
என்ன செய்யப் போகிறாய் – முருகா
என்ன செய்யப் போகிறாய்?
பழத்திற்கு அண்ணனுடன் சண்டையிட்டாய்
பெற்றோர்கள் தெய்வமென்று நிலைநாட்ட
கோபமொடு பழனிக்கு ஓடிவிட்டாய்
கள்ளமிலா குழந்தையின் குணங்காட்ட!
பெற்றோரை அன்புடன் பேணுவது உன்காலம்
முதியோர்கள் விடுதிக்கு அனுப்புவது என்காலம்
கல்லான நெஞ்சங்கள் கரைவது எப்போது
எண்ணங்கள் நல்லவையாய் மாறவேண்டும் இப்போது!
ஆளாகும்வரை அம்மா அதற்குப்பின் அவள் ஆயா
பருவம்வரை தந்தை அதற்குப்பின் அவர்கந்தை
அன்புக்குயாம் அடிமையிலை வேண்டாமந்த பாசவலை
நான்சுகமாய் வாழவேண்டும் இதுஇப்போது எங்கள்நிலை!
நாகரீகப் போர்வையிலே புத்திகெட்டு திரிகின்றோம்
நான்நான் நானென்ற அகந்தையிலே அலைகின்றோம்
இன்சொல்லும் உதவாது கடுஞ்சொல்லும் ஆகாது
அடியாலும் முடியாது எங்களை மாற்றிடவே!
உன்னடியார் பலபலபேர் அவனியிலே தோன்றட்டும்
பாலர்முதல் பெரியோர்வரை பாடங்கள் நடத்தட்டும்
நல்வழி எவ்வழியென வீதிதோறும் சொல்லட்டும்
அன்பதன் பாசமதன் மேன்மையினை முழங்கட்டும்!
ஒருவழியை சொல்லிவிட்டேன் இனிஉன்பாடு – இக்
கலியுக மாந்தர்பாடு எனைஆளைவிடு!
—————————————————————–
