Related image

நானும் என் தோழியும் எப்பொழுதும்போல எங்கள் மையத்திற்குச் சீக்கிரமாகவே வந்துவிட்டோம்.  நுழைந்ததுமே, வரவேற்பாளர், “நான் வருவதற்கு முன்னாலேயே இவர் வந்து விட்டதாக ஸெக்யூரிட்டி ஆபீஸர் சொன்னார்.” அமைதியற்ற நிலையில் இருப்பவரைக் கைகாட்டி, “மேடம், அப்போதிலிருந்து இப்படியே” என்றார்.

எங்கள் மையம், போதைப் பழக்கத்திலிருந்து விடுவிப்பதற்கென மிகச் சிறிய அளவில் தொடங்கப்பட்டது. எங்கள் வழக்கப்படி நாங்கள்- ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்கர், முதலில் வருபவர்களிடம் உரையாடி, அவர்களின் நிலவரத்தைக் கண்டறிவோம். அவரை அழைத்துச் சென்றேன். க்ளையன்ட் தங்களின் அந்தரங்கங்களைப் பகிர்வதால் எங்களுக்கென்று தனி அறை இருந்தது.

அவர் கலக்கம் நிறைந்த முகத்துடன், தோளில் தொங்கிய பையை அருவருப்பாகப் பிடித்தவாறு, நாற்காலியின் விளிம்பில் உட்கார்ந்தார். பையில் சாராய பாட்டில் இருப்பது தெரிந்தது.

நான் வாயைத் திறக்கும் முன்பே அவர் (நிர்மல்) ஆரம்பித்தார். எங்களுடைய மையத்தைப்பற்றி நன்றாகத் தெரியும் என்றார். கடந்த இரண்டு வாரமாக தனக்கு ஒரு அறியாத பயம், வேதன,  தாடி, கசங்கிய உடை.  பலர் “டிப்ரஷன்” என்றார்களாம்.  தான் ஆசிரியர் என்றும், வகுப்பு மாணவர் ஒருவரைப்பற்றிய கவலை இருந்துகொண்டே இருப்பதாகவும் தெரிவித்தார்.  தன் செயலற்ற நிலையைத் தாளாததால் பள்ளியிலிருந்து விடுப்பில் இருப்பதாகச் சொன்னார். மதுப் பழக்கம் என்றும் இருந்ததில்லை என்றாலும், யாரோ சொல்ல, நேற்று இரவு ஒரு மது பாட்டிலை வாங்கி விட்டார். மது அருந்தி விடுவோமோ என்று அஞ்சி, வாங்கிய பயத்தில், தூங்காமல், காலை விடிந்ததும் எங்களிடம் வந்துவிட்டார். மது அருந்தவில்லை.

நிர்மலின் வகுப்பு மாணவன் நந்தா.  நன்றாகப் படித்து, வீட்டிற்குத் தேவையானதைச் செய்து, மற்றவருக்கும் உதவுவதைப் பார்த்து, அவன் மீது கர்வப்படுவார். அவன் அம்மாவின் திடீர் மரணத்திற்குப்பிறகு சிரித்த முகம் வாடி, மதிப்பெண் சரிய, அவனைப் பார்த்தாலே மிகவும் வருத்தப்பட்டார். அவனிடம் பேசத் தயங்கினார். நிர்மலுக்கு அவன் மெதுவாகக் கரைவதுபோல் தோன்றியது. சமாதானம் சொல்ல முயன்றார், ஆனால் ஒவ்வொரு முறையும் பேச்சு சிக்கித் தடுமாறினார்.

அவன் படிப்பு சரிவதைத் தடுக்க முடியாததைத் தன்னுடைய இயலாமையே என்றே முடிவு செய்தார்.  ஆசிரியத் தோழர்கள், “பாவம் தான். சின்ன வயசு. போகப்போகச் சரியாகி விடும்” என்றது நிர்மலைத் தேற்றவில்லை. தன் சார்பில் எதுவும் செய்ய முடியவில்லை என்று  எண்ணியதால் மனம் பாரமாக ஆவதை உணர்ந்தார். உள்ளுக்குள் பதறினார்.

