Daily Archives: March 16, 2020
நோ பேங்க் – சந்திரமோகன்

அவள் வந்தாள்! – தில்லைவேந்தன்

சரித்திரம் பேசுகிறது – யாரோ
ராஜசிம்மன்
‘புத்தன் வந்த திசையிலே போர்’- என்றான் ஒரு கவிஞன். இந்திய சரித்திரத்தின் ஒவ்வொரு ஏட்டிலும் – போர் தனது வாளால் எழுதிய ரத்தக்கறை! சென்ற இதழில் சாளுக்கிய விக்ரமாதித்யனும் பல்லவ பரமேஸ்வரனும் அடித்துக்கொண்டதைப் பார்த்தோம். கி பி 680 ல் இந்த இருவரும் ஒரே வருடத்தில் காலமானர். அதற்குப் பிறகு நடந்ததைப் பார்ப்போம்.
சாளுக்கிய கதை:
விக்ரமாதித்யன் மகன் வினயாதித்யன் கி பி 681 முதல் 696 வரை சாளுக்கிய அரசை ஆண்டான். வினயாதித்யன் மகன் விஜயாதித்யன். வினயாதித்யன் வட இந்தியாவில் ஒரு படையெடுத்து வென்றான். அந்தப் போரில் இளவரசன் விஜயாதித்யன் சாகசங்கள் செய்திருந்ததான். விஜயாதித்யன் கி பி 696 முதல் 733 வரை அரசாண்டான்- 37 வருடம்! அவன் காலம் அமைதிக் காலம். அதனால் நாட்டில் செல்வம் கொழித்தது. ஆலயங்கள் பல எழுப்பினான்.
பல்லவர் கதை:
பரமேஸ்வரன் கி பி 680ல் காலமானான். அவன் மகன் யுவராஜா ராஜசிம்மன் மன்னனானான். இவனும் கி பி 720 வரை அரசை ஆண்டான். நாற்பது வருடம்!
வினயாதித்யன், விஜயாதித்யன் அதே நேரம் சாளுக்கிய நாட்டை ஆண்டனர். இவன் காலமும் பொதுவாக அமைதிக் காலம். ஆலயங்கள் பல எழுப்பினான். அழகிய கைலாசநாதர் ஆலயம் எழுப்பினான். மாமல்லபுரத்தில் கடற்கரைக் கோயில் அமைத்தான். இலக்கியம் வளர்த்தான். மகா கவி தண்டி அவன் அரசவையை அலங்கரித்தார். அவர் ராஜசிம்மனின் ஆசிரியர். பாண்டிய நாடும் அமைதியாக இருந்தது. தென்னிந்தியா ஒரு அமைதிப்பூங்கா ஆயிற்று.
இப்படி அமைதியாயிருந்தால் ‘சரித்திரம் பேசுகிறது’ எழுதுவதற்கு சமாச்சாரம் எங்கே?
‘ஒய் திஸ் கொலவேரி’ – என்று தானே கேட்கிறீர்கள்?
நாம் என்ன செய்வோம்? நமக்கு வேண்டியது சுவாரஸ்யமான கதை.
ராஜசிம்மனும் , விஜயாதித்யனும் பொட்டு வைத்துக்கொண்டு பொங்கல் சாப்பிட்டார்கள் என்று கதை சொன்னால் நீங்கள் அடிக்கவருவீர்கள்!!
அந்த அமைதிக்கு முன் ஒரு சிறு கதை விரிகிறது.. (ஆமாம் போர் தான்!):
வினயாதித்யன், ராஜசிம்மன் இருவரும் ஒரே நேரம் அரசனாகினரல்லவா?
வினயாதித்யன் தந்தை விக்ரமாதித்யன் – தன் தந்தை புலிகேசி அழிக்கப்பட்ட அவமானமும், பரமேஸ்வரனிடம் தான் பெற்ற சில தோல்விகளும் -மனதை அரித்திருந்தது. சாகும் தருணம்: “வினயாதித்யா .. இந்தப் பல்லவனைப் பழி வாங்கினால் தான் என் கட்டை வேகும்” – என்றான்.
சாளுக்கியத்துக்கும் பல்லவத்துக்கும் இடையே இருந்தது கங்க நாடு. வினயாதித்யன் முதலில் கங்கபாடியைத் தாக்கினான். கங்கன் முதலாம் சிவமாறனை தோற்கடித்து பிறகு ராஜசிம்மனை தாக்கினான். போர் கடுமையாக நடந்தது. போரில் ஒரு முடிவும் ஏற்படாமல் முடிந்தது. இரு தரப்பினரும் தங்கள் தங்கள் தலைநகருக்கு திரும்பினார்கள்.
பல்லவ நாட்டில் மழை பெய்யவில்லை. கடுமையான பஞ்சம் தலைவிரித்தாடியது. கஜானா – மூலபண்டாரம் – வற்றியது. பஞ்சத்தால் காஞ்சிபுரம் பொலிவிழந்தது. கவி தண்டி , மற்றும் அரசவை அறிஞர்களும் காஞ்சி விட்டு நாடெங்கும் திரிந்தனர். ராஜசிம்மனும் சில காலம் காஞ்சி நகர் துறந்தான். மூன்று வருடம் பஞ்சம். ராஜசிம்மனும் காஞ்சி வந்தான். ஒரு நாள் புத்த துறவி ஒருவர் காஞ்சிக்கு வந்தார். அவரது பெயர் வச்சிரபோதி.
