பிரபஞ்சன் அவர்களுக்கு அஞ்சலி

டிசம்பர் 21 ஆம் நாள் , வானம் வசப்பட்டுவிட்ட பிரபஞ்சன் அவர்களின் மறைவுக்கு குவிகத்தின் அஞ்சலி !

புதுச்சேரியின் அரசு மரியாதையுடன் இறுதி மரியாதை நடைபெற்றது! 

வாழ்க அவர் புகழ் !!

 

Image may contain: 2 peopleRelated image

 நவீன தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கிய ஆளுமையாக திகழ்ந்த எழுத்தாளர் பிரபஞ்சன் சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், கட்டுரைத் தொகுப்புகள் என 40-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

 

 

ஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் (19) – புலியூர் அனந்து

 

கண்ணாடி மேனி முன்னாடி போக 

தள்ளாடி உள்ளம் பின்னாடி போக

பூவிழி என்ன புன்னகை என்ன ஓவியம் பேசாதோ..

பேசாதோ.. ஓவியம் பேசாதோ.. உயிரோவியம் பேசாதோ..

 

பயிற்சி மையத்தின் முதல் அனுபவத்தில் சந்தித்த பலரை அதற்குப்பிறகு சந்திக்க நேர்ந்ததில்லை.  வாழ்க்கையில்  நன்றாகச் சாதித்த  கோபதியை ஒருமுறை அலுவலக நண்பர் ஒருவர் திருமணத்தில் பார்த்தேன். அந்த நண்பர் தொழிற்சங்கத்தில் ஒரு முக்கியப் பதவியில் இருந்தார்.  அப்போதுதான் கோபதி எங்கள் நிறுவனத்திலிருந்து  ராஜினமா செய்துவிட்டு ஐ.ஏ.எஸ்.பயிற்சிக்கு முஸ்ஸோரி  செல்லவிருந்தான். அதற்குமுன் இயன்றவரை பழைய நண்பர்களைப் பார்ப்பதற்காக  சென்னையிலிருந்து வந்திருந்தான்,

அடுத்தமுறை அவனைப் பார்த்தது  மாவட்டத்  தலைநகரில் ஒரு பெரிய அரங்கத்தில். அரசாங்கத்தால்  மாவட்ட அளவிலான செயலாக்க  மற்றும் திட்டங்கள் எந்த அளவிற்குச்  செயலாக்கப்பட்டுள்ளன என்பதினை  மதிப்பிடும் கூட்டம்.  எல்லாத் துறைகளையும் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களையும் சேர்ந்த மாவட்ட அளவிலான தலைமை அதிகாரிகள் கலந்து கொள்ளவேண்டிய கூட்டம்.. அந்தத் தலைமை அதிகாரியுடன் சில உதவியாளர்களும் தேவைப்படுவார்கள். எங்கள் நிறுவனத்தின் மாவட்டத் தலைமை அதிகாரி மூன்று உதவியாளர்களுடன் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எங்கள் நிறுவனத்திற்காக அந்த வரிசையில் நான்கு இருக்கைகள் ஒதுக்கி இருந்தார்கள். அதுபோன்ற கூட்டங்களில் தலைமை அதிகாரிமட்டுமே பேசுவார் என்றாலும், விவாம் தெரிந்த இரண்டு மூன்று உதவியாளர்கள் உடன்  சென்று   தேவைப்பட்ட  புள்வி விவரங்களையோ , திட்டங்களின் தற்போதைய நிலவரத்தையோ எடுத்துக் கொடுக்க தயாராக இருப்பார்கள். விவரங்களை விரல் நுனியில் வைத்திருக்கும் உதவியாளர்கள் அதற்குத் தேவைப்படுவார்கள். என்னை அது போன்ற முக்கியமான வேலைகளுக்குத் தகுந்தவனாக யாரும், நான் உட்பட, கருதவில்லை.

இம்முறை ஒரு நெருக்கடி நேர்ந்துவிட்டது.  எல்லோரும் கிளம்புவதற்குக்  கார்கூட வந்துவிட்டது. கூடப் போகவேண்டிய மூவரில் ஒருவருக்கு வயிறு சரியில்லாமல் போய்விட்டது. அவரால் இருக்கையில்  ஒரு பத்து நிமிடம் உட்காரக்கூட முடியவில்லை. கூட்டத்திற்கு அவர் போவதற்கு வாய்ப்பே இல்லை.  அதேசமயம் ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் ஒன்றை காலியாக விட்டால் பலர் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டிவரும். காரணத்தைச் சொல்லவும் முடியாது. கடுமையான விமர்சனம் வருமோ என்று பயம் வேறு.

Related imageதுரதிஷ்ட வசமாக வேறு யாரும் இல்லாததால், உப்புக்குச் சப்பாணியாக என்னை அழைத்துப்போகும்படி ஆகிவிட்டது. காலி இருக்கையை நிரப்புவது ஒன்றுதான் என்னால் உபயோகம்.

கூட்டம் தொடங்கியது. எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில்  முதலில்  மாவட்ட அதிகாரி,   அடுத்து மற்ற இரு உதவியாளர்கள் , கடைசி  இருக்கையில் நான். எனக்கு முன்னாலும் ஓரிரு கோப்புகள் வைக்கப்பட்டன.