யாரோ, “கொஞ்சம் குடி” என்றதும் பயந்து போனார். குடிக்க அவருடைய கோட்பாடு விடவில்லை. நேற்று மாலை நந்தாவைக் கடைவீதியில் பார்த்தார்.  இந்த இளம் வயதில் இத்தனை சுமையா என்று மனதை மிகவும் வருடியது. அந்த நிலையை சமாளிக்கத் தெரியாததால், போய் மது பாட்டிலை வாங்கினார். தன் கோட்பாட்டுக்கு எதிர்ப்பு என்றே ஒரு துளியும் அருந்தவில்லை. அதற்குப் பதிலாக வெகு காலையிலேயே எங்கள் மையத்திற்கு வந்துவிட்டார்.

அவர் இருபத்தி ஆறு வயது இளைஞன். ஆசிரிய முதுகலைப் பட்டம் பெற்று வேலையில் சேர்ந்தார்.  அவர் அப்பா, பண்ணையார். அவரும் அம்மாவும் நிர்மல் டாக்டராக அல்ல ஆசிரியராக வேண்டும் என்று விரும்பினார்கள்.  நிர்மலின் தமிழ் வாத்தியாரான குமரன் சார் தன்னை மிகவும் கவர்ந்ததால், தானும் ஆசிரியர் ஆக வேண்டும் என்றும், அவரைப்போல் மாணவர்களிடம் பாசமாக, நேசமாகப் பாடம் கற்பிக்க வேண்டும் என விரும்பினார்.  கடந்த ஒரு வருடமாக இங்கு நகரத்தில் வீடு எடுத்துக்கொண்டு தனியாக வசித்துவந்தார்.

மாலை நேரங்களில், தோட்ட வேலை, சமையல், துணிகளைத் துவைப்பது, வீட்டைச் சுத்தம் செய்வதில் பொழுதுபோனது. வகுப்புகளை அருமையாக எடுக்கவேண்டும் என்பதே அவர் குறிக்கோளாக இருந்தது. மாணவர்களைத் தன் பிள்ளைகளைப்போல் எண்ணி, நலனை விசாரித்து, உதவியதும் உண்டு.

சுறுசுறுப்பாக இருந்த நிர்மலின் தினம், தண்டால் தூக்குவது, ஐந்து கிலோமீட்டர் ஓடுவது எல்லாம் நின்றது.  செடிகளுக்குத் தண்ணீர் விடாமல் வாடிப்போனது.  நந்தாவின் வாடிய முகம் வாட்டியது. பாடம் கற்றுத்தர கஷ்டப் பட்டார். ஸ்கூல் செல்லவில்லை.

அம்மா-அப்பாவுக்குத் தகவல் சொல்லவில்லை. நிர்மல் உடும்புப்பிடியாக பிடித்திருந்தது, மனதைத் தளர விடக்கூடாது, உயிரை மாய்த்துக் கொள்ளக்கூடாது என்று. அதனாலேயும் மது அருந்தவில்லை. தன் கிராமத்தில் குடியை எதிர்த்து விழிப்புணர்வு பிரசாரம் செய்திருக்கிறார்.  “எல்லாம் தெரிந்தும் ஏன் இப்படி இருக்கிறேன்?” என்றார்.

மருத்துவ முறையில் இது மன அழுத்தத்திற்குள் வராது. அவருடைய அனுதாபத்தினால் நேர்ந்தது.  இரக்கம் காட்டுவது மிகச் சிறந்த குணம். ஆனால் நிர்மல் இரக்கத்தில்,  “நம்மால் எதுவும் செய்ய முடியவில்லை” என்று எண்ணிக்கொண்டு தன்னைத்தானே வருத்திக்கொண்டதால் இந்த நிலை நேர்ந்தது. அவர் இதுவரை கடைப்பிடித்த ஓடுவது – உடற்பயிற்சி – தோட்டவேலை மன அழுத்தம் வராத கவசமாக இருந்தன. எங்கள் மொழியில் இதை, “பாதுகாப்புக் காரணி” (protective factor) என்போம்.  இவை தானாக இயங்கும் ‘வரும் முன் காப்பு’.  நிறுத்தியதும் கவசம் நீங்க ஆரம்பித்தது.