ராஜசிம்மன்: “துறவியே! மழை வருமாறு தாங்கள் இறைவனை வேண்டுங்கள். மற்ற சமயக் குறவர்களும் தங்கள் இறைவனை வேண்டுங்கள்”. வேண்டுதல் பலனளித்தது.
வானம் கண்ணீர் விட்டது. பல்லவ நாடு மகிழ்ந்தது. ஒரு வருடத்தில் நாடு செழிப்பானது. ராஜசிம்மன் உடனே கைலாசநாதர் ஆலயம் கட்ட ஆரம்பித்தான். சில வருடம் கழிந்தது. கைலாசநாதர் ஆலயம் கட்டப்பட்டு முடிந்தது.
ராஜசிம்மன் அரசகுருமார்களை சந்தித்து கும்பாபிஷேகம் செய்ய நாள் குறித்தான். பூசலார் என்ற நாயன்மார் – திருநின்றவூரில் -தானும் சிவனுக்கு ஒரு ஆலயம் எழுப்ப வேண்டும் என்று ஆசைப்பட்டார். அது முடியாமல் போகவே – தனது மனத்திலேயே ஆலயம் கட்டி – அதற்குக் கும்பாபிஷேகம் செய்ய நாள் குறித்தார். ராஜசிம்மன் குறித்த அதே நாள்! ராஜசிம்மன் கனவில் சிவன் தோன்றி “பூசலார் கட்டிய கோவிலில் அன்று எழுந்தருளுவோம். உனது கும்பாபிஷேகம் செய்ய வேறு நாள் பார்த்துக்கொள்” என்று கூறி மறைந்தார்.
ராஜசிம்மன் திருநின்றவூர் சென்று பூசலாரை சந்தித்து “ஐயா! உங்கள் கோவில் எங்குள்ளது? அதைக் காட்டுங்கள்” -என்றார். பூசலார் திகைத்தார். தமது வரலாற்றை மன்னனிடம் கூறினார். ராஜசிம்மன் தனது கனவைப் பற்றிப் பூசலாரிடம் சொன்னார்.
அகக்கோவில் கட்டிய அன்பருக்கு வணக்கம் செலுத்தி மீண்டான்! (நன்றி: பெரியபுராணம் எழுதிய சேக்கிழார்).
சில வருடங்களுக்கு அமைதி நிலவியது. ஆனால் நீறு பூத்த நெருப்புப்போல பகை (யுத்தங்கள் தான் வேறென்ன) அடுத்த தலைமுறையில் தொடரும். ஆவலுடன் காத்திருக்கும் வாசக நண்பர்களே.. விரைவில் சந்திப்போம்.
அம்மா கை உணவு (25) – சதுர்புஜன்

நம் வீடுகளில் அன்றாடமோ அல்லது விசேஷ நாட்களிலோ தயாரிக்கும் உணவு வகைகளை வரிசைப்படுத்தி அவற்றின் மகிமைகளை வியந்து எளிய தமிழில் பாடப்படும் கவிதைப் பாடல்கள் இவை. இது ஒரு அறுசுவைத் தொடர். ஒவ்வொரு மாதமும் ஒரு கவிதைப் பாடலை வாசகர்களுக்கு வழங்கி மகிழ்கிறேன்.
- கொழுக்கட்டை மஹாத்மியம் – மார்ச் 2018
- இட்லி மகிமை – ஏப்ரல் 2018
- தோசை ஒரு தொடர்கதை – மே 2018
- அடைந்திடு சீசேம் – ஜூன் 2018
- ரசமாயம் – ஜூலை 2018
- போளி புராணம் – ஆகஸ்ட் 2018
- அன்னை கைமணக் குறள்கள் – செப்டம்பர் 2௦18
- கலந்த சாதக் கவிதை – அக்டோபர் 2018
- கூட்டுக்களி கொண்டாட்டம் – நவம்பர் 2018
- சேவை செய்வோம் – டிசம்பர் 2018
- பஜ்ஜி பஜனை – ஜனவரி 2019
- பருப்புசிலி பாசுரம் – பிப்ரவரி 2019
- வெண்பொங்கல் வேண்டுதல் – மார்ச் 2019
- பாயசப் பாமாலை – ஏப்ரல் 2019
- ஊறுகாய் உற்சாகம் – மே 2019
- பூரி ப்ரேயர் – ஜூன் 2019
- இனிக்கும் வரிகள் – ஜூலை 2019
- வடை வருது ! வடை வருது ! – ஆகஸ்ட் 2019
- வதக்கல் வாழ்த்து -செப்டம்பர் 2019
- சுண்டலோ சுண்டல் ! அக்டோபர் 2019
- அவியல் அகவல் நவம்பர் 2019
- சாம்பார் சக்தி டிசம்பர் 2019
- உப்புமா உண்மைகள் ஜனவரி 2020
- சீடை, தட்டை, முறுக்கு பிப்ரவரி 2020
- துவையல் பெருமை !
