களந்தை பீர் முகமது

Image result for இஸ்லாமியக் குடும்பம்

நெல்லை மாவட்டம் களக்காடைச் சேர்ந்த இவர் பல ஆண்டுகளாகக் கதை, கட்டுரை, விமர்சனம் என பல தளங்களில் இயங்கி வருபவர். ‘காலச்சுவடு’  இதழின் ஆலோசனைக் குழுவில்  பணியாற்றுபவர். இலக்கியச் சிந்தனை, த.மு.எ.ச, கலை இலக்கியப் பெருமன்றம் போன்ற அமைப்புகள் பல இவரது பங்களிப்பை அங்கீகரித்துள்ளன

# # #

யாசகம் கதை இப்படித் தொடங்குகிறது

வாப்பா அன்று உற்சாகமாக வந்தார். முகத்தில் ஒரு மலர்ச்சி .அவர் செருப்பை கழட்டி போடும்போதே அந்தத் துள்ளல் தெரிந்தது. பொதுவாகவே வியாபாரம் இப்போதெல்லாம் நன்றாக இருப்பதாக அவர் சொல்வதை தவுலத் கேட்டிருக்கிறாள் வாங்கி வந்த காய்கறிகள் அன்றைக்கே விற்றுவிட்டால் நல்ல வியாபாரம் இன்னும் கொஞ்சம் நன்றாக வைத்தால் வியாபாரத்தைப் பெருக்கிவிடலாம் என்று வாப்பா சொல்வதும் தவ்லத்திற்குத் தெரியும்.

ஒரு சிறிய இஸ்லாமியக் குடும்பத்தின்  மூத்த பெண் தவ்லத்  பார்வையில்  கதை போகிறது. தவ்லத் திருமண வயதில் இருக்கிறாள். அதுவரை தவ்லத்தின் நிக்காஹ் குறித்து வாப்பா வெளிப்படையாகப் பேசியது இல்லை என்றாலும், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தவ்லத்தைத் தள்ளிவிடவேண்டும் என்கிற கவலை அவருக்கு உண்டு.  அது முடிந்து  சில வருடங்கள் கழித்து,  பள்ளிக்கு போய்க்கொண்டு இருக்கும்  இளையவளையும் தள்ளிவிட்டக வேண்டுமே?     ஒரே மகனான   புகாரி பற்றி வாப்பாவிற்கு எப்போதும் புகார் தான்.  மனம்கொண்டால் தான் தந்தையின் கடையைக் கவனித்துக் கொள்வான். பெரும்பாலும் ஊர்  போக்கிரிகளுடன் ஊர் சுற்றுவது அவன் வாடிக்கை.

இதுவரையில் கைக்கும் வாய்க்கும் மட்டுமே சரியாக இருக்கின்ற வருமானம்.  எப்போதும் நல்ல சாப்பாடு போட்டு இருக்கின்றார் வேறு எந்த விதமான வசதிகளும் பெருகி விடவில்லை. டெலிபோன். டெலிவிசன் எல்லாம்  இன்றியமையதாகிவிட்டப்  பிறகுதான் அவை வீட்டிற்கு வந்தன.

தந்தையின் மலர்ச்சிக்கு என்ன காரணம் இருக்கக்கூடும் என்று தவ்லத் யோசிக்கிறாள். வியாபாரம் பெருக ஏதேனும் சந்தர்ப்பம் வாய்த்திருக்கலாம். அல்லது ஏதேனும் வரனைப் பற்றிய தகவல்களுடன் வாப்பா வீட்டிற்கு  வந்து இருக்கலாம். என்னவென்று அவர் தான் சொல்ல வேண்டும். அதுவும் உம்மா மூலமாகத்தான்  தெரியப்படுத்துவார்.

வாப்பா  ருசித்துச் சாப்பிட்டார்.  வேறு எங்கெல்லாமோ பார்வைகளில் பார்வைகளைத் திருப்பி, திரும்பிய இடமெல்லாம் பார்வையை அப்படியே வைத்துவிட்டு வாய்க்குள் போன உணவை மென்று கொண்டிருக்கிறார் இது புது வாப்பா அவர் இன்று சாப்பிடுவது ரொம்ப அழகாக இருந்தது தவ்லத்துக்கு.