கூட்டம் தொடங்கியது. கூட்டத்தை நடத்தியவர் மாவட்ட ஆட்சித் தலைவர். சென்னையிலிருந்து வருவாய் துறை உறுப்பினர் வந்திருந்தார்.  ஒவ்வொரு துறையாக, ஒவ்வொரு நிறுவனமாக ‘ரெவ்யூ’ நடந்தது.

மாவட்ட ஆட்சித் தலைவர் சில கேள்விகள் கேட்பார். சென்னை அதிகாரி குறுக்கிட்டு, சில கேள்விகள் கேட்பார். பதில் சொல்லும் அதிகாரி மிகுந்த கவனத்துடன் பதிலளிப்பார். புள்ளி விவரங்கள்  தேவைப்படும்போது உதவியாளர்களில் ஒருவர் ஒரு காகிதத்தைக் கொடுப்பார். அதிலிருந்து துறைத் தலைவர் பதிலளிப்பார். திருப்திகரமான பதில் இல்லாவிட்டால்  சிலசமயம் மாவட்ட ஆட்சித் தலைவர்  திட்டாத குறையாகக் கடுமையாகப் பேசுவார்.  சென்னை மேலதிகாரி  வருவாய்துறை போர்ட் உறுப்பினர் என்று சொன்னார்கள். அவரும் ஏதேனும் கண்டனம் தெரிவிப்பார்.

தங்கள்முறை அதிக பிரச்சினைகள் இல்லாமல் போகவேண்டுமே என்று கவலையோடும் இறுக்கத்தோடும் இருந்தார்கள். எங்கள் நிறுவனம் நேரடியாக ஆட்சித்  தலைவரின் அதிகார வரம்பில் கிடையாதாம்.  எங்கள் தலைவர்  கேட்கப்பட்ட கேள்விகளுக்குப்  பதில்களை அளித்தார். அதிகக் கடுமையோ, கண்டனமோ இல்லாமல் அது முடிந்தது. ஆனாலும்,  அவர்  அமரும்போது அந்த  ஏர் கண்டிஷன் அரங்கிலும் அவருக்கு வியர்த்துப் போய்விட்டது.

“நெக்ஸ்ட்” என்றார் ஆட்சித் தலைவர். அடுத்து பதில் அளிக்க வேண்டியர்   எனக்கு அடுத்த இருக்கைக்காரர். இன்னொரு முக்கியமான  துறையின்  தலைவர். போர்டு உறுப்பினர் பார்வை அவரை அடையும் முன்பு என்னைக் கடந்து சென்றது. ஒருகணம் எங்கள் இருவர் கண்களும் சந்தித்தன.

அப்போது ஒரு அதிசயம் நேர்ந்தது.  அதிகாரப்  படிகளில்  எங்கோ உயரத்தில் இருந்த  அந்த சென்னை அதிகாரி  என்னைப் பெயரிட்டுக் கூப்பிட்டு, “ஹவ் ஆர் யூ?” என்றார். 

கோபதி….

வந்திருந்த அதிகாரி கோபதி. வெகு நாட்களுக்கு முன் எங்கள்  நிறுவனத்தில் வேலையில் இருந்த, என்னோடு பயிற்சி மையத்தில் பழகிய, திருமணத்தில் சந்தித்த அதே கோபதி.

அசட்டுச் சிரிப்புடன் தலையை அசைத்தேன். எழுந்திருக்க வேண்டும் என்றுகூடத் தோன்றவில்லை.  முழுக் கூட்டமும் என்னைப் பார்வையால் துளைத்தது.  கூட்டம் தொடர்ந்தது. என்றாலும் நூற்றுக் கணக்கான கண்கள் என்னைத் துளைத்த அந்த நொடி … இன்று நினைத்தாலும் உடல் பதறுகிறது.

கூட்டம் முடிவடைந்ததும் கோபதி என்னைக் கூப்பிட்டனுப்பினா(ன்)ர்.  என் அண்ணன் பற்றிக் கூட விசாரித்தார். ஏதோ பதில் அளித்தேன் என்று நினைக்கிறேன்.

என் வாழ்க்கையிலேயே நாடகத்தனமான நிகழ்ச்சி இதுதான் என்று நினைக்கிறேன்.

நான் சொல்ல நினைத்தது பயிற்சி மையத்தில் சந்தித்த இன்னொருவனைப்பற்றி. பேச்சுவாக்கில் பிற்கால நிகழ்ச்சிக்குப் போய்விட்டேன்.

நமது நண்பன் சற்று வித்தியாசமானவன். நிறையப் பொய்கள்.  சொல்லும்போதே அது உண்மையல்ல என்று கண்டுபிடித்துவிடக் கூடிய பொய்களைக் கூட அஞ்சாமல் ஒரு சஞ்சலமும் இன்றி சொல்வான்.     

அவனது தந்தை ஒரு பிரபலம். பேரைச் சொன்னாலும் ஊரைச் சொல்லக் கூடாது என்பார்களே அது இவர் விஷயத்தில்  மிகவும் பொருத்தம்.  அரியக்குடி, செம்மங்குடி என்று  சங்கீத வித்வான்கள் மட்டுமே ஊரின் பெயரால் விளிக்கப்பட்டு வந்திருந்த காலத்தில், இவன் தந்தை ஊரின் பெயரால் விளிக்கப்பட்டு வந்த எழுத்தாளர்.  (ஆங்கரை, விம்கோ நகர், திசையன்விளை , இரணியல்  என்று சில ஊர்கள் பிற்காலத்தில் துணுக்கு எழுத்தாளர்களால் பிரபலமானது வேறு விஷயம்.)    பல புனைபெயர் கொண்டவர். பொதுவான வார மாத இதழ்களில் எழுதிய  குடும்பப்பாங்கான கதைகள் இவரது  பலம்.

