Image result for குறத்தி டான்ஸ்                 
 வள்ளுவருடைய ‘ சொல்வன்மை’ அதிகாரத்தைப் படிக்காமலேயே அதற்கு இலக்கணமாகத் திகழ்பவர்கள் உண்டு.
இவர்களில் பலர் அடிப்படைக் கல்வியறிவு  இல்லாதவர்கள் என்ற உண்மை, வியப்பினை அளிக்கலாம் .
உள்ளக் கருத்தைப் பிறர் உணரும் வண்ணம் உரைப்பதும் ,வாய்த்த வாய்த்திறமையால் மற்றவரை வசப்படுத்திக்
கொள்வதும் நம் நாட்டுப் பாமர மக்களுக்கு வழிவழியாக வந்த வரப்பிரசாதமாகும்
 
ஆரூடம் சொல்பவர்கள், கிளி ஜோசியம் பார்ப்பவர்கள், குறி கூறுபவர்கள் போன்றவர்களின் நாவன்மையை நாம் நாள்தோறும் காண்பதில்லையா ?
நம்மை அறியாமலேயே நம்மைப்பற்றிய தகவல்களை நம்மிடமிருந்தே கறக்கும் திறமை கல்வியினால் வருவதல்ல.
  
“ஐயாவுக்கு இப்போது கொஞ்சநாளாக நேரம் சரியில்லை” என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லி ஆரம்பித்து நம்
முகத்தைப் பார்ப்பார்கள். (நேரம் சரியாக இருந்தால் நாம் ஏன் அவர்களிடம் போக வேண்டும் ?) நாம் வேறு வழியில்லாமல்
தலையை ஆட்ட , அவர்கள் தங்கள் ஆட்டத்தைத் தொடர்வார்கள். இது, சாலை ஓரங்களிலும் , மரங்களின் நிழல்களிலும் நித்தம் நடைபெறும் நிகழ்ச்சியாகும்
பாரதியும், பாலத்து ஜோசியனைப்பற்றிப் பாடியதைப் படித்திருப்பீர்கள்.
 
இந்த நாவன்மையையும், சொல்லாடும் வல்லமையையும் வைத்துத் தமிழில் ஒரு சிற்றிலக்கியமே செழித்துள்ளது.
Related image
‘குறவஞ்சி’ என்றும், ‘குறத்திப் பாட்டு’ என்றும், ‘குறம்’ என்றும் இதனைக் கூறுவதுண்டு.
 
பெரும் புலவரான குமரகுருபரர் இயற்றியுள்ள “மதுரை மீனாட்சியம்மை குறம்”  மிகமிக இனிமை பயப்பதாகும். அங்கையற்கண்ணி அம்மை,மதுரையின் சொக்கேசரைச் சேர்வாள் என்பதைக் குறத்தி, குறி கூறுவதே இச்சிறிய நூலின் மையக்கருத்து.
‘அட இவ்வளவுதானா ?” என்று நினைக்க வேண்டாம் . ஒருமுறை படித்தால் மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் மிக அருமையான நூல்..சொல்லழகு, பொருளழகு,சந்த இனிமை. கற்பனை வளம் ஆகியவை விரவிக்கிடக்கும் வெல்லத் தமிழ் நூல் இது.
  
Image result for குறத்தி டான்ஸ்குறத்தி, தான் பொதிய மலையைச் சேர்ந்தவள் என்ற பூர்விகப் பெருமையுடன் ஆரம்பிப்பாள்.
அம்மலை, வானத்து நிலவைத் தன் தலையில் சூடிக்கொள்ளும் அளவுக்கு உயரமானது. அங்கு தென்றல் தவழ்ந்து விளையாடும்; மழை மேகங்கள் அம்மலையைச் சூழ்ந்து தழுவிக்கொண்டிருக்கும் .தமிழ் முனிவன் அகத்தியன் வாழும் மலை அது. மலை அருவி மீனாட்சி அம்மையின் திருவருள் போன்று பாய்ந்து,பெருகும் .அம்மலையின் மற்றொரு சிறப்பு என்ன தெரியுமா ?
நாவன்மை மிக்க நம் குறத்தியின் பூர்விகம் என்பதே அது !
இதைக் குறத்தி கூறும் அழகைப் பாருங்கள்:
 
“திங்கள்முடி சூடுமலை தென்றல்விளை யாடுமலை
தங்குபுயல் சூடுமலை தமிழ்முனிவன் வாழுமலை
அங்கயற்கண் அம்மைதிரு அருள்சுரந்து பொழிவதெனப்
பொங்கருவி தூங்குமலை பொதியமலை என்மலையே !”
 
இதைக் குறத்தி இனிய இசையுடன் பாடுவதையும் ,அதற்கேற்ப ஆடுவதையும் கற்பனைக் கண்கொண்டு பாருங்கள்.
பார்த்துப் பரவசம் அடையுங்கள் !