துவையல் எனில் எனக்கென்றும் கொண்டாட்டம்தான் –
தஞ்சாவூர்க்காரன் நல்ல சுவையறிந்தவனாம் !
கரணம் தப்பினாலே மரணம்தானே !
நல்ல துவையல் செய்வதுவும் வித்தை தானே !
ஏனோ தானோ என்றெல்லாம் செய்தால் வராது –
போடுவதை போட்டால்தான் துவையல் சுவைக்கும் !
அளவு விகிதம் அத்தனையும் அத்துப்படி ஆனா –
துவையல் சுவை நாவினிலே நற்றமிழாகும் !
உப்பு மிளகாய் புளியை வைத்து எவரும் அரைக்கலாம் –
அத்தனையும் ஒற்றுமையாய் சேர்ந்து வரணுமே !
துவையல் கலையை கற்றுவிட்டால் சமையல் ராணிதான் –
மற்றதெலாம் தானே வரும் எளிதில் கூடுமே !
தேங்காய்த் துவையல் துவையல்களின் தலைவனாகுமே !
அதிலுள்ள தங்க ருசி தரணியில் இல்லை !
பருப்புத் துவையல் பந்து பந்தாய் உண்போம் நாமே !
மிளகு ரசம் கூட வேண்டும் முடிவில்லாமலே !
வெங்காயத் துவையல் வாசம் – வாயிலே ஊறும் !
விழுங்கத் தோணும் சுடச் சுட சாதம் சேரும் !
கத்திரியை நன்கு சுட்டால் நாசியைத் தாக்கும் !
துவையலரைத்து வெட்டும் போது இன்னும் கேட்கும் !
செரிமானம் சரியாக இஞ்சித் துவையல் !
வாயில் ருசி மீண்டும் வர புதினாத் துவையல் !
சாத்வீகம் கூடும்போது கொத்தமல்லியாம் –
எந்தக் காயின் தோலினையும் துவையலாக்கலாம் !
எந்த ஊரு போனாலும் இதுபோல் இல்லை !
அன்னை செய்த துவையலைப் போல் எதுவும் இல்லை !
எதனைப் போட்டு அரைத்தாலும் இதன் சுவை வருமா ?
அன்னை காட்டும் அன்பைப் போல் எதுவும் வருமா ?
என்ன பிடிக்கும் ? வாட்ஸ் அப்பில் வந்தது
மனதைத் தொடும் கதை.
வாட்ஸ் அப்பில் வந்தது
எழுதியது யார் என்று தெரியவில்லை
யாராயிருந்தாலும் அவர் நம் பாராட்டுக்குறியவர்.
என்ன பிடிக்கும் ?
“அண்ணா, டாக்டர்ஸ் என்னதான் சொல்றாங்க?” ராதுவின் குரலில் பதட்டம்.
” அதேதான்மா. அப்பாவுக்கு ஹார்ட் பம்பிங் ரேட் ரொம்ப குறைச்சலா இருக்கு. ஏற்கெனெவே ரெண்டு சர்ஜரி ஆனதால இப்போ ஒண்ணும் பண்ண முடியாது. முடிஞ்ச அளவு மருந்து கொடுத்தாச்சு. இருக்கற வரைக்கும் அவரை சந்தோஷமா வச்சிக்குங்கன்னுதான் சொல்றாங்க”.
” இப்போ அப்பா எப்படி இருக்கார்?”
“நார்மலா எப்பவும் போலதான் இருக்கார். இந்த நிமிஷம் வரை பைன்”.
” அண்ணா, நான் ஒண்ணு சொல்றேன் கேளு. நான் பசங்களை கூட்டிட்டு இன்னும் ரெண்டு நாள்ல வரேன். நீ ரகு அண்ணாவையும் எல்லோருடனும் வரச்சொல்லு. எல்லாருமா சேர்ந்து அப்பாவோட நாலு நாள் இருக்கலாம். “
” சரிடாம்மா . நான் அவன்கிட்ட பேசறேன்.”
” அம்மாவுக்குத் தெரியுமா?”
” தெரியாது. ஹாஸ்பிடல் போனோம். சரியாகி வந்துட்டார்னுதான் நினைச்சிண்டு இருக்கா”.
” அப்படியே இருக்கட்டும். அம்மாவை கவலைப்படுத்த வேண்டாம்”.
” சரி, நீ டிக்கெட் புக் பண்ணிட்டு சொல்லு. நான் காரை எடுத்துண்டு ஸ்டேஷனுக்கு வரேன்”.
சாப்பிடும்போது அம்மாவிடமும் அப்பாவிடமும் ராதுவும் ரகுவும் வருவதைப் பற்றி சொன்னான் ரவி. அவ்வளவுதான், அம்மாவுக்கு இரண்டு இறக்கை முளைத்த மாதிரி ஆகி விட்டது. அப்பாவின் மலர்ந்த முகம்தான் அவருடைய சந்தோஷத்தின் அறிகுறி.
