
பாஹியான் மெல்ல மெல்ல … மதுராபுரி வந்தான்!
‘ஆஹா! நாடு என்றால் இப்படியல்லவா இருக்கவேண்டும்!’
பாஹியான் பெரு வியப்புக்கு ஆளானான்.
காரணம்:
மக்கள் செழிப்பாக இருந்தனர்!
மகிழ்ச்சியாக இருந்தனர்!
அரசாங்கத்தின் கெடுபிடி எதுவும் இல்லை!
சுதந்திரத்தை முழுவதும் அனுபவித்தனர்!
தண்டனைகள் குறைவு!
நாடு முழுவதும்:
மக்கள் உயிர் வதை செய்வதில்லை!
மது அருந்தவில்லை!
மண்ணில் இது ஒரு சொர்க்கமோ?
கபிலவஸ்து…
இன்றைய இந்தியா-நேபாளம் நாட்டு எல்லைப் பகுதியில் இருந்தது.
புத்த சமயத்தினரின் புனித யாத்திரைத்தலங்களுள் ஒன்று.
புத்தர் பிறந்த இடம்.
பெரும் எதிர்பார்ப்புகளுடன் பாஹியான் கபிலவஸ்து அடைந்தான்.
அது பாலைவனமாக இருந்தது.
வெறும் சில மக்களே இருந்தனர்.
பாஹியான் மனம் கனமாகியது.
புத்தர் பிறந்த இடமா இது?
வீதியில் சந்தித்த சில புத்த பிக்ஷுக்கள் பாஹியானையும் அவன் நண்பன் ‘தௌ செங்’ இருவரையும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
“நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்?”
“சீனாவிலிருந்து”
பிக்ஷுக்கள் பெருமூச்சு விட்டனர்.
“நல்லது.
புத்த சமயத்தை நாடி வெகு தொலைவிலிருந்து இது வரை ஒருவரும் வந்ததில்லை. உங்கள் வரவு எங்களுக்கு ஆறுதலையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது”
பின்னர் பாடலிபுத்திரம் சென்றபோது ‘அசோகரது அரண்மனை’ பாழடைந்து கிடந்தது..

(பாழடைந்த அரண்மனையைப் பார்வையிடும் பாஹியான்
By Unknown – Hutchinson’s story of the nations, Public Domain, https://commons.wikimedia.org/w/index.php?curid=20046493)
இருப்பினும் மகத நாடெங்கும் புத்த மதம் கொண்டாடப்பட்டது.
எங்கெங்கு காணினும்… ஸ்தூபிகளும், புத்த விஹாரங்களும் இருந்தது.
அது பாஹியானுக்கு மன நிறைவை அளித்தது.
பாஹியான் தனது குறிப்பேடுகளில் இவ்வாறு எழுதினான்:
“குப்தர்கள், மௌரியர்களது ஆட்சியைப் பின்பற்றினர்.
ஆனாலும் அவர்கள் நிகழ்த்திய கொடுமைகளை நிகழ்த்தவில்லை.
நாட்டில் அமைதியும் ஒழுக்கமும் நிலவியது.
குப்தர்கள் ஆட்சி செய்த நாட்டில் 6 வருடங்கள் சுற்றியுள்ளேன்.
ஒரு முறை கூட கள்வரால் தாக்கப்படவில்லை.
வருத்தப்படும்படியான எந்த நிகழ்வும் நடைபெறவில்லை”.
இவ்வளவு எழுதிய அவன் ‘சந்திரகுப்த‘ மன்னனைப்பற்றி ஒரு வரி கூட எழுதவில்லை!
என்ன விந்தையோ?
ஒருக்கால் அவன் எழுதியது நமக்குத்தான் கிடைக்கவில்லையோ?
பத்துபேர்கொண்ட குழுவுடன் தொடங்கிய பயணத்தில்…
இப்பொழுது பாஹியானுடன் ‘தௌ செங்’ மட்டுமே கூடஇருந்தான்.
“தௌ செங்!
நீ ஒருவனாவது என்னுடன் பயணத்தில் இருப்பது நினைத்தால் மகிழ்ச்சி!
சீனா சென்று நம் இருவரும் புத்த மதம் பற்றி அனைவரிடமும் எடுத்துச் சொல்லலாம்”
‘தௌ செங்’ மௌனமானான்.
முகம் வாடி இருந்தது.
கண்கள் கலங்கியது.
“பாஹியான்! நான் சொல்வது உனக்கு அதிர்ச்சியாக இருக்கும்”
“…..?”
“இந்நாட்டு புத்த பிக்ஷுக்களின் இறை உணர்வு என்னை வெகுவும் ஆகர்ஷித்துவிட்டது.
நான் இங்கேயே இருந்து ‘புத்தராகி’… வாழ முடிவு செய்து விட்டேன்”
பாஹியான் தனியனானான்!