மருத்துவரீதியாகப் பார்த்தாலும், டக்கென்று அதுவரை செய்துகொண்டிருந்ததை நிறுத்தியதும், அதிலிருந்து சுரப்பித்த ரசாயனங்கள் குறைந்து, மனதைத் தளர வைத்ததால் சஞ்சலங்கள் உண்டாயிற்று.

நிர்மலும் ஒப்புக்கொண்டார், இப்போது நேர்ந்த சூழ்நிலைகளை பெரிய சவாலாக நினைத்துவிட்டதாக.  இதுவரையில், தன் அம்மா-அப்பா-அண்ணன் நிழலில் இருந்துவிட்டதாலும், பண்ணையின் இளைய மகன் என்பதாலும், அவனுடைய எல்லாப் பிரச்சனையையும் அவர்களே தீர்த்து வைத்தார்கள். வேறு யாரும் எந்தப் பிரச்சனையையும் நிர்மலிடம் கொண்டுவந்ததும் இல்லை. எல்லோரும் அறிந்தது, யாராவது வேதனையில் இருந்தால் நிர்மலுக்கு தாங்கக்கூடிய மனதே இல்லை என்று. இளகிய மனம் உடையவராகத் தன்னை வர்ணித்தார்.

இப்படி அன்பு செலுத்துவதை, அவர் அம்மா எப்பொழுதும், “நிர்மல், உனக்கு என்ன பரந்த குணம், தயாளு மனசு” என்பாள். யார் உதவி கேட்டாலும் செய்யும் கை உடையவர்.

பிறர் வேதனையைத் தாளமுடியாதது நிர்மலின் சமூக-உணர்வுத்-திறன் (Social-Emotional Skills) மிகப் பலவீனமாக இருந்ததின் அறிகுறி. சோகம், வேதனை  உணர்வுகளை மன அழுத்தம் என்று குறிப்பிடுவதனால் குழப்பங்கள் எழுகின்றன. சர்வசாதாரணமாக  “எனக்கு ஒரே டிப்ரஷன்” என்று குறிப்பதும், “அப்படி என்றால் டிப்ரஷன்” என்ற லேபில்லை மற்றவருக்கு அணிவிப்பதாலும் நிகழ்கிறது.

நிர்மலின் நிலையைச் சுதாரிக்க முதல் முதலில் அவருடைய வாழ்க்கைக்கும் அர்த்தம் உள்ளது என்பதைப்பற்றி உரையாடினோம். அவரின் நெடுநாள் கனவான ஒன்றைத் தேர்ந்தெடுத்தோம். அவர் குடியிருப்பில் ‘இரவுப் பள்ளி’. வசதி இல்லாதவர்களுக்குப் பாடம் தெளிவு செய்வது என்று இரண்டு மாணவர்களுடன் ஆரம்பித்தார்.

இத்துடன், ஓடுவது-உடற்பயிற்சி-தோட்ட வேலை அமைப்புகளை மீண்டும் தொடங்கப் பரிந்துரைத்தேன். இவற்றைச் செய்யும்போது, நாம் சுவாசிப்பதில் வித்தியாசம் உண்டு. அதிக அளவில் ஆக்ஸிஜன் உள்ளே சென்று கார்பன் டைஆக்ஸைட் வெளியே வர, உடல்-மனம் நலம் கூடும்.

