1. கதைகள் தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கும் இருபத்தி ஐந்து   சங்க இலக்கியப் பாடல்களில் இருந்து ஒரு பாடலின்   செய்தியை மையக்

கருத்தாகக் கொண்டு சமகால வாழ்வைச் சித்தரிக்கும் கதைகளாக இருக்க வேண்டும். சங்கப்பாடல்களை http://www.konrai.org/kumudam  என்ற இணையதளத்தில்  அறிந்து கொள்ளலாம்.

2. சிறுகதையோடு அது எந்தச் சங்க இலக்கியப் பாடலை மையக் கருத்தாகக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடப்பட வேண்டும். பாடலின் எண்ணைக் குறிப்பிடவும்.

3. சங்க இலக்கியப்பாடலின் விளக்கவுரையாக இருக்கக் கூடாது. புனையப்பட்ட சிறுகதையாக இருக்க வேண்டும்

4. ஒருவர் எத்தனை கதைகளை வேண்டுமானாலும் அனுப்பலாம்.

5. கதைகளுடன்  ‘ கதைகள் எனது சொந்தக் கற்பனையில் உருவான புனைவுகளே.அவை தழுவலோ, மொழி பெயர்ப்போ பிறிதொன்றின் நகலோ அல்ல’ என்ற உறுதிமொழி இணைக்கப்பட வேண்டும். கதைகள் பிறரது எழுத்தை நகலெடுத்தோ, களவாடியோ, தழுவியோ எழுதப்பட்டிருந்தால் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

6. கதைகள் யூனிகோட் எழுத்துருவில் தட்டச்சு செய்யப்பட்டு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட வேண்டும் . கதைகள் அனுப்பப்பட வேண்டிய மின்னஞ்சல்  முகவரி kumudamkonrai@gmail.com

7. சிறுகதை ஆசிரியரின் பெயர், முகவரி ஆகியவை தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும். அயல் நாட்டிலிருந்து பங்கேற்போர் தங்கள் முகவரியை ஆங்கிலத்தில் எழுதுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

8. பங்கேற்கும் படைப்பாளிகள் அவர்கள் அனுப்பும் படைப்பின் நகல் ஒன்றை தங்கள் வசம் வைத்துக் கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஏனெனில் தேர்ந்தெடுக்கப்படாத கதைகளைத் திருப்பி அனுப்ப இயலாது.

9. கதைகள் 1000 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும்

10. தேவை ஏற்படின் பிரசுரமாகும் கதைகளைத் திருத்தவோ, சுருக்கவோ குமுதம் ஆசிரியர் குழுவிற்கு உரிமை உண்டு

11. எல்லா விஷயங்களிலும் குமுதம் ஆசிரியரின் முடிவே இறுதியானது.

12. கதைகள் வந்து சேர வேண்டிய கடைசித்தேதி:  மார்ச் 31, 2020.

13. கதைகளைத் தபால் மூலமும் அனுப்பலாம். குமுதம்-கொன்றை, சங்க இலக்கியச் சிறுகதைப் போட்டி, தபால் பெட்டி எண்  – 2592, சென்னை – 31  என்ற முகவரிக்கு அனுப்பலாம்.   இயன்ற வரை மின்னஞ்சலில் அனுப்பினால் உதவியாக இருக்கும்.

கவிதை உதாரணத்துக்கு ஒன்று : 

குறுந்தொகை 8, ஆலங்குடி வங்கனார்

 

கழனி மாஅத்து விளைந்து உகு தீம்பழம்
பழன வாளை கதூஉம் ஊரன்,
எம் இல் பெருமொழி கூறித், தம் இல்
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல, 5
மேவன செய்யும், தன் புதல்வன் தாய்க்கே.

 

பாடல் பின்னணி:  தலைவி தன்னை இகழ்ந்து கூறினாள் என அறிந்த பரத்தை, அத் தலைவியின் தோழியர் கேட்கும்படி இதனைக் கூறியது. 

 

பொருளுரை:  வயலில் உள்ள மரத்திலிருந்து விளைந்து விழும் இனிய பழத்தை  குளத்தில் உள்ள வாளை மீன்கள் கவ்வி உண்ணும் நாட்டவன், என்னுடைய வீட்டில் என்னைப் பெருமைப்படுத்தும் சொற்களைக் கூறுவான்.  ஆனால் தன்னுடைய வீட்டில், முன் நின்றார் தம் கையையும் காலையும் தூக்கத் தூக்க, தானும் கையையும் காலையும் தூக்குகின்ற, கண்ணாடியில் தோன்றுகின்ற நிழல் பாவையைப் போல், தன்னுடைய மனைவிக்கு, அவள் விரும்பியவற்றைச் செய்வான்.

 

குறிப்பு:  இரா. இராகவையங்கார் உரை – விளைந்து உகு தீம் பழம் பழன வாளை கதூஉம் ஊரன் என்றது, தலைவியர்க்குரிய தலைவரைக் கிடைத்தபோது துய்ப்பது பரத்தையர் இயல்பென்று குறித்தாளாம். தம் இல் (3) – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – தம் இல் என்பதில் ‘தம்’ சாரியை, உ. வே. சாமிநாதையர் உரை – தம்முடைய வீட்டில், பொ. வே. சோமசுந்தரனார் உரை – தம்முடைய வீட்டில்.  உள்ளுறை – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – கழனிக் கரையிலிருந்து தானே உதிர்ந்த பழத்தை வயலிடத்து வாளை கௌவினாற் போல இவ்வூரில் உள்ள எல்லா இன்பங்களையும் தாமே கிடைப்ப முயற்சியின்றி எய்துகின்றான் என்று உள்ளத்தான் உவமங் கொள்ளவைத்தவாறு காண்க.  கதூஉம் – இன்னிசை அளபெடை, மாஅத்து – அத்து சாரியை, தாய்க்கே – ஏகாரம் அசை நிலை.

 

சொற்பொருள்:  கழனி – வயல், மாஅத்து – மாமரத்தினது (அத்து சாரியை), விளைந்து உகு – பழுத்து விழும், தீம்பழம் – இனிய பழம், பழன – குளம், வாளை – வாளை மீன், கதூஉம் – கவ்வி உண்ணும், ஊரன் – ஊரைச் சார்ந்தவன், எம் இல் – என்னுடைய இல்லத்தில், பெருமொழி கூறி – பெரிய சொற்களைக் கூறி, தம் இல் – தன்னுடைய இல்லத்தில், கையும் காலும் தூக்கத் தூக்கும் – பிறர் தூங்கும்பொழுது தானும் கையையும் காலையும்  தூக்கும், ஆடிப் பாவை போல – கண்ணாடியில் தோன்றுகின்ற நிழல் உருவத்தைப் போல, கண்ணாடியில் தோன்றுகின்ற பொம்மையைப்போல், மேவன செய்யும் – விரும்புவதைச் செய்வான், தன் புதல்வன் தாய்க்கு – தன்னுடைய மனைவிக்கு