” எனக்கே ஒரு வாரமா அவா ரெண்டு பேரையும் குழந்தைகள் எல்லாரையும் பார்க்கணும்னு ஒரு நினைப்பு. நல்லதாய் போச்சு. கொஞ்சம் சாமான் எல்லாம் ரெடி பண்ணி வைக்கிறேன். நீ சித்த போய் மெஷின்ல அரைச்சுண்டு வந்துடு. குழந்தைகளுக்கு கொஞ்சம் பட்ஷணம், அப்புறம் கொஞ்சம் கஞ்சி மாவு, சாம்பார் பொடி, புளிக்காய்ச்சல், சேவை மாவு. ரகு பொண்டாட்டிக்கு என் கை முறுக்கு ரொம்ப பிடிக்கும் …”
” அம்மா,அம்மா… நிறுத்து கொஞ்சம் மூச்சு விடு..எல்லாம் பண்ணலாம். எங்க எல்லாருக்கும் என்ன பிடிக்கும்னு சொல்றியே, அப்பாவுக்கு என்னல்லாம் பிடிக்கும் சொல்லு”.
உங்கப்பாக்கு நான் என்ன பண்ணி குடுத்தாலும் பிடிக்கும்தான்”. கீற்றாய் மின்னி மறைந்த நாணம் கலந்த பெருமை அவள் வைரத்தோடை மங்கச் செய்தது.
” சரி, அப்பாக்கு பிடிச்சதா ரெண்டு ஐட்டம் சொல்லு பார்ப்போம்.”
” நான் தினமும் அவர் இலைல எஸ்ட்ராவா என்ன போடறேன்னு பார்த்து தெரிஞ்சுக்கோடா”. அம்மா சிரித்தபடி எழுந்து சென்றாள்.
ரவிக்கு ஒரு கணம் அம்மாவை நினைத்து கவலையாக இருந்தது. எப்படி தாங்குவாள்?
ராதுவும் ரகுவும் வந்தவுடன் வீடு களை கட்டி விட்டது. அம்மா சமையலறையோடு ஐக்கியம் ஆகி விட்டாள். அப்பாவை சாக்கு வைத்து எல்லோருக்கும் பிடித்தது எல்லாம் அம்மா செய்து தள்ளிக்கொண்டிருந்தாள். அப்பா எல்லோருடனும் சிரித்துப் பேசி மிக மகிழ்ச்சியாக இருந்தார். அப்பாவுக்குப் பிடித்த பழைய பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. ஆளாளுக்கு ஆசையாக அப்பாவுக்கும் அம்மாவுக்கும் புது ஷர்ட்டும் புடவையும் வாங்கினார்கள். வீடு வெகு நாட்கள் கழித்து கூச்சலும் கேலியும் விளையாட்டும் அமர்க்களமுமாய் ஆரவாரப்பட்டது. அப்பாவின் உடல்நிலையைப் பற்றிய கவலை கூட சற்று மறந்து விட்டது. சனிக்கிழமை அன்று வெளியில் போவதாகத் திட்டம் போட்டார்கள்.
“எனக்கு எல்லாருடனும் பீச் போகணும்னு ஆசை. அப்படியே வெளியில சாப்பிட்டுட்டு வரலாம். அம்மாவுக்கு ஒரு வேளை ரெஸ்ட்டா இருக்கட்டும்.” அப்பா சொன்னார்.
அன்றைய பொழுது மிக இனிமையாக கழிந்தது. மகிழ்ச்சித் தருணங்கள் எல்லாம் டிஜிட்டல் உதவியுடன் அமரத்துவம் பெற்றன. ஹோட்டலுக்கு சாப்பிடச் சென்றார்கள். ” அப்பா, என்ன சாப்பிடறேள்?”
அப்பாவுக்கு பிடித்தது எல்லாம் பார்த்து பார்த்து ஆர்டர் செய்தார்கள்.
” அம்மா, உனக்கு என்ன வேணும்?”
” எனக்கு சாம்பார் இட்லி வேண்டாம்,காரமா இருக்கு.” ஒரு வாண்டு கத்தியது.
” இதே வேலை..எதையாவது ஆர்டர் பண்ண வேண்டியது, ஒரு வாய் சாப்பிட்டுட்டு வேண்டாங்க வேண்டியது. ” ராது குழந்தையிடம் சிடுசிடுத்தாள்.
” குழந்தையை வையாதே. நான் அதை எடுத்துக்கறேன். அவனுக்கு வேணுங்கிறதை வாங்கிக்கொடேன்” அம்மா .
” உனக்கு வேணும்ங்கிறதை சொல்லும்மா. இவனை விடு”.
” பரவாயில்லை, எனக்கு இட்லி போதும், அவன் கேட்கிறதை ஆர்டர் பண்ணு “.
குழந்தைகள் மிச்சம் மீதி வைத்ததை அம்மாவும் ராதுவும் பகிர்ந்து கொள்ள ஒரு வழியாக டின்னர் முடிந்தது.
