

இன்றைய குவிகம் அளாவளாலில் லேடீஸ் ஸ்பெஷல் ஆசிரியர் திருமதி கிரிஜா ராகவன். எனக்குத் தெரிந்து இருமுறை அவர் இந்த நிகழ்வில் கலந்துகொள்வதாக இருந்து பிறகு இன்று குவிக அளவளாவல் குவிந்து கைகூடி வந்ததில் அதிர்ஷ்டக்காற்று என் திசையில். காரணம் இல்லாமலில்லை. வங்கிப்பணியின் இரண்டாம் மற்றும் நான்காம் சனி ஞாயிறு விடுமுறையில் பொதுவாக என் சொந்தக்காரர்களைப் பார்த்துவர ஊர் சென்றுவிடுவேன். இம்முறை ஞாயிறு என்கையில்.
பைக்கை நிறுத்தச் சற்றே அவஸ்தைப்பட்டு ஜெயக்கொடி நாட்டி நிறுத்தி குவிகம் இல்லம் சேர்வதற்கு சற்றுமுன் தன் உரை துவங்கியிருந்தார் கி.ரா..!
அளவளாவலின் முழுப்பரிமாணத்தையும் உள்ளடக்கியதாய் அவரின் பேச்சு. மணிப்பிரவாள அருவி. ஊடகத்துறையில் வங்கித்துறையில் தான் வளர்ந்து வந்த பாதையை எளிமையாய் நேர்மையாய் துளியும் பாசாங்கின்றி நேர்படப் பேசினார்.
நல்ல நண்பர்கள் மத்தியில் போலிமுகம் காட்டாமல் எப்படி இயல்பாய் புழங்குவோமோ அதைப்போல அமைந்தது அவர் பேச்சு. ஊடக வளர்ச்சி அடுத்த தளத்திற்கு மாறுவதை, மாற்றம் தவிர்க்க முடியாதென்றும் ஆனால் புத்தக வாசிப்பு குறையாது என்றும் மிக மென்மையாக ஆனால் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தினார். இடைக்கேள்விகள் எதிர் பதில்கள் இவற்றை தர்க்கரீதியாக வெற்றிகரமாக எதிர்கொண்டார். தான் கடந்துவந்த பாதை தந்த பாடங்களைத் தன் நிலை உயர்வுக்கான படிக்கட்டுக்களாக மாற்றிக்கொண்ட அவர் உழைப்புப் பாராட்டப்பட வேண்டியது.
பிரபலங்கள் நிகழ்வுகள் டிவி சேனல்கள் இவைகுறித்து தன்வாழ்வின் எழுத்துசார்
அனுபவங்களை down memory laneல் desending orderஐ மிக அழகாக ascending வரிசையில் குறிப்பிட்டார். தான் கற்றதும் பெற்றதும் என குறிப்பிட்ட அனைத்து விஷயங்களிலும் ஒரு இடத்திலும் கூட தன் பாண்டித்தியத்தை
அதுவாக்கும் இதுவாக்கும் என்று பறை சாற்றவே இல்லை.
விடாமுயற்சி (டார்கெட் என்று வைத்துக்கொண்டு அதை சென்றடைவதுவரை விடமாட்டேன்) பட்டறிவை பட்டை தீட்டி ஞானமாக்கி தனக்கென ஒரு பாதையும் வாசக அணியையும் வைத்திருக்கிறார்.
தன்னம்பிக்கைதான் பெண்களின் தனித்துவ அடையாளம் என்பதில் தெளிவாக இருப்பது அவரின் கடந்துவந்த பாதை தந்த அனுபவச்செறிவு..!
பேசும் குரலின் காத்திரமும் தீர்க்கமும் அவர் எழுத்திலும் எண்ணத்திலும் விமர்சன எதிர்கொள்ளலிலும் சர்வ நிச்சயமாய் பிரதிபலித்தது.!
நல்லவேளை ஞாயிறு என் கைவசம் இன்று. மழை போக்குக்காட்டி கடந்துபோனது..!
எனக்கு லாபம் ஒரு நல்ல பேச்சு கேட்ட அனுபவமும் இந்த ஞாயிறு இனிதாய் நிறைந்ததே எனும் மன நிறைவும்..!
——–அன்புடன் ஆர்க்கே..
