முன்கதை…..

வருடம் கிபி 1011. சைனாவின் தலைநகரமான பேஜிங்கில் ஷேங்க்ஸான் சக்ரவர்த்தியைக் காண வந்திருந்த, கடல் கடந்து வணிகம் செய்யும் தலைவர், தென் இந்திய சோழ சக்ரவர்த்தி ராஜராஜ சோழனின் பரிசுப் பொருட்களையும் ஓலைகளையும் சமர்ப்பிக்கிறார். முதல் ஓலை சைனாவின் கலாச்சார தூதுவன் வாங்மெங் 1001ம் வருடம் ராஜராஜசோழனை சந்தித்தபோது எழுதியது. அதை சபை அதிகாரி ஒருவர் படிக்க எல்லோரும் ஆவலுடன் கேட்கின்றனர். அதில் ராஜராஜ சோழன் தஞ்சாவூரில் கட்டப்போகும் பெருவுடையார் ஆலயத்திற்குப் பணிசெய்யும் அத்துணைபேரையும், சைன கலா நிகழ்ச்சிகள் மூலம், மகிழ்வித்து உற்சாகப்படுத்த வாங்மெங் ஒப்புக் கொள்ளுகிறார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஆலயம் முதல் தளம் நிறைவு பெற்று இரண்டாம் தள வேலைகள் தொடங்கியிருக்கின்றன. வாங்மெங் நார்த்தாமலை நிகழ்ச்சிகளை முடித்துத் திரும்பும்போது தற்செயலாக ஒரு சதிச்செயலைப்பற்றித் தெரிந்துகொள்ளுகிறார். தஞ்சாவூருக்கு வடக்கேயுள்ள 10000 வேலி நெல் கதிர்களை தீக்கிரையாக்கும் நோக்கத்தையும், ராஜராஜனைக் கொலை செய்யும் திட்டத்தையும் பகைவர்கள் பேசுவதை ஒளிந்திருந்து கேட்டறிகிறார். தஞ்சை சென்று கிருஷ்ணன் ராமனிடம் சதியாளர்களின் திட்டத்தைச் சொல்லுகிறார். கிருஷ்ணன் பயிர்களைக் காக்கவும், வாங்மெங் சக்ரவர்த்தியை எச்சரிக்கவும் முடிவாகிறது. வாங்மெங் ஓலை முடிவடைந்து அதிகாரி இரண்டாம் ஓலையைப் படிக்கிறார்.
இனி……
3.கிருஷ்ணன் ராமனின் ஓலை

“இது சக்ரவர்த்தியின் திருமந்திர ஓலை நாயகம் கிருஷ்ணன் ராமன் எழுதும் ஓலை. இனி மதிப்புக்குரிய வாங்மெங் இவ்வோலையைத் தொடர இயலாது. அதற்கான காரணத்தைப் பிறகு கூறுகிறேன்.
வெள்ளிக்கிழமை பகல் நேரம். அடித்தளம் அமைக்கப்பட்டு இரண்டாம் தள வேலைகள் மும்முரமாய் நடைபெற்றுக் கொண்டிருந்த ஆலய களத்திற்கு நான் அவசரமாய் வந்தேன். சக்ரவர்த்தி நேராக அங்கு வருவதாக இருக்கிறார். அரண்மனையிலிருந்து இங்கு வர அமைத்திருந்த சுரங்க வாயில் வழியாகத்தான் எப்போதும் இங்கு வருவது வழக்கம். என்னேரமும் அவர் வரக் கூடும்! வாங்மெங் எங்கே? ஒப்படைத்திருந்த வேலையைச் செவ்வனே செய்து முடித்திருப்பாரா? சுற்றுமுற்றும் பார்த்தேன். நடுவில் கட்டப்படும் விமானத்தின் இரண்டு தளங்களின் அடியைச் சுற்றிலும் சாரங்கள் அமைக்கப்பட்டு அங்கு அடைய சாய்தளங்களும் கட்டப்பட்டிருந்தன. சாய்தளப் பாதைகளும், சாரங்களும் யானைகள் செல்லத்தக்க ஏற்றவாறு கட்டப்பட்டிருந்தன. வாங்மெங் இரண்டாவது சார சாய்தள பாதையின் உச்சியில் நின்றுகொண்டு பரபரப்புடன் சுற்றுமுற்றும் பார்த்தவண்ணம் இருந்தார். இந்த நிலையில் எச்சரிக்கை இன்னும் அரசர் காதுகளுக்கு எட்டவில்லை என்பது திட்டவட்டமாகத் தெரிந்தது.
