும் இருந்தார்கள்.

 உலகைப் படைக்குமுன்னே  ஒரு விதியையும் படைத்துவிட்டான் பிரும்ம தேவன்.

விதி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது.  விதியுடன்  நவ கிரகங்களும்  வேடிக்கை பார்க்கவந்திருந்தன.  

(தொடரும்)

இரண்டாம் பகுதி

எமியின் பேச்சைக்கேட்டு எமனும் திகைத்துவிட்டான்.

ரத்தினச் சுருக்கம் என்று சொல்வார்களே அதைப்போல் பேசிய அவளை எப்படிப் பாராட்டுவதென்றே அவனுக்குத் தெரியவில்லை. அதிலும் தன் வாழ்வில் நடந்த அந்தத் துயரச் சம்பவங்களைப்பற்றி அவள் பேசியது அவனைப் பழைய நினைவுகளில் மூழ்கச் செய்தது.

அவன் எவ்வளவு முயன்றாலும் மறக்க முடியாத அந்த நாட்கள் !

எமியை அழைத்துக் கொண்டு அமைப்பாளர்களுக்கு வாழ்த்துக் களைக் கூறிவிட்டுப் புறப்பட்டான்.

“  சகோதரி! உன்னுடைய இன்றைய பேச்சு என் மனதில் ஒரு பெரிய சூறாவளியை ஏற்படுத்திவிட்டது. அதைப்பற்றி நாம் மேலும் பேச ஆரம்பித்தால் அது பெரிய கொந்தளிப்பில் கொண்டுபோய்விடும். அதை அப்படியே விட்டுவிடுவதுதான் நமக்கு நல்லது.  நாளை நாம் நரகபுரிக்குச் செல்வோம். அங்கு நீ பார்க்கவேண்டியது, செய்யவேண்டியது ஏராளமாக இருக்கின்றன. தற்போது நீ சற்று ஓய்வெடுத்துக்கொள்!. சித்திரகுப்தனிடம் எனக்குச் சற்று வேலை இருக்கிறது.அதை முடித்துவிட்டு உன்னிடம் வருகிறேன்” என்று கூறி எமன் புறப்பட்டான்.

அங்கே எமனுடைய அலுவலக அறையில் சித்திரகுப்தன் மூன்று பேரிடம் விவாதித்துக்கொண்டிருந்தான். வந்திருப்பவர்கள் பூலோகத்து ஆட்கள் என்பது புரிந்தது. மேலும் அவர்கள் நால்வரும் எமனுடைய வருகைக்காகக் காத்துக்கொண்டிருந்தனர்.

சித்திரகுப்தன் ஏற்கனவே இதைப்பற்றி எமனிடம் பலமுறை  விவாதித்திருக்கிறான். இந்த ஒரு விஷயத்தில் மட்டும் இருவருக்கும் சிறிது அபிப்ராயபேதம் இருந்துவந்தது. சித்திரகுப்தன் காலங்காலமாகத் தன் தொழிலை மிகச் சிறப்புடன் செய்துவந்து கொண்டிருக்கிறான். அவன் செயல்பாட்டில் இதுவரை யாரும் குறை கூறியது கிடையாது. இன்னும் சொல்லப்போனால் எமன், சித்ரகுப்தனைத் தன் உதவியாளன் என்றோ அவன் ஒரு தனி உருவம் என்றோ எண்ணியதே கிடையாது. சித்திரகுப்தனைத்  தன் எண்ணத்தின் பிரதிபலிப்பு என்றே எண்ணினான். பல சமயம் அவனிடம், சித்ரகுப்தா! நீ தான் என் மூளை, நீ என் அருகில் இல்லையென்றால் நான் மூளையற்றவனாகி விடுவேன்’ என்று விளையாட்டாகச்சொல்வதுண்டு. அப்படிப்பட்ட ஒருவனைத்தான்  எமனும் தேடிக்கொண்டிருந்தான்.

தன் தந்தையின் வேண்டுகோள்படி தனக்குத் தர்மராஜன் பட்டம் கிட்டியதும் மனிதர்களின் மரணத்தைக் கண்காணிக்கும் பொறுப்பு அவனுக்கு அளிக்கப்பட்டது.  எமன் மிகுந்த மகிழ்ச்சியுடன் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டான். அவன் அதற்குத் தகுதியானவன் என்பதை நிரூபித்துக் காட்டியபின்  சிவபெருமான் அளித்த  பதவிதான் அது. இந்த மாபெரும் பொறுப்பை நிர்வகிக்கத் தனக்குத் தக்க துணைவன் வேண்டும் என்று எமன் சிவபெருமானிடம் யாசித்தான். அப்போது சேர்ந்தவன்தான் சித்திரகுப்தன்.

சித்திரகுப்தன் எமனிடம் சேர்ந்ததே ஒரு சிறு கதை.      