செய்கையில், சுற்றி இருக்கும் பறவைகள், பட்டாம்பூச்சி, மலர்கள், வானத்தின் கோலங்கள், மற்றவரின் முக பாவம், எல்லாவற்றையும் கவனிக்கப் பரிந்துரைத்தேன். இதில் நம் கவனம் தன்னை, தன் நிலையைவிட்டு இயற்கை மீது உலாவ, மனத்திற்கு அமைதி கிடைக்கும். நிர்மல் செய்து, உணர்ந்தார்.  தினம், விடாமல் செய்ததால் வித்தியாசத்தை உணர (பார்க்க) முடிந்தது.  அதுவே பழக்கமாகி, நாளடைவில் நிர்மலின் உடல்-மன நலனை மேம்படுத்தியது.

அடுத்ததாக, நந்தாவிற்கு எப்படி உதவுவது என்ற சிந்தனையில் ஆழ்ந்தார். பலவற்றைப் பட்டியல் இட்டோம், ஆனால் எதுவும் பிடிபடவில்லை. நிர்மலை நந்தாவை கூர்ந்து கவனிக்கச் சொன்னேன். இது, அவருடைய இரக்க சுபாவத்தை,  ‘ஐயோ பாவம்’ என்ற பலவீனமாக இல்லாமல், நிலைமையைப் புரிந்துகொள்ளும் பலமாக மாற்றும் கருவியானது.  இரண்டே வாரத்தில், பரவசத்துடன் நேரம் குறித்து, வந்து பார்த்தார்.

நிர்மல்-நந்தாவை ஒரு பிராணி இணைத்தது. கிராமத்தில் வளர்ந்ததால், நிர்மலுக்கு ஆடு, மாடு, நாய், எல்லாம் பழக்கம். ஜீவராசிகளுக்கு உயிர் உள்ளதால் பெயரிட்டுக் கூப்பிடுவது நிர்மலின் வீட்டு வழக்கம்.

இவர்கள் பள்ளிக்கூடத்தின் அருகில் ஒரு தெரு நாய்க் குட்டி இருந்தது.  ‘சொரி நாய்’ என்று அழைத்து, கல்லால் அடித்ததால் பலத்த காயம் பட்டிருந்தது. நந்தா கண்கள் கலங்கி இதை நிர்மலிடம் கூறினான்.  நிர்மலுக்கு என்ன செய்வதென்று தெரிந்தாலும் சமூக-உணர்வுத்-திறன் குறைபாட்டால் வெலவெலத்து, என்னிடம் கேட்க வந்துவிட்டார்.

பழம் நழுவிப் பாலில் விழுந்ததுபோல், நிர்மலுக்கு நந்தாவுக்காக ஏதோ செய்யவேண்டும் என்பதற்கு இது அமைந்தது. முதல் கட்டமாக இருவரும் நாய்க்குட்டிக்கு  ‘விசித்திரன்’ என்று பெயர் சூட்டினார்கள். ஆகாரங்கள் கொடுத்து, விசித்திரனுடன் பேசுவது, பந்து போட்டு விளையாடுவது,  இவர்களின் உறவை வலுவாக்கியது. பாதுகாப்பாகக் கால்நடை மருத்துவரிடம் அழைத்துச்சென்று கவனித்துக் கொண்டார்கள்.

நந்தா விசித்திரனுக்குத் தன் பாடங்களை ஒப்பிப்பது, மண்ணில் கணக்கு போட்டுக் காண்பிப்பது, எனப் பல செய்துவந்தான். விசித்திரன் உற்சாகத்துடன் கேட்டுக்கொள்வது வாடிக்கை ஆனது. நந்தா படிப்பு சுதாரித்தது.

நிர்மலுக்கு நந்தாவின் சிரிப்பைப் பார்த்து, படிப்பு நன்றாவதைக் கவனிக்க, மனம் நிறைந்தது என்றார்.  மனக்கிலேசங்கள் இருப்பவருக்குப் பிரத்தியேக முறையில் ஜீவராசிகள், செல்லப் பிராணிகளைப் பராமரிப்பது ஒரு சிகிச்சை முறையே.  தற்செயலாக நிகழ்ந்து இருவரின் நலனையும், உறவையும் மேம்படுத்தியது!