திரும்ப வரும்போது அப்பா மிக நெகிழ்ச்சியாக இருந்தது தெரிந்தது.
இரவு தூங்குமுன் அம்மாவிடம் சொன்னார்.
” ரொம்ப நாள் கழிச்சு குழந்தைகள் எல்லோரோடும் இருக்கறது ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஒவ்வொண்ணும் பார்த்து பார்த்து செய்யறதுகள். எத்தனை பேருக்கு இது வாய்க்கும்?”
” நீங்க சொல்றது சரிதான்”. அம்மா ஆமோதித்தாள்.
” ஆனா எனக்கு ஒரு சந்தேகம். எப்பவும் அப்பா, இதை சாப்பிடக்கூடாது, அதை சாப்பிடக்கூடாது, உடம்புக்கு ஆகாதுன்னு சொல்ற பசங்க இப்ப என்ன ஒரு ரெஸ்ட்ரிக்க்ஷனும் இல்லாம ஓவர் உபசாரம் பண்றதுகளேன்னுதான்.”
” ஒரு ரெண்டு நாள் எல்லாரும் சேர்ந்து இருக்கறதுனாலதான் இதெல்லாம். அப்புறம் நானே உங்க ரெகுலர் டயட்டுக்கு மாத்திடுவேன்”. அம்மா சிரித்தாள்.
“அதானே பார்த்தேன், சரி , தூங்கலாம். டயர்டா இருக்கு, நாளை காலம்பற மெல்ல எழுந்துக்கோ. லீவு நாள்தானே”.
” பார்க்கலாம். அதுவாவே சீக்கிரம் எப்பவும் போல முழிப்பு வந்துடும்.”
ஆனால் மறுநாள் காலை அம்மாவுக்கு சீக்கிரம் முழிப்பு வரவில்லை. எல்லோரும் எழுப்பியும் அவள் முழித்துக் கொள்ளவே இல்லை.
வீடு உறைந்து போனது. யாருக்கும் அம்மாவின் இழப்பை ஜீரணிக்க முடியவில்லை. அப்பா அப்பான்னு அம்மாவை கவனிக்காம விட்டிட்டோமோ, ஒரு நாள் கூட ஒரு வலின்னு கூட சொன்னது இல்லையே என்று புலம்பி மருகினார்கள். அதிர்ச்சியிலும்,துக்கத்திலும் பத்து நாட்கள் போனது தெரியவில்லை.
” அம்மாவுக்கு என்ன பிடிக்கும்னு சொன்னால் சமையல்ல சேர்த்துடலாம்”.சமையல் மாமி ராதுவிடம் கேட்டார்.
“அம்மாவுக்கு என்ன பிடிக்கும்?…ரகு அண்ணா நீ சொல்லேன், அம்மாவுக்கு என்ன பிடிக்கும்? நான் இங்கே வரும்போதெல்லாம் அம்மா எனக்கு பிடிச்சதை செய்வா. அவளுக்கு என்ன பிடிக்கும்னு இப்போ ஒன்னும் தோணலியே..”
” அம்மாவுக்கு என்ன பிடிக்கும் ? ஒவ்வொருத்தருக்கும் என்ன பிடிக்கும்னு பார்த்து பார்த்து செய்வாளே தவிர, அவளுக்குப் பிடிச்சதை கவனிக்கலையே, ரவி, நீ சொல்லு, அம்மாக்கு என்னல்லாம் பிடிக்கும் ?”
” ம்ம்..எப்பவும் எல்லாருக்கும் போட்டுட்டு அம்மா தனியாத்தான் சாப்பிடுவா..எனக்கு இது பிடிக்கும்னு எதுவும் அவ பண்ணினதா தெரியலையே..கடவுளே, என்ன இது..அம்மாக்கு என்ன பிடிக்கும் …”
” அப்பா, அம்மாவுக்கு என்ன பிடிக்கும்?”
” அம்மாவுக்கு… அம்மாவுக்கு என்ன பிடிக்கும்”?
*
குவிகம் இல்லம்
குவிகம் பொக்கிஷம் கர்வத்தின் விலை – உருதுக்கதை -சிராஜ் அன்வர்
ஒரு முத்து மதிப்பு மிக்கதாக இருந்தால், அது விலை மதிப்பற்றது என்பார்கள். முத்துக்கள் சிப்பிப் புழுக்களில் விளைகின்றன. புழுக்கள் சிப்பிகளுள் வசிக்கும். அவை சமுத்திரத்தின் அடியில் கிடக்கும். அப்படிப் பட்ட சிப்பிப் புழு ஒன்றின் கதை தான் இது.
இந்தப் புழு தன்னிடம் தானே பெரும் மகிழ்வு கொண்டிருந்தது. உலகத்திலேயே தான் தான் அதிமுக்கியமான ஜீவன் என அது நம்பியது. உண்மைதான், பட்டுப் புழுவும் பயனுள்ளதே, ஆனால் பட்டு, முத்துக்களைப் போல் அதிக விலை பெற்றுத் தருவதில்லை. எனவே தன்னைப் பற்றி உயர்வாக எண்ணுவது தகும் என்று சிப்பிப் புழு கருதியது.