அவன் பயணம் நிற்கவில்லை!
பாஹியான் நாளந்தா அடைந்தான்.
அங்கிருந்து அருகில் இருந்த ராஜகிரிஹ நகர் சென்றடைந்தான்.
அது மகதத்தின் முதல் தலைநகரம்.
அங்கிருந்த ‘கழுகு மலை’ சென்ற போது பாஹியானின் உணர்ச்சிகள் கரைபுரண்டன.
கண்ணில் நீர் வழிந்தோடியது.
‘கழுகு மலை’
‘’புத்தர் பெருமான் ..
முன்பு இங்கு வாழ்ந்து…
இங்குதானே ‘சுரகாம சூத்திரம்’ போதித்தார்!
நான்… தாமதமாகப் பிறந்ததால் புத்தர் பெருமானை சந்திக்க இயலாது போனேனே!” என்று தன் அவலங்களைக் குறித்தான்.
பின்னர் கயா, பாடலிபுத்திரம், வாரணாசி சென்று புத்த கோவில்களைத் தரிசித்தான்.
ஒரு வருடம் சென்றது.
கங்கை நதியில் பயணம் செய்து வங்காள குடாவிலிருந்த ‘தம்லக்’ என்ற துறைமுக நகர் அடைந்தான்.
அங்கு இரண்டு வருடங்கள் தங்கினான்.
முதலில் சமஸ்கிருத மொழியை நன்கு கற்றுக்கொண்டான்.
புத்த சூத்திரங்கள் அனைத்தையும் சீன மொழியில் மொழிபெயர்த்தான்.
தான் கண்ட அனைத்தையும் படங்களாக வரைந்தான்.
பாஹியான் தன் கடமைகளை நன்கு உணர்ந்திருந்தான்:
‘இந்த பொக்கிஷங்களை சீனாவுக்குப் பத்திரமாகக் கொண்டு சென்று அங்கு அதை போதிக்க வேண்டும்!’
கனத்த மனத்துடன் பாஹியான் புத்தர் பிறந்த நாட்டிலிருந்து விடை பெற்றான்.
வணிகக் கப்பல் ஒன்றில் ஏறிப் புறப்பட்டான்.
கப்பல் பதினான்கு நாட்களுக்குப் பின் ‘இலங்கை’ சேர்ந்தது.
இலங்கையில்..
புத்த இலக்கியம் களஞ்சியமாகக் கிடந்தது.
அத்தனையும் சமஸ்கிருதத்தில்!
புதையல் கண்ட கள்வன் ஆனான்!
மேகம் கண்ட மயில் ஆனான்!
இரண்டு வருடம் அங்கு தங்கி அனைத்தையும் மொழி பெயர்த்து எழுதினான்.
பிறகு ஒரு வணிகக்கப்பலில், அங்கிருந்து புறப்பட்டான்.
கப்பலில் 200 பேர் பயணிகள்.
இரண்டு நாள் பயணித்தபின் ஒரு நாள் மாலை..
கரு மேகங்கள் வானத்தை நிறைத்தது.
குளிர்ந்து வீசிய காற்று மெல்லமெல்ல வலுவடைந்து புயலானது.
கப்பல் ஆடியாடி அலைக்கழிந்தது.
ஊழிக்காற்று தொடர்ந்தது.
பதிமூன்று நாட்கள் புயலின் சீற்றம்!
அது அனைத்தையும் அந்த இலங்கைக் கப்பல் தாக்குப்பிடித்தது.
அந்நாள் வரை..
அன்று காலை கப்பலின் அடித்தளத்திலிருந்து நீர் கசியத் துவங்கியது.
கப்பலின் தலைவன் :
“எல்லாப் பயணிகளும் தங்களிடமுள்ள கனமான உடமைகளை உடனடியாகக் கடலில் வீசி எறியவேண்டும்.
அப்பொழுதுதான் இந்த நீர்க் கசிவை சமாளிக்க முடியும்”
பயணிகள் வேறு வழி இல்லாமல் தங்கள் உடமைகளைத் துறந்தனர்.
பாஹியான் திகைத்தான்:
‘நாம் ஒரு ஆயுட்காலம் உழைத்து சேமித்த கிரந்தங்கள் அனைத்தும் நீரில் போகுமோ’ – வேதனையால் துவண்டான்.
‘புத்தர் பெருமானே!
உங்கள் திருவடியே சரணம்!
என்னைக் காக்காவிட்டாலும் எனது இந்த புத்தக் கிரந்தங்களைக் காக்கவேண்டும்’
அதிசயம் உடனே நடந்தது.
பறவைகள் தென்பட்டன.
சிறிய தீவு கண்பட்டது.
கப்பல் கரை சேர்ந்தது.