கயிலாயத்தில் ஒரு தடவை பார்வதிதேவி விளையாட்டாக ஓவியம் ஒன்றை வரைந்தாள். அது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. அதற்கு உயிர்கொடுங்கள் என்று பார்வதி சிவனை வேண்டினாள். சிவனும்  ‘சித்திரபுத்திரனே வா’ என அழைக்க சித்திரத்தில் இருந்து சித்திரகுப்தன் வெளிவந்தான். சித்திரகுப்த என்ற வார்த்தைக்கு ‘மறைந்துள்ள படம்’ என்று பொருள் என்று சிவன் பார்வதியிடம் விளக்கினார்.  

அதே சமயம் இந்திரன், தன் மனைவி இந்திராணி விளையாட ஒரு  குழந்தை வேண்டும் என்று சிவபெருமானிடம் வேண்டிவந்தான். அகலிகை சாபத்தால் அவனுக்குக் குழந்தை பிறக்காது என்று உணர்ந்த சிவபெருமான்,  சித்திரத்தில் பிறந்த சித்திரகுப்தனை  இந்திரனுக்குப் புத்திரனாக இருக்கும்படி அருள்புரிந்தார். சிவபெருமான் ஆணைப்படி  சித்திரபுத்திரன்  காமதேனுவின் வயிற்றில் உதித்து, ஏடும் எழுத்தாணியும் கையில் பிடித்து அவதரித்தான்.  

சித்திரகுப்தனுக்கு ஏதாவது ஒரு பொறுப்பைக் கொடுக்கவேண்டும் என பார்வதி விரும்பினாள். அந்த நேரத்தில் ‘மரணத்திற்குப் பிறகு உயிர்களின் பாவ, புண்ணிய கணக்கை ஆராய்ந்து சொல்லத்  தனக்கு உதவியாளர் வேண்டும்’ என்று எமதர்மராஜன், இறைவனை வேண்டிநின்றார். சித்திரகுப்தனிடம் அந்தப் பொறுப்பைக் கொடுத்து, எமதர்மனின் உதவியாளராக நியமித்தார் சிவபெருமான்.

சித்திரகுப்தன் தன் ஏடுகளில் உயிர்களின் பாப புண்ணியக் கணக்கைத் துல்லியமாக ஆராய்ந்து  எழுதிவந்தான். மரணத்திற்குப் பிறகு தர்மராஜனிடம் அந்த உயிர் நிற்கும்போது, சித்திரகுப்தன் கையில் உள்ள ஏடுகள் அசையும். அந்த உயிர் செய்த பாபங்கள் புண்ணியங்கள் துலாக்கோலில் நிறுக்கப்படும். அதன் அடிப்படையில் எமன் தீர்ப்பை வழங்குவான். அந்த உயிர் செல்ல வேண்டிய இடம் சொர்க்கபுரியா அல்லது நரகபுரியா என்று. அதுமட்டுமல்லாமல் நரகபுரியில் அந்த உயிருக்கு என்னென்ன தண்டனைகள் வழங்கப்படவேண்டும் என்பதும்  சித்திரகுப்தனின் ஏடுகளில் கண்டுள்ள கணக்கின் அடிப்படையில்தான் நடைபெறும்.

பல்லாயிரம் ஆண்டுகள் பலகோடி மக்களின் தகவல்களை ஏட்டில் எழுதிவந்த சித்ரகுப்தனுக்கு  ஏன் அவற்றை ஒரு கருவியில் பதிவு செய்து பின்னர் தேவைப்படும்போது மென்பொருள் மூலம் அவற்றை வெளியே கொண்டுவரக்கூடாது என்ற எண்ணம் எழுந்தது. எமனுக்கு இது அவ்வளவு சரியாகப்படவில்லை. இதுவரை செய்த பணி சிறப்பாக இருக்கும்போது புதிய செயல்பாடு எதற்கு என்று வினவினான்.

“ நான் என் வேலையை மிகமிகச் சிறப்பாகச் செய்கிறேன் என்றால் அதைவிடச் சிறப்பாக புதிய முறையில் அந்த வேலையைச் செய்யத் திட்டமிடவேண்டும். இல்லையென்றால் இயந்திரத்தைப்போல மூளையும் பழுதாகிவிடும். செயல்பாட்டிலும் குறை வந்துசேர்ந்து விடும் ”  என்றான்.

சித்திரகுப்தன் கூறிய பதில் எமனை யோசிக்க வைத்தது. முடிவில் சம்மதிக்கவும்  வைத்தது. 

அதன் விளைவாகப்  பூலோகத்திலிருந்து மென்பொருள் வல்லுனர்கள் எமபுரிப்பட்டணத்திற்கு  வந்துள்ளனர்.

(தொடரும்)