ஒரு நாள், கடலில் பெரும்புயல் வீசியது. அலைகள் உயரமாய், வீசிக் கொண்டு வெறியோடிருந்தன. இயற்கையே பயங்கரமாக தோன்றியது. அதனால் நமது சிப்பிப் புழு மென்மையான தன் கூட்டை மூடிக்கொண்டு, கடலின் கரையில் உறுதியாய்க் கிடந்தது. முயன்று, பாதுகாப்புக்காகக் கரைக்குப்போவது தன் தகுதிக்குக் கீழானது என்று அது எண்ணியது. அலைகள் வலிதாக இருந்ததால், அதன் தீர்மானத்துக்கு மாறாக, புழுவும் அதன் சிப்பியும் வாரி எடுக்கப்பட்டு கரை மீது எறியப்பட்டன. திறந்த கடற்கரையில் தான் இருப்பதைக் கண்ட புழு, எச்சரிக்கையாகத் தன் சிப்பி மூடியை உயர்த்தியது இடுக்கு வழியே உலகைப் பார்த்தது. அப்படி அது பார்க்கும் போதே, மற்றொரு பெரிய அலை அதைத் தூக்கி மேலும் தள்ளி மணலில் விட்டெறிந்தது. இப்போ, உண்மையிலேயே கலவரமான நிலைமை தான் அலைகள் அதன் மேலே புரண்டன; அதை உருட்டிப் புரட்டின. ஆயினும், அதை மறுபடியும் கடலுக்குள் இழுக்கப் போதிய பலம் அவற்றில் எதற்கும் இல்லை. அப்பாவி சிப்பிப் புழு அந்த இடத்திலேயே கிடந்தது. கடலுக்குள் திரும்பிப் போக வழியேயில்லை. அது மிகவும் கோபம் கொண்டது.
கரை அருகில் ஒரு சிறு மரம் நின்றது. அதில் ஒரு காகம் நெடு நேரமாக இருந்து, சிப்பிப் புழு படும் பாட்டைக் கவனித்தது. முடிவில், அது கீழே வந்தது. தன் அலகால் சிப்பி மீது தட்டி, “யாரது உள்ளே? கதவைத் திற” என்று அதட்டலாய் கூறியது.
சிப்பிப் புழு அதிருப்தி அடைந்தது. யாரோ மோசமான கழிசடை என்னைத் தொந்தரவு செய்கிறது” என்று அது தனக்குள் சொல்லிக் கொண்டது. பிறகு, “யார் அது?” என்று கத்தியது.
“நான் கழிசடை இல்லை. நான் ஒரு காகம் அதிலும் புத்திசாலிக் காகம். கதவைத் திறந்து வெளியே வா.”
“நான் ஏன் வெளியே வரவேண்டும்?”
“சும்மாப்பேசி மகிழ, அவ்வளவு தான் என்று காகம் மென்மையாய் சொன்னது.
“எனக்குப் பேச நேரமில்லை. நான் வெளியே வரவில்லை.”
“நல்லது. ரொம்ப சரி. ஆனால் அங்கே உள்ளே நீ என்ன பண்ணுகிறாய்?”
“நான் முத்து உண்டாக்குவதில் கருத்தாக இருக்கிறேன். மேலும், உன்னைப் போன்ற அசிங்கமான அழகற்ற ஒரு ஜந்துவுடன் நான் ஏன் பேசவேண்டும்?” என்று சிப்பிப் புழு மிடுக்காகக் கூறியது.
“ஒகோ-எவ்வளவு உயர்வு!” என்று காகம் சிரித்தது. “என் அருமை நண்பனே, நான் விரும்பியதெல்லாம் கடலின் அமைப்பு, அளவு பற்றிய சில கேள்விகளை உன்னிடம் கேட்கலாம் என்பது தான். இந்தப் பரந்த உலகம் பற்றிய சில விஷயங்களை உன்னிடம் சொல்லவும் விரும்பினேன்.”
“ஏனோ”
“ஏனென்றால், எனக்கு அறிவியலில் அதிக ஆர்வம். நான் ஒரு பல்கலைக்கழகத்தின் கூரை மேல் வசிக்கிறேன். அறிவியல் பேராசிரியரின் சொற்பொழிவுகளைக் கேட்கிறேன். அதனால் அறிவியலில் எனக்கு விருப்பம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் தான் கடல் பற்றியும், அங்கு நடப்பது குறித்தும் கேட்டறிய விரும்புகிறேன். புறா முட்டைகள், குருவி முட்டைகள் எல்லாம் அங்கு உள்ளனவா?”
“என்ன பேத்தல்” என்று வெடுக்கெனப் பேசியது சிப்பிப் புழு. “புறாக்களும் குருவிகளும் கடலில் இருப்பது போல் தான்!”
“அதைத் தானே நான் உன்னிடம் கேட்டறிய விரும்பினேன்.”