அந்த ஓட்டை சரி செய்யப்பட்டு கப்பல் மீண்டும் புறப்பட்டது.
தொண்ணூறு நாட்கள் பயணத்திற்குப் பின்..
ஜாவா தீவுக்குப் போய்ச் சேர்ந்தது.
பாஹியான் அங்கு ஐந்து மாதம் தங்கினான்.
பிறகு அங்கிருந்து மறுபடியும் இன்னொரு பெரிய வணிகக் கப்பலில் சீனா செல்லப் புறப்பட்டான்.
50 நாட்களுக்குத் தேவையான உணவுப்பண்டங்கள் கப்பலில் இருந்தது.
பாஹியான் மனது பெரும் நிம்மதியில் இருந்தது.
முடிவில்..
‘நமது கடமைகள் நிறைவேறப்போகிறது…
தாய் நாடே!
இதோ வருகிறேன்!”
அவன் மனம் இன்பத்தில் மிதந்தது!
(இதை சினிமா எடுத்தால் இங்கு ஒரு பாட்டு போட்டிருப்பார்கள்!)
சோதனைகள் முடிந்தது என்று நினைத்த போது…
அதே சூறாவளிக் காற்று…
மீண்டும்..
கப்பல் பயணிகள் – பாஹியானின் முன் கப்பல் பயணத்தில் புயலால் அடைந்த துன்பங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தனர்.
ஒருவன்:
“இந்த சீனன் நம்முடன் வருவதால்தான் இந்தப் புயல் வருகிறது.
இந்த ஒருவனால் நாம் அனைவரும் ஏன் புயலில் மடியவேண்டும்?”
பாஹியான் இதை எதிர்பார்க்கவில்லை.
“நான் ஒரு பாவமும் அறியாதவன்.. புத்தர் பெருமானே இது என்ன சோதனை?”
பாஹியான் அருகிலிருந்த இன்னொருவன் பெரும் வீரன்.
பாஹியான் பயணங்களைப்பற்றி அறிந்திருந்தான்.
அவன் சொன்னான்:
“இந்தச் சீன மனிதர் பெரும் புத்த பக்தர்.
மேலும் புத்த இலக்கியங்களை சீனாவில் போதிப்பதற்காகச் செல்கிறார்.
இவரால் புயல் வந்தது என்பது பெரும் மூடத்தனம்.
யாரேனும் இவரைக் குறை கூறினால்..
அவர்கள் இந்த புயலிருந்து தப்பிப்பார்கள்.
அது உண்மை தான்.
ஆனால்…
அவர்கள் எனது வாளிலிருந்து தப்பிக்க இயலாது!
இது சத்தியம்”
வாளை உயர்த்தினான்.
வீரனின் குரல்… புயல் சத்தத்தையும் மீறிப் பயங்கரமாக ஒலித்தது.
அனைவரும் அடங்கினர்.
‘புத்தரின் கருணை எப்படி யார் மூலமாகவோ வருகிறது!’ – பாஹியான் வியந்தான்.
70 நாட்கள் கப்பல் கடலில் அலையுண்டுத் தள்ளாடியது.
உணவுப் பொருட்கள் தீர்ந்தது.
பின்னர் திசை மாறிய கப்பல் சரியான திசையில் செலுத்தப்பட்டு..
12 நாட்களில்…
சீனா அடைந்தது.
புத்தர் கருணையை எண்ணி பாஹியான் நெகிழ்ந்தான்.
(சீனா திரும்பிய பாஹியானுக்கு வரவேற்பு)
சீனாவில் பாஹியானுக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது!
(பாஹியான் சினிமாவுக்கு இங்கே ஒரு பாட்டுப் போட்டு முடிக்கலாம்!)
ஒரு மனிதன்..
மத்திய சீனாவிலிருந்து கால்நடையாகப் புறப்பட்டு…
கோபி பாலைவனம், ஹிந்து குஷ் வழியாக குப்தராஜ்யத்தில் பயணித்து..
புத்த கிரந்தங்களை கிரகித்து, மொழிபெயர்த்து..
வங்காள விரிகுடாக் கடல் வழியாக, இலங்கை, ஜாவா சென்று..
உயிர் எப்பொழுது போகுமோ என்ற நிலையில் கடல் பயணம் செய்து..
சீனா திரும்பினான்.
அவன் போதனைகள்..
சீனாவில் புத்த சமயம் வளம்பெறப் பெரும் காரணம்.
அவன் ஒரு சரித்திர ‘நாயகன்’!
சரித்திரம் அவன் புகழ் பாடட்டும்…
நமது சரித்திர ஆய்வு தொடரட்டும்…



பாஹியான் பற்றி அறிந்து கொள்ள முடிந்தது. நன்றி.
LikeLike