அச்சமயம் சக்ரவர்த்தி சுரங்க வாயில் சிறிய மண்டபத்திலிருந்து வெளிவந்தார். இரண்டாவது சார சாய்தள பாதையில் ஏறத்தொடங்கினார். நான் வாங்மெங்கை நோக்கினேன். வாங்மெங்கின் கண்கள் இரண்டாவது தளத்தில் பொருத்த, கயிறுகளால் தூக்கிவிட்டு தொங்கவிடப்பட்டிருந்த சிற்பத்தில் வந்து நின்றன. அரசர் மேலே ஏறிவந்தவண்ணம் இருந்தார். வாங்மெங் பறந்தோடிவந்து அரசரைத் தள்ளிவிடுவதற்கும் கோடாலி ஏந்திய ஒரு உருவம் ஒரே வெட்டில் கயிறைப் பிளப்பதற்கும் சரியாக இருந்தது. அரசர் தள்ளிப்போய் கீழே விழுந்தார். காளியின் சிற்பம் வாங்மெங்கின் தலைமேல் விழுந்தது. வீரர்கள் கொலையாளியைப் பிடித்தனர். நான் வாங்மெங்கை நோக்கி விரைந்தேன்.
வீரர்கள் சக்ரவர்த்திக்கு ஒன்றும் ஆகவில்லையென்பதை உறுதிப்படுத்திக்கொண்டார்கள். யானைகள் கொண்டுவரப்பட்டு வாங்மெங்மேல் சாய்ந்திருந்த காளி சிற்பம் அகற்றப்பட்டது. மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். எனினும் பயனில்லை. இரத்த வெள்ளத்தில் மிதந்திருந்த வாங்மெங்கின் உயிர், சிற்பம் விழுந்தவுடனேயே பிரிந்திருக்க வேண்டும்.
சின்ன சிராய்ப்புகளுடன் தப்பிய சக்ரவர்த்திக்கு என்ன நடந்தது என்று ஒன்றுமே புரியவில்லை. யார் தள்ளினார்கள், எதற்காகத் தள்ளப்பட்டோம் என்றும் தெரியவில்லை. ஓடோடி என் அருகில் வந்தார். ‘கிருஷ்ணா, என்ன நடக்கிறது இங்கே? யார் என்னைத் தள்ளினார்கள்? எதற்காகத் தள்ளப்பட்டேன்? இந்தச் சிலை எப்படி இங்கே வந்தது? யானைகள் எதற்காக வரவழைக்கப்பட்டிருக்கின்றன?’ என்று கேள்விகளை ஒன்றுக்குப்பின்ஒன்றாக அடுக்கிக்கொண்டேபோனார்.
நான் என் கண்களில் கொட்டிய கண்ணீரைத் துடைத்துக்கொண்டே உயிரிழந்த வாங்க்மெங்கின் உடலைக் காட்டி, இது வாங்மெங்கின் உயிரற்ற சடலம்! தன்னுயிரைக்கொடுத்து உங்களுயிரைக் காப்பாற்றிய தெய்வம்!’ என்றேன்..
‘எப்படி இது ஏற்பட்டது?’ என்று கூறிக்கொண்டே இரத்த வெள்ளத்தில் மூழ்கியிருந்த வாங்மெங்கின் உடலைப் பார்த்து, கண்களிலிருந்து பெருக்கெடுத்தோடிய கண்ணீரைத் துடைத்தவாறே கேட்டார்.
நான் நார்த்தாமலையிலிருந்து வாங்க்மெங்கிற்கு நடந்த விஷயங்களை ஒன்று விடாமல் சொல்லிமுடித்து ‘அவரிடம் உங்களை எப்படியாவது இதைப்பற்றி எச்சரிக்கும் வேலையைத்தான் கொடுத்திருந்தேன்! ஆனால் அவர் தன்னுயிரைக்கொடுத்து உங்கள் உயிரைக் காப்பாற்றுவார் என்று கனவிலும் நினைக்கவில்லை’ என்றேன்.