“மடத்தனமான கேள்விகள் கேட்காதே” என்றது சிப்பிப் புழு. “கடலில், என்னை போல், லட்சக்கணக்கான சிப்பிகள் இருக்கின்றன. ஆனால், அனைத்தினும் நானே பெரியவன். அதனால் நான் மற்ற சிப்பிகளுடன் பேசுவதில்லை. ஆயிரமாயிரம் வகை வர்ணமீன்கள் இருக்கின்றன; பல்லாயிரம் வகைச் செடிகள் இருக்கின்றன. அவ்வளவுதான். உன்னைப் போன்ற முட்டாள்தன அசட்டுப் பிராணிகள் அங்கு கீழே இல்லை.”
காகம் சிரித்தது. நீ என்னை முட்டாள் என்பதில் எனக்கு கவலை யில்லை. உண்மையில் நான் முட்டாள் இல்லை. நான் ஒரு காகம்- அதிலும், புத்திசாலிக் காகம், ஆனால், நண்பனே, நீ இதை எல்லாம் உன் சிறிய பொந்துக்குள் இருந்தபடியே சொல்கிறாயே, ஏன் நீ வெளியே வரக்கூடாது?”
“உனக்கு நல்ல பண்பு கிடையாதா? என்னுடன் நெருக்கமாய்ப் பேச உனக்கு என்ன துணிச்சல் நான் உன் நண்பன் இல்லை.”
“நீ கடல் அரசன் போல் அல்லவா பேசுகிறாய்!”
“சந்தேகம் இல்லாமல்-நான் தான் முத்துக்களை உண்டாக்குகிறேன். அது கடலுக்குக் கீர்த்தி சேர்க்கிறது. எல்லாம் என்னால் தான்” என்றது சிப்பிப் புழு.
காகம் குறும் சிரிப்புடன் சொன்னது: “அப்படியானால் நான் அவசியம் பார்க்க வேண்டும். இப்படி ஒரு அற்புதமான பொருளை நான் பார்த்ததேயில்லை.”
“நான் பொருள் இல்லை-நான் சிப்பிப் புழு, முத்துக்களை ஆக்குவோன்.”
“நல்லது, நல்லது. மாட்சிமை மிக்கவரே, தயவு பண்ணி வெளியே வந்து, உம்மைக் காணும் வாய்ப்பை எனக்கு அளிக்கமாட்டிரா?” என்று காகம் நகைச் சுவையுடன் கூறியது.
இல்லை; மாட்டேன். நான் கதவைத் திறக்க முடியாது. எனக்கு அதிக வேலை.”
“நீ உன் முத்தைப் பிறகு செய்யலாம். இப்ப கதவை திற. நான் எளிய, சாதாரண காகம், உன்னைப் போன்ற முக்கிய நபரை-முத்து செய்யக் கூடியவரை, பார்க்க ஆசைப்படுகிறேன். நான் முத்தையும் பார்க்க வேண்டும். என் வாழ்வில் இதுவரை நான் ஒரு முத்தைக் கண்டதில்லை.”
“நான் தான் சொல்லிவிட்டேனே, நான் திறக்கமாட்டேன். நீ பெரிய புத்திசாலி என்று நீ நினைத்தால், நீயே ஏன் அதை திறக்கக் கூடாது?”
சிப்பிப் புழு இப்படிக் காகத்தை கேலி பண்ண முடிந்தது. ஏனெனில், தன் சிப்பியின் மூடியை காகம் ஒரு போதும் திறக்க இயலாது என அது உறுதியாக நம்பியது.
ஆனால் இப்போது காகம் கோபம் கொண்டது.
“நல்லது. அது தான் உன் விருப்பம் என்றால், நான் செய்து காட்டுவேன். நடப்பது உனக்குப் பிடிக்காது போனால் என்னைக் குறை கூறாதே.”
காகம் சிப்பியைத் தன் அலகில் கவ்விக் கொண்டு, மேலே மேலே பறந்து போயிற்று. ஒரு பாறை அடுக்கை அடைந்தது. மிக உயரே பறந்தபடி அது சிப்பியை பாறைக்கு நேராகப் போட்டது. சிப்பி தூள்துள்ளாகச் சிதறியது. காகம் அதன் பின்னே பாய்ந்தது. சிப்பிப் புழுவை அலகில் கொத்தியது. ஒரே விழுங்கில் முழுங்கித் தீர்த்தது.
பிறகு காகம் முத்தைப் பார்த்தது. முத்து அதனிடமிருந்து விலகி உருண்டோடிக் கொண்டிருந்தது. விலையில்லாத அந்த முத்து ஒரு சாணக் குவியலினுள் விழுந்ததை அது கவனித்தது. பின்னர் காகம் மேலெழுந்து வானத்தில் உயர்ந்து, மகிழ்வுடன் கத்தியவாறு, பறந்தது.
(உருதுக் கதை)
குட்டீஸ் லூட்டீஸ்: ஜாதகப் பொருத்தம்..!- சிவமால்
ஜாதகப் பொருத்தம்..!
‘பத்துப் பொருத்தம் பெர்·பெக்டா பொருந்தியிருக்குன்னு ஒரு ஜோசியர் இல்லே ரெண்டு ஜோசியர்கள் சொன்னாங்க..