சென்னையிலேயே வசித்துவந்த நமது நண்பன்  வீட்டுக் கட்டுப்பாடுகள் இல்லாமல் ஐந்து நாட்களுக்காவது வெளியே தங்க இந்தப்  பயிற்சிக் காலத்தைப் பயன்படுத்திக்கொண்டான். உள்ளூர் ஊழியர்கள் வீட்டிலிருந்தே வரலாம் என்று இருந்தது. இவன் ஏதோ பொய்யைச் சொல்லி எங்களுடன் அந்த லாட்ஜில்  ஒரு அறையில் தங்கினான்.

மதுவிலக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் அமல்படுத்தப்பட்ட நேரம்.    எங்கிருந்தோ பாட்டில் வாங்கிக்கொண்டு தினம் ஒரு நண்பன் வருவான். சற்றுநேரத்தில் அங்கு நான்கைந்து பேர்  வந்து சேர்ந்துகொள்வார்கள். இரவு 12 மணிக்குமேல்தான் கலைவார்கள்.

முதல் நாளன்றே எப்படி இந்த ஏற்பாடுகள் செய்தான் என்பதுதான் ஆச்சரியம். நண்பர்களில் யாரோ ஒருவர் கேட்கவும் செய்தார். எங்கே கிடைக்கும் என்பது பழக்கம் உள்ளவர்களுக்குத் தெரியும். யார் வீடு  ஃப்ரீ  என்றோ அல்லது எங்கே யார் இதற்காக அறை எடுத்திருக்கிறார்கள் என்றோ  செய்தி இரண்டு மணி நேரத்தில் போய்ச்சேர வேண்டியவர்களுக்கு சேர்வது கடினம் இல்லையாம்.

கேள்விகேட்ட நண்பரிடம் “உங்கள் ஊரில் சரக்கு எங்கே கிடைக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா?”  என்று  கேட்டான்.. தெரியாது என்று தலை அசைத்தார்.

“நான் உங்கள் ஊருக்கு வருகிறேன். ஒரு மணிநேரத்தில் இடத்தைச் சொல்கிறேன் .”  என்றான் சவாலாக. தொடர்ந்து “இதில் ஒரு தொழில் ரகசியம் இருக்கிறது”  என்றான்.

கிடைக்கும் இடத்திலும், எங்கே கிடைக்கும் என்கிற தகவல் சொல்லக்கூடிய கடைகளிலும்  முட்டை விளக்கு என்று சொல்லப்படுகிற ஒரு விளக்கு இரவு பகல் எல்லா நேரமும் எரியுமாம்.  இது எல்லா ஊரிலும் பொதுவான விதியாம்.

எட்டுமணிக்கு மேல்தான் அந்த ஜமா கூடும். ஒருநாள் பயிற்சி மையத்திலிருந்து  லாட்ஜிற்குப் போக நான் கிளம்பியபோது  கொஞ்சம் காலார நடந்துவிட்டுப் போகலாம் என்று அவன் கூப்பிட்டான்.

நேராகச் சென்றால்  பத்து நிமிட தூரத்தில் இருந்த இடத்திற்கு ஊரைச் சுற்றி நாற்பது நிமிடங்கள் நடந்தோம்.  திடீரென ஒரு கடை முன் நிற்பான். கடைக்காரரிடம் ஏதோ சொல்லிவிட்டு வருவான். ஒரு அலுவலகத்தில் நுழைந்தான். வரவேற்பில் இருந்த பெண்மணி இவனைப் பார்த்துவிட்டு இன்டர்காமில் யாருடனோ பேசினாள்.  இவன் நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டான்.  தகவல் பரப்பும் முறை கொஞ்சம் புரிந்தது.

அவனுடன் நடந்த அந்த நாற்பது நிமிடங்களில் உதை வாங்காமல் அறையை அடைந்ததே  எந்தச் சாமியாரின் ‘அற்புதங்க’ளுக்கும்  குறைவில்லை  என்றுதான் தோன்றுகிறது. வழியில் எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் முதலில் சொன்ன பாட்டைக்  கீழ் ஸ்தாயியில்  விசிலடிப்பான். சில பெண்கள் திரும்பி முறைப்பார்கள்.  ஒன்றுமே நடக்காததுபோல்  இவன் அவளைத்தாண்டிப் போய்விடுவான்.  பெரும்பாலான பெண்கள் வேகமாக நடந்து போய்விடுவார்கள்.  

அந்த ‘பக் பக்’ அனுபவத்திற்குப் பிறகு அவன் இருக்கும் பக்கமே நான் போவதில்லை. அவன் ஒய்வு பெறும்வரை அவனைப்பற்றிய வம்பு தும்பு  சேதிகள்  அவ்வப்போது காற்றுவாக்கில் வரும். பெரிய பிரச்சினையாக  ஏதும் ஆகவில்லை.

எல்லோராலும் மதிக்கப்படும் ஒருவருக்கு இப்படி ஒரு மகன் இருப்பது சற்று வினோதம்தான் என்று நினைப்பேன். வெகு நாட்கள் கழித்து கேள்விப்பட்ட விஷயம் இன்னும் வினோதம். இவனது தந்தையான எழுத்தாளர்  நிழலான பத்திரிகைகளில் ‘பலான’ கதைகளை வேறு பெயரில் எழுதிவந்தது அம்பலமாகி சலசலப்பு ஏற்பட்டது.