என்னைப் பார்த்து “நெல் கதிர்களின் கதி என்ன, எல்லாம் தீக்கிரையாகிவிட்டதா?”எனக் கவலையுடன் வினவினார். அதற்கு நான் “வாங்மெங் மூன்று வருடங்களுக்கு முன் மன்சூரியாவில் தீயை பரவாமல் தடுக்கக் கையாளப்படும் விதத்தை விளக்கி அதை இங்கேயும் செயல்படுத்தத் தூண்டியிருந்தார். அதன் அவசியத்தை உணர்ந்து உடனேயே செயல்படுத்த உத்தரவிட்டேன். அதன்படி நிலங்கள் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு இரு பகுதிகளுக்கு நடுவிலும் ஒன்றரை முழங்கள் அகல இடைவெளியில் வெறுமையாக வெட்டி அதைப் பராமரிக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. எல்லா நிலங்களிலும் இம்முறை இன்றுவரை கையாளப்பட்டு வருகிறது. குறுகிய காலத்தில் என்னால் தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஒவ்வொரு வேலியிலும் தனியாய் வைக்கப்பட்ட தீ முதற் பகுதி இடைவெளிவரை பரவி அதற்கு மேலே பரவ இயலாமல் தானாகவே அணைந்துவிட்டதாக செய்தி வந்துள்ளது. இந்த வாங்மெங்கின் சாதனை நமக்குக் கிடைத்த மிகப் பெரிய வரப்பிரசாதம். சேதம் நமக்கு நூறில் ஒரு பங்குதான். அதாவது 100 வேலிகள்தான்! மற்ற 9900 வேலிகளின் பயிர்கள் காப்பாற்றப்பட்டுவிட்டன!”என்று கூறி முடித்தார். “என் உயிரைக் காத்ததுமல்லாமல் சோழ நாட்டையே வாங்மெங் காப்பாற்றியிருக்கிறார். இதை எப்படி ஈடு செய்யப் போகிறேன்?”என்று சக்ரவர்த்தி வாங்மெங்கின் சடலத்தை வணங்கியபடி நோக்கினார்.
‘யார் அந்த சதியாளர்கள்? அவர்களின் நோக்கம் என்ன?’ சக்ரவர்த்தி மறுபடி வினவினார்.
‘என் ஏற்பாட்டின்படி சதியாளர்களில் சிலர் பிடிபட்டார்கள். காலமின்மையால் பலர் தப்பியோடிவிட்டனர். 500க்கும் மேலான சதிகாரர்கள் இதில் ஈடுபட்டிருக்கின்றனர். பிடிபட்டவர்கள் சுமார் 100 பேர்கள்தான். அவர்களை அடித்து உதைத்து விசாரணை செய்ததில் இது பாண்டிய சதிகாரக்கும்பலின் வேலை எனத் தெரியவந்துள்ளது. சதிசெய்யத் தூண்டியவன், மறைந்திருந்து செயல்படும், நமக்கு ஏற்கெனவே தொல்லை கொடுத்துவந்த ரவிதாசன்தான். அவர்களிடமிருந்து மேலும் விஷயங்களைக் கறந்து அந்த கும்பலை வேரோடறுப்பேன். இது உறுதி!’ என பதிலளித்தேன்.
சக்ரவர்த்தி, ‘பாண்டிய சதிகாரர்களின் எண்ணிக்கை தற்சமயம் அதிகரித்துக்கொண்டே வருவது இதன் மூலம் தெளிவாகிறது. கவலை வேண்டாம். அவர்களை முற்றிலும் முறியடிக்கும் பொறுப்பை என் மைந்தன் பட்டத்து இளவரசன் ராஜேந்திரனிடம் ஒப்படைக்கப் போகிறேன்.’ என்று பதிலளித்தார்.
என்னிடம், ஆலய வேலைகளை உடனே நிறுத்த ஆவன செய்யுமாறு பிணைத்தார். சீன வழக்கத்தையொட்டி ஏழு நாட்கள் துக்கம் அனுசரிக்க உத்தரவிட்டார். அன்றிரவே வாங்மெங்கின் நல்லடக்கம் நடைபெற்றது. சக்ரவர்த்தி உள்பட வாங்மெங்கின் குழு சீன கலாசாரத்தையொட்டி வெண்ணிற ஆடைகள் அணிந்து சடங்குகள் நடத்தப்பட்டு முடிவடைந்தன.
( தொடரும்)