 

 

வாப்பா கொண்டுவந்திருக்கும் நல்ல செய்தி எதுவாக இருக்கும் என்று மிக ஆர்வத்துடன் காத்துக் கொண்டு இருந்தால் இருந்தாள் தவ்லத்.  இந்த வருடம் ஹஜ் யாத்திரை போக இருப்பதாகத் தெரிவிக்கிறார் வாப்பா.  அவருடைய உற்சாகம் சரியே. அவரது தூரப் பார்வையில் ஹஜ் யாத்திரை மட்டுமே இருந்தது.

அதை புரிந்து கொண்ட அடுத்த கணம்தான் தவுலத் உணர்ந்தாள் தனக்கான மணவாளன் அந்தப் பார்வையில் இல்லை என்பதை!  இப்போது அவள் மட்டுமே ஒரு குதிரையில் மெதுவாக செல்கிறாள் மறுபடியும் மரங்கள் நிறைந்த ஒரு பொட்டல் வெளி. பரவாயில்லைமுதலில் அப்பாவின் ஆசை நிறைவேறட்டும்.

எப்படியோ மார்க்கக்   கடமையை நிறைவேற்ற நினைக்கிறார். வாப்பா. பல கஷ்டங்களையும் ஒதுக்கிவைத்துவிட்டு துணிச்சலாக ஹஜ்  போவதே பக்தியின் அடையாளம் என்பது வாப்பாவின் முடிவு . இதுபோல வாப்பாவின் ஹஜ் பயணம் பற்றி மற்றவர்கள் சொல்லக் கூடும்.   சிலர் ஹஜ் அடிக்கடி போய் வருகிறார்கள் ஆனால் அவர்கள் இஸ்லாமியரின் மற்றொரு கடமையான  ‘ஜகாத்’   கொடுப்பதில்  ஆர்வம் காட்டவில்லை என்று குற்றச்சாட்டும் உண்டு.

வாப்பாவின் வியாபாரம் சூடுபிடிக்கத் தொடங்கி இருபது நாட்களே ஆகியிருந்தன ஹஜ் போவதற்கான பணம் கட்டாயம் சேர்ந்து இருக்காது.   உம்மா  வந்ததும் இந்த விஷயத்தை கேள்விப்பட்டு அதிர்ந்து விட்டாள்.  நபிஸஸ் அம்மா ‘யா அல்லாஹ் இது என்ன சோதனை. இரண்டு குமருகள்  வீட்டிலே இருக்கும் போது  எப்படி சாத்தியம்?’ என்கிறாள். 

ஆனால் யாத்திரை செய்ய வாப்பா மிகவும் உறுதியாக இருக்கிறார். ஊரில் எங்கே திரும்பினாலும் ஹாஜிமார்களாக இருக்கிறார்கள். தானும் அதுபோல் ஆகவேண்டாமா என்பது வாப்பாவின் கேள்வி.

நீண்ட ஜிப்பா, வெள்ளைக் கைலி,  நீங்காத தொப்பி மற்றும் நீண்ட வெண்தாடி  .. இவைகளுடன் தோன்றும் ஹாஜிமார்களுக்கு இடையில் தொப்பியில்லாமல் பான்ட் ஷர்ட் போட்டு தாடி மட்டும் கொண்ட ஹாஜிமார்களும் வந்து சேர்ந்துவிட்டார்கள். ஹாஜிமார்களுக்கும் வாய்தா, வழக்கு என்று வந்துவிட்டது. எந்தச் சொத்துத் தகறாரிலும் இரண்டு பக்கமும் இரண்டிரண்டு ஹாஜிமார்களோ மும்மூன்று ஹாஹிமார்காகளோ இருக்கிறார்கள். ஒரு ஹாஜியார் வீட்டுப் பெண் இன்னொரு ஹாஜியாரால் தலாக் செய்யப்பட்டு திரும்புகிறாள். பஸ் ஏறும்போது அடிதடி என்று  ரத்தக் காயத்துடன் திரும்பும் ஹாஜிமார்களும் இருக்கிறார்கள்.    இதையெல்லாம் அண்ணன் புகாரி சொல்லும்போது, தவுலத் ‘ஹாஜியார் மேல் அண்ணனுக்குப்  பொறாமை’ என்று நினைத்துக்கொள்வாள். மார்க்கத்திற்கு எதிராகப் பேசுகிறானே என்ற எரிர்ச்சலும் குடும்பத்தினருக்கு உண்டு.