ஜாம் ஜாம்னு பெரிய அளவிலே பெண்ணுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்தேன். இன்னும் ஆறு மாதம் கூட ஆகலே..
மாமியார் கொடுமை தாங்கலைன்னு அடிக்கடி கண்ணைக் கசக்கிட்டு வந்து நிற்கிறா. என்ன செய்யறதுன்னே தெரியலே.’
என்று புலம்பிக் கொண்டிருந்தான் நண்பன் பரந்தாமன்.
அவன் வீட்டில் அவனுடன் பேசிக் கொண்டிருந்த எனக்கு எப்படி ஆறுதல் சொல்றது என்றே தெரியவில்லை.
அவன் சொல்வதையே கேட்டுக் கொண்டிருந்த என் மகள் மிதிலா திடீரென்று, ‘அங்கிள்.. நாம அங்கேதான் ஒரு சிறிய
தப்பு பண்ணறோம்’ னு சொன்னாள், வியந்தபடியே அவளை நோக்கினோம்.
‘நீங்க பையன் பெண் ஜாதகத்தைப் பொருத்தம் பார்த்தீங்க இப்பல்லாம் மெயினா பெண்ணின் ஜாதகம் வரப் போற
மாமியார் ஜாதகத்துடன் பொருந்தியிருக்கான்னு பார்க்கணும்.. அப்புறம்தான் பையன் பெண் ஜாதகப் பொருத்தம் எல்லாம்..’
என்றாளே பார்க்கலாம்.
ஒரு நிமிடம் அவளையே வியந்து நோக்கிய எங்களுக்கு அந்த வேதனையிலும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
பாற்கடல் – லா.ச. ராமாமிர்தம்

இம்மாத திரைக்கவிதை – நீல வண்ணக் கண்ணா வாடா
மருதகாசி அவர்களின் நூற்றாண்டு விழா !
அவருடைய பல சிறந்த பாடல்களில் ” நீல வண்ணக் கண்ணா வாடா ” என்ற பாடலை இம்மாதத் திரைக் கவிதையாகத் தருவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்
பாடல் : மருதகாசி
படம் : மங்கையர் திலகம்
பாடியவர் : பால சரஸ்வதி தேவி
இசை : எஸ் தக்ஷிணாமூர்த்தி
நடிப்பு: பத்மினி
நீல வண்ண கண்ணா வாடா
நீ ஒரு முத்தம் தாடா
நிலையான இன்பம் தந்து
விளையாடும் செல்வா வாடா
பிள்ளையில்லா கலியும் தீர
வள்ளல் உந்த வடிவில் வந்தான்
எல்லையில்லா கருணைதன்னை
என்னவென்று சொல்வேனப்பா
வானம்பாடி கானம் கேட்டு
வசந்தகால தென்றல் காற்றில்
தேன் மலர்கள் சிரிக்கும் ஆட்சி
செல்வன் துயில் நீங்கும் காட்சி
தங்க நிறம் உந்தன் அங்கம்
அன்பு முகம் சந்திர பிம்பம்
கண்ணால் உன்னை கண்டால் போதும்
கவலையெல்லாம் பறந்தே போகும்
சின்னஞ்சிறு திலகம் வைத்து
சிங்காரமாய் புருவம் தீட்டி
பொன்னாலான நகையும் பூட்ட
கண்ணா கொஞ்சம் பொறுமை காட்டு
நடுங்க செய்யும் வாடை காற்றே
நியாயமல்ல உந்தன் செய்கை
தடை செய்வேன் தாளை போட்டு
முடிந்தால் உன் திறமை காட்டு
விண்ணில் நான் இருக்கும் போது
மண்ணில் ஒரு சந்திரன் ஏது
அம்மா என்ன புதுமை இது
என்றே கேட்கும் மதியை பாரு
இன்ப வாழ்வின் பிம்பம் நீயே
இணையில்லா செல்வம் நீயே
பொங்கும் அன்பின் ஜோதி நீயே
புகழ் மேவி வாழ்வாய் நீயே
புகழ் மேவி வாழ்வாய் நீயே
புகழ் மேவி வாழ்வாய் நீயே
இம்மாத ஆடியோ – கா காளிமுத்து உரை
டாக்டர் காளிமுத்து அரசியல்வாதி மட்டுமல்ல – அழகான பேச்சாளரும் கூட ! .
அவருடைய குரலில் இலக்கியம் தெறிக்கும்.
அவரை மேடை மணி என்று பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கூறியுள்ளார்.
அவருடைய தமிழை இந்த மாத ஆடியோவாக வழங்குகிறோம்.
பரந்தாமனின் நீதிமன்றம் ! பாம்பே கண்ணன்

டிப்பன் பாக்ஸ் – குறும்படம்
தனியார் பள்ளியில் படிக்கும் ஏழை மாணவன் . மதிய உணவு எடுத்துச் செல்ல நல்ல டிபன் பாக்ஸ் இல்லையே என்பதற்காக என்ன செய்கிறான் தெரியுமா? குறும் படத்தைப் பாருங்கள்!