Related image                                                        கேர்யூனிட்டின்   சாத்தப்பட்டிருந்த கதவையே , கவலையுடன் பார்த்துக்கொண்டிருந்தான் ரமணன். பக்கத்திலிருந்த அவன் தங்கை சுமி, தொணதொணத்துக்  கொண்டிருந்தது  அவன் கவலையை இன்னும் அதிகரித்தது. 

     “ஏன் அண்ணா? அம்மாவுக்கு ஒண்ணும் ஆயிடாதில்லே?”  

      “ஆயிடக்கூடாதுன்னு ஆண்டவனை வேண்டிக்கோ சுமி! வேற என்ன செய்யறது இப்போ?”

     “எனக்கு ஒண்ணும் புரியமாட்டேங்குறது அண்ணா..!  எஸ்.டி.டி. போட்டுச் சொன்னவுடனே  ப்ளேன்ல பறந்து  வந்திருக்கே.”

     “எமர்ஜென்சின்னு வந்தப்புறம் ரயிலுக்கு நிக்கமுடியுமா சுமி?  ஷார்ட் பீர்யட்ல, பம்பாய் டு மெட்ராஸ் டிக்கெட் கெடைக்கறது, குதிரைக் கொம்பு”.

     “இல்லேண்ணா ..  இந்த ஆறு மாசத்துல அக்காவோட கல்யாணத்துக்குன்னே நீ கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபா பக்கம் டிராப்ட் எடுத்து அனுப்பிச்சிருக்கே.”    

     “இப்போ எதுக்கு அதெல்லாம்?”

     “வர்ற சம்பளம் வாய்க்கும் கைக்குமே போறாம இருக்குப்பா. பம்பாய்ல எப்படித்தான்  சமாளிக்கப் போறேனோன்னு தெரியலைன்னு ,  நீ அங்கே வேலைல சேர்ந்துட்டு, மொதல்மொறையா இங்க வந்தப்போ சொன்னே.”

     “ ஆமா .  . அது, அப்போ, பல வருஷத்துக்கு முன்னாடி.”

     “ இப்போ, உன்கிட்டே எப்படி திடீர்னு இவ்வளவு பணம்?”

     “ பம்பாய்க்குப் போனா , பிச்சைக்காரன்கூட , பணக்காரன் ஆயிடலாம்.  உழைக்கணும். வழிகளைத் தெரிஞ்சிக்கணும்.  அவ்வளவுதான். பம்பாய்ல , பணம்பண்ண எவ்வளவோ வழிங்க இருக்கு.”.

     “இல்லேண்ணா..”

     “இதோ பாரு..தொணதொணக்காதே . நீ சின்னப் பொண்ணு. ஐ.சி.யு. நர்ஸ் வரா பாரு. அப்பா எப்படி இருக்கார்னு கேளு..”

மற்றவர்களுக்கு இல்லாத கவலை இவளுக்கு.  ரமணனுக்கு அடிவயிறு இலேசாகக் கலங்கியது.

“மிஸ்டர் மேனன் …உங்க காஷியர் வர்றதுக்கு முன்னாடி, ஒரு சின்ன ஹெல்ப். கொலையான இந்த ரெண்டு கஸ்டமருங்களுடைய தற்போதைய பாங்க் பாலன்ஸ் நிலவரம், கடைசியா அவங்க கணக்குலேர்ந்து எப்பப்போ, எப்படி எப்படி பணம் பட்டுவாடா செய்யப்பட்டிருக்கு,  இந்த விவரங்கள் உடனடியா எங்களுக்கு வேணும்.”

“இது சட்டப்படி குற்றம் சார்…கோர்ட் கேட்டா மாத்திரமே ..”

“மிஸ்டர் மேனன். .கோர்ட்டும் கேக்கப்போறது.. ரெண்டு மர்டர்.  இது போலீஸ் என்கொயரி. . ஒத்துழைக்கலேன்னா..”

“ஓகே..”  கொஞ்சம் எரிச்சலுடன் தன்  மேஜை மேல் தயாராக இருக்கும் கம்ப்யூட்டரைத்  தட்டினார் மேனன்.