புகாரி வீட்டிற்கு வருவதற்கு என்று எந்த குறிப்பிட்ட நேரமும் கிடையாது.  அவனால் குடும்பத்திற்கு எந்தப் பயனும் இல்லை. அவன் பேசுவது எல்லாமே ஏறுக்கு மாறானது என்பது தவ்லத் உட்பட எல்லோரின் எண்ணம்.  

 

 

 

‘ஹஜ் பணத்திற்கு என்ன செய்யப்போறீங்க?’ என்று கேட்கிறார் ம்மா நபீஸ்.  

இதைக் கேட்டதும் அவர் தாடியைத் தடவினார். ‘ கடனா பணம் கேட்டுப் பார்த்தேன். ஒண்ணும் நடக்கல.  கடைய எம்பேர்ல எழுதித் தந்தீங்கன்னா பணம் தாரேன்னு சொல்றான் எலெக்ட்ரிக் கடை மூசா. வேறு எங்கேயும் கடன் கெடைக்கலேன்னா அப்படித்தான் செய்யணும்!’ 

 “யா ரஹ்மானே! நீங்க சொல்றது ஆண்டவனுக்கே பொறுக்காதே” என்று பதறிவிடுகிறார் நபீசம்மா. கடையையும் கொடுத்துவிட்டால் அப்புறம்  வருமானமே இல்லாமல்  என்ன செய்வது என்று பயம் வந்துவிடுகிறது. மேலும் இரண்டு பெண்களின் நிக்காஹ் எப்படி நடக்கும்?

அண்ணன் புஹாரி சொல்வதிலும் உள்ள நியாயம் இப்போது தவ்லத்திற்குப் புரிகிறது .

தவ்லத்திற்கு மூச்சு முட்டிவிட்டது.  அவள் சட்டென்று விலகிப்போய் அழ ஆரம்பித்துவிட்டாள்.  புகாரி காக்கா  உடனே இங்கு வந்து குதிக்க வேண்டும் என்று அங்குமிங்குமாக அழுத கண்ணீரோடு பரபரத்துப் பார்த்தாள்.

நபீசம்மாவும் அழ ஆரம்பிக்கிறாள்.

 “என் புள்ளைங்களை நான் காப்பாத்துவேன். எப்படியாவது காப்பாத்துவேன். இந்தப் பார்- இந்தப் பார்… தெருவில நின்னு பிச்சையெடுத்தாவது – இப்படி பிச்சையெடுப்பேன்” என்று தன் தோளில் கிடந்த துண்டை யாசகம் செய்பவனைப் போல நடித்து நீட்டிக் காட்டினார்

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தொழுகை நேரத்தில் யாசிக்கும் குரல்களோடு தன் வாப்பாவின்  குரலும் ஒலிப்பதுபோல் தவ்லத்திற்கு  தோன்றுகிறது  

தொழுகை முடிந்து கூட்டம் கூட்டமாக பள்ளிவாசல்களிருந்து  கரைந்து வழியும் தொழுகையாளர்களிடமிருந்து ஏதோ ஒரு சில கைகள் அவ்வப்போது அபூர்வாமாய் நீண்டு சின்னச் சின்ன  கரன்ஸிநோட்டுகளைக்  கைமடக்காக போட்டபோதும், விரித்துப் பிடித்த துணியில் இன்னும் எவ்வளவோ வெற்றிடம்.  வாப்பா.. ம்மாவின் குரல்களும் சளைக்காமல்  கேட்டபடியே இருக்கின்றான் நீண்ட காலத்துக்குமாக.

என்று முடிகிறது .

# # #

இஸ்லாமியக் கதாபாத்திரங்கள் இல்லாத இவர்கதைகளும் நிறைய உண்டு.  தவிர, இஸ்லாமியக்  குடும்ப மற்றும்  சமுதாயப் பின்னணி பல   கதைகளில் இருந்தாலும், சொல்லப்படும் கருத்துகள் அனைத்து மதத்தினருக்கும் பொதுப்படையாகப்  பொருந்தும் என்று தோன்றுகிறது. இந்தக் கதையும் அப்படித்தான்.