வீட்டிலே ராமன் வெளியிலே கிருஷ்ணன் என்பார்களே. அதுபோல  இவன் சகோதரன் சாதுவாம்  இவன்  அந்தக்கால வகைப்பாட்டில் ‘தறுதலை’யாம். பெயர் மாற்றிவைத்து  விட்டார்களோ என்று சொல்லும்படி சாது அண்ணன் பெயர் லீலாகிருஷ்ணன். ‘தறுதலை’ இவனோ சீதாராமன்.

இன்னும் ஒரு முரண். ஒரு கெட்ட பழக்கமும் இல்லாத லீலாகிருஷ்ணன் நாற்பது வயதிலேயே போய்ச் சேர்ந்துவிட்டான். ரிட்டையர் ஆகி வாட்ஸ்ஆப்பில் நண்பர்களுக்குத் தினமும் ‘குட் மார்னிங்’ அனுப்பும்  சீதாராமன் சௌக்யமாக இருக்கிறான் .

(இன்னும் எவ்வளவோ இருக்கு )

 

கோமலின் பறந்துபோன பக்கங்கள் – குவிகம் பதிப்பகம் வெளியீடு

 

Image may contain: 8 people, including Kirubanandan Srinivasan and Dharini Komal, people smiling, people standing and indoor

கோமல் சுவாமிநாதன் அவர்களின் நினைவலைகளான பறந்துபோன பக்கங்கள் குவிகம் பதிப்பாக  16 – 1 – 19 அன்று சென்னை புத்தகக் காட்சி சிற்றரங்கத்தில் வெளியிடப்பட்டது.

இது குவிகம் பதிப்பகத்தின் 25 வது பெருமைமிகு பதிப்பு.

கோமல் அவர்களின் குடும்ப நண்பரும் அமுதசுரபி ஆசிரியருமான திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் வெளியிட்டார்.

பெற்றுக்கொண்டவர்கள்  கோமல் அவர்களுடன் நாடக உலகில்  பயணம் செய்த கவிஞர் வைதீஸ்வரன், நாடகத்துறை எழுத்தாளர் T V ராதாகிருஷ்ணன், சுபமங்களா இணையாசிரியராக ஐந்தாண்டுகள் உடன் பயணித்த குடந்தை கீதப் பிரியன் மற்றும் தமுஎகச வைச் சேர்ந்த இரா தெ முத்து ஆகியோர்.

பேசிய அனைவரும் கோமல் அவர்களின் பன்முக ஆளுமையையும் மாற்றுக் கருத்து உள்ளவர்களையும் மதிக்கும் பண்பினையும் நாடகம் மற்றும் இலக்கியத் துறைகளில் செய்த நிகரற்ற பங்களிப்பையும் நினைவு கூர்ந்தார்கள்.

அவரது பரந்துபட்ட அனுபவங்களின் பதிவான பறந்துபோன பக்கங்கள் நடனம் அவர்களின் படங்களுடன் வருவது வரவேற்கத் தக்கது என்று அபிப்பிராயப்பட்டார்கள்.

தாரிணி கோமல் நாடகத்துறையிலும் இலக்கியத் துறையிலும் தந்தையின் பணியைத் தொடர்வதையும் எல்லோரும்  பாராட்டினார்கள்

சுரேஷ் சீனு  வரைந்த  அட்டைப்பட ஓவியம் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது.

அரியதொரு மனிதரின் சிறந்ததொரு படைப்பிற்கு நல்லதொரு விழா.

 

எமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்

 

Related image

Related imageராகு கதை சொல்லி முடித்தபின்   அவனைத் தண்டிக்கவேண்டும் என்று விஷ்வகர்மா தீர்மானித்து யோசித்து முடிக்குமுன் ஆயிரக்கணக்கான பாம்புகள் அறைக்குள் வருவதை அறிந்து திடுக்கிட்டார்.  ராகுவைத்  தான்  சற்றுக் குறைவாக எடை போட்டுவிட்டோமே என்று  வருந்தினார். அதுமட்டுமல்லாமல் மிகவும் சக்திவாய்ந்த நாகலோக இளவரசிகள் நாகவல்லியும் , நாககன்னியும் இருப்பதைப்பார்த்து கொஞ்சம் கலக்கத்திலும் ஆழ்ந்தார்.

இருப்பினும் விஷ்வகர்மா எதற்கும் கலங்காதவர். எதையும் சமாளிக்கும் ஆற்றல் படைத்தவர். பிரும்மரையே எதிர்த்துத் தான் நினைத்ததைச்  சாதிக்க முயன்றவர். தேவ சிற்பி என்பதால் தேவர்களாலும் மிகவும் மதிக்கப்பட்டவர். அதனால் அவருக்கு அதீதமான சக்திகளையும் வரங்களையும் வாரி வாரி வழங்கி இருந்தனர் ! அவரும் அநாவசியமாக யார் வம்பிற்கும் போகமாட்டார். அதேசமயம் தான் நினைத்த காரியங்களைச் சத்தமில்லாமல் முடித்துக்கொள்ளும் சாமர்த்தியம் அவரிடம் நிறைய இருந்தது.

