ஹலோ, ஹலோ சுகமா?

                Rajasthan HC Orders On Talking Mobile While Driving Can Cancel License - राजस्थान में अब ड्राइविंग करते समय मोबाइल यूज करना पड़ेगा महंगा, हाईकोर्ट ने जारी किए आदेश | Patrika NewsMobile Phones From a Blessing to a Curse - Star of MysoreWhat your smartphone is doing to your brain — it isn't good - Business InsiderScreen Time Can Help or Harm Youngsters. How Much is Too Much? What are Best Uses? | Emerging Education Technologies

 

விடிந்தவுடன் பல் துலக்கும் முன் கையில் எடுத்துப் பார்ப்பது செல்போனைத்தான்! கையுடனோ, பையுடனோ நம்முடைய ஓர் அங்கமாக – ‘டிடாச்சபிள்’ அங்கம்! – மாறிவிட்டது செல்போன்! அதுவும் இன்றைய ஸ்மார்ட் போன்கள் நம்மைப் பைத்தியமாக ஆக்கிவிட்டதுடன் நில்லாமல், அதற்கு அடிமையாகவும் மாற்றிவிட்டன. எழுந்தவுடன் சுப்ரபாதம் கேட்பது போல், முகநூலோ வாட்ஸ் ஆப்போ பார்த்து இரண்டு குட் மார்னிங், வாழ்க வளமுடன், ஹாப்பி டியூஸ்டே, வானத்தில் மேகம், பால்கனியில் காகம் என ஏதோ ஒன்றை ‘லைக்’ கவோ, அல்லது யாரையாவது ‘ஸ்மைல்’ போடவோ செய்யாவிட்டால், அந்த நாள் நல்ல நாளாகத் தொடங்காது! காதில் வயர் தொங்க, குனிந்த தலை நிமிராமல் நடக்கும் பெண்ணும், டூ வீலரில் தானாய்ப் பேசியபடி விரைவாய்ச் செல்லும் பையனும் செல்போன் கடவுளின் செல்லக் குழந்தைகள்!

தொலைவில் நேராகப் பேசிக்கொள்ள முடியாதவர்களுக்கான தொடர்பு சாதனமாக இருந்த தொலை பேசி, இப்போது அடுத்த அறையில் இருப்பவர்களுடன் கூட பேச முடியாத படி, ‘தொல்லை’ பேசியாகிவிட்டது!

சின்ன வயதில், வத்திப் பெட்டியில் நூல் கட்டி, பேசிய போன்கள் – நேரே கேட்டுவிடக் கூடாதென்று, ரகசியக் குரலில் பேசிய பேச்சு! – பரிணாம வளர்ச்சியடைந்து, இன்றைய செல் போன்களாக மாறிவிட்டன – வத்திப்பெட்டி போன்கள் நேசமானவை – இன்றைய வயர்லெஸ் போன்கள் மோசமானவை!

டைரக்ட் டயலிங் வருமுன், டெலிபோன் எக்ஸ்சேஞ் மூலம் நம்பர் கேட்டுப் பேசிய காலங்கள் ! வெளியூர் என்றால் தபால் தந்தி ஆபீஸில் ‘ட்ரங்க்’ கால் புக் செய்து, காத்திருந்து பேச வேண்டும் – சில சமயங்களில், சரியாகக் கேட்காமல் கத்திப் பேச வேண்டியிருக்கும் – அந்தக் கண்ணாடிக் கதவு போட்ட சின்ன ‘பூத்’ அதிர்ந்து குலுங்கும் சாத்தியம் அதிகம்! வெளியூரிலிருந்து கால் என்றாலே, வயிற்றில் புளியைக் கரைக்கும் – அப்போதெல்லாம் அவசரம் என்றாலே ‘கெட்ட’ செய்திதான்!

சிதம்பரத்தில் கமலீஸ்வரன் கோயில் தெருவின் முதல் வீடு ‘சின்ன போஸ்ட் ஆபீஸ்’ ஆக இயங்கி வந்தது. ‘டக..டக..டக் டக்’ என்ற தந்தி மெஷினின் சத்தத்துடன், கார்டு, கவர், ஸ்டாம்ப் வாங்கிய காலம் – அகால வேளை ட்ரங்க் கால்களை நினைத்தால் இப்போதும் முதுகு ‘சில்’லிடுகிறது! சின்ன போஸ்ட் ஆபீஸ சரியாக இல்லாத சமயங்களில் மேலவீதி பெரிய போஸ்ட் ஆபீஸ் சென்று பேசிய நாட்களும் உண்டு – எப்போது ட்ரங்க் கால் வந்தாலும், கூடவே இடியுடன் மழையும் வந்து, நம் கலக்கத்தை அதிகப் படுத்தும்!

வீட்டுக்கு வீடு போன் வந்தவுடன் உள்ளூர், வெளியூர் கால்கள் சுலபமாகி விட்டன. அயல் நாடுகளுக்கு மட்டும் ‘புக்’ செய்து பேச வேண்டியிருந்தது.