நிர்மலும் தன் உடமைகளைப் பார்த்துக்கொள்ள ஆரம்பித்தார். செடிகள் உயிர் பிழைத்தன. இதை வைத்தே எங்களுடைய பல  கௌன்ஸலிங் செஷனில் நிர்மலின் பாசத்தைப் பகிர்ந்துகொள்ள வழிகளைப்பற்றி உரையாடினோம்.

நந்தாவிற்கும், மற்ற மாணவர்களுக்கும் சமூக-உணர்வுத்-திறன் பயிற்சி அளிப்பது என்று ஆரம்பித்தோம்.  திறன்கள் ஒவ்வொன்றையும் நிர்மல் புரிந்து, செயல்படுத்தும் விதங்களை ஆராய, அவரின் திறன்களும் மேம்பட்டது.

நிர்மல் பள்ளிக்கூடத்தின் நிர்வாகிகளிடம் பேசி, ஆசிரியருக்கும், மற்றவருக்கும் இந்தப் பயிற்சிசெய்யப் பரிந்துரைத்தார். அவர்கள் ஆமோதிக்க ஆலோசகராகச் செய்ய ஆரம்பித்தேன்.

நிர்மலுக்கும் புரிந்தது, மற்றவர்களுக்கு ஃபீல் பண்ணுவது இரக்கமாக இருந்தால், ‘ஐயோ பாவம்’ என்று இருந்துவிடுவது Sympathy. Sympathyயில் நம் உணர்வை வெளிப்படுத்துவோம்.  Empathyயில் நாம்  மற்றவரின் நிலையை உள்வாங்கிப் புரிந்துகொண்டு, அவர்களுக்காக அவர்களுடன் செயல்படுவோம். “எம்பதீ” என்பதில் மற்றவர்கள் உணருவதை அவர்கள் கண்ணோட்டத்திலிருந்து பார்ப்பதால் நன்றாகப் புரியும். அவர்களுக்குத் தெளிவுபடுத்தி, அரவணைத்து, அடுத்த கட்டத்திற்கு அவர்களுடன் செல்வோம்.

சமூக-உணர்வுத்-திறன் இணைந்ததால் நிர்மல் பல மாற்றங்களைக் கவனித்தார். குமார் சார் போலவே தானும் செய்துவருகிறோம் என உணர, உற்சாகம் மேலோங்கியது!

தன் பள்ளி மாணவர்களை இரண்டு மாதத்திற்கு ஒரு முறை நிர்மல் தன் ஊருக்கு அழைத்துச் செல்வதாகத் திட்டமிட்டார். பண்ணையார் இயற்கை விவசாயத்தைப்பற்றி விளக்கினார். ஒரு சிறிய இடத்தில் பள்ளி மாணவர்களை மரம் நடச்சொல்லி, அவற்றைப் பாதுகாக்கும் பொறுப்பை அவர்களிடம் விட்டுவிட்டார். ஒவ்வொன்றுக்கும் பெயரிட்டு, தங்கள் சொத்துபோல் பார்த்துக்கொள்ள வலியுறுத்தினார்.

அவர்கள் வரும் வழியில் வசதி இல்லாத அவதிப்பட்டுக்கொண்டிருந்த ஒரு கிராமத்தைக் கவனித்தார்கள். ஊருக்குப் போகும்பொழுதெல்லாம் இந்த ஊரில் பாடம் தெளிவுபடுத்துவது, பாடத்திற்குப் பொருட்கள் செய்வதில் உதவுவது எனப் பலவற்றைச் செய்து வந்தார்கள். தோழமையுடன் பல நலன்கள் கூடியது.

சிலவற்றை நாம் சொல்ல, செய்ய, அதிலிருந்து, பல உதயமாவது தான் அழகே!  நிர்மல், வாழ்வில் பலவற்றைச் செய்யத்தொடங்கினார். மனம் ஃப்ரீயாக இருந்தது. இவருக்கு நேர்ந்தது மன அழுத்தமோ மனச்சோர்வோ இல்லை. திறன்கள் மேம்பட, தெளிவடைய, சந்தேகமும் சலனங்களும் போயே போய்விட்டன.