ராகுவை சமாளிப்பது அவருக்குப் பெரிய சவாலாகத்  தோன்றவில்லை.  அந்த அறையின் ஒவ்வொரு இடுக்கிலும் பாம்புகள் புகுந்து இருக்கின்ற இடத்தையெல்லாம் அடைத்துக்கொள்ள முயலுவதையும் பார்த்தார்.  ராகுவின் கண்களிலும் நாக இளவரசிகளின் கண்களிலும் தெரியும் குரூரப் புன்னகையைக் கண்டார்.

ராகுதான் முதலில் பேச்சை ஆரம்பித்தான்.

” விஷ்வகர்மா அவர்களே ! “

“என்ன ராகு ! மீண்டும் ஒரு புனைவுக்  கதையா?” – விஷ்வகர்மாவின் குரலில் தெரிந்த ஏளனம் ராகுவை என்னவோ செய்தது.

” புனைவுக் கதை இல்லை, விஷ்வகர்மா அவர்களே!, நினைவைவிட்டு என்றும் மறக்க முடியாத கதை! உங்களுக்கு” என்றான் ராகு.

” உண்மைதான் ராகு! என்னை இந்த அளவிற்கு ஏமாளியாக்க யாரும் நினைத்ததில்லை. “

“அது கடந்த காலம், விஷ்வகர்மா அவர்களே , நிகழ் காலத்திற்கு வருவோம்”

” வந்துதானே ஆக வேண்டும்.  முதலில் உன்னைத் தண்டிக்க உன்னிடமே யோசனை கேட்டேன். இப்போது இந்த ஆபத்திலிருந்து தப்பிக்க என்ன வழி ராகு?”

” சரியாகக் கேட்டீர்கள்! எனக்கு இரண்டு வரங்கள் நீங்கள் தரவேண்டும்”

“இது என்ன புதுமையான வரம் கேட்கும் வித்தையாக இருக்கிறது? நீ தவமும் செய்யவில்லை, நானும் தேவன் இல்லை”

” வரம் என்ற சொல் தவறான பிரயோகம் என்றால் சத்தியம் என்று வைத்துக் கொள்ளலாம்”

” சத்தியமா ?  எதற்காகச் செய்யவேண்டும்?”

” உங்களுக்கு வந்துள்ள  ஆபத்து சரியாகப் புரியவில்லை என்று நினைக்கிறேன் “

” ஆபத்தா?  எனக்கா? நீ கோபக்காரன் என்றுதான் நான் நினைத்திருந்தேன். ஆனால் இவ்வளவு வேடிக்கையாகப் பேசக் கூடியவன் என்பது எனக்கு இவ்வளவு நேரம் தெரியவில்லை”

” உங்கள் வேடிக்கைப் பேச்சைக் குறைத்துக் கொள்ளுங்கள் ! நாக இளவரசிகளும் அவளுடன்  வந்திருக்கும் இந்த ஆயிரக்கணக்கான தோழிப் பாம்புகளும் உங்களுடன் விளையாட வரவில்லை. அவர்கள் அனைவரும் அக்கினி தேவனின் மானசீகப் புதல்விகள். அவர்களின் திறமையைப் பார்க்கிறீர்களா? ” என்று சொல்லி அப்போதுதான் சாளரம் வழியாக வரும் ஒரு சிறிய பாம்பைப்பார்த்து ராகு ஏதோ கட்டளையிட்டான். .அந்தப் பாம்பும் சாளரத்தில் நின்றவாறு வானத்தைப் பார்த்து சீறியது. வானத்தில் மிகப்பெரிய நெருப்புக் கோளம் ஒன்று  உருவாகி அரண்மனைக்கு வெளியில் வெடித்துச் சிதறியது.

” அடேடே! அந்தச் சின்ன அக்கினிக் குஞ்சிற்கே இத்தனை வலிமை இருக்கிறதென்றால் இங்கிருக்கும் பெரிய பாம்புகளுக்கும் நாக இளவரசிகளுக்கும்  ஏன் உனக்கும்கூட எத்தனை சக்தி இருக்கக்கூடும்? “

“இப்போதுதான் உங்களுக்கு விவரம் புரிய ஆரம்பித்திருக்கிறது விஷ்வகர்மா அவர்களே!”

” இவற்றிலிருந்து என்னையும் இந்த அரண்மனையையும் காப்பாற்றிக்கொள்ள நான் உனக்கு இரண்டு வரம் அல்லது இரண்டு  சத்தியம் செய்துதர வேண்டும். அப்படித்தானே ராகு?”

” நீங்கள் புத்திசாலி விஷ்வகர்மா அவர்களே”

” என்னைப் பாராட்டுவதை விட்டுவிட்டு அந்த இரண்டு சத்தியம் என்னவென்று சொல்லலாமே?”

” ஆஹா!   சொல்கிறேன் கேளுங்கள்! இந்திரனுக்கு நீங்கள் கட்டிக்கொடுத்த தேவேந்திரப் பட்டணம்போல நாகலோகத்தில் ஒரு மாபெரும் பட்டிணத்தை உருவாக்கித் தரவேண்டும்”

” அது மிக எளிது. அடுத்தது?”

” உங்கள் மகள் ஸந்த்யாவின் மூன்று குழந்தைகளில் ஒன்றை என்னிடம் தந்துவிடவேண்டும். அதுவும் அந்தப் பெண்குழந்தையை”

” அது மிகவும் கடினம். அதற்கு என் சம்மதம் மட்டும் போதாது. சூரியனுடைய  சம்மதமும் ஸந்த்யாவின் சம்மதமும் வேண்டுமே?”