அடுத்த வீட்டு அல்லது எதிர்த்த வீட்டுக்கு நமக்கு யாராவது போன் செய்ய, நட்பின் காரணமாக அவர்களும் வந்து கூப்பிட, குரல் அடக்கி, மெதுவாகப் பேசியது ஒரு காலம். ‘அடிக்கடி தொந்திரவு செய்யாதீர்கள்’, ‘அவர்கள் வீட்டில் யாரும் இல்லை’, ‘அவர்களைக் கூப்பிட இங்கு யாரும் இல்லை’ போன்ற பல நிலைகளைத் தாண்டி போன் பேசக் கிடைத்தால் அது நம் பாக்கியம்! போனிருக்கும் வீட்டின் நாய் நம்முடன் நட்புடன் இருப்பது அவசியம் – இல்லையென்றால் பேசுவதற்குக் குரல் வளை இருக்குமா என்பது சந்தேகம்!

முதன் முதலில் என் வீட்டிற்கு வந்த போன் வெளிர் நீலக் கலரில், டிபார்ட்மெண்ட் கொடுத்தது. கனெக்‌ஷன் வந்து பத்து நிமிடங்களுக்குள் ஒரு போன் வர, அதற்குள் யாருக்குத் தெரிந்தது என்று வியந்தபடி, ஓடிச் சென்று ரிசீவரை எடுக்க, மறு முனையில் ஒரு கர கர குரல் ‘ டெலிபோன் டிபார்ட்மெண்ட் லேர்ந்து சார் – கனெக்‌ஷன் சரியான்னு செக் பண்றோம்’ என்றது!

நம்பர் டயல் செய்யும் மளிகைக் கடைப் போன் முதல், (கருப்பாக, முகத்தில் தன் நம்பருடன், ரிசீவரைத் தாங்கி இருக்கும் போன்!)ப்ரெஸ் பட்டன், கார்ட்லெஸ் என மாறி, மொபைல் போன் ஆனது. இப்போது ஸ்மார்ட் போனாகி உலகமே நாலுக்கு இரண்டு இன்ச் பெட்டிக்குள் அடங்கி விட்டது!

இப்போது எல்லாம் விரல் நுனியில் – (செல் போன் வந்த வருடம் 1983) காலை எழுந்தது முதல் இரவு படுக்கப் போகும் வரை எல்லாம் போனில்தான்! நினைவிலிருந்து, விலாசங்களும், டெலிபோன் எண்களும் மறைந்து விட்டன – ஒளிரும் செல்போன் ஸ்கிரீன் எல்லாவற்றையும் சொல்லிவிடுகிறது! செல் இல்லையென்றால் கை ஒடிந்தாற்போல் ஆகிவிடுகின்றது!

ஆளுக்கொரு காலர் டியூன் – சத்தம் கேட்டுப் பதறி, கையிலுள்ளவற்றைத் தவற விடும் பயங்கர டியூன்கள்- வித்தியாசமான டயலர் டியூன்கள் என எப்போதும் அதிரும் போன்கள்!

‘கணவன் 1’, ‘கணவன் 2’ என ஒளிர்ந்த ஸ்கிரீனைப் பார்த்து புருவம் உயர்த்த, போனுக்குச் சொந்தக் காரி, ‘என் கணவனிடம் இரண்டு போன்கள் இருப்ப’தாகச் சொன்னாளாம்! 

முன்பு பொது இடங்களில் – ஏர் போர்ட், ரயில் நிலையங்கள் – புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தவர்கள், இப்போதெல்லாம், குனிந்த தலை நிமிராமல் போனில் மூழ்கிக் கிடக்கின்றனர்.

வீட்டிற்கு வரும் விருந்தினர்கள், உறவினர்களுடன் பேசுவதற்குக் கூட நேரமில்லை – ‘செல்போன் அடிக்‌ஷன்’ ஒரு வியாதியாகவே மாறிவிட்டது.

குழந்தைகளுக்கு ‘ஓர் அவசரத்திற்கு இருக்கட்டும்’ என்று கொடுக்கப் பட்ட செல் போன்கள், இன்று பல தவறான வழிமுறைகளைக் கற்றுக் கொடுக்கின்றன. கொரோனா கொடுமையில், கல்வி கற்பதற்கே செல் போன் தேவை என்ற நிலை, அச்சுறுத்துவதாக உள்ளது.

வருகின்ற விளம்பரங்களும், தேவையற்ற வியாபார அறிவிப்புகளும் தினமும் வெறுப்பேற்றுகின்றன.

சென்சார் இன்றி எதையும் பார்க்கும் வாய்ப்பு குழந்தைகளையும், வயதானவர்களையும் ஒரு சேரக் கெடுக்கின்றன.

நல்ல புத்தகங்கள், பாடல்கள், சொற்பொழிவுகள் என நல்லவைகளும் உள்ளன – உலகச் செய்திகள், அறிவியல் சார்ந்த செய்திகள் எனப் பலவும் கிடைக்கின்றன. இப்போது புதிய செயலிகளில் கூட்டங்கள் நடத்தப் படுகின்றன. நெட் பாங்கிங், ஆன் லைன் சேல்ஸ் எல்லாம் அந்தச் சின்னப் பெட்டிக்குள்!

எல்லாவற்றுக்கும் ஸ்மார்ட் போன் உபயோகமாக இருக்கின்றது – தேவையற்றவைகளுக்கு அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது! பேசுவதற்குத் தனியாக ஆர்டினரி செல் போன் வைத்துக்கொள்ளலாம் என்று கூட சில சமயங்களில் தோன்றுகிறது.

போனில்லாமல் சில மணி நேரங்கள் இருக்கலாமென்று தோன்றுகின்றது…..

முடியுமா?