கணிப்பொறிதான் இதற்கெல்லாம் தயாராக இருக்கிறதே. அதனிடம் யாராவது ஏதாவது கேட்க வேண்டும். அவ்வளவுதான். சரியாகக் கேட்டால், பதிலும் சரியாக இருக்கும்.  இப்பொழுது, அதனிடம் கேட்டது, மேனன்.

‘கேரள அம்மா கேஸ்ல , இப்போ பாலன்ஸ் ரூபா அஞ்சாயிரம்தான் இருக்கு. .அந்த பார்சி அம்மா கணக்குல இருபதாயிரம் இருக்கு..”

“எடுக்கப்பட்டது  எப்போ ?”

“இதோ சொல்றேன். .” மேனன் இறந்து போன அந்தப் பெண்மணிகளின் கணக்கு வழக்குகளில் நுழைந்ததும் திடுக்கிட்டார்.

Image result for mumbai bank discussing self cheques

‘ சார்,  மொதல்நாள் ரெண்டு லட்சம். அடுத்தநாளே மூணு லட்சம்.அதாவது ரெண்டே நாட்கள்ல அஞ்சு லட்சம், கேரள அம்மா ஸெல்ப் செக் மூலமா எடுத்திருக்காங்க. போன மாசம் அந்தப் பார்சி அம்மா  அடுத்தடுத்து ரெண்டே நாள்ல மூணு லட்சம், நாலு லட்சம் , ஏழு லட்சம் எடுத்திருக்காங்க.. அது ரெண்டும்கூட ஸெல்ஃப் செக் மூலமாத்தான்.”

“ அதாவது, அவங்களே அவங்க தேவைகளுக்குப் பணம் எடுக்குறாப்போல. அப்படித்தானே ?”

“ஆமாம்”

“சரி. எடுக்கப்பட்ட தேதிகளைச் சொல்லுங்க.”

மேனன் கம்ப்யூட்டரைப் பார்த்துச் சொல்ல , அந்த நான்கு தேதிகளும் குறித்துக்கொள்ளப்படுகின்றன.

“இந்த  ரெண்டுபேரும் பணம் எடுத்த அந்த நான்கு காசோலைகளையும் நாங்க உடனடியாப் பார்க்கணுமே ..”

“இல்லே..” … மேனன் தயங்கினார்.   டி.எஸ்.பி. மல்ஹோத்ரா பின்னால் இருக்கும் காவல்துறை ஆணையரைப்பார்த்தார். அவர் உடனடியாகத் தன் கையில் உள்ள கைப்பையிலிருந்து, அரசாங்க முத்திரையுடன்கூடிய ஒரு கடிதத்தை, கூடவே போலீஸ் துறையின்  ஓர் உத்தரவை அவரிடம் கொடுத்தார். அவை மேனனிடம் வந்தன.  

“சீஷர் ஆர்டர். .. போலீஸ் என்கொயரிக்காகத் தேவைப்படும் எந்த ஆவணங்களையும், சட்டப்படி போலீஸ் பெற்றுக்கொள்ளும் உத்தரவு.”

விவரம் தெரிந்தவராக இருந்தாலும், வியர்த்தது மேனனுக்கு. உடனடியாக மணி அடித்து, தனக்கு அடுத்த நிலை மேலாளரை வரவழைத்தார் மேனன்.. நிலைமை விளக்கப்பட, அடுத்த சில நிமிடங்களில் அந்த நான்கு தேதி காசோலைகள், பெரிய பெரிய தின வவுச்சர்கள்  கட்டுகளுடன்  வந்தன. அந்தக் குறிப்பிட்ட , நான்கு, வெவ்வேறு தேதி காசோலைகள், தேடிக் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், அவற்றை ஆராய்ந்தனர் , மணியும், மல்ஹோத்ராவும்.

‘ Pay self..  ‘…
 
அதையே பார்க்கின்றனர்.                                                   
(வளரும்)