” எப்படியாவது கொண்டுவருவது உங்கள் பொறுப்பு”

” அது சரி, இந்த இரண்டு சத்தியங்களையும் செய்யமறுத்தால் ? “

” மறுக்கும் நிலையில் நீங்கள் இல்லை. இந்த விஷ்வபுரி – உங்களுடைய இந்த அழகிய நகரம் -அதில் உள்ள மாந்தர்கள் – எங்கள் கணவர் ராகுதேவனைக் கத்தியால் வெட்டினார்களே ! உங்கள் மனைவி- ஏன் நீங்கள் உட்பட அனைவரும் எம்முடைய  நெருப்புக் கோளங்களால் அழிந்துபடுவீர்கள்”  – நாக இளவரசிகள்  இருவரும் ஒருமித்துக் கூறினார்கள்.

ராகு அவனுக்கே உரிய கவர்ச்சிகரமான புன்னகையுடன் விஷ்வகர்மாவின் பதிலுக்காகக் காத்திருந்தான்.

விஷ்வகர்மா தொண்டையைக்  கனைத்துக்கொண்டு மெதுவான குரலில்  பேசஆரம்பித்தார்.

” அதில் பெரிய சிக்கல் இருக்கிறது ! நாக இளவரசிகளே !” 

” என்ன சிக்கல்?” ராகு உண்மையான கோபத்துடன் கேட்டான்.

” அந்த அக்கினிதேவன் உங்களுக்கு மானசீக பிதாவாக இருக்கலாம் ! ஆனால் அவன் என் மானசீக சிஷ்யன். அவனுக்கு யாரும் மாளிகை கட்டித் தர இயலவில்லை. அவனுக்கு அவன் நெருப்பிலிருந்தே எரியாத மாளிகை கட்டிக்கொடுத்தவன் நான். அன்றிலிருந்து அவன் என்  சிஷ்யனாகி விட்டான். அது மட்டுமல்ல அக்கினியினால் எனக்கு எந்தவித கஷ்டமும் வராது என்று வரம் இல்லை சத்தியம் இல்லை இல்லை  குரு தக்ஷிணை  கொடுத்தான். “

ராகுவின் முகம் மாறத் தொடங்கியது. 

” இன்னும் சொல்கிறேன் கேள் ! அதையும் மீறி  அக்னியால்   ஏதாவது ஆபத்து வருவதாக இருந்தால் அந்த நெருப்பை ஏற்படுத்தும் காரணியைக் கட்டுப்படுத்தும் மந்திரத்தையும்  சொல்லிக்கொடுத்திருக்கிறான்.  அதைச் சொல்லட்டுமா  ?”  என்று சொல்லி விஷ்வகர்மா  சிரித்துக்கொண்டே தன்னிடமிருந்த சிறிய சிப்பி ஒன்றை எடுத்து ஊதத்தொடங்கினார். மெல்லிய இசையுடன் பலத்த காற்று வந்தது. நின்ற இடத்திலிருந்தே அந்த அறையைச் சுற்றிப் பார்த்துக் கொண்டே ஊதினார். 

“இந்த தேவ சிற்பி ஏதோ சூழ்ச்சி செய்கிறான்! நெருப்புக் கோளங்களைக் கக்கிவிடுங்கள்” என்ற சீறிய ராகுவின் உடல்  தடுமாறியது.

Image result for rahu and snakes

அவன் கழுத்துக்குக் கீழே இருந்த பாம்பு உடலில் விஷ்வகர்மாவின் காற்றுபட்டதும் அது அப்படியே பனிக்கட்டிபோல் மாறி உறைந்துவிட்டதை உணர்ந்தான். அவனால் முகத்தைமட்டும் அசைக்க முடிந்தது. ஆனால் அவன் மனைவிகளுக்கோ அறையில் இருந்த மற்ற  பாம்புகளுக்கோ அந்தப் பாக்கியம்கூட இல்லை. அனைவரும் அப்படியே பனிக்கட்டியில் செய்த பாம்புகள்போல் உருமாறி உறைந்து கிடந்தனர்.  சாளரத்தில் நின்று கொண்டிருந்த அந்தக் குட்டிப்பாம்பும் அதை தொடர்ந்து வர முயற்சித்த அத்தனை பாம்புகளும் பனிக்கட்டிபோல் உறைந்துகிடந்தன. 

 

ராகுவால் எல்லாவற்றையும் உணரமுடிந்தது. விஷ்வகர்மாவின் பலமும் புரியஆரம்பித்தது. 

 

“இப்போது நீ எனக்கு இரு வரம் தரவேண்டும்” என்று விஷமத்துடன் பேச்சைத் துவங்கினார் விஷ்வகர்மா 

(தொடரும்)  

 

 

(இரண்டாம் பகுதி)

 

WCF stage

 

நாரதர் எமியைப் பார்க்க  எமி நாரதரைப் பார்க்க  முப்பெரும் தேவியரும் ஓருவரை ஒருவர் பார்க்க அங்கே ஒரு கனவு சீன் டூயட் ஆரம்பிப்பதற்கான சரியான வேளை தயாராகிக்கொண்டிருந்தது.

