Images of children from India, Bangladesh and other select countries. Many are tribal, rural or similar.:

 

சிந்தை முளைக்கும் என்பாடல்
சிறகை விரித்துப் பறக்கட்டும்
நொந்து வடிக்கும் கண்களுக்கும்
நொடிந்த உள்ளப் புண்களுக்கும்
முந்தி அமைதி தருகின்ற
மூவா மருந்தாய் இருக்கட்டும்
இந்த உலகம் இனியதென
எடுத்துச் சொல்லிச் சிறக்கட்டும்.

வாழ்வு போர்செய் களமென்றும்
வறண்ட பாலை நிலமென்றும்
சூழும் துன்பச் சிறையென்றும்
சொல்லி வருந்தல் முறையன்று.
வீழும் விதைதான் மரமாகும்
வீழும் மழைதான் குளமாகும்
ஊழும் வினையும் என்செய்யும்
ஊக்கம் உழைப்பும் பொன்செய்யும்.

என்ன இருந்தும் எவையிருந்தும்
எதுவும் கூட வருவதில்லை.
மின்னி மறைந்தே போவதற்குள்
வெற்று நினைவாய் ஆவதற்குள்
சின்னஞ் சிறிய உதவிகளைச்
சிரித்தே பிறர்க்குச் செய்திடுவோம்
அன்ன வற்றில் வருநெகிழ்ச்சி
அளவே இல்லாப் பெருமகிழ்ச்சி.

சிரிப்பே இல்லா முகம்கண்டால்
சிரிப்பை அள்ளித் தந்திடுவோம்
கரிப்பென்று இகழ்ந்து பேசாமல்
கடலுள் முத்தைக் கண்டெடுப்போம்.
வரப்பு, வேலி பயிர்களுக்கே
வாழ்வில் உறவுக்கு அவையேனோ?
விரிப்பாம் பரந்த வானம்போல்
மேன்மை மேவி விளங்கிடுவோம்!