ரஹ்மான் இசையில்  நீல மலைச் சாரல்  மாதிரி ஒரு பாடல்   ஒலித்துக்கொண்டிருந்தது. நடு நடுவே அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

நீ எமிதானே ! உன்னை நான் வேறு எங்கோ சில மாதங்கள்  முன்பு பார்த்திருக்கேனே!

நீங்கள் நாரதர்தானே ! உங்களை நானும் ஒரு விழாவில் பார்த்துப் பேசிய ஞாபகம் வருகிறது !

ஆம்! டில்லியில் நடந்த உலகக் கலாசார விழாவில்தானே நாம் சந்தித்தோம் !

“உண்மை!  ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் நடத்திய  விழாவாயிற்றே ! நீ ஒரு ராஜஸ்தானிய இளவரசிமாதிரி வந்து நடனமாடி முதல் பரிசு பெற்றவள்தானே !

உண்மை. என்னுடைய இடத்தில் அதாவது யமுனை ஆற்றின் கரையில் நடைபெற்ற விழா ஆயிற்றே! நான் மாறுவேடத்தில் கலந்துகொண்டேன்.  நீங்கள் அங்கே வயலினில்  விஷ்ணு சகஸ்ரநாமம் இசைத்து அனைத்துலக மக்களின் மதிப்பைப்  பெற்றவர்தானே ?

” உண்மைதான். நானும் அந்த விழாவில் கலந்துகொள்ளவே  வந்தேன்.  மாறுவேடம் பூண்டு வயலினில் வித்தை காட்டினேன். “

” பரிசுபெற்ற நாம்  இருவரும் அப்படியே என் கரை ஓரமாக  ஆக்ரா சென்று தாஜ்மஹால் பார்த்தோம்.   அந்தப் பௌர்ணமி இரவில் தாஜ்மகாலின் பளிங்கு மண்டபத்தில் ஒருவரை ஒருவர் விழுங்கி விடுவதுபோல் சில நிமிடங்கள் பார்த்துக்கொண்டிருந்தோம்”

” சில நிமிடங்கள்தானா? ? ஆயிரம் ஆயிரம் வருடங்கள் இருந்தமாதிரி நினைவு.”

திருமணம் செய்ய முடிவு செய்த நாரதர்

” திடீரென்று ஒரு மின்னல் ! நாம் இருவரும் மறைந்துவிட்டோம்.  நீங்கள் ஆகாயத்தில் சென்றீர்கள். நான் நதியாய்த் தவழ்ந்தேன்

“இப்போது உன்னை சந்திக்கும்வரை அந்த எண்ணங்கள் எல்லாம் என் மனத்திலிருந்து யாரோ பறித்து எறிந்ததுபோல ஒரு உணர்வு”

” எனக்கும் அதே உணர்வுதான். என் மனதிலிருந்த உங்கள் நினைவை யாரோ ஒளித்துவிட்டதுபோன்ற உணர்வு. என் அப்படி ஆயிற்று நம் இருவருக்கும் ?”

” அது என் தந்தை பிரும்மர் செய்த சதி என்பதை இப்போதுதான் உணருகிறேன். “

” உண்மையைச் சொல்லுங்கள் ! அந்த கலாசார விழாவினால்  என் யமுனைக் கரைக்கு பங்கம் விளைந்துவிட்டது என்று முதல்நாள் கிளப்பிவிட்டதே தாங்கள்தானே ?”

” உணமைதான். ஏதாவது கலாட்டா செய்யவில்லை என்றால் எனக்குத் திருப்தியே கிடையாது.  மாசு வாரியத் தலைவரிடம் கொஞ்சம் போட்டுவாங்கினேன். விஷயம் காட்டுத்தீ மாதிரி பரவி ரவிஷங்கருக்குப் பெரிய பிரச்சினையில் கொண்டுபோய் விட்டது. கடைசியில் நமது கலகம் நன்மையில்தான் முடிந்தது. அதன்பின்தான் கங்கை யமுனை போன்ற நதிகளில் குப்பைகளைக் கொட்டக்கூடாது என்று சட்டம் கொண்டுவந்தார்கள். “

” இங்கே எப்படி வந்தீர்கள்? உங்களுடன் வந்த முப்பெரும் தேவியர்கள் எங்கே? உங்களைப் பார்த்த மகிழ்ச்சியில் அவர்களை மறந்துவிட்டேன். அண்ணன் வந்தால் கோபித்துக் கொள்வார்.”

” அவர்கள் எங்கும் போகவில்லை. வாசலில் தோட்டத்தில் அமர்ந்து ஒரு அழைப்பிதழைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். நம்மையெல்லாம் சுத்தமாக மறந்துவிட்டு அவர்கள் மறைந்து  போய்விடுவார்கள் பாரேன். “

அதேபோல் முப்பெரும் தேவியரும் சட்டென்று மறைந்துபோனார்கள்.

அதற்குக் காரணம் நாரதர் பையிலிருந்து  கீழே விழுந்த  அந்த அழைப்பிதழ்.

அது விவாத நிகழ்ச்சிக்கான   அழைப்பிதழ் .

எது பெரியது? ஆக்கலா? காத்தலா ? அழித்தலா? சாலமன் பாப்பையா தலைமையில் நடைபெறப்போகும் விவாத மேடையின் அழைப்பிதழ்.

” எங்கே போனார்கள் அவர்கள்?

” என்னை அறியாமலேயே நானே ஒரு  புது கலகத்திற்கு வழி  வகுத்துவிட்டேன். நாராயணன் சொன்னது சரியாகிவிட்டது. இனி இவர்களுக்குள் நடக்கப்போகும் பூசலை சமாளிப்பது மிகமிகக் கடினம். வா! நாமும் அந்த விவாத மேடைக்குச் செல்வோம்” என்று நாரதர் எமியிடம் கூறினார்.

(தொடரும்)

 

 

 

 

 

 

 

 

தைப் பொங்கல்

தை மாதம் முதல் நாள் !

அதற்கான குறிச் சொற்கள்:

பொங்கல் –  அறுவடை – விழா – நெல் – கரும்பு – வாழை –  பானை – இஞ்சி-மஞ்சள் – பூளைப்பூ -செழிப்பு – உழவர் – உத்தராயணம் –  புண்ணியம் – மகரசங்கராந்தி – தர்ப்பணம் – சூரியன் – காளை – நன்றி- ஜல்லிக்கட்டு – விடுமுறை – சர்க்கரைப்பொங்கல், வெண்பொங்கல், வாழ்த்து, போகி,  புகை, சுண்ணாம்பு – புத்தாடை- திருவள்ளுவர்தினம் – காணும்பொங்கல் – மாட்டுப்பொங்கல் – கணுப்பொங்கல் -பொங்கலோ பொங்கல் 

சங்க காலத்திலேயே  இவ்விழா கொண்டாடப்பட்டது என்பதற்கு ஆதாரமான வரிகள்:

“தைஇத் திங்கள் தண்கயம் படியும்” என்று நற்றிணையும்

“தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” என்று குறுந்தொகையும்

”தைஇத் திங்கள் தண்கயம் போல்” என்று புறநானூறும்

“தைஇத் திங்கள் தண்கயம் போல” என்று ஐங்குறுநூறும்

“தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என்று கலித்தொகையும்

கூறுகின்றன.

சிலப்பதிகாரத்தில் வரும் இந்திர விழாவின் துவக்கத்தில், காவல்பூதத்திற்கு, புழுக்கலும், நோடையும், விழுக்குடை மடையும், பூவும் புகையும் சேர்த்து  வழிபட்டதாக, குறிப்பிடப்படுகிறது. இதில் புழுக்கல் என்பதுதான் பொங்கல்.

சம்பந்தர், தன் மயிலாப்பூர் பதிகத்தில், ‘நெய்பூசும் ஒண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடும் தைப்பூசம்’ எனக் கூறுகிறார் ,

திருப்பாவை, அதை சற்றே வேறுபடுத்தி, ‘பாற்சோறு மூட நெய்பெய்து முழங்கை வழிவார’ என்கிறது.

முதல் ராஜேந்திரனின், காளஹஸ்தி கல்வெட்டில், மகர சங்கராந்தி அன்று, பெரும் திருவமுது படைக்கப்பட்ட தகவல் சொல்லப்பட்டிருக்கிறதாம்.

தஞ்சை மராட்டியர் காலத்தில், மகர சங்கராந்தி அன்று, வாழை கட்டி, பொங்கல் விட்டு கொண்டாடியதாக, ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.

17ம் நூற்றாண்டைச் சேர்ந்த வலங்கை இடங்கை வரலாறு என்ற நூலில், மகர சங்கராந்தி அன்று, சுவாமி புறப்பாடும், தேவதாசியர் நடனமும் நடந்ததாக குறிப்பு உள்ளது.

இருபதாம் நூற்றாண்டில், பெண்ணாகடத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், முதன் முதலாக, பொங்கல் வாழ்த்து அட்டை தயாரித்து அச்சிட்டார்.

23-1-2008 அன்று கலைஞர் கருணாநிதி அவர்கள் ஆட்சியில் தமிழகச் சட்டப்பேரவையில் “திருவள்ளுவர் ஆண்டு பிறக்கும் தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்பது, தமிழ் அறிஞர்கள்  ஒப்புக்கொண்டுள்ள உண்மை என்பதால்; தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என அறிவித்து நடைமுறைப்படுத்திட இந்த அரசு முடிவு செய்துள்ளது’ என்று அறிவிக்கப்பட்டது.

தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா 23-8-2011 அன்று பேரவையில் கூறும்போது, “தமிழ்ப் புத்தாண்டை தை மாதம் தொடங்க எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் சித்திரையில் தொடங்குவதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. கருணாநிதி தன் சுய விளம்பரத்துக்காக, மக்கள் மன உணர்வைப் புண்படுத்தும்வகையில் கொண்டுவரப்பட்ட சட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டது” என்றார்.

 

ஒரு புராணக் கதை :

சிவபெருமான் ஒருமுறை நந்தியிடம் பூலோகம் சென்று மக்களை மாதம் ஒருமுறை சாப்பிடும்படியும் , தினமும் எண்ணை தேய்த்துக் குளிக்கும்படியும் சொல்லுமாறு கூறினாராம்.

நந்தி தவறுதலாக அதை உல்டா செய்து – தினமும் சாப்பிடும்படியும் மாதம் ஒருநாள் எண்ணைதேய்த்துக் குளிக்கும்படியும் கூறிவிட்டாராம்.

அதனால் கோபம் கொண்ட சிவன்  பூலோக மக்கள் அதிக உணவு தயாரிக்க நிலத்தை உழவேண்டி, நந்திக்கும் அதன் சந்ததியருக்கும் ஆணையிட்டாராம்.

இது புதிதாக இருக்கிறதல்லவா?

 

விளையாட்